அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“நாங்கள் பாதுகாப்பாக இல்லை!” - எங்கும் எதிலும் எப்போதும் பெண்கள்

எங்கும் எதிலும் எப்போதும் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
எங்கும் எதிலும் எப்போதும் பெண்கள்

பெண்கள்மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை பாலியல்ரீதியிலான சுரண்டல்தான். தமிழ்நாட்டில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தற்போது அதிகரித்திருக்கிறது.

காலங்காலமாகத் தொடரும் அவலம்தான் என்றாலும், அறிவியலும் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய நவீன நாள்களில் இன்னும் பெண்கள்மீதான ஒடுக்குமுறையும், குற்றங்களும், பாதுகாப்பின்மையும் அதிகரித்துவருவது பெரும் பதற்றத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது!

சமீபத்தில் தி.மு.க பொதுக்கூட்டத்தில், பெண் காவலர் ஒருவரைப் பாலியல் சீண்டல் செய்து கைதாகியிருக்கிறார்கள் தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த இருவர். “பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை” எனப் பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் காயத்ரி ரகுராம். எந்த ஊடகத்தைத் திறந்தாலும், அதில் பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் மலிந்துகிடக்கின்றன. குடும்பம், கல்வி நிலையங்கள், பணியிடங்கள், பொதுவெளி, அரசியல், சினிமா, விளையாட்டு, ஆன்மிகம் எனச் சகல தளங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலே உள்ளது. பாலியல், பொருளாதாரம், உழைப்பு எனப் பல்வேறு விதங்களில் தொடர்ந்து பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். கற்பு, தீண்டாமை உள்ளிட்ட பழைமைவாதக் கருத்துகள், சாதி ஆணவப் பார்வைகளால் அன்றாடம் பெண்கள் பலியாகிறார்கள்; வன்முறைக்கு உள்ளாகிறார்கள். பெண்களை ஒடுக்குவதில் எந்தச் சாதி, மதமும் சளைத்தவையல்ல. தன் உணர்வுகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் ஒரு பெண் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறாள். என்னதான் நடக்கிறது நம் தமிழ்ச் சமூகத்தில்?

“ஒரு பொம்பள, என் பைக்க நிறுத்துவியா?”

கடந்த டிசம்பர் 31-ம் தேதி சென்னையில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில், பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவலரிடம், தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் என்ற இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அந்தப் பெண் காவலர் கடுமையாகப் போராடியிருக்கிறார். ஒருகட்டத்தில் உடைந்து அழுது, உதவி காவல் ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கவும், விவகாரம் சீரியஸாகியிருக்கிறது. இவ்வளவுக்கும், அந்தக் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் என இரண்டு பெண் எம்.பி-க்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அந்தச் சம்பவத்தின்போது, ‘பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ எனத் தவறு செய்தவர்களுக்குச் சார்பாக காவல்துறைக்கு தி.மு.க எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா அழுத்தம் கொடுத்தது உட்சபட்ச அபத்தம். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனக் குரல் களுக்குப் பிறகுதான், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை.

தமிழ்நாடு பா.ஜக-வில் டெய்சி, அலிஷா அப்துல்லா, காயத்ரி ரகுராம் எனப் பெண்களை மையப்படுத்தியே அடுத்தடுத்த சர்ச்சைகள் வெடிக்கின்றன. பாலியல்ரீதியாகக் களங்கப்படுத்துவது, அப்படியான ஆடியோக்களை வெளியிடுவது, நிறைய வீடியோக்கள் இன்னும் இருப்பதாகச் சொல்லி அச்சுறுத்துவது என முழுக்க ஆடியோ, வீடியோ அரசியல்தான் நடந்துகொண்டிருக்கிறது. சீனியர்களை ஓரங்கட்ட அவர்கள்மீது பாலியல்ரீதியான குற்றச்சாட்டுகளை கிளப்பிவிடுகிறது ஒரு கும்பல். பெண்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் இல்லை என்கிற குரல் கமலாலயத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அனைத்துக் கட்சிகளின் அரசியல் மேடைகளிலும், அரசியலில் ஈடுபடும் பெண்களின் மீதான மோசமான வசைபாடல் இன்னும் தொடர்கிறது.

