Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 15: சிங்கப் பெண்ணே... தோழர் பாப்பா உமாநாத்!

தோழர் பாப்பா உமாநாத்
News
தோழர் பாப்பா உமாநாத்

தன் குருதியில் கலந்த துணிச்சலோடு, “போடா” என்று சொன்னதுதான் தோழர் பாப்பா உமாநாத்தை 'சிங்கப் பெண்' என்று மக்களைச் சொல்லவைத்தது.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 15: சிங்கப் பெண்ணே... தோழர் பாப்பா உமாநாத்!

தன் குருதியில் கலந்த துணிச்சலோடு, “போடா” என்று சொன்னதுதான் தோழர் பாப்பா உமாநாத்தை 'சிங்கப் பெண்' என்று மக்களைச் சொல்லவைத்தது.

தோழர் பாப்பா உமாநாத்
News
தோழர் பாப்பா உமாநாத்
நடிகர் விஜய் மற்றும் அட்லியுடன், ஏ.ஆர்.ரஹ்மான் “சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே” என்று திரையில் பாடுவார். திரையில் வந்த பெண்களைவிட துணிச்சலான ஒரு சிங்கப்பெண் காவிரிக்கரையில் வாழ்ந்தார். அவர்தான் தோழர் பாப்பா உமாநாத்.

பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. ஆண் எம்.எல்.ஏ-க்கள் சிலர் ’பெண் உரிமை’யை நக்கல் செய்து, “எங்களால் (ஆண்கள்) ராத்திரி 12 மணிக்கு வெளியே போகமுடியும். உங்களால் வரமுடியுமா?” என்றார்கள். ஒரு பெண் எம்.எல்.ஏ எழுந்து, ”உங்களைப் போன்றவர்கள் ராத்திரியில் நடமாடுவதால்தான் பெண்களால் வெளியே வரமுடியவில்லை” என்றாரே பார்க்கலாம். சட்டமன்றம் அதிர்ந்தது. கலைஞர் கருணாநிதி முதல்வர். இந்தப் பதிலடியில் உள்ள புத்திசாலித்தனத்தை ரசித்தார். பிறகு சட்டம் நிறைவேறியது. அந்தப் பெண் எம்.எல்.ஏ தான் பாப்பா உமாநாத். 1989-ல் திருவெறும்பூர்த் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாழ்நாள் முழுதும் துணிச்சலுக்குப் பேர்போன இவரை மக்கள் 'தோழர் துணிச்சல்' என்றுகூட அழைத்தனர்.

தோழர் பாப்பா உமாநாத்
தோழர் பாப்பா உமாநாத்

வாயிலிருந்து லிங்கம் எடுத்த பிரேமானந்தாவை உண்மையை ’கக்கவைத்த’ இவரின் துணிச்சலை அன்று நாடே பேசியது. 1983 வாக்கில் திருச்சி வந்த பிரேமானந்தா ’நிர்வாண பூஜை’ உள்ளிட்ட பல அசிங்கங்களை ஆன்மிகத்தின் பெயரால் செய்துவந்தார். இந்தக் கொடுமையை முதலில் வெளிப்படுத்தியது பத்திரிகையாளராக இருந்த நிர்மலா ராணிதான். இவர் தோழர் பாப்பாவின் இளைய மகள். பாதிக்கப்பட்ட சுரேஷ்குமாரி, லதா என்ற இரண்டு பெண்களும் ஆசிரமத்தைவிட்டு வெளியேவந்து அடைக்கலமானது தோழர் பாப்பாவிடம்தான். தோழர் பாப்பா தந்தியின் மூலம் SP-க்குக் கொடுத்த புகார்தான் ஆசிரமப் பெண்களைக் காப்பாற்ற நடந்த முதல் நடவடிக்கையாகும். பல ஆதிக்க சக்திகளால் மிரட்டப்பட்டார். தன் குருதியில் கலந்த துணிச்சலோடு, “போடா” என்று சொன்னதுதான் அவரை 'சிங்கப் பெண்' என்று மக்களைச் சொல்லவைத்தத்து. பிறகு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ரஷீதா பகத் ஜனவரி 1994-ல் எழுதிய SPIRITUALISM AND FLESH பரவலாகக் கவனிக்கப்பட்டது. 15,000 பெண்களைத் திரட்டி நாடு முழுதும் பெரிய போராட்டத்தை பாப்பா முன்னெடுத்தார். 14 அபலைகள் காப்பாற்றப்பட்டார்கள். பெரிய சட்டப்போராட்டம் அது. அருள்ஜோதி என்ற பெண்ணின் DNA சோதனையால் உண்மை பிறந்தது. இந்தியாவின் பெரிய வக்கீல்கள் பிரேமானந்தாவுக்காகப் புதுக்கோட்டைக்கு வந்தார்கள். ஆனாலும் ’வாய்மையே வென்றது.’

