இரானில் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன்படி அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிறுமிகளும் பெண்களும் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும். மேலும், இஸ்லாமிய சட்டங்களை மீறுபவர்கள் மற்றும் ஹிஜாப் அணியாமல் இருப்பவர்களைக் கண்காணிக்க தனியாக காவல்துறை பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் மாஷா என்ற இளம்பெண் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த விவகாரம் இரான் முழுவதும் கலவரமாக வெடித்தது. கட்டாய ஹிஜாப் அணிவதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. உலகம் முழுவதிலும் ஹிஜாப் அணிவதற்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்தன. இந்தப் போராட்டத்தை நிறுத்த இரான் அரசும் பல்வேறு மோசமான நடவடிக்கைகளைக் கையாண்டது.
இந்நிலையில், பொது இடங்களில் பெண்கள் சரியாக ஹிஜாப் அணிவதைக் கண்காணிப்பதற்காக சிறப்புக் கண்காணிப்பு கேமராக்கள் இரான் முழுவதும் அமைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து இரான் காவல் துறையினர் கூறுகையில், ``பொது இடங்களில் ஸ்மார்ட் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் ஹிஜாப் அணியாமல் விதிமுறைகளை மீறுபவர்கள் மற்றும் ஆடை குறியீடு விதிகளை மீறுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

ஹிஜாப் சட்டத்தை மீறுபவர்களுக்கு முதலில் குறுஞ்செய்தி அனுப்பப்படும், அது முதல் எச்சரிக்கையாகும். மீண்டும் அதே தவற்றை செய்தால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காரில் பயணம் செய்யும் போதும் ஆடை குறியீடுகளை மீறினால் அவர்களுக்கும் முதல் எச்சரிக்கைக்குப் பிறகு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.