ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

2022 - டாப் 10 பெண்கள் - தமிழ்நாடு

டாப் 10 பெண்கள் - தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
News
டாப் 10 பெண்கள் - தமிழ்நாடு

வழக்கொழிக்கப்பட்ட தேவதாசி முறைக்கு கடைசி சாட்சியாக நம்முடன் வாழ்ந்து வருபவர் முத்துக் கண்ணம்மா.

பிரபலங்கள் முதல் பெயர் தெரியாத ஊரைச் சேர்ந்த பெண்கள் வரை, விடைபெறும் 2022-ம் ஆண்டில் நம்மை திரும்பிப்பார்க்க வைத்த தமிழ்ப் பெண்களின் தொகுப்பு.
காளியம்மாள்
காளியம்மாள்

இருளடர்ந்த காடுகளில் வாழும் பழங்குடிகள் என்ப தால் `இருளர்' என்று அழைக்கப்படுவதாகச் சொல் வார்கள். இன்றளவும் இம்மக்கள் மீது கல்வி வெளிச்சம் பாய்ச்சப்படாமலேயே இருக்கிறது. என்றா லும் அங்கிருந்து முட்டிமோதி வந்திருக்கும் முன்னத்தி ஏர், காளியம்மாள். கோவை மாவட்டம், ஆனைக்கட்டி அருகில் உள்ள கோபனாரி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் உடல் பருமன், தைராய்டு, நீரிழிவு என நோய்க்கும் வாழ்வுக்கும் நடந்த போராட் டத்துக்கு மத்தியில், வறுமையெனும் கொடும் பிணி யையும் வென்று சட்டம் பயின்று, இந்த இனத்தின் முதல் வழக்கறிஞர் என்ற சரித்திரம் படைத்திருப்பவர்.

ஜி.மீனாட்சி
ஜி.மீனாட்சி

அருகி வரும் சிறார் இலக்கியத்தின் நம்பிக்கை வெளிச்சம் ஜி.மீனாட்சி. இளந்தளிர்களின் கற்பனை உலகை துளிர்விடச் செய்யும் சிறார் இலக்கிய படைப்பாளிகள் தொழில்நுட்ப யுகத்தில் காணாமல் போய் விடுவார்கள் என்ற அவ நம்பிக்கை வார்த்தைகளுக்கு தனது `மல்லிகாவின் வீடு' என்ற சிறார் சிறுகதை மூலம் பதிலடி கொடுத்தவர். இந்திய சிறார் இலக்கிய உலகின் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கொண்டாடப்படும் `பால சாகித்திய புரஸ்கார் 2022' விருதை தனது தமிழ் எழுத்துகள் மூலம் சாத்திய மாக்கியுள்ளார். 27 ஆண்டுகள் பத்திரிகை அனுபவம்கொண்ட ஜி.மீனாட்சி, பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவர்கள் குறித்த தொடருக்காக `சரோஜினி நாயுடு' விருது பெற்றவர். கிராமத்து ராட்டினம், நினைவுகள் நிறைந்த வெற்றிடம், பூ மலரும் காலம் போன்ற சிறுகதை தொகுப்புகளை தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியவர்.

சத்யபாமா
சத்யபாமா

மதுரை மாவட்டம், சோழவந்தான் கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட 53 வயதான பெண்மணி சத்யபாமா. ஆனால், `போட்டோக்கார அம்மா’ என்பதே தன் பெயராகும் அளவுக்கு, கேமராவுடன் இரண்டறக் கலந் திருக்கிறார். கணவரின் ஸ்டூடியோ வேலையை, காலம் சத்யபாமா கையில் ஒப்படைத்தது. பெண்களுக்கு அப்போது வெகுதூரத்தில் இருந்த இந்தத் துறையில் துணிவுடன் இறங்கிச் சுழன்று, குடும்ப வறுமையை மலையேற்றினார். நன்னீராட்டு விழா முதல் வளைகாப்பு வரை ஒற்றைக் கையில் இவர் க்ளிக்கும் போட்டோ, வீடியோக்கள் வைரல் ஆகின. சந்தேக மரணம் முதல் கொடூர கொலைகள் வரை படம்பிடிக்கும் க்ரைம் போட்டோகிராஃபரும் கூட.

பவானியா
பவானியா

பேருந்து வசதிகள் கூட இல்லாத புதுக்கோட்டை மாவட்டத் தின் வடவாளம் பகுதியில் உள்ள குக்கிராமத்தைச்‌ சேர்ந்த பவானியா, முதல் முயற்சியிலேயே குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி பணிக்குத் தேர்வானவர். அப்பா வுடன் டீக்கடை வேலை, வறுமையைப் போக்க முந்திரி உடைக்கும் வேலை என கடுமையான உழைப்புக்கிடையே, கிடைக்கும் நேரத்தில் படிப்பு என கொண்ட கனவை உழைப்பால் சாத்தியமாக்கியிருக்கிறார். தமிழ்வழிக் கல்வி ஒரு தடைக்கல் அல்ல, படிக்கல் என்பதையும் நிரூபித்திருக் கிறார் நம் எளிய மகள் பவானியா.

