
10 ஆளுமைகளின் பார்வையில் 10 துறைகள்!
‘சதியை ஒழிக்க வேண்டும்’ என்ற நம் நேற்றையப் பெண்களின் போராட்டத் தேவைகளில் இருந்து, ‘அரசியல் அதிகாரத்தில் பகிர்வு வேண்டும்’ என்றாக இன்றையப் பெண்களின் போராட்டத் தேவை மாறி வந்திருப்பது ஆரோக்கியமான நகர்வு. என்றாலும், பெண்கள் முன்னேற்றம் தொடர்பான வலியுறுத்தல்கள் ஒரு தொடர் இயக்கமாகச் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் பெண் முன்னேற்றம் தொடர்பான முதன்மையான 10 தளங்களில் உடனடியாகத் தேவைப்படும் செயல்பாடுகள் பற்றி துறை சார் ஆளுமைகள் பகிர்ந்து கொள்கிறார்கள் வரும் பக்கங்களில். நமக்கு என்ன வேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்வதும், அதை எப்படி, யாரிடம் கேட்க வேண்டும் என்பதுவுமே அதைப் பெறுவதற்கான முதல்படி. நம் வாசகிகளுக்கு இந்த24-ம் ஆண்டு சிறப்பிதழ் தர விரும்பும் ஊக்கம் இதுவே...

உறவுத்தேர்வு
மகள்கள் சந்தோஷமாக வாழ்வதைவிட வேறென்ன வேண்டும்?!
உ.வாசுகி, ஜனநாயக மாதர் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்
“இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கிறோம். என்றாலும், பெண்களின் உறவுத்தேர்வு என்று வரும்போது குடும்பங்கள் இன்னும் மூர்க்கமாகவே, இறுக்கமாகவே இருக்கின்றன. மகள் தன் மண விருப்பத்தைக் கூறினால், சாதியைத் தூக்கிப்பிடிக்காமல், அந்தப் பையன் குண மானவரா, பெண்ணை சமத்துவப் பார்வையோடு நடத்தக்கூடியவரா என நம் மகள் சந்தோஷமாக வாழத் தேவையான எதிர்பார்ப்புகளைப் பார்க்கும் பக்குவத்துக்கு வருவோம்.
மகள் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளாமல் அல்லது அவர் விருப்பத்துக்கு எதிராகத் திருமணம் செய்து கொடுத்து, அவள் பந்தாடப்பட்டு வரும்போது, ‘வாழ்வானாலும் சாவானாலும் உனக்குக் கணவன் வீடுதான்’ என்று திருப்பி அனுப்புவதை நிறுத்துவோம். மகளைவிட சாதி முக்கியமில்லை என்று உணர்வோம். வருங்காலம் ஆணவக்கொலைகள் அற்று இருக்கட்டும்.
விவாகரத்தான அல்லது கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் என்பது இந்த நூற்றாண்டிலும் இயல்பானதாக மாறவில்லை. ‘கணவன் இல்லாவிட்டால் என்ன, குழந்தை இருக்கிறதே, அதைப் பார்த்துக் கொள்வதுதான் இனிமேல் உன் வாழ்க்கை’ எனப் பெண்ணின் எதிர்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் மலையேற வேண்டும். குழந்தை என்பது வேறு, வாழ்க்கை இணை என்பது வேறு. தாய்மை என்ற பொறுப்புக்காக ஒரு பெண்ணை வாழ்க்கையைத் தியாகம் செய்ய நிர்பந்திக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
சிலர் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் முறையைத் தேர்வு செய்கிறார்கள். இந்த முடிவை எடுப்பவர்களை, குறிப்பாகப் பெண்களை எள்ளி நகையாட வேண்டியதில்லை. இந்த வாழ்க்கை முறையில் உள்ள சிக்கல்களைத் தொடர்ந்து பேசுவது, அவற்றைக் களைவதற்கான நோக்கத்தில் இருக்க வேண்டும்; கீழ்மைப்படுத்துவ தாக இருக்கக் கூடாது.
லிவிங் டுகெதர் முடிவை எடுத்து இன்றுவரை வெற்றிகரமாக வாழ்க்கையை வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எது தேவையோ அது நிலை பெறும், எது தேவையில்லையோ அது தேய்ந்து போகும்.
பெண்களை குடும்பத்தின் உடைமையாகச் சுருக்காமல், தன் வாழ்க்கைத் துணை குறித்த முடிவை எடுக்கும் உரிமையை அவர்களிடம் கொடுப்போம்.