வாய்மையைக்கூட வெல்லவைக்க துணிச்சல் மிகுந்த ஒரு தோழர் பாப்பா தேவை என்பதே நமக்குப் பாடம். நீதிபதி பானுமதி தந்த தீர்ப்பு உலகப்புகழ் பெற்றது. லிங்கம் எடுத்தவருக்கு ஜாமீன் எடுக்கமுடியாத தீர்ப்பு அது. இரட்டை ஆயுள் தண்டனை பிரேமானந்தாவுக்கு. அவரையே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 60 லட்சம் நஷ்ட ஈடாக தீர்ப்பு தரச் சொன்னது. வழக்கோடு நின்றுவிடாமல் அந்தப் பெண்களுக்கு ’வேலை-வீடு-கல்யாணம்’ எல்லாம் செய்துவைத்து, புது வாழ்க்கையைத் தந்தது தோழர் பாப்பாவும் அவர் இயங்கிய ஜனநாயக மாதர் சங்கமும்தான்.

தோழர் பாப்பாவின் வாழ்க்கை ஒரு சினிமாவைப்போன்றது. அவரைப் பிறவி கம்யூனிஸ்ட் என்று சொல்லலாம். அவரைப்பெற்ற தாயே ஒரு வரலாற்று அதிசயம். பாப்பா சிறு குழந்தையாகத் தவழ்ந்ததே ரயில்வே சங்க அலுவலகத்தில். வளர்ந்தது தோழர்கள் ஜீவா, பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்களின் பார்வையில். PR அவருக்குச் சுட்டுத்தந்த மெதுவடை இப்போதுகூட மணக்கிறது. கல்யாணம் செய்துகொண்டதோ ஆர்.உமாநாத் என்கிற போராளியை. பெற்ற மூன்று பெண் குழந்தைகளும் கம்யூனிஸ்ட்கள். இறந்தபோது உடலில் செங்கொடி போர்த்தப்பட்டது. அடக்கமாகி உள்ளதும் தன்னை கம்யூனிஸ்டாக்கிய பொன்மலை சங்கத்திடலில். அப்படியென்றால் பிறவி கம்யூனிஸ்டுதானே.

தோழர்கள்
பாப்பா - உமாநாத்
இருவரின் நினைவிடம்
தோழர்கள் பாப்பா - உமாநாத் இருவரின் நினைவிடம்

பிறந்தபோது அவருக்குப் பெயர் பாப்பா அல்ல - தனலட்சுமி. தாய் அலமேலு. தந்தை பக்கிரிசாமி. ஒரு அண்ணன்-கல்யாணசுந்தரம். ஒரு அக்கா - சொர்ணவல்லி. காரைக்கால் அருகே கோவில்பத்து என்ற கிராமத்தில் 1931ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பாப்பா பிறந்தார். பாப்பாவின் அம்மா அலமேலு பிறந்தது நாகப்பட்டினம். சிறு குழந்தைகளை விட்டுவிட்டு பக்கிரிசாமி இறந்துபோனார். பக்கிரிசாமிக்கு அலமேலு இரண்டாம் தாரம். பிரச்னை வெடித்தது. சின்னப் பிள்ளைகளோடு அலமேலு வீட்டை விட்டு வெளியேறினார். அலமேலுவின் அண்ணன் ஒருவர் திருச்சி பொன்மலை ரயில்வே ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்தார். அவரது வீட்டுக்கு மூன்று குழந்தைகளோடு அலமேலு பிழைப்பைத்தேடி வந்தார். குழந்தைகள் மாமாவோடு ஒட்டிக்கொண்டனர். சிலகாலம் கழித்து அண்ணனுக்குத் திருமணமானது. விளைவு, அலமேலு குழந்தைகளுடன் தனியாக ஒரு குடிசையில் வாழத்தொடங்கினார்.

