`ஆண் குழந்தைதான் வேண்டும்!’ - கர்ப்ப காலத்தில் குடும்பம் செய்யும் வன்முறையை எப்படி எதிர்கொள்வது?

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்
எனக்குத் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. அரேஞ்சுடு மேரேஜ். நானும் கணவரும் பொறியியல் பட்டதாரிகள். இருவரும் பணிபுரிகிறோம். திருமணத்துக்குப் பின், ஒரு வருடம் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நானும் அவரும் முடிவெடுத்தோம். வேலையில் முக்கியக் காலகட்டம், பொருளாதார ஸ்திரத்தன்மை, பெற்றோர் பொறுப்புக்குப் போகும் முன்னர் சில காலம் கப்பிள்ஸ் ஆக வாழ்க்கையை வாழலாம் எனப் பல காரணங்களும் சேர்ந்து எடுத்த முடிவு அது. ஆனால், பிறந்த வீடு, புகுந்த வீடு என இரு தரப்புமே அறிவுரைகள், அழுத்தம் எனக் கொடுத்து, தாமதிக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினர்.
ஒரு கட்டத்தில், வேறு வழியின்றி குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்குத் தள்ளப்பட்டோம். அதுவரை வேறு விதமாக இருந்த குழந்தைப் பிரச்னை, இப்போது புதிய வடிவம் எடுத்தது. `ஆண் குழந்தைதான் வேண்டும்’ என்று புகுந்த வீட்டில் பேச ஆரம்பித்தார்கள். எங்கள் ஜாதகத்தை எடுத்துச் சென்று, ஆண் குழந்தை பிறக்குமா என்று ஜோசியம் கேட்டு வந்தார் மாமனார். `இந்த சாமியைக் கும்பிட்டா ஆண் குழந்தை பிறக்குமாம்’ என்று என் மாமியார் சில கோயில்களுக்கு என்னை அழைத்துச் சென்றார். `அந்த ஊருல ஒரு டாக்டர் இருக்காங்க. அவங்க ஸ்கேன்ல என்ன குழந்தைன்னு பார்த்துச் சொல்வாங்களாம்...’ என்று என் நாத்தனார் சொன்னபோது, அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள, சகித்துக்கொள்ள முடியவில்லை என்னால். `ஏன், பொண்ணுன்னு சொன்னா கொன்னுடுவீங்களா..?’ என்று நான் கோபமாகக் கேட்க, பின்னர் ஆண் குழந்தைப் பேச்சுகள் வீட்டில் கொஞ்சம் அடங்கியிருந்தன. ஆனால், சீக்கிரமே மீண்டும் பேச ஆரம்பித்தனர்.

என் புகுந்த வீட்டில் ஆண் குழந்தை வேண்டும் என்று பேசிப் பேசியே எனக்குச் செய்யும் மனரீதியான சித்திரவதைப் பற்றி என் பிறந்த வீட்டில் பகிர்ந்தபோது வருந்தினர். `ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால் இந்த டார்ச்சர் தொடரும் என்பதை’ உணர்ந்துகொண்ட அவர்களும்கூட, எனக்கு ஆண் குழந்தை பிறந்துவிடுவதே நல்லது என்பது போலவே பேச ஆரம்பித்தார்கள். அப்போது, என் அண்ணி சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு அதிர்ச்சி. `நான் மாசமா இருந்தப்போ உங்க அம்மாவும் எனக்கு இதே டார்ச்சரைத்தான் கொடுத்தாங்க. இப்போ உனக்கு அது நடக்கும்போதாவது, தான் பண்ணினது தப்புன்னு அவங்க உணரட்டும்’ என்றார். இந்த விஷயத்தில் இப்போது என் பிறந்த வீட்டினர்மீதும் எனக்குக் கோபமாக, எரிச்சலாக உள்ளது.
`ஆணோ, பெண்ணோ... நம்ம குழந்தையை நாமதான் வளர்க்கப்போகிறோம். அதுல இவங்களுக்கு என்ன? பெண் குழந்தைன்னா என்ன குறைச்சலா?’ என்று கணவரிடம் இது குறித்து ஆதங்கமாகப் பேசும் தருணங்களில், `என்ன குழந்தைன்னாலும் நமக்கு ஒண்ணுதான். நீ யாரையும் கண்டுக்காத, நிம்மதியா இரு...’ என்று அவர் சொல்வதில்லை. `முதல் குழந்தை ஆண் குழந்தைன்னா, ரெண்டாவது என்ன குழந்தைன்னாலும் ஓகேதானே. அதனால அப்படிச் சொல்லுவாங்க’ என்று அவரும் அதை ஆமோதிப்பதுபோல பேசுவார். எனக்கு இன்னும் மனவேதனையும் மன அழுத்தமும் அதிகமாகும்.

`பெண்கள் முன்னேறிவிட்டார்கள், குடும்பங்கள் மாறிவிட்டன, ஆண்கள் முன்பு போல இல்லை’ என்று நாம் படிப்பது, பேசுவது எல்லாம் உண்மையில் மிக மிகக் குறைந்த சதவிகிதமே, மாற வேண்டியது இன்னும் நிறைய நிறைய உள்ளது என்பதை, அனுபவபூர்வமாக உணர்ந்துவருகிறேன். கர்ப்பகாலத்தின் மாதங்கள் கூடக் கூட, குழந்தையின் வளர்ச்சி நிலைகளில் மகிழ்ச்சியடைவது, பிரசவத்தை தைரியமாக எதிர்கொள்ள உடற்பயிற்சிகள் செய்து தயாராவது என ஓர் ஆரோக்கிய மனநிலையில் என்னை என் குடும்பம் இருக்க விடவில்லை. `ஆண் குழந்தை வேணும்’ என்ற அழுத்தம் எனக்குத் தரப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அது என்னை நிம்மதியற்ற ஒரு நிலையில் வைத்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் நான் மிகவும் வெறுப்படைந்து, `எனக்குப் பெண் குழந்தைதான் வேணும். பெண் குழந்தைதான் பிறக்கும். என்ன பண்ணுவீங்க?’ என்று கேட்டுவிட்டேன். அதிலிருந்து சில நாள்களுக்கு என்னிடம் இந்தப் பேச்சை யாரும் பேசுவதில்லை. ஆனால், விரைவிலேயே ஆரம்பித்துவிடுவார்கள். எப்படி எதிர்கொள்வது இந்த ஆணாதிக்கக் குடும்ப அமைப்பை?
(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)