கல்வி
”பெண்ணைத் திருமணத்துக்கென்றே வளர்த்தெடுக்கும் மனப்பான்மை மாறட்டும்!
வசந்திதேவி, கல்வியாளர்
‘`வருடந்தோறும் பத்தாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதமும் மதிப்பெண்ணும் மாணவர் களைவிடக் கூடுதலாக இருப்பதாலேயே, பெண் கல்வி முன்னேறிவிட்டது என்று நம்பிவிடுகிறோம். ஆனால், அது உண்மையல்ல.
பெண்ணைப் படிக்க வைத்தாலோ, அவள் வேலைக்குச் சென்றாலோ வரதட்சணையில் சற்று தள்ளுபடி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில்தான், பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டுமெனப் பெரும்பாலான பெற்றோர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். ஆனால், இன்று வரதட்சணையின் நிலைமை என்ன என்பதை சமூகத்தின் மனசாட்சிக்கே விட்டு விடுவோம்.
ஆண் குழந்தைக்கு அவனது எதிர்காலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு கல்வி வழங்குவதைப் போல பெண் குழந்தைக்கும் வழங்க வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே, பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியும்; உயர்கல்விக்கு அவர்களைக் குடும்பங்கள் அனுப்ப முடியும்.
பள்ளிப் பொதுத்தேர்வுகளில் மாணவர் களைவிடக் கூடுதலான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகள், உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எங்கே காணாமல் போகிறார்கள்?
‘பொண்ணு ப்ளஸ் டூ பாஸாயிடுச்சு. மேலே படிக்கிறதுக்குச் செலவு பண்ற காசுல அவ கல்யாணத்தை முடிச்சிடலாம்’ என்ற பெற்றோரின் மனப்பான்மை மாற வேண்டுமென்றால், பெண் கல்வி இலவசமாக்கப்பட வேண் டும்.
‘அதிகமாக படிச்சா மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்’ என்ற எண்ணம், கல்விக்கட்டணங்கள் இவற்றையெல்லாம் தாண்டி இன்னும் பல மாணவிகளால் கல்விக்கோட்டை எட்ட முடியவில்லை. இந்நிலை மாற இலவசப் பெண் கல்வி வேண்டும், பெண்ணைத் திருமணத்துக் கென்றே வளர்த்தெடுக்கும் நம் இந்திய மனப்பான்மை மாற வேண்டும்.

பொருளாதாரம்
’’பொருளாதார முன்னேற்றமே பெண் முன்னேற்றம்!
சுந்தரி ஜெகதீசன், நிதி ஆலோசகர்
‘`பொருளாதாரம் குறித்து ஓரளவுக்குத் தெளிவு உள்ள பெண்கள்கூட, அது தொடர்பான விஷயங்களைச் செயல் படுத்துவதில் தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறார்கள். தான் செய்யும் முதலீடு ஒருவேளை நஷ்டமடைந்துவிட்டால், பிள்ளைகளுடைய உயர்கல்விக்கோ, எதிர்காலத்துக்கோ பிரச்னை வந்துவிடுமோ, கணவன் கோபித்துக்கொள்வாரோ என பயப்படுகிறார்கள். சேமிப்பு, முதலீடு, லாபம், நஷ்டம் இவையெல்லாம் ஆண், பெண் இருவருக்குமே சமமானவை. அதனால், உங்களுக்கு நம்பிக்கையானவற்றில் சேமியுங்கள்; முதலீடும் செய்யுங்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும் பாலானோரின் ஏ.டி.எம் கார்டு அவர்களின் கணவர்களின் வசம்தான் இருக்கிறது. கொடுத்துவிட்டுத் திருப்பிக் கேட்டால், குடும்பத்துக் குள் பிரச்னை வரும். அதனால் உங்களுக்கென தனிப்பட்ட சேமிப்பொன்று கட்டாயம் இருக்க வேண்டும். வேலை பார்க்காத பெண்களும், தங்கள் பெயரில் கட்டாயம் வங்கிக்கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சேமிப்பு, வீட்டிலிருந்த படியே பிசினஸ் போன்றவற்றை சிந்திக்க முடியும். சேமிப்பு, முதலீடு தொடர்பான நிகழ்வுகள் ஆண் களுக்கானவை மட்டுமல்ல. ஆனாலும் இவற்றில் பெண்கள் கலந்துகொள்வதே அரிதாக இருக்கிறது. இந்த நிலையைச் சம்பந்தப்பட்ட பெண்கள்தான் மாற்ற வேண்டும்.