பொன்மலை ஓர்க்‌ஷாப் தென்னிந்தியாவிலேயே பெரியது. பத்தாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைபார்த்தனர். அலமேலு அந்தப் பகுதியில் இட்லிக்கடை ஆரம்பித்தார். பிறகு மதியசாப்பாடும் தரும் மெஸ்ஸாகவும் அது மாறியது. குழந்தைகள் அம்மாவுக்குத் துணையாக ஓடியாடி வேலைசெய்தனர். துருதுருவென இரட்டை ஜடையோடு வளைய வந்த தனலட்சுமியை எல்லாத் தொழிலாளிகளும் பாப்பா பாப்பா என்றே அழைத்தனர். அதுவே காலம் அவருக்குச் சூட்டிய பெயராக மாறி 'பொன்மலை பாப்பா' என்பதே நிலைத்துவிட்டது.

சுதந்திரப்போர் மக்கள் இயக்கமாக மாறிய காலமது. தொழிலாளிகள் கதர் அணிந்து வேலைக்கு வந்தனர். 1937ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் (SIRLU) தலைவராக பரமசிவமும் துணைத்தலைவராக எம். கல்யாணசுந்தரமும் இருந்தனர். 1938-ல் நடந்த SIRLU மாநாட்டின் கொடியை பி.ராம்மூர்த்தி ஏற்ற, ராஜாஜி தொடங்கிவைத்துப் பேசினார். அந்த இடம்தான் சங்கத்திடல். அந்த இடத்தைச் சிறிதுகாலம் முன்புதான் கிருஷ்ணபிள்ளையும் டி.கே.வி.நாயுடும் சங்கக் கட்டடம் கட்ட வாங்கியிருந்தனர். கட்டடம் கட்டுவதற்கு முன்பு ஒரு பழைய ரயில் பெட்டிதான் சங்க அலுவலகமாக இயங்கியது. இப்போது அனந்தன் நம்பியாரும் எழுத்தராக ஒர்க்‌ஷாப்பில் வேலையில் சேர்ந்தார். இவர்கள் எல்லோரும் சாப்பிட்டது நம் அலமேலுவின் மெஸ்ஸில்தான். தோழர்களின் எளிமையும் உலக அறிவும் உண்மையும் அலமேலுவை வசீகரித்தது. அவரும் மெல்ல மெல்ல கம்யூனிஸ்டானார். பாப்பாவோ தோழர்களின் தோழரானார்.

