சில தீர்ப்புகள், சில எண்ணங்கள் - 11 - ஒருவருக்கு இரு மனைவிகள்... சொத்துரிமை யாருக்கு?

அனுபவத் தொடர்
போக்குவரத்துக் கழகத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய முதல் மனைவி, விவாகரத்து செய்யாமல் அவரை விட்டுப் பிரிந்து போயிருந்தார். அதையடுத்து அந்த நபர் இன்னொரு திருமணம் செய்துகொண்டார். இந்து திருமணச் சட்டப்படி, ஒரு மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தால், இரண்டாவதாகச் செய்கிற திருமணம் செல்லாது. இந்த நிலையில் அந்த நபர் உயிருடன் இருந்தபோதும் இறந்த பிறகும், இரண்டாவது மனைவிதான் கணவரின் அம்மாவையும் பார்த்துக்கொண்டார். அந்த நபர் இறந்த பின்பு முதல் மனைவியின் மகள், தன் அப்பாவுக்கு வர வேண்டிய சலுகைகள், நிலுவைத்தொகை என அனைத்தும் தனக்கு வேண்டும் எனக் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இரண்டாவது மனைவியின் பிள்ளைகளோ, தங்களுக்கும் அதில் உரிமை இருப்பதாகச் சொன்னார்கள். இந்த வழக்கு என்னிடம் விசாரணைக்கு வந்தது.

இந்து வாரிசுரிமை சட்டப்படி, ஓர் ஆண் சுய சம்பாத்தியத்தில் (சுய ஆர்ஜிதம்) ஈட்டிய சொத்து என்றால் அதில் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்கும் உரிமை இருப்பதாகச் சொல்கிறது. ஆனால், அந்த மனைவிக்கு அதில் உரிமையில்லை. அதுவே பிதுரார்ஜிதம் எனப்படும் மூதாதையர் சம்பாதித்த சொத்து என்றால் அந்த உரிமை இரண்டாவது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் கிடையாது. இறந்த நபர் உயில் எழுதிவைக்காமல் இறந்திருந்தால் மட்டுமே இந்த விஷயங்கள் பொருந்தும். ஒருவேளை உயில் எழுதிவைத்திருந்தால் அதில் சொல்லப் பட்டபடியே பின்பற்றப்பட வேண்டும்.
இந்த வழக்கில் நான் வலியுறுத்திய விஷயம் திருமணப் பதிவு. எல்லாத் திருமணங் களும் பதிவுசெய்யப்படும்போது தேவையற்ற பல குழப்பங்கள் தவிர்க்கப்படும். இந்து திருமணச் சட்டப்படி திருமணப் பதிவு என்பது கட்டாயமாக்கப்படவில்லை. இரண்டாவது மனைவி, தன் மொத்த வாழ்க்கையையும் கணவனுக்கு ஒப்படைத்த பிறகும், சட்டபூர்வ மனைவியல்ல என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
அதுவே திருமணத்தைப் பதிவுசெய்யும்போது, அவர்களுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருக்கிறதா என்பது தெரிந்துவிடும். திருமணத்தைப் பதிவுசெய்ய சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்வது சிலருக்கு சிரமமாகத் தோன்றலாம். பெரும்பாலும் திருமணங்கள் ஏதேனும் பொது இடத்திலோ, மண்டபத்திலோ, கம்யூனிட்டி ஹாலிலோதான் நடக்கின்றன. அந்த இடத்தின் மேலாளரோ, செயலாளரோ ‘இன்று இன்னாருக்கும் இன்னாருக்கும் இங்கே திருமணம் நடைபெற்றது’ என எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தாலே போதுமானதாக இருக்கும் என்ற ஆலோசனையையும் கொடுத்தேன்.
குழந்தைகளுக்குத் தங்கள் தந்தை யார் என தெரியாமலிருப்பது மிகப் பெரிய சோகம். எனவேதான் திருமணங் களைப் பதிவு செய்வது முக்கியம் என இந்த வழக்கின் தீர்ப்பில் வலியுறுத்தி னேன். தவிர, இந்த வழக்கைப் பொறுத்த வரை இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கும் சொத்தில் ஒரு பங்கு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித் தேன்.
இதே மாதிரியான சூழலை இன்னொரு வழக்கிலும் எதிர் கொண்டேன். அதிலும் ஓர் ஆண், அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகள். இரண்டாவதாகத் திருமணம் செய்யும் பெண்ணை அந்தக் காலத்தில் ‘அபிமான மனைவி’ என்று சொல்வார்கள். பத்து, பன்னிரண்டு வருடங்கள் ஓர் ஆணும் பெண்ணும் கணவன்-மனைவிபோல சேர்ந்து வாழ்ந்துவிட்டால் அவர்களுக்குத் திருமணமானதற்கான ஆதாரம் இல்லா விட்டாலும், திருமணம் நடந்ததாகவே நினைத்துக்கொள்ளலாம் என்று முன் தீர்ப்புகள் சொல்கின்றன. ஆனால் இதில் முதல் மனைவி உயிருடன் இருக்கக் கூடாது. முதல் மனைவி உயிருடன் இருக்கும்பட்சத்தில், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவர்கள் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

