மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பெண் உடலைப் பேசுவோம்... - புதிய பகுதி

பெண் உடலைப் பேசுவோம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் உடலைப் பேசுவோம்

மார்பகங்களில் தன்னம்பிக்கையை வைக்காதீர்கள்! - இதுவரை கேட்கத் தயங்கிய கேள்விகளுக்கான பதில்கள்

தன் உடலை மறைப்பது போல, தன்னுடல் தொடர்பாக எழுகிற கேள்விகளையும் பல யுகங்களாக மனதுக் குள்ளேயே மறைத்த வண்ணம்தான் பெண் வாழ்ந்து வருகிறாள். முன்னது, அவசியம். பின்னது, சமூகம் பெண் மனதில் ஆணி அடித்து மாட்டி வைத்திருக்கும் ‘பேசக்கூடாத’ சட்டதிட்டங்கள். தொடர்ந்து வடிந்துகொண்டிருக்கிற உதிர ஊறலைச் சொந்த வீட்டாரிடமே சொல்லத் தயங்கி, உடல் வெளுத்து உயிர்விடுகிற அம்மாக்கள் இன்றும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். மாதவிடாயும் நாப்கினுமே கடந்த சில வருடங்களாகத்தான் பொதுவெளியில் பேசக்கூடிய விஷயமாக மாறியிருக்கின்ற நிலையில், தங்கள் அந்தரங்க உறுப்புகள் குறித்து எழக்கூடிய கேள்விகளுக்கான மிகச் சரியான பதில்களைப் பெண்கள் யாரிடமிருந்து பெற முடியும்? இதோ, இந்த இதழ் முதல் நிபுணர்களுடன் இணைந்து பெண்ணுடல் பற்றி ஒவ்வோர் இதழிலும் பேசவிருக்கிறாள் ‘அவள்.’ இந்த இதழில், மார்பகங்கள் குறித்து பெண்கள் கேட்கத் தயங்கிய கேள்விகளுக்கான பதில்கள் இதோ...

‘சிறிய மார்பகங்களுடன் இருக்கிற பல பெண்கள், திருமணம் செய்துகொள்ளவே பயந்து மன உளைச்சலுடன் இருப்பதை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சிலர், ‘மார்பகங்களைப் பெரிதாக்க ஏதாவது மாத்திரை கொடுங்கள் டாக்டர்; க்ரீம் கொடுங்கள் டாக்டர்’ என்று அழுது புலம்புகிறார்கள்’ என்று சில தினங்களுக்கு முன்னால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார் மகப்பேறு மருத்துவர் கார்த்திகா கார்த்திக். இவர் நடிகர் தனுஷின் உடன்பிறந்த சகோதரியும்கூட. இவரிடம் பேசினோம்.

பெண் உடலைப் பேசுவோம்... - புதிய பகுதி

‘`என்னுடைய மார்பகங்கள் பெரிதாக இருந்தால்தான் ஆண்கள் கண்ணுக்கு அழகாகத் தெரிவேன், வசீகரமாகத் தெரிவேன் என்கிற எண்ணம், இன்னமும் பல பெண் களிடம் இருக்கிறது. உலகம் முழுக்க மாடலிங் கிலும் சினிமாவிலும் இப்போது ஜெயித்துக் கொண்டிருக்கிற பெண்கள் யாரும் பெரிய மார்பகங்களுடன் இல்லை என்பதைக் கவனியுங்கள். காலம் மாறிவிட்டது. தன்னம்பிக்கையுடன் நெஞ்சை நிமிர்த்தி நடப்போம். மார்பகங்களை நிமிர்த்தி நடக்க வேண்டிய அவசியமில்லை’’ என்று பாசிட்டிவ் ஓப்பனிங் கொடுத்த கார்த்திகா கார்த்திக், சிறிய மார்பகங்களுக்கான காரணங்கள் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

‘`சிறிய மார்பகங்களுக்கு முக்கியமான காரணம் பரம்பரைத்தன்மைதான். அம்மா, அத்தை, பாட்டி என்று அவர்களுடைய குடும்பத்து மூத்த பெண்களுக்கு மார்பகங்கள் சிறியதாக இருந்தால், அது அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மார்பகங்கள் கொழுப்புத் திசுக்கள் நிறைந்தவை என்பதால், குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு அவை பெரிதாகவும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கு அவை சிறியதாகவும் இருக்கலாம். தவிர, சமச்சீரற்ற ஹார்மோன் காரணமாகவோ, குரோமோ சோம்களில் ஏற்படுகிற பாதிப்பு காரணமாகவோ சிலருக்கு மார் பகங்கள் சிறிதாக இருக்கலாம்.

க்ரீமும் எண்ணெய்யும் மார்பகங் களைப் பெரிதாக்குமா?

‘சிறிய மார்பகங்களைப் பெரிதாக்கும்’ என்று மார்க்கெட் டில் விற்கப்படுகிற க்ரீம்களையும் எண்ணெய் களையும் பூசி மசாஜ் செய்தாலும்கூட, மார்பகங்கள் பெரிதாகாது என்பதுதான் உண்மை. இது புரியும்போது சம்பந்தப்பட்ட பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

தாம்பத்தியம் மற்றும் பாலூட்டுவதில் சிறிய மார்பகம் பிரச்னை ஏற்படுத்துமா?