கே.பி.ஜானகியம்மாள்
கே.பி.ஜானகியம்மாள்

“அம்மா” என்று அழைக்கப்பட்டவர் கே.பி.ஜானகியம்மாள். தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்காக உயிர்த்தியாகம் செய்த சங்கரலிங்கனாரின் உடல் அவரின் விருப்பப்படி ஜானகி அம்மாவிடமும் கே.டி.கே தங்கமணியிடமும்தான் தரப்பட்டது. தன் நாடகங்களால் வெள்ளையரை மிரட்டிய நாடகக் கலைஞரான விஸ்வநாததாஸ் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதால் பல நடிகைகள் நடிக்க மறுத்தபோது, அன்றைய நாடக உலகில் கொடிகட்டிப் பறந்த ஜானகியம்மாள்தான் சாதியைப் புறந்தள்ளி விஸ்வநாததாஸோடு நடித்தவர். இப்படிப்பட்ட ஜானகியம்மாள் விடுதலைப்போரில் கைதானார். அவரை பரோலில் மதுரையிலிருந்து திருச்சிக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசு. அவர் பொன்மலை சங்கத்திடலுக்கு வந்து சேர்ந்தார். அப்போது பாப்பாவுக்கு 12 வயது. ஜானகியம்மாள் நல்ல உயரம், சிவந்த உடல், நல்ல குரல்வளம், கதர்ப் புடவை, தியாக குணம். பாப்பாவுக்கு ரோல்மாடலானார் ஜானகியம்மாள். இருவரும் இணைந்து பிற்காலத்தில் மாதர் சங்கத்தில் வேலைசெய்தனர்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் கரைபுரண்டு ஓடியது. தொழிலாளிகள் வீதிக்கு வந்தனர். அவர்களோடு பாப்பாவும் வந்தார். நீதிபதி வயதின் காரணமாய் பாப்பாவை விடுதலை செய்தார். கம்யூனிஸ்ட் கொடியை இறக்க மறுத்த உறையூர் நெசவுத்தொழிலாளி சிங்காரவேலுவின் படுகொலை திருச்சியை உலுக்கியது. ஒருவகையில் இவர்தான் திருச்சியின் கொடிகாத்த குமரன். சிங்காரவேலுவின் இறுதி ஊர்வலத்துக்கு போலீஸ் 144 போட்டது. தடையை மீறி ஊர்வலம் போன பாப்பாவின் அம்மாவின் கை போலீஸ் தாக்குதலில் முறிந்தது. சிங்காரவேலுவின் கொள்கைப்பற்றும் அம்மாவின் வீரமும் பாப்பாவை, “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற மனநிலைக்கு உயர்த்தியது. இது அவரின் இறுதிமூச்சுவரை நிலைகொண்டது.

1946 ஜூலையில் தென்னிந்திய ரயில்வேயில் வேலை நிறுத்தம். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையால் பொன்மலைப் பாறைகூட உருகியது. அந்தநாளும் வந்தது. 1946 செப்டம்பர் 5-ன் காலை நேரம். சங்கத்திடலில் தொழிலாளர்களின் கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி ஹாரிசன் தலைமையில் போலீஸ் சுற்றி வளைத்தது. 150 பேரைக் கைது செய்த பிறகு, மலபார் போலீஸ் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தனர். திருச்சியில் ஒரு ஜாலியன் வாலாபாக் நடந்துமுடிந்தது. 5 தொழிலாளிகள் அங்கேயே செத்தனர். அதில் ராஜூ என்ற தொழிலாளியின் ரத்தக்கறை நீண்டநாள் இருந்ததாக பிற்காலத்தில் பாப்பா சொன்னார். அந்தக் கொடுமையின் நேரடி சாட்சி அவர். அந்தச் சூடு அவரைப் புடம்போட்டது.

இந்தப் போராட்டக் காலத்தில் தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை ரகசியமாக செய்வதற்காக அலமேலு அம்மாவின் பெயர் லட்சுமியாக மாறியது. அதுவே பின்னாளில் நிலைத்தது.

தோழர் பாப்பா
தோழர் பாப்பா

1947-ல் விடுதலை கிடைத்தும் மக்கள் போராட்டம் தொடர்ந்தது. 1948-ல் ரயில்வே சங்க அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தலைவர்கள் கைதானார்கள். பாப்பாவும் லட்சுமி அம்மாவும் தலைமறைவாகி சென்னை சென்றனர். அங்கு தோழர்கள் சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம் ஆகியோர் மகன்களாகவும் பாப்பா அவர்களின் தங்கையாகவும் லட்சுமி அம்மாள் இவர்களின் தாயாகவும் அடையாளத்தை மாற்றிக்கொண்டு கட்சிப்பணியைத் தொடர்ந்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் BA (Hons) படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுக் கட்சிப்பணியில் சேர்ந்த ஆர்.உமாநாத் சென்னை வந்தார். தலைமறைவாக இருந்த தலைவர்களைச் சந்திக்க வந்த அவர் பாப்பாவை முதன் முதலில் சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தனர். காதலைத்தாண்டி, இயக்கமே வாழ்க்கையான நிலையில் இயக்கத்துணையே வாழ்க்கைத்துணையாவதுதான் நல்லது என்ற முடிவோடு லட்சுமி அம்மாவைக் கேட்டனர். அவரும் சம்மதித்தார்.