இந்த வழக்கில் அபிமான மனைவி யுடன் அவர் வாழத் தொடங்கிய பிறகு முதல் மனைவி இறந்துவிடுகிறார். அவர் செய்த கிரயப் பத்திரங்களில் எல்லாம் அந்த ஆண் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட பெண் ணையே தன் மனைவி என குறிப் பிட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த ஆண் கொலை செய்யப்படுகிறார். கொலை குறித்த விவரங்கள் இந்த வழக்குடன் தொடர்பில்லாதவை என்ப தால் அவை பற்றி பேச வேண்டாம்.
முதல் மனைவியின் மகள், தன் அப்பாவின் மொத்த சொத்தும் தனக்கே சேர வேண்டும் என்றும், தன் அப்பா இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட பெண், ‘திடீரென வந்து ஒட்டிக்கொண்டவர் என்பதால் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது’ என்றும் வழக்கு தொடர்ந்தார்.
ஆங்கிலத்தில் `லாங் கோஹேபிடேஷன்’ (Long cohabitation) என்றொரு வார்த்தை உண்டு. அதாவது பல வருடங்கள் இருவர் இணைந்து கணவன்-மனைவியாக வாழ்ந்த நிலையில் அந்த உறவு திருமண உற வாகவே கருதப்படும். இரண்டாவது மனைவியைக் கொச்சைப்படுத்தும் வகையில், ‘ஒட்ட வந்தவர், ஒண்ட வந்தவர்’ என்றெல்லாம் சொல்வது சரியல்ல என்று தீர்ப்பில் குறிப்பிட்டேன்.
முதல் மனைவி இறந்த பிறகும் தொடர்ந்து அந்த ஆணும் அவரின் அபிமான மனைவியும் சேர்ந்து இருந்த தால், முதல் மனைவி இறந்த பிறகு திருமணமானதாகக் கொள்ளலாம் என்று சொன்னேன். ‘மொத்த சொத்தும் எனக்கு மட்டுமே...’ என்பதை மாற்றி, இதை பாகப் பிரிவினை போல அணுக வேண்டும், ஒரு பாகம் முதல் மனைவி யின் மகளுக்கும் ஒரு பாகம் இரண்டா வது மனைவிக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டேன்.
இந்த வழக்கிலும் முதல் மனைவி இறந்ததும், அந்த ஆண் இரண்டாவது திருமணத்தைப் பதிவு செய்திருந்தால் இப்படியொரு வழக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என சட்டம் சொன்னாலும், நடைமுறை அப்படி இருப்பதில்லை. இந்நிலையில் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் உரிமைகளும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகின்றன. இது பெண்களின் சுய மரியாதை சார்ந்த விஷயம் என்பதை இந்த இரு வழக்குகளும் எனக்கு உணர்த்தின.
- வழக்காடுவோம்...
தொகுப்பு: ஆர்.வைதேகி