தங்களுடைய மார்பகம் சிறியதாக இருப்பதால், தாம்பத்திய உறவு இனிமையாக இருக்காது என்று நினைத்துக்கொண்டு திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள் அல்லது திருமணம் செய்துகொள்ளவே பயப்படுகிறார்கள். அப்படியே திருமணம் செய்துகொண்டாலும், பிறக்கவிருக்கிற குழந்தைக்குப் போதுமான பால் சுரக்காதோ என்று அஞ்சுகிறார்கள். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் பெண்களே... மார்பகங்கள் சிறியதாக இருந்தாலும், தாம்பத்திய மகிழ்ச்சி குறைவுபடாது; குழந்தைக்குத் தேவையான பாலும் சுரக்கும். சிறிய மார்பகத்தில் குறை வான அளவுதான் பால் சுரக்கும் என்பதில் எந்த மருத்துவ உண்மையும் இல்லை.

காஸ்மெட்டிக் தீர்வும் இருக்கிறது!

சிறிய மார்பகங்களுடன் இருக்கிற பெண் களுக்கு ‘இதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது’ என்று தேற்றக்கூடிய கவுன்சலிங் தான் தேவை. பிளாஸ்டிக் சர்ஜரியெல்லாம் அவசியமில்லை என்பது என் கருத்து. ஆனாலும், காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொண்டே ஆக வேண்டுமென விருப்பப் பட்டீர்களென்றால், உங்கள் உடலிலிருந்து எடுத்த கொழுப்புத் திசுக்களை வைத்தோ, சிலிகான் வைத்தோ மார்பகங்களைப் பெரிது படுத்திக்கொள்ளலாம்’’ என்றார் கார்த்திகா.

தாரிணி கிருஷ்ணன்
தாரிணி கிருஷ்ணன்

உணவின் மூலம் பெரிதுபடுத்த முடியுமா? - ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்

‘`உணவுமுறை மூலம் மொத்தமாக உடல் எடையைக் குறைக்கலாம்; கூட்டலாம். அப்படி உடல் எடையைக் கூட்டும்போது மற்ற உறுப்புகளுடன் சேர்ந்து மார்பகங்களும் எடை போடும். ஆனால், உணவின் மூலம் மார்பகங்களை மட்டும் பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ முடியாது. ஏனென்றால், அது முழுக்க முழுக்க மரபணுக்களும் ஹார்மோன்களும் சம்பந்தப் பட்டது.''

பெண் உடலைப் பேசுவோம்... - புதிய பகுதி

உடற்பயிற்சி உதவுமா? - பாடி பில்டர் ரூபி

‘`நீங்கள் 40 கிலோ எடை இருக்கும்போது சிறியதாகத் தெரிகிற மார்பகம், எடைகூடும்போது உடலில் கொழுப்பு அதிகமாகி பெரிதாகும். இடுப்புக்கு ஓர் உடற்பயிற்சி, கைக்கு ஓர் உடற்பயிற்சி என்று செய்து கூட்டலாம் அல்லது குறைக்கலாம். ஆனால், மார்பகங்களை மட்டும் சிறிதாக் கவோ, பெரிதாக்கவோ எந்த உடற்பயிற்சியும் இல்லை.’’

பெண் உடலைப் பேசுவோம்... - புதிய பகுதி

மார்பகங்களில் உங்கள் தன்னம்பிக்கையை வைக்க வேண்டாம்! - மனநல மருத்துவர் ஷாலினி

‘`வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பெரிய மார்பகங்களை விரும்புவதில்லை. அதனால், அங்கிருக்கும் பெண்கள் பெரிய மார்பகங்களை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சிறிதாக்கிக் கொள்கிறார்கள். நம்மூர் ஆண்கள் பெரிய மார்பகங்களை விரும்பு கிறார்கள். இதன் எதிரொலிதான் சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தாழ்வு மனப்பான் மையை உணர்வது. ‘ஆம்பளைக்கு இப்படியிருந்தா தான் பிடிக்கும்’ என்று மூத்த தலைமுறை பெண்கள் பேசுவதும், ‘ஃபிளாட் செஸ்ட் இருந்தா உன்னை எவனும் பார்க்க மாட்டான்’ என்று இளம் தலைமுறை பெண்கள் கேலி செய்வதும் அடுத்தடுத்த காரணங்கள். சமூகத்துக்காகவும் ஆண்களுக் காகவும் பெண்கள் தங்களை வருத்திக் கொள்ள வேண்டியதில்லை. உடல் வாகுக் கேற்பவும் வயதுக்கேற்பவும் மாறிக்கொண்டே இருக்கிற மார்பகங்களில் உங்களுடைய தன்னம்பிக்கையை வைக்காதீர்கள். காதல், திருமணம் என்று வரும்போது, உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஆணைத் தேர்ந் தெடுங்கள். உங்கள் மார்பக அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவனைத் தவிர்த்து விடுங்கள்’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

- பேசுவோம்...

*****

கார்த்திகா கார்த்திக்.
கார்த்திகா கார்த்திக்.

எனக்கு ஒரு மார்பகம் மட்டும் சற்று பெரிதாக இருக்கிறது,இது நார்மல்தானா?

‘`சில பெண்களுக்கு ஒரு மார்பகம் மட்டும் சற்று பெரிதாக இருப்பது இயல்புதான். பெரிது, சிறிது வித்தியாசம் உங்களுக்கு மட்டுமே தெரியக் கூடிய அளவில் இருந்தால், அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வெளிப்படையாகத் தெரிகிற அளவுக்கு வித்தியாசமிருந்தாலும் நோ பிராப்ளம். உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதுதான் முக்கியம். இது இயற்கையின் படைப்பு. இதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதனால் என்னை யாராவது கேலி செய்தால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்கிற மனநிலைக்கு நீங்கள் வந்துவிட்டால், அதன் பிறகு இது ஒரு விஷய மாகவே இருக்காது. உங்கள் மனதை வேறு வேலைகளில் கவனத்துடன் செலுத்த முடியும்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் கார்த்திகா கார்த்திக்.