தோழர் பாப்பா உமாநாத்
தோழர் பாப்பா உமாநாத்

1950-ல் ஒருநாள் தலைமறைவு இடத்தை போலீஸ் சுற்றிவளைத்தது. தோழர்கள் உமாநாத்தையும், பாண்டியனையும் கைதுசெய்து கட்டி இழுத்துவந்தனர். கூடவே பாப்பாவும் லட்சுமி அம்மாவும் சித்திரவதைக்கு ஆளானார்கள். சிறைக்கொடுமையை-தாக்குதலைக் கண்டித்தும் நிறுத்தச் சொல்லியும் தோழர்கள் உமாநாத், கல்யாணசுந்தரம், ஆளவந்தார், லட்சுமி அம்மாள், பாண்டியன், பாப்பா ஆகியோர் பட்டினிப்போர் தொடங்கினர். பாப்பா முதல் அறையிலும் நான்காம் அறையில் லட்சுமி அம்மாளும் அடைக்கப்பட்டனர். கண்ணுக்கு முன்பு ரொட்டியும் பாலும் வைக்கப்படும். குளுக்கோஸ் கலந்த நீர் தரப்படும். மன உறுதியோடு உண்ண மறுத்தார்கள். 10 நாள்கள் கடந்தபோது கேட்கும்திறன் குறைந்தது. பாப்பா சத்தம்போட்டு எட்ட இருந்த அம்மாவோடு பேசுவார். பட்டினிப்போர் தொடங்கி 22 நாள்கள் முடிந்து 23ஆம் நாள் வீரத்தாய் லட்சுமி அம்மாள் மார்ச் மாதம் 4ஆம் நாள் மரணமடைந்தார். பாப்பாவும் மயங்கிய நிலையில் இருந்தார். ஒரு பெண் வார்டர் சத்தமில்லாமல் “அம்மா இறந்துட்டாங்க” என்று சொன்னார். பாப்பா கதிகலங்கித் துடித்தார். ஆனால் சிறை நிர்வாகம், “கட்சியிலிருந்து விலகுவதாக எழுதிக்கொடுத்தால் அம்மாவைப் பார்க்கலாம்” என்றது. பாப்பாவோ, இது என் தாய் தந்த லட்சியம், அம்மாவுக்காக்கூட இதை இழக்க முடியாது என்றார். ஒரு கம்பளிக்குள் மூட்டையாகக் கட்டி பாப்பா பார்த்துக்கொண்டிருக்கும்போதே உடலைத் தூக்கிச்சென்றனர். இன்றுவரை எங்கு புதைத்தார்கள் என்பதுகூடத் தெரியவில்லை. சிறைக்குள் உண்ணாவிரதமிருந்து உயிர்பலியான முதல் பெண் லட்சுமி அம்மாதான் என்பதை வரலாறு குறித்துக்கொண்டது.

மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலில் புரட்சியாளன் பாவெலின் அம்மாவான பெல்கேயா நீலவ்னா உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட அன்பின் வடிவம். ரஷ்யப் புரட்சியாளர்களுக்குப் பணிவிடை செய்தே புரட்சிக்காரியாய் மாறிய தாய் அவர். கார்க்கியின் தாய்க்குத் தமிழ் மண்ணில் உயிர் சாட்சியாய் வாழ்ந்தவர் லட்சுமி அம்மா. அவரின் ஒரு படம்கூட நமக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்.