தங்க நகை வாங்கும்போது ஆர்வம்காட்டுவது போலவே பெண்கள், கணவர் நிலம் அல்லது வீடு வாங்கச் செல்லும்போதும் தானும் உடன் செல்ல வேண்டும். சுய வருமானம் உள்ள பெண், தன் பங்களிப்பு மற்றும் தன் கணவரின் பங்களிப்புடன் சொத்தை வாங்கும்போது, பத்திரப்பதிவை கணவர் பெயரிலும், அவர் பொறுப்பிலும் விட்டுவிடுகிறார்கள். அந்தச் சொத்தில் உங்கள் பங்களிப்பும் சமமாக உள்ளது எனும்போது, அதை கணவர் மற்றும் உங்கள் பெயரில் சேர்த்துப் பதிவதில் என்ன தயக்கம்?
கணவன், மனைவி ஒற்றுமையாக இருக்கும்வரை உங்கள் ஏடிஎம் கார்டு கணவரிடம் இருப்பதும், உங்கள் வருமானத்தில் கணவர் பெயரில் சொத்து வாங்குவதும் சரியாக இருக்கும். ஒருவேளை பிரிய வேண்டிவந்தால், உங்கள் வருமானத்தில் வாங்கிய சொத்துகள் கணவரிடமே தங்கிவிடும். சட்டப்படி அவற்றை வாங்க இயலாமலும் போகலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாட்டில் 7 சதவிகித பெண்களின் பெயர்களில் மட்டுமே சொத்துகள் பத்திரப்பதிவு செய்யப்படுவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. 2 சதவிகிதத்துக்கும் குறைவான இந்தியப் பெண்களின் பெயர்களில் மட்டுமே விவசாய நிலம் இருப்பதாகச் சொல்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை. எனவே குடும்பப் பொருளா தாரத்தில் மட்டுமல்ல, உங்கள் தனிப்பட்ட பொருளா தாரத்திலும் கவனம் செலுத்த ஆரம்பியுங்கள் பெண்களே!

சினிமா
’’உறவு சார்ந்த கதை மட்டும்தான் பெண் சினிமாவா?!
மதுமிதா, திரைப்பட இயக்குநர்
‘`சினிமா, நம் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப் பாகவும் இருப்பதால் அது அனைத்துத் தரப்பினரை யும் எளிதில் கவர்ந்திழுக்கிறது. அதில் காட்சிப் படுத்தப்படும் பெண் கதாபாத்திரங்கள், பெண்களின் உணர்வுகளையும் வாழ்வியலையும் முழுமையாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்துகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை.
பெண்களை மையப்படுத்தி வெளியான முந்தைய காலகட்டப் படங்களில் உறவுமுறை சார்ந்த பிரச்னை களே அதிகம் பேசப்பட்டன. அவற்றைத் தாண்டி, பெண்களின் தனிப்பட்ட விருப்பம், கரியர், வேலைச் சூழல், பாலினப் பாகுபாடு, முன்னேற்றத்துக்கான தடைகள் என இன்னும் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பெண் சினிமா என்பது, ஒரு பெண்ணின் கதையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக மட்டுமே இல்லாமல், இந்தச் சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்கும் சுதந்திரத் துக்கும் தடையாக இருக்கும் விஷயங்களையெல்லாம் தகர்க்கும்படி அழுத்தமாகவும் இருக்க வேண்டும். அவற்றையெல்லாம் ஆண் இயக்குநர்களைவிடப் பெண் இயக்குநர்களால் இன்னும் அழுத்தமாகச் சொல்ல முடியும்தான். ஆனால், அது அவ்வளவு சுலபமானதா?
என் முதல் படமான ‘வல்லமை தாராயோ’ கதையை முதலில் நடிகர் மாதவனிடம் சொன்னேன். ‘இந்தக் கதையில எனக்கான ஆக்டிங் ஸ்கோப் கம்மியா இருக்கு. நான் நடிக்கல’ என கண்ணியமாகச் சொன்னார் அவர். ஆக்ஷன் கதையுடன் ஒரு முன்னணி ஹீரோவுக்குக் கதை சொல்ல சமீபத்தில் முயன்றேன். பெண் இயக்குநர் என்பதாலேயே நடிக்க மறுத்துவிட்டார். ‘பெண் இயக்குநர்களால சாஃப்ட்டான, சென்டிமென்ட்டான, ஆர்ட் சாயல் படங்களைத்தானே எடுக்க முடியும்? ஒரு பெண்கிட்ட வேலை செய்யணுமா? பெண்களால ஒரு படத்தைச் சிறப்பா எடுக்க முடியுமா?!’ - இதுபோன்ற எதிர்மறை அனுமானங்கள், சினிமாத்துறையிலிருக்கும் பல ஆண்களுக்கும் இருக்கிறது. சுதா கொங்கராவின் திறமையை சூர்யா நம்பினார். அதுபோல முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லாத் தரப்பிலும் ஆரோக்கியமான மாற்றம் வர வேண்டும்.
