கட்டுரைகள்
Published:Updated:

வேலைக்குப் போலாமா, கொரோனா போயிடுச்சா?

பழங்குடி மக்களின் முதல் வெளிச்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
பழங்குடி மக்களின் முதல் வெளிச்சம்

படங்கள்: ப்ரீத்தி மேகவதி

எந்த பூடகமும் இல்லாமல் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதுதான் ரோஜாவின் அடையாளம். பழங்குடிச் சமூகத்தில் பிஹெச்.டி படிப்பைத் தொடங்கிய முதல் பெண். ஐந்து நிமிடம் பேசினாலும் நமக்கும் சிறகு பூட்டி விடும் நம்பிக்கை மனுஷி.

சிறிய குடிசைகளில் பெரிய கனவுகளோடு வாழும் பழங்குடி மக்களின் முதல் வெளிச்சம். படிப்பறிவு, நாட்டு நடப்புகள் தெரியாமல் தனக்கான உலகத்தில் வசித்து வரும் தன் குடியிருப்பு மக்களுக்குக் கொரோனா குறித்த விழிப்புணர்வைக் கொடுத்து, பசி வாட்டி எடுக்கும் சூழலிலும் தன் மக்களைத் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே செல்ல விடாமல் வார்த்தையால் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர்.

வேலைக்குப் போலாமா, கொரோனா போயிடுச்சா?

“சந்திக்கலாமா?’’ என்று கேட்டால். ``எங்க ஜனம் வெளியாளுங்க யாரையாவது பார்க்க மாட்டோமான்னு காத்துக் கிடக்குதுங்க. உங்க பாதுகாப்பை உறுதி செய்துட்டு வாங்க தோழர், எங்க மக்களோட மனசும், சிலுசிலுத்த காத்தும் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கும்” என்று ரோஜா சொன்னவுடன் திண்டிவனத்திலிருந்து பயணத்தைத் தொடங்கினோம். பரபரப்புகளுக்குப் பஞ்சமே இல்லாத திண்டிவனம் மேம்பாலத்தில், வண்டிகள் மட்டுமல்ல அவை போன தடங்கள் கூட இல்லை. சில காகங்கள் மட்டும் கொரோனாவை வென்றது போன்று கரைந்து கொண்டிருந்தன, அவற்றின் குரலில்கூட பசியின் கோரத்தை உணர முடிந்தது. சாலையின் இரு புறங்களிலும் நிற்கும் மரங்களின் இலை அசைவுகள், பறவைகளின் கீச்சொலிகளைப் பல ஆண்டுகளுக்குப் பின் கேட்ட அனுபவம். சில கிலோ மீட்டர் பயணத்துக்குப் பின் மரூர் இருளர் குடியிருப்பை அடைந்தோம்.

ஏதோ உதவி கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் ஓடி வந்து சூழ்ந்த மனிதர்களை, ``கொஞ்சம் பொறுங்க” எனக் கட்டுப்படுத்துகிறது ரோஜாவின் கணீர்க் குரல். ஏமாற்றங்களுடன் கலைந்து செல்பவர்களின் முகங்களைப் பார்க்கும் போது தொண்டைக் குழியில் உமிழ்நீர்கூட இறங்க மறுத்தது. அனைவரின் குரலாய்ப் பேச ஆரம்பித்தார் ரோஜா.

வேலைக்குப் போலாமா, கொரோனா போயிடுச்சா?

“நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க, இங்க இருக்கிற எல்லோருமே விரக்தியோட உச்சக்கட்டத்தில இருக்காங்க. இன்னைக்கு சரியாகிரும், நாளைக்கு சரியாகிரும்னு சொல்லி சமாளிச்சு வெச்சிருக்கேன். இந்தச் சமுதாயத்தில் எங்களுக்குன்னு எங்கேயுமே மரியாதையோ, அடையாளமோ கிடைச்சது இல்ல. கிடைச்சது எல்லாம் அவமானங்கள்தான். அப்படி அவமானத்தைச் சுமந்து வீட்டுக்கு வர்ற எங்களுக்கு, நாங்க வாழுற இந்த இடம்தான் எப்போதும் சொர்க்கமா இருந்திருக்கு. காசு பணம் இல்லைன்னாலும் சந்தோஷத்துக்கு ஒரு நாளும் குறைச்சல் இருந்ததில்ல. ஆனால் 15 நாளா இங்கேயே அடஞ்சுகிடப்பதால், எங்களோட இந்தக் காத்துலகூட ஏதோ மரண ஓலம் கேக்குற மாதிரி இருக்கு.