தடையும் கைதும் தவறு என்ற நீதிமன்றம் எல்லோரையும் விடுதலை செய்தது. பாப்பா மீண்டும் பொன்மலைக்கு வந்தார். தொழிற்சங்கம் நடத்திய தொழிலரசு பத்திரிகைக்குத் துணை ஆசிரியராகிப் பல தவறுகளை அம்பலப்படுத்தினார்.

பாப்பா—உமாநாத் திருமணம் 9-10-1952-ல் பொன்மலைப்பட்டியில் நடந்தது. இந்தத் திருமணத்தில் சாதி இல்லை. சடங்குகள் இல்லை. ஜாதகம் இல்லை. தாலி இல்லை. சாப்பாடும்கூட இல்லை. அதனால் பெரியார் இருந்தார். அவரோடு விவாதிக்கும் அளவுக்கு பாப்பா பெரியாருக்கு நெருக்கம்.

தோழர் பாப்பா கணவர்
 உமாநாத் மற்றும்
 மூன்று குழந்தைகளோடு.
தோழர் பாப்பா கணவர் உமாநாத் மற்றும் மூன்று குழந்தைகளோடு.

அன்பில் தோய்ந்த வாழ்கையாக மணவாழ்க்கை இருந்தது. லட்சுமி நேத்ராவதி, வாசுகி, நிர்மலாராணி என்ற மூன்று குழந்தைகள் அவர்களுக்கு. அவர்களின் மொத்த வாழ்க்கையிலும் ஒரு சின்ன சண்டைகூட வந்ததில்லை என்று மேநாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி சொல்கிறார். பாப்பா அற்புதமாக சமைப்பாராம். அதுவும் அசைவம் அசத்துவாராம். நாகை காரைக்கால் கைகளுக்கே தனி மீன் ருசி உண்டு. தோழர்களைச் சாப்பிட வைப்பதில் அலாதிப் பிரியமாம் அவருக்கு.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை, நடிகவேள் ராதா, பாவலர் வரதராஜன் சகோதரர்கள் என்று பாப்பா உமாநாத்தின் தோழமை வட்டம் பெரியது.

1962-ல் பாதுகாப்புக் கைதியாகி வேலூர்ச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது கண்ணம்மாவும் வாசுகியும் 8 வயசு, 4 வயசுக் குழந்தைகள். தொடர்ந்த அரசியல் போக்குகளால் கம்யூனிஸ்ட் கட்சி 1964-ல் இரண்டாகப் பிளந்தது. பாப்பாவும் உமாநாத்தும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

பெண்ணடிமை தீர, ஆண் பெண் சரிநிகர் சமமாக வாழ, பெண்களை அணிதிரட்டவேண்டும் என்ற புரிதலோடு 1973 டிசம்பர் 9ஆம் நாள் ’தமிழக ஜனநாயக மாதர் சங்கம்’ திண்டுக்கல்லில் மலர்ந்தது. இதன் முதல் ஒருங்கிணைப்பாளராக பாப்பா உமாநாத் தேர்வானார். இது 1981 முதல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது.

பெண்களின் காவல் அரணாக நின்றது இந்த அமைப்பு. இதன் ரத்த சாட்சிதான் சிதம்பரம் பத்மினி. சிதம்பரம் காவல் நிலையத்தில் பத்மினிக்கு நடந்த கொடுமை எழுதும் தரமற்றது. லத்திக்கம்புக்கு ஒரு புதிய வேலை தந்த தூயவர்கள் அவர்கள். கணவர் நந்தகோபால் அடித்துக் கொல்லப்பட்டார். 5 காவலர்கள் பத்மினியைச் சூரையாடினர். தமிழகமெங்கும் மாதர் சங்கம் போர்க்கோலம்பூண்டது. நீதிமன்றத்திலும் வழக்காடியது. காவலர்களுக்கு 10 ஆண்டு சிறை. பத்மினிக்கு ஒரு லட்சம் நிவாரணத்தோடு அரசு வேலை என்று நீதி பெற்றதில் பாப்பாவின் பங்கு மகத்தானது. அதோடு பத்மினிக்கு மறுமணமும் நடக்கச்செய்தார்.