‘பெண்களால இந்த லிமிட்டுக்குள்ளதான் படம் எடுக்க முடியும்...’ என்ற பிம்பத்தை உடைத்து, எங்கள் பார்வையில் ஆண்களின் உணர்வுகள், பலதரப்பட்ட மனிதர்கள் மற்றும் சமூகத் தினரின் வாழ்க்கை, ஆக்ஷன், காமெடி என கலவையான படைப்புகளை உருவாக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. அதை உணர்ந்து செயல் படுகிறோம்.
அதேபோல, ‘பெண் சினிமா’ என்று இயக்க ஆர்வம்கொள்ளும் ஆண்கள், மீண்டும் தங்கள் ஆண் பார்வையிலான பெண் உலகத்தையே திரையில் கொண்டு வராமல், தேவைகள் முதல் போராட்டங்கள் வரை அசல் பெண் உலகை உள்வாங்கிப் புரிந்துகொண்டு, அதை திரையில் கொண்டு வர வேண்டும். ஏனெனில், மக்களுடன் நேரடியாகவும் பரவலாகவும் கனெக்ட் ஆகக் கூடிய பெரிய மீடியமான சினிமா, பெண் களின் பிரச்னைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான சிறந்த கருவி.”

ஊதியப் பாகுபாடு
பெண்களின் ஊதியப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடும் தொழிற்சங்கங்கள் எங்கே?!
ஓவியா, சமூகச் செயற்பாட்டாளர்
‘`நம் சமூகத்தில் கல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு என்று அனைத்துமே பெண்ணுக்குப் போராட்டம்தான். இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி ஒருவழியாகப் பணிக்குச் செல்லும் பெண்களுக்கும், ஊதியப் பாகுபாடு என்ற அடுத்த கட்டப் போராட்டம் அங்கு காத்திருக்கிறது.
பெண்களால் இந்த வேலைதான் செய்ய முடியும், இவற்றையெல்லாம் செய்ய முடியாது என்ற தவறான கண்ணோட்டத்தை தங்கள் திறமையால் அடித்து நொறுக்கிவருகிறார்கள் பெண்கள். ராணுவம் வரை தங்களுக்கான பணிப் பகிர்வை நீதிமன்றம் மூலம் வென்றெடுத்திருக் கிறார்கள். ஆனால், என்னதான் ஆண்களுக்கு இணையாக, அவர்களைவிட அதிகமாகப் பணியாற்றினாலும், பாலினக் காரணத்தினாலேயே பெண்களுக்கான ஊதியம் ஒப்பீட்டளவில் குறைத்து நிர்ணயிக்கப்படுவதும், ஊதிய உயர்வுகளிலும் அது தொடர்வதும் துடைத்தெறிய வேண்டிய அடக்குமுறை.
சம்பாதிக்கும் பெண்களின் வருமானத்தை குடும்பங்களில் கூடுதல் வருமானமாகத்தான் பார்க்கிறார்கள். குடும்பத்தில் தொடங்கும் இந்த எண்ணம் நிறுவனங்களின் ஹெச். ஆர் துறை வரை நீண்டிருப்பதுதான் கொடுமை. இந்த ஆணாதிக்க மனநிலைதான், பெண்களின் ஊதியப் பாகுபாட்டுக் கான அடிப்படை. தொழிற்சங்கங்கள் பெண்களின் ஊதியப் பாகுபாட்டுக்காகப் போராடியதே இல்லை. அவை ஆண்களின் தலைமையில் இயங்குவது தான் இதற்கு முக்கிய காரணம். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆண், பெண் பாகுபாடு மறந்து தொழிற்சங்கங்கள் பெண்களின் ஊதிய பாகுபாட்டுக் கும் குரல் கொடுக்க வேண்டும்.
ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கான ஊதியப் பாகுபாட்டுக்கு எதிரான குரல்களே இன்னும் எழாத சூழலில், முறைசாரா பணியில் இருக்கும் பெண்களின் நிலைமையோ இன்னும் மோசம். கட்டட வேலை முதல் கழனி வேலை வரை உழைத்துக் கொட்டும் அந்தப் பெண்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் குறைவான கூலியை வாய்மூடிப் பெற்றுக்கொள்ள, அவர்களை மேற்பார்வை செய்யுமிடத்தில் இருக்கும் உழைப் புறிஞ்சி ஆண்கள் இவர்களுக்குச் சேர வேண்டிய ஊதியத்தையும் சேர்த்துப் பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகிள் 39(d) மற்றும் 41, சமமான வேலைபார்க்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும், பணி உரிமையையும் அங்கீகரிக்கிறது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படுவதில் எந்த நகர்வும் இங்கு இல்லை. நிச்சயமற்ற வேலைச்சூழலில் பெண், தனி மனுஷியாக தன் ஊதியப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடுவது சாத்தியமில்லை. இது ஒரு சமூகப் போராட்டமாக மாறினால் மட்டுமே மாற்றம் ஏற்படும்.

அரசியல் பகிர்வு
”அரசியல் அதிகாரம் நோக்கிச் செல்வோம்!
- ஜோதிமணி, நாடாளுமன்ற உறுப்பினர், கரூர்
‘`பெண்களை அரசியல் இன்னும் அந்நிய மாகவே பார்க்கிறது. மக்கள், பெண்களை அரசியலில் வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், கட்சித்தலைவர்கள் தான் அதை விரும்புவதில்லை. அரசியல் கட்சிகளில் எல்லா மட்டங்களிலும் பெண் களுக்குப் பலமான தடை இருக்கிறது. அரசியல் களத்தில் அந்தத் தடைகளை உடைக்கப் பெரும் வலிமை தேவைப்படுகிறது.
ஆண்கள் அரசியலில் தோற்றால், அது அந்த ஆணை மட்டுமே மையப்படுத்தி பேசப்படுகிறது. ஆனால் ஒரு பெண் அரசியலில் தோற்றால், அது ஒட்டுமொத்தப் பெண்களுக்கான தோல்வியாக இங்கே சித்திரிக்கப்படுகிறது. என்றாலும், இந்தக் கடுமையான பின்னிழுப்புகளை எல்லாம் மீறி, இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி என்று பெண் ஆளுமை களை இந்திய அரசியல் பார்த்திருக்கிறது. மாநில, மாவட்ட அளவிலும் பல பெண்கள் உறுதியுடன் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
உலக நாடுகளில், கொரோனா அலையைச் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டப்பட்ட நியூசிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், தைவான், ஃபின்லாந்து நாட்டுப் பிரதமர்கள் பெண்களே. முதல் கொரோனா அலையை கேரளாவில் சிறப்பாகக் கையாண்டதற்காக உலகளவில் பாராட்டுப்பெற்றவர், கேரளாவின் முன்னாள் அமைச்சர் ஷைலஜா. பெண்களின் நிர்வாகத்திறன் வெளிப்படும் வகையில் அரசியல் வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடமை அரசிடமும், கட்சிகளிடமும் இருக்கிறது.
ராஜீவ் காந்தி முன்மொழிந்த, ஊராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அவரது மறைவுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம், ஒரே நாளில் 10 லட்சம் பெண்கள் அதிகாரத்துக்கு வரமுடிந்தது. குக்கிராமத்தில் பிறந்த நான், இன்று எம்.பி ஆகியிருக்கும் பயணம் அங்கு தான் ஆரம்பித்தது. பஞ்சாயத்துத் தேர்தல்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 33% இட ஒதுக்கீட்டை ஆந்திரா, பிஹார், சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் 50% ஆக உயர்த்தியுள்ளன.
மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம் 11 ஆண்டுகளாகக் கிடப்பிலேயே இருக் கிறது. 50% பகிர்வுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும். பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸில் 40 சதவிகித சீட்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஓர் அரசியல் கட்சி இதை முன்னெடுக்கும்போது, மற்ற கட்சிகளும் பெண்களுக்கு அரசியல் பகிர்வளிக்கும் நிர்பந்தத்துக்குத் தள்ளப் படும், மாற்றங்களுக்கு வாய்ப்புண்டாகும், பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும்.
இன்றைய பெண்கள் அரசியல் திறன் மிக்கவர்கள். அரசியல் களம் அறிய பெண் களுக்கு நான் பயிற்சி கொடுத்து வருகிறேன். கல்லூரி மாணவிகளை இன்டர்ன்ஷிப் மூலம் அரசியல் தெளிவு அடைய வைக்கும் முயற்சியில் இருக்கிறேன். வாருங்கள்... அதிகாரம் நோக்கிச் செல்வோம்!”