அரசு மக்களோட நலனுக்காக ஊரடங்கு அறிவிச்சாங்க. கொரோனாவைக் கட்டுப்படுத்த அதுதான் வழின்னா அதைச் செஞ்சுதான் ஆகணும். அரசு கவலைப்படுற லட்சக்கணக்கான மக்களில் நாங்களும் இருக்கோம்ங்கிறது சந்தோஷம்தான். ஆனா கொரோனாவில் தப்பிச்சு பசிக்கு உயிரைக் கொடுத்துருவோமோன்னுதான் பயமா இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா, எங்களோட நிலைமையை எங்களோட பசியை நாங்க எப்படிச் சரிசெய்றதுன்னு தெரியாமதான் நிர்கதியா நிக்கிறோம். கொரோனாவோட வடிவத்தை நாங்க இப்போ வரை பார்க்கல. ஆனால் பசியோட வடிவம் அழுகை. அதை நாங்க எத்தனையோ நாள் அனுபவிச்சிருக்கோம். பசியில குழந்தை அழும்போது எந்த அம்மாவுக்குத் தூக்கம் வரும் சொல்லுங்க? பெரிய ஆளுங்க தண்ணியைக் குடிச்சுக்கலாம். சின்னப் புள்ளைங்க என்ன பண்ணுவாங்க. பசியின் தாக்கம் கொடுமையானது. அந்தப் பசியை உலகம் அனுபவிக்கிற நாள் வந்தாதான் எங்களோட நிலைமை என்னன்னு மத்தவங்களுக்குப் புரியும்” என்ற ரோஜாவின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக அத்தனை கண்களிலும் கண்ணீர்.

``இங்க இருக்கிற எல்லா ஜனங்களும் கூலி வேலைக்குப் போறவங்க. எட்டு மணிநேரம் கல்லு உடைச்சு 200 ரூபாய் சம்பாதிக்கிறவங்க. பொழுது விடிஞ்சு வேலைக்குப் போனாதான் ராத்திரி கஞ்சி குடிக்க முடியுங்கிறதுதான் எங்களோட உண்மையான நிலைமை. ஆனா இப்போ 15 நாள் ஆச்சு இவங்க வெளியுலகத்தைப் பார்த்து. அரசு கொடுத்த அரிசி பருப்புகள் பத்து நாளைக்கு வந்துச்சு. அதுக்கு அப்புறம் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க. அடையாள அட்டை இல்லாததால் அதுகூடச் சில குடும்பங்களுக்குக் கிடைக்கல. பேராசிரியர் கல்யாணி ஐயாவும், சமூக ஆர்வலர் ராஜேஷ் சாரும் வாரத்துக்கு ஒரு முறை வந்து அவங்களால முடிஞ்சதைக் கொடுத்து உதவிட்டிருக்காங்க. கிடைக்கிறதை அம்பது குடும்பமும் பகிர்ந்து சமாளிச்சுட்டிருக்கோம் சீக்கிரமா எல்லாம் சரியாகணும்” என்ற ரோஜாவிடம், கொரோனா குறித்த விழிப்புணர்வோடு மக்கள் இருக்காங்களான்னு கேட்க.

“சம்பாதிச்சாதான் நிலைமை மாறும்னு சிலர் வெளிய கிளம்ப ஆரம்பிச்சாங்க. படாதபாடு பட்டு அவங்களைத் தடுத்து வெச்சிருக்கேன். இந்த ஜனங்க யாருக்கும் கொரோனான்னா என்ன? அது எப்படிப் பரவுதுன்னெல்லாம் தெரியாது. அவங்கள பொறுத்தவரை அது ஒரு காய்ச்சல் அவ்வளவு தான். இந்தக்கூட்டத்தில் நல்லாப் படிச்ச ஆளுனா இப்போதைக்கு நான் மட்டும்தான். அதனால் என் வார்த்தைக்குக் கட்டுப்படுவாங்கங்கிற நம்பிக்கையில் எல்லாரையும் கூப்பிட்டுப் பேச ஆரம்பிச்சேன். கொரோனா எப்படிப் பரவுதுன்னு. அது இங்க இருக்கிற ஒருத்தருக்குப் பரவுனாலும், என்ன ஆகுங்கிறதை என்னோட மொபைலில் எல்லோருக்கும் போட்டுக் காண்பிச்சு விளக்கினேன். அதுக்கு அப்புறம்தான் புரிஞ்சு வீட்டுக்குள்ள இருக்க சம்மதிச்சாங்க. டெய்லி காலையில பொழுது விடிஞ்சா, `இன்னைக்கு வேலைக்குப் போலாமா, கொரோனா போயிருச்சா’ன்னு வெள்ளந்தியா கேட்டுக்கிட்டுதான் இருக்காங்க. உலகம் முழுக்க இருக்கிற நிலவரத்தைச் சொல்லிக் கட்டுப்படுத்தி வெச்சிருக்கேன். இந்த நிலைமை இன்னும் நீடிச்சா கஷ்டம்தான்.

ரோஜா
ரோஜா

பெண்களுக்கு மாஸ்க் செய்யவும் கத்துக்கொடுத்திருக்கேன். கொரோனா வராமல் இருக்கணும்னா என்ன செய்யணும், செய்யக்கூடாதுன்னு தினமும் சொல்லிக் கொடுத்துட்டே இருக்கேன். குடியிருப்போட சில இடங்களில் சோப்பு வாங்கி வெச்சிருக்கோம். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரை யாரும் கை கழுவாம எந்தப் பொருளையும் தொடக் கூடாது, யாரையும் தொடக் கூடாதுங்கிறதை ரொம்ப உறுதியா கடைப்பிடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. மத்தபடி மக்களை மக்கள் தொடாமல் வாழ்றது பல தலைமுறையா இந்தச் சமூகம் எங்களுக்குப் பரிசளித்த ஒண்ணுதானே?’’ என்ற கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து நிலைகுத்தி நிற்கும் கண்களுக்கு விடைதெரியாமல், காலம் மாறும் என்பதை மட்டும் பதிலாய்க் கொடுத்து விடைபெற்றோம்.