“நாங்கள் பாதுகாப்பாக இல்லை!” - எங்கும் எதிலும் எப்போதும் பெண்கள்

கரூர் மாவட்டத்தில், ஜனவரி 4-ம் தேதி நடந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில், பைக்கில் ஊர்வலமாக வந்தவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூச்சலிட்டுக்கொண்டு பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி, பாதுகாப்புப் பணியிலிருந்த உதவி காவல் ஆய்வாளர் பானுமதி, பைக் சாவியை எடுக்க முயன்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ‘ஒரு பொம்பள, என் பைக்க நிறுத்தி சாவியை எடுக்குறியா?’ எனக் கேட்டுக்கொண்டே, பானுமதியின் கையை முறுக்கித் தாக்கியிருக்கிறார். இதில் பானுமதியின் கையில் கடுமையாகக் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதிகாரப் பணியிலிருக்கும் பெண்களின் பாதுகாப்பே இந்த நிலையில் என்றால், சாமானியப் பெண்களின் நிலை?

“நாங்கள் பாதுகாப்பாக இல்லை!”

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, ஜனவரி 4-ம் தேதி பட்டப்பகலில் உடலில் பலத்த தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தது ஊரையே கதிகலங்கவைத்தது. திருமணம் செய்துகொள்ளச் சொன்னதால், அவரின் காதலன் அந்தப் பெண்மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பைப் பற்றவைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இப்படி கன்னியாகுமரி தொடங்கி டெல்லி வரை, சூரியன் மறைந்து மறுநாள் வெளிச்சம் வருவதற்குள் பெண்களுக்கு எதிரான ஆயிரமாயிரம் குற்றங்கள் நிகழ்கின்றன.

நம்மிடம் பேசிய சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, “பெண்கள்மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை பாலியல்ரீதியிலான சுரண்டல்தான். தமிழ்நாட்டில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தற்போது அதிகரித்திருக்கிறது. திண்டுக்கல், வடமதுரை என்ற இடத்தில், ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து மூக்கில் மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொலைசெய்திருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவி மரணம், காய்ச்சலூர் மலையில் பள்ளியின் அருகிலேயே மூன்றாவது படிக்கும் மாணவியின் உடல் எரிந்த நிலையில் எடுக்கப்பட்டது எனத் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. காவல், நீதித்துறை, அரசு நிர்வாகம் என அனைத்தும் பெண்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. நாங்கள் இங்கே பாதுகாப்பாக இல்லை. பெண்கள்மீது வன்முறை நடந்தால், இங்கிருப்போர் இரக்கப்படுகிறார்களே தவிர, செயலில் எதுவும் காட்டுவதில்லை. பெண்கள் யாரிடமும் கழிவிரக்கத்தை எதிர்பார்க்கவில்லை என்பதை இந்தச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். ‘பெண் குழந்தைதானே’ என்கிற அலட்சிய மனோபாவம் மாற வேண்டும். அது பெற்றோரிடமிருந்து முதலில் தொடங்க வேண்டும்” என்றார் சூடாக.

“நாங்கள் பாதுகாப்பாக இல்லை!” - எங்கும் எதிலும் எப்போதும் பெண்கள்

ஆபாசச் சித்திரிப்பு... கொச்சையான தாக்குதல்கள்... தொடரும் சைபர் அட்டாக்!

நாம் இன்று அதிகம் புழங்கும் தளமாகச் சமூக வலைதளங்கள் மாறியிருக்கின்றன. அங்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தன் கருத்தை தைரியமாக, சுதந்திரமாக முன்வைக்கும் பெண்களின் புகைப்படங்களைக் கண்டபடி ஆபாசமாகச் சித்திரித்து, பதிவிடுகிறார்கள். அவர்களைக் கடுமையாகக் கொச்சைப்படுத்தி ஆபாசமாக எழுதுகிறார்கள். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முகத்தை மறைத்துக்கொண்டு மோசமான உளவியல் தாக்குதலில் இறங்குபவர்களைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும், தண்டிப்பதும் பெரிய சவாலாக இருக்கிறது.

நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “குடும்ப, சமூக வன்முறைகளோடு தற்போது ‘சைபர் ஸ்பேஸ் அட்டாக்’குகளும் பெண்களுக்கு எதிராகச் சேர்ந்திருக்கின்றன. சைபர் ஸ்பேஸில் ஆபாசமாகப் பேசுவது, நிர்வாணப் படங்களை அனுப்புவது, பெண்களின் புகைப்படங்களைத் தவறாகச் சித்திரித்து பரப்புவது என இப்போது புதுவிதமான தாக்குதலைச் செய்கிறார்கள். இதையெல்லாம் கண்டு பெண்கள் அச்சப்படக் கூடாது. எதிர்கொண்டு இன்னும் வலிமையானவர்களாக மாற வேண்டும்; மாறுவார்கள்” என்றார்.