எழுத்து
வேடிக்கை பார்ப்பவர்களால் வலியை எழுத முடியாது!
சுகிர்தராணி, பெண்ணியக் கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர்
‘`எழுத்தும் இலக்கியமும் காலம் காலமாக ஆண்களிடமே இருந்து வருகிறது. ஆண்கள் எழுதும் பெண்களின் துன்பங்கள் மற்றும் மகிழ்ச்சிகளே பெண்களின் உலகமாகப் பதிவு செய்யப்படுகிறது. மேலும், பெண்களுக்கு இங்கு வரலாறே கிடையாது. எழுதப்பட்டவை அனைத்தும் ஆண்கள் எழுதிய ஆண்களின் வரலாறு களே. ஆண்கள் அனுமதித்த, சுருக்கிய சில பெண்களின் வரலாறுகள் மட்டுமே உள்ளன. தவிர, பெண்களுக்கான விடுதலையையும் ஆண்களே எழுத வேண்டும் என்று அடம்பிடிப்பது அபத்த மானது. அடிமைப்பட்டுக் கிடந்தவர்களால் மட்டுமே 100 சதவிகித வலியை உணர்த்த முடியும். வேடிக்கை பார்ப்பவர்களால் வலியை உணரவும் முடியாது, உணர்த்தவும் முடியாது.
குறிப்பாக, உடல் அரசியலைப் பற்றிய புரிந்துணர்வு இலக்கிய உலகத்துக்கே இல்லை. இப்படியான சூழலில் பெண்கள் அதை எழுதிப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது இன்னும் கடினமாகிறது. பெண் உடல், குடும்பத்தின் சொத்தாகவும் ஆணின் உடமைப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. இதிலிருந்து பெண்கள் தங்களுக்கான விடுதலையை, சமகால உடல் அரசியல் எழுத்துகள் மூலம் கேட்கிறார்கள். அவற்றை படைப்புகளில் கொண்டு வரும்போது, ஆண் உலகம் ஆட்டம் காண்கிறது. எதிர்மறை விமர்சனங்கள் எழும்தான்; கடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பொருட்படுத்தாமல் நமக்கான களத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
எழுத்துலகில் ஆணாதிக்கப் பார்வை தளர்ந்துள்ளதா என்றால், தடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ‘அவ்வைக்குப் பின் பெரிய பெண் எழுத்தாளர்களே இல்லை’ என்று ஆண் எழுத்தாளர்களால் சர்ச்சை கிளம்பியது. கேலி செய்யும் பார்வையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு விருது, மதிப்புகள், சிறப்புகள் கிடைக்கின்றபோதெல்லாம் அவர்கள் திறமையைப் புறம்தள்ளி, கவர்ச்சியாலும், உடலை லாபி செய்வதன் மூலமும் கிடைப்பதாக வெளிப் படையாகவே பேசுகிறார்கள். இதுமாதிரியான அவதூறுகளுக்கு எல்லாம் சலனப்படாமல் பெண்கள் எழுதித் தீர்க்க வேண்டும்.
இத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் பெண் படைப்பாளர் களது எழுத்தும் எழுச்சியும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் அதிகமாக எழுதவும், பேசவும் வந்துள்ளனர். நான் எழுதத் தொடங்கியபோது, பத்து ஆண்டுகள் கழித்துத்தான் முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டேன். இப்போது, இணையத் தைக் கருவியாகக்கொண்டு உடனடியாக தங்கள் எழுத்தை வெளியிட்டு மக்களின் கவனத்தையும் பெற முடிகிறது. சமூக அரசியல் கலந்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வானமே தாள்... பேனாவில் தைரியம் நிரப்பித் தயாராவோம்!’’

சட்டங்கள்
மாநில அரசே சிறப்புச் சட்டம் இயற்றலாம்!