முத்துக் கண்ணம்மா
முத்துக் கண்ணம்மா

வழக்கொழிக்கப்பட்ட தேவதாசி முறைக்கு கடைசி சாட்சியாக நம்முடன் வாழ்ந்து வருபவர் முத்துக் கண்ணம்மா. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயிலுக்கு 7 வயது சிறுமியாக பொட்டுக் கட்டிவிடப்பட்ட இவருக்கு வயது 83. அழிவின் விளிம்பில் இருக்கும் நடனக் கலைகளில் ஒன்றான சதிர் நடனத்தின் கடைசிக் கலைஞரும் இவர்தான். சதிர் நடனத்தைக் காப்பாற்றுவதையே வாழ்வாகக் கொண்டிருக்கும் இவருக்கு இவ்வருடம், கலைப் பிரிவின் உயரிய விருதான பத்ம வழங்கி கவுரவித்தது மத்திய அரசு.

பிரியா ராஜன்
பிரியா ராஜன்

நின்றால், பேசினால், கான்வாயில் சென்றால் என எல்லாமே வைரல் என்னுமளவுக்கு செய்திகளில் இடம்பிடித்து வரும் சென்னை மேயர் பிரியா ராஜன், வரலாற்றின் பக்கத்தில் தடம் பதித்தவர். 1688-ல் நிறுவப்பட்டு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனாக பரந்து விரிந்திருக்கும் மிகப் பழைமையான சென்னை பெருநகர மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயர், 28 வயதாகும் இந்த எம்.காம் பட்டதாரி. இளம் மேயர், வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட‌ முதல் மேயர் எனப் பல பெருமைகளுடன், தன் பொறுப்பில் விரைந்து கொண்டிருக்கிறார்.

சுதா கொங்கரா
சுதா கொங்கரா

சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை‌ மற்றும் சிறந்த திரைக்கதை என 68-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பில் ஐந்து தேசிய விருதுகளை வாரிக் குவித்தது சுதா கொங்கரா இயக்கிய `சூரரைப் போற்று’ படம். இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரைத்துறையின் தவிர்க்க முடியாத பெண் இயக்குநராக தடம் பதித்திருக்கிறார். அசாத்திய மான திரைக்கதையை சாத்தியப்படுத்தி மக்கள் முன் நிறுத்தும் கலையில் கைத்தேர்ந்த இவர், திரைத்துறை பெண்களுக்குத் தந்திருப்பது பெரிய நம்பிக்கை.

சிவஜோதி
சிவஜோதி

முழுக்க முழுக்க ஆண்கள் கட்டுப்பாட்டில் இருந்த ரயில் பிரேக்ஸ் `மேன்’ பணிக்கு முதல் பிரேக்ஸ் `வுமனாக’ பொறுப் பேற்று, வரலாற்றை பிரேக் செய்து ரயில் ஏறியவர் குன்னூரைச் சேர்ந்த சிவஜோதி. நூற்றாண்டுகளைக் கடந்து யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்துடனும்‌, ஆசியாவின் மிக நீண்ட பல்சக்கர தண்டவாள அமைப்புடனும் நீலகிரியில் தடதடத்துக் கொண்டிருக்கும் மலை ரயிலில், மெக்கானிக்காக கனத்த இரும்புகளை நேர்த்தியாகக் கையாண்டவர். ஆண்களுக்கான, ஆண்களுக்கே கடினமான பணியாகப் பார்க்கப்பட்ட பணியை ஏற்றிருக்கும் இந்த பிரேக் `வுமன்’... ஒரு சூப்பர் வுமன்.

யாஸ்மின்
யாஸ்மின்

கிணற்றில் போட்ட கல்லுக்கு இணையாக புகார் மனுக்களை விமர்சிக்கும் நிலையில், பணியில் சேர்ந்த ஐந்து மாதத்தில் 97 சதவிகித புகார் மனுக்களுக்குத் தீர்வு காணச் செய்து முதல்வரையே வியக்க வைத்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் 32 வயதான இளம் டி.எஸ்.பி யாஸ்மின். குரூப் -1 தேர்வெழுதி துணை போலீஸ் சூப்பிரன் டண்டன்ட் பணிக்கு நேரடியாக தேர்ச்சி பெற்ற இவர் திருச்சி மாவட்டம் முசிறி சரகத்தின் முதல் பெண் டி‌.எஸ்.பியாக ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். `உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத் தின் கீழ் பெறப்பட்ட 1,400 புகார்களில் 1,367 புகார் களுக்கு தீர்வு கிடைக்கச் செய்திருக்கிறார். சீனியர், ஜூனியர் என பாரபட்சம் பார்க்காமல் துறையில் அனைவரையும் மதிப்புடன் நடந்தும் யாஸ்மின் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடமும் கனிவுடன் நடக்கத் தவறுவதில்லை. முதல்வரே போனில் அழைத் துப் பாராட்டியது இந்த காரணங்களுக்காகத்தான்.

இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்

10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற இலக்கை தனது குறி தவறாத தோட்டாக்கள் மூலம் அடைந்தவர் கடலூர் மாவட்டம், காரமணிக்குப்பதைச்‌ சேர்ந்த இளவேனில் வாலறிவன். 12 வயதிலேயே துப்பாக்கியைக் கையில் எடுத்தவர், 13 வயதில் முதல் தங்கத்தை குறிப்பார்த்து சுட்டு தொடங்கினார் தனது தங்க வேட்டையை. ஜூனியர் உலகக்கோப்பையில் தங்கம் பெற்றவர், பிரேஸிலில் நடந்த உலகக்கோப்பையில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம், சீனாவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் என தடதடத்தார். இந்த வருடம் இந்த இளம் எனர்ஜிக்கு, விளையாட்டுத்துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்பட... அடுத்த இலக்கை குறிபார்த்து வருகிறார்.