பாலபாரதி, ஜோதிமணி
பாலபாரதி, ஜோதிமணி

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா...” திருந்தாத சினிமா உலகம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள், குற்றங்கள் திரை உலகத்திலும் நிறைய நடக்கின்றன. “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா, அப்பத்தான் இண்டஸ்ட்ரியில வளர முடியும்” என்கிற வாக்கியத்தைக் எதிர்கொள்ளாத பெண்கள் மிகக் குறைவு. திரை உலகத்தின் கோர முகத்தை அவ்வப்போது சிலர் கிழித்துத் தொங்கவிட்டாலும், நிலை கொஞ்சமும் மாறவில்லை. திரையுலகில் பெண்களுக்கான ஊதியமும் அங்கீகாரமும்கூட சரிவரக் கிடைப்பதில்லை.

நம்மிடம் பேசிய திரைக்கலைஞர் ரோகிணி, “ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம் என்பது இன்றுவரை சாத்தியமாகாமலே இருக்கிறது. `பூ, நிலா’ எனப் பெண்களை அலங்கார வார்த்தைகளில் வர்ணித்து, பெண் என்பவளை வெறும் உடலாக மட்டுமே சுருக்குகிறார்கள். பெண்களுக்குச் சிந்திக்கும் திறன் இருக்கிறது என்பதையே மறந்துவிடுகிறார்கள். பெண்களை, சமத் திறமையாளராக ஆண்கள் அணுக வேண்டும். குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் இந்த மாறுதல்கள் தொடங்க வேண்டும். அதை ஒட்டி சமூகத்திலும் அந்த மாற்றம் பிரதிபலிக்கும். சமத்துவமான சமூகத்தை நாம் அப்படித்தான் உருவாக்க முடியும்” என்றார்.

“நாங்களும் படித்திருக்கிறோம்... எங்களுக்கும் மரியாதை வேண்டும்!”

பணிச் சூழலில், பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், ‘சாலைப் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது’ எனக் காவல்துறை டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். “நாளடைவில் அந்த உத்தரவு காற்றோடு போச்சு” என்கிறார்கள் பெண் காவலர்கள். நம்மிடம் மேற்கொண்டு பேசியவர்கள், “பாதுகாப்புப் பணியில் 10-க்கும் மேற்பட்ட பெண் போலீஸார் ஈடுபட்டால், அவர்களுக்கு ‘மொபைல் கழிப்பறை’ வசதி செய்துதருவது அவசியம். ஆனால், ‘நிதிப்பற்றாக்குறை’யைக் காரணம் காட்டி, பெரும்பாலும் அது நடப்பதில்லை. கர்ப்பக்காலங்களில் முதல் மூன்று மாதங்கள் கடந்த பிறகே புடவை கட்ட காவல்துறையில் அனுமதிக்கிறார்கள். அதுவரை மிக இறுக்கமாக ‘பெல்ட்’, ‘பேன்ட்’ அணிவதால், பல பெண் காவலர்களுக்குத் தொடக்கத்திலேயே கரு கலைந்துவிடுகிறது. பெரும்பாலான ஆண் காவலர்கள், ‘வா’, ‘போ’ என ஒருமையில்தான் எங்களைப் பேசுகிறார்கள். நாங்களும் படித்துவிட்டுத்தான் பணிக்கு வருகிறோம். குறைந்தபட்ச சுயமரியாதையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். காவல் நிலையத்துக்கு உள்ளும் வெளியும் பாலியல் சீண்டலைச் சந்திக்கும் பெண் காவலர்கள் புகாரளிக்கும்போது, சகித்துக்கொண்டு போக வேண்டுமென்றே அறிவுறுத்தப்படுகிறார்கள்” என மனக்குமுறலைக் கொட்டினர்.

நம்மிடம் பேசிய ‘நாம் தமிழர் கட்சி’யின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், “எதிலும் பெண் தன்னிச்சையாக இயங்க முடிவதில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற பெண்கள் தன்னிச்சையாகப் பணியாற்ற முடிகிறதா... உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 50 சதவிகிதமாக இருக்கும் நிலையில் சட்டமன்றம், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 33%-ஆக நிர்ணயிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்ற இயலாத நிலையிலேயே நெடுங்காலமாக நீடித்துவருகிறது. இதெல்லாம் சாத்தியப்படாமல் பெண்களுக்கான பாதுகாப்பு சாத்தியமில்லை. பெண்களுக்கான சட்டத்தைப் பெண்களால் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை என்றால், அதில் என்ன ஜனநாயகம் இருக்கிறது... ஒருசில பெண்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் சின்னச் சின்ன வளர்ச்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தப் பெண்களின் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது” என்றார்.

ரோகிணி, காளியம்மாள்
ரோகிணி, காளியம்மாள்

“அதிகாரப் பகிர்வு இல்லை... மூடக் கற்பிதங்களை ஒழிக்க வேண்டும்!”