முனைவர் சாந்தகுமாரி, வழக்கறிஞர், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர்
``திருமண உறவில் பாலியல் கொடுமை குற்றமல்ல என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக் கும் 32 உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டில் அது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழேயே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது தண்டனைச் சட்டம் அல்ல. எனவே, `மெரைட்டல் ரேப்' (Marital Rape) என்பதை குற்றமயமாக்க வேண்டும். இதற்கான ஐ.நாவின் தீர்மானத்தில் பல நாடுகளுடன் இந்தியாவும் கையெழுத்திட்டும், இந்திய தண்டனைச் சட்டத்தில் அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தப்படவில்லை. `மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் பலவந்தமாக உறவுகொண்டாலும் அது பாலியல் வன்கொடுமை ஆகாது' என்று சமீபத்தில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நம் நீதி அமைப்புக்கு, சில நீதிபதிகளுக்கு முதலில் பாலின சமத்துவம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டப்படி, ஒரு சிறுமி பூப்படைந்திருந்தாலும் 18 வயதுக்குள் அவருக்குத் திருமணம் முடிப்பது சட்டப்படி குற்றம். ஆனால், இந்திய தண்டனைச் சட்டம் ஓர் ஆண், 16 வயதுச் சிறுமியை திருமணம் செய்து உறவு கொண்டால் அது குற்றமில்லை என்று வரை யறுக்கிறது. அதை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மேலும், மைனர் சிறுமியை திருமணம் செய்த கணவர்தான் அவருக்குப் பாதுகாப்பாளர் என்று இந்தியப் பாதுகாப்பாளர் சட்டம் சொல்கிறது. குற்றவாளியையே பாது காப்பாளராகச் சேர்க்கும் இந்தச் சட்டம், திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய வற்றுள் முக்கியமான ஒன்று. இப்படி, குழந்தைத் திருமணம் தொடர்பான பல்வேறு சட்டப்பிரிவுகளில் உள்ள அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு குற்றவாளி யைக் காக்கும்படி அமையும் கூறுகளை சீர்செய்து, குழந்தைத் திருமணங்களை இரும்புக் கரம்கொண்டு அடக்க வேண்டும்.
சாதி வெறியால் நிகழும் ஆணவக்கொலை களால் பாதிக்கப்படும், உயிரிழக்கும் பெண் களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பெண்ணின் மீது குடும்ப மானத்தை சாதி என்ற பெயரில் வைக்கும் ஆணாதிக்கம், இந்தப் பிரச்னையின் வேரிலும் உள்ளது. ஆணவக் கொலைகளைத் தடுக்கும் தனிச்சட்டம், முக்கியமான கோரிக்கை. அதற்கான மசோதா தயாரானாலும், அதை இன்னும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசுதான் இதற்குச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றில்லை; மாநில அரசே சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்துச் சிறப்புச் சட்டம் இயற்றலாம். தேசியக் குற்றப் பதிவேட்டின்படி தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை குறைவு. உண்மையில், தென் மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் ஆணவக் கொலைகள் அதிகளவு நடக்கின்றன. சமூக நீதியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ள நாம், ஆணவக் கொலைத் தடுப்புக்குத் தனிச்சட்டம் இயற்றி மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக வேண்டும்.’’

பாதுகாப்பு
பெண்களின் பாதுகாப்பை எப்போது உறுதிசெய்யப் போகிறோம்?
திலகவதி ஐ.பி.எஸ், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி
“குடும்பம், கல்வி நிலையங்கள், பணியிடம், பொதுவெளி, சமூக வலைதளம் உட்பட பெண்கள் கால் வைக்கும் இடங்களி லெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விரட்டுகின்றன. பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதவராக நாங்கள் ஒரு குழு அமைத்தோம். சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் புகார்கள் வரவேயில்லை. ‘நமக்கெதுக்கு வம்பு? அவமானம் ஆகிடுமே...’ என்ற எண்ணத்தில் புகார் கொடுக்கவே பல பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் தயங்கு கின்றனர். புகார்கள் பதிவானால்தானே குற்றங்கள் குறையும்?
தந்தை, ஆசிரியர், பணியிலிருக்கும் காவல் துறை அதிகாரி எனப் பெண்ணைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் ஆணால், ஒரு பெண் ணுக்கு எதிரான குற்றம் நிகழ்ந்தால், குற்றவாளிக்கு இரட்டிப்பு மடங்கு தண்டனையை உறுதி செய்கிறது சட்டம். உடல் ரீதியாக மட்டுமன்றி, மனம் மற்றும் உளவியல்ரீதியாக ஒரு பெண்ணைத் துன்புறுத்தி னாலும் சட்டப்படி குற்றம்தான். வரும்முன் காக்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது தானே அரசின் முதல் கடமை? பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து, பள்ளிக் கல்வியிலேயே இருபாலர் குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்க வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களை, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள், தியேட்டர்கள், பொது இடங்களிலும் தொடர்ந்து பரவலாக்க வேண்டும்.
கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் இச்சூழலில், கூடுமானவரை நமக்கான பாதுகாப்பை நாமும் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ‘உயிரா... பணமா, நகையா...?’ என்ற அசம்பாவித சூழல் ஏற்பட்டால், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அபாயகரமான நேரங்களில் உதவிக்கு ‘காவலன்’ செயலி, ‘1091’ ஹெல்ப் லைன் எண், ‘100’ எண்ணை பயன்படுத்தலாம்.
