சமீபத்தில் ராஜ்கோட்டில் நடந்த ஃபேஷன் ஷோவில், பார்வை மாற்றுத்திறன் கொண்ட பெண்கள் எட்டு பேர் பங்கேற்று, ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைகளையே பலமாக்கி, சாதனை படைக்கும் நெஞ்சுரம் மிக்கவர்கள். அரசு, தன்னார்வத் தொண்டு அமைப்புகள் உள்ளிட்டவற்றின் ஆதரவால், இன்று பல துறைகளிலும் அவர்கள் முத்திரை பதித்து வருகின்றனர். அவ்வகையில் குஜராத் ராஜ்கோட்டில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் மாற்றுத்திறன் கொண்ட பெண்கள் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் அண்ட் ஜுவல்லரி டிசைன் (IFJD) சார்பில், ராஜ்கோட் நகரில் லாக்மி ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், பார்வைத்திறன் சவால் கொண்ட எட்டு பெண்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். அழகிய வண்ணமயமான கவுன்கள், ஜரிகையுடன் வேலைப்பாடு நிறைந்த ஆடைகள் என ஒப்பனைகளில் மிளிர்ந்த மாற்றுத்திறன் பெண்களை, ஃபேஷன் ஷோ நடைபாதையின் பாதி தூரம் வரை ஆடவர் அழைத்து வர, பின்னர் ஒவ்வொருவராக ராம்ப் வாக் செய்து பார்வை யாளர்களின் பலத்த கைத்தட்டலைப் பெற்றனர். VD பரேக் அந்த் மஹிளா விகாஸ் கிரஹா அமைப்பைச் சேர்ந்த இப்பெண்கள், ஃபேஷன் ஷோவில் பங்கேற்பதற்காக வாரக்கணக்கில் பயிற்சி மேற்கொண்டதாகத் தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய, பார்வை மாற்றுத்திறன் மாடல்களில் ஒருவரான ஜனாவி (Jahnavi), நிகழ்ச்சிக்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் பயிற்சி மேற்கொண்டதாகத் தெரிவித்தார். மற்றொரு மாடலான இஷா கூறும்போது, ``பார்வையாளர்களின் கரகோஷங்களைக் கேட்டபோது, நாங்கள் எங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளதை உணர்ந்தோம். இது மெய்சிலிர்க்கச் செய்த ஓர் அனுபவம்" என்றார்.

இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் அண்ட் ஜுவல்லரி டிசைன் இயக்குநரும், நிகழ்ச்சியின் அமைப்பாளருமான போஸ்கி நத்வானி, நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, ஃபேஷன் ஷோ எப்படி இருக்கும் என்ற அதீத எதிர்பார்ப்பில் இருந்ததாகக் குறிப்பிட்டார்.