பெண்களுக்குச் சம உரிமையை எந்தத் தளமும் இதுவரை தந்ததில்லை. இதில், அரசியலில் நுழையும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இன்னும் அதிகம். மேடையில் பெண்களுக்குச் சம உரிமை பேசும் அரசியல் கட்சிகள், தங்கள் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் பதவிகளில் பெண்களுக்கு சம உரிமையை இன்றுவரை அளித்ததில்லை. தி.மு.க-வில் அமைச்சர் கீதா ஜீவன் மட்டுமே மாவட்டச் செயலாளர். அ.தி.மு.க-வில் அதுகூட இல்லை. ஊராட்சி மன்றத் தலைவர்கள் தொடங்கி, மேயர்கள் வரை பெண்கள் சரிசமமாகப் பதவிகளில் அமர்ந்திருந்தாலும், மறைமுகமாக ஆட்சி நடத்துவது என்னவோ அவர்களின் ஆண் உறவுகள்தான்.

பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். “அரசியல் என்பது ஆண்களின் மனநிலையிலிருந்து, ஆண்களுக்கானதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரப் பகிர்வு இல்லாமல் அனைத்து இடங்களிலும் ஆண்களே இருப்பதால் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தச் சூழலை எதிர்கொள்வதுதான் அரசியலுக்கு வரும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல். எளிய பின்னணியிலிருந்து அரசியலுக்கு வரும் பெண்களுக்கு, குடும்பத்திலும் பெரிய அளவில் ஆதரவு கிடைப்பதில்லை. நல்ல திறன்மிக்க, அறிவுடைய பெண்கள் அரசியலுக்கு வரவே அஞ்சுகிறார்கள் அல்லது வந்து பிறகு நிலைத்து நிற்க முடியாமல் தவிக்கிறார்கள். பாலியல் சீண்டல்களும் அதிகமிருக்கும். இவற்றையெல்லாம் மீறித்தான் அரசியலில் இயங்கவேண்டியதாக இருக்கிறது. இந்தச் சவால்களெல்லாம் நான் சந்தித்தவைதான். அதை எதிர்கொண்டதாலேயே இன்றைக்கு தேசியத் தலைவராக இருக்கிறேன்” என்றார்.

அ.தி.முக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசுகையில், “பெண்களுக்கு எதிராகப் பெண்களை வைத்தே கட்டுப்பாடுகளை விதிக்கிறது இந்தச் சமூகம். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்குப் பள்ளிப் பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ள ஏதுவாகப் பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும். குறிப்பாக, ‘முள் மீது சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும் சேலைக்குத்தான் பாதிப்பு’ போன்ற பெண்ணை ஒடுக்கும், ஏமாற்றும் மூடக் கற்பிதங்களை ஒழிக்க வேண்டும்” என்றார்.

வானதி சீனிவாசன், பா.வளர்மதி, கீதா ஜீவன்
வானதி சீனிவாசன், பா.வளர்மதி, கீதா ஜீவன்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து, இன்று பெண்கள் இடம்பெறாத துறைகளே கிடையாது. பிரச்னை வரும்போது சோர்ந்து போகாமல், சவால்களைச் சந்தித்து முன்னேற வேண்டும். பெண்களுக்குக் கல்விதான் முதன்மையான ஆயுதம். பெண் பொருளாதாரரீதியிலும் அதிகாரரீதியிலும் தன்னை முன்னேற்றிக்கொள்ள அதுவே ஆதாரம். பெண்களுக்கான அனைத்துத் தடைகளையும் நீக்கி, அவர்கள் மேலும் மேலும் வளர்வதற்குத் தேவையான அனைத்தையும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக நின்று செய்யும்” என்றார்.

‘நாங்கள் பாதுகாப்பாக இல்லை!’ என்கிற பெண்களின் குரல், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கும் இழுக்கு. பெண்கள் மீண்டும் மீண்டும் அன்பு, உறவு, தாய்மை, தெய்வத்துக்கு நிகர் போன்ற போலிப் புகழ்ச்சிகளால் தொடர்ந்து சுரண்டப்படுகிறார்கள். மற்றொரு பக்கம் அவர்கள்மீது நடத்தப்படும் வன்முறைக்கு அவர்களே காரணம் என்று சொல்லி ஒடுக்கப்படுகிறார்கள். உண்ணும் உணவு முதல், நடை, உடை, பேச்சு, சிரிப்பு என அனைத்திலும் கட்டுப்பாடு. பெண்ணுக்கு சுய தேர்வுக்கான வாய்ப்பும், அதிகாரப் பகிர்தலும் அனைத்துத் துறைகளிலும், தளங்களிலும் கிடைக்க வேண்டும். பெண்களுக்கு உடனடித் தேவை அன்பு அல்ல மரியாதை!