10 பெண்களுக்கு மேலுள்ள பணியிடங்களில், பாலியல் ரீதியான பிரச்னைகளை புகார் அளிக்கக்கூடிய இன்டர்னல் கம்ப்ளெயின்ட்ஸ் கமிட்டி செயல்பட வேண்டும். கால் டாக்ஸியில் பயணிக்கும் பெண்கள் கார் நம்பர், கார் டிரைவர் குறித்த தகவல்களைக் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க வேண்டும். சமூக வலைதளங்களை பாது காப்புடன் கையாள வேண்டும்.
‘காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் சென்றால், ஆண்டுக்கணக்கில் போராட வேண்டுமே?’ என்ற பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி, உரிய காலத்துக்குள் சரியான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பெண்கள் உட்பட அனைத்துத் தரப்பினர் மனதிலும் வேரூன்றச் செய்ய வேண்டியது அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறையினரின் தலையாய கடமை. அது சாத்தியமானால், பாதுகாப்புக்குறைவு அச்சமின்றி பெண்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.”

ஆரோக்கியம்!
அத்தனைக்கும் அடிப்படை ஆரோக்கியம்!
டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, மகப்பேறு மருத்துவர், மாநிலங்களவை உறுப்பினர்
‘`பெண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்னைகள் அவர்களின் மொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. எனவே பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பெண்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஊட்டச்சத்தின்மையால் உடல்நலம் மட்டுமன்றி, மனநலமும் பாதிக்கப்படுகிறது. வீட்டிலுள்ள எல்லோரும் சாப்பிட்ட பிறகு கடைசியாகச் சாப்பிடுவது, சாப்பாடு தீர்ந்துபோனால் காபி, டீ போன்றவற்றை குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்வது எனப் பெண்களின் உணவுத் தியாகத்தைப் பல வீடுகளிலும் பார்க்கலாம். கர்ப்பகாலத்தில் மட்டும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதைத் தவிர்த்து, பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான, சரிவிகித உணவுப் பழக்கத்தைத் தொடர வேண்டும். அவர்கள் அப்படிச் செய்வதை அந்த வீட்டில் இருப்பவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
போதிய விழிப்புணர்வு இல்லாமல் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முற்றிய நிலை வரை பெரும்பாலான பெண்கள் செல்கிறார்கள். மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை அறியும் சுய பரிசோதனைகளை வீட்டிலேயே செய்து கொள்ள முடியும் என்றாலும், ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று சோதித்துக்கொள்வது நல்லது. 40 வயதுக்கு மேல் `மேமோகிராம்' (Mammogram) சோதனையை செய்து பார்ப்பதும் அவசியம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய `பாப் ஸ்மியர்' (Pap Smear) சோதனை செய்து கொள்ள வேண்டும். 11 வயது தொடங்கி 40 வயது வரை உள்ள பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். இது மூன்று டோஸ்களாக கொடுக்கப்படுகிறது. மூன்று டோஸின் விலை 6,000 ரூபாய் என்பதால், மேல்தட்டுப் பெண்களுக்கு மட்டுமே இந்த மருத்துவப் பாதுகாப்பு கிடைக்கிறது. எனவே, அரசு இந்தத் தடுப்பூசியைப் பெண்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
40 வயதுக்குப் பிறகு பெண்களைத் தாக்கும் பிரச்னை, ஆஸ்டியோபொரோசிஸ். வைட்டமின் - டி பற்றாக்குறையால் ஏற்படும் இந்த பாதிப்பால் எலும்புகள் வலையிழந்து போகும், லேசாக அடிபட்டாலும் எலும்புகள் உடையக்கூடும். 40 வயதுக்கு மேலானவர்கள், எலும்பின் அடர்த்தியைக் கண்டறியும் ‘டெக்ஸா ஸ்கேன்’ சோதனையைச் செய்து கொள்ளலாம். எலும்புத் தேய்மானத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் ஊசி மற்றும் மருந்துகள் மூலம் சரி செய்துவிட முடியும். இவை தவிர்த்து ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்தச் சர்க்கரை அளவுகளுக்கான சோதனைகளையும் அடிக்கடி செய்து கொள்வது நல்லது.
பெண்கள் தங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றால், முதலில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உடலும் உள்ளமும் உறுதியாக இருந்தால்தான் வெற்றி வசப்படும்.”