வாச்சாத்தி, சின்னாம்பதி, நாலுமூலைக்கிணறு என்று பெண்கள் பாதிக்கப்பட்ட எல்லா இடங்களிலும் பாப்பாவும் மாதர் சங்கமும் இருந்தார்கள்.

ஒருகாலத்தில் அரியமங்கலம் காட்டூர்ப் பகுதியில் பெண்கள் தண்ணீருக்காகப் பட்ட பாட்டை மறக்கமுடியாது. காவிரித் தண்ணீரை ராட்சசக் குழாயில் பெற்றுவந்த HAPP நிர்வாகத்தோடு பேசி அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கச்செய்தார். இங்குள்ள ’இரட்டைக்குழாய்’ அவர் பெயரைச் சொல்லும். அதுபோலவே அரியமங்கலத்தில் எல்லா மதத்தவரும் ஒரே இடத்தில் இறுதிச்சடங்கு செய்யும் விதத்தில் 'மத நல்லிணக்க சுடுகாடு' அமைத்து ஒற்றுமையை வாழவைத்தார்.

சட்டமன்றத்தில் அவர் ஒரு சண்டைக்கோழி. தினம் தினம் வன்முறைகள் குறித்து அமைச்சர்களிடம் மனு கொடுப்பாராம். அவர் மனு தராத நாள்களை வன்முறையற்ற நாள்களாக அமைச்சர்கள் சொல்லி ரசிப்பார்களாம்.

உய்யக்கொண்டான் ஆற்றின் கிளை வாய்க்காலில் விஷ்ணுவத்தளை என்ற மடை உண்டு. ஆக்கிரமிப்புக்காரர்கள் அதைப் பூட்டி மூடிவிட்டனர். தண்ணீர் வரவில்லை. அங்கு பேய் பிசாசு உள்ளது என்றும் கிளப்பிவிட்டனர். சட்டசபையில் பாப்பா சொன்னார்,”அமைச்சர் அவர்களே, வாருங்கள் அதைத் திறப்போம். உழவர்களுக்குத் தண்ணீர் தருவோம். என்னைக் கண்டால் எல்லாப் பேய்களும் ஓடிவிடும்.” மன்றம் சிரித்தது. இப்படி எளிய மக்களுக்காக அதிகாரப்பேய்களை ஓட்டியவர் பாப்பா.

தோழர் உமாநாத், தோழர் பாப்பா
தோழர் உமாநாத், தோழர் பாப்பா

உலக சமாதான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 1986-ல் மைதிலி சிவராமனோடு பாப்பா ரஷ்யா சென்றார். அதுதான் அவரின் முதல் விமானப்பயணம். பதப்படுத்தி வைத்திருந்த லெனின் உடல் அவரை உணர்ச்சியில் தள்ளியது. முதன்முதலாக விண்வெளிக்குச் சென்ற வாலண்டினாவையும் சந்தித்தார்.

பாப்பா ஒருமுறை MLA. தோழர் உமாநாத் இரண்டுமுறை MP. இரண்டு முறை MLA. ஆனாலும் கடைசிவரை சொந்தவீடில்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்தார்கள் என்று மகள் நிர்மலாராணி சொல்லும்போது, தொலைக்காட்சியில் பழைய மந்திரியின் வீட்டில் ரெய்டு நடக்கும் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.

தோழர் பாப்பா டிசம்பர் 17, 2010ஆம் ஆண்டு காலமானார். மக்கள் திரண்ட ஊர்வலமாக பொன்மலை சங்கத்திடலில் இறுதிச்சடங்கு நடந்தது.

பாரதி தன் பாப்பா பாட்டில், “பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா” என்பான். அந்தக் கவிதை வரிகள் தனக்கு எழுதப்பட்டதாகவே நினைத்து வாழ்ந்தவர் தோழர் பாப்பா உமாநாத்.

(இன்னும் ஊறும்)