Published:Updated:

அரசியலில் இன்னும் ஏன் பெண்களுக்குப் பாதுகாப்பும், முக்கியத்துவமும் இல்லை?! - மேடம் ஷகிலா - 9

அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!
News
அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!

பெண்களுக்கான அரசியல் வாய்ப்புகள் இடஒதுக்கீட்டின் மூலம் அதிகம் கிடைப்பது போல் தெரிந்தாலும் அதை பயன்படுத்தி உள்ளாட்சி பதவிகளில் இருந்து சட்டமன்றம் செல்பவர்கள் மிகக் குறைவு.

Published:Updated:

அரசியலில் இன்னும் ஏன் பெண்களுக்குப் பாதுகாப்பும், முக்கியத்துவமும் இல்லை?! - மேடம் ஷகிலா - 9

பெண்களுக்கான அரசியல் வாய்ப்புகள் இடஒதுக்கீட்டின் மூலம் அதிகம் கிடைப்பது போல் தெரிந்தாலும் அதை பயன்படுத்தி உள்ளாட்சி பதவிகளில் இருந்து சட்டமன்றம் செல்பவர்கள் மிகக் குறைவு.

அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!
News
அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!

கடந்த ஆண்டு திடீரென வைரலான வீடியோ மூலம் பிரபலமானவர் அந்தப் பெண். இப்போது 2021 தேர்தலில் போட்டியிட அவருக்கு ஒரு கட்சி வாய்ப்பளித்திருக்கிறது.

அரசியலில் துளியும் முன் அனுபவமில்லாத, ஓரிரு மக்கள் பிரச்னைகளுக்குக்கூட குரல் கொடுக்காதவர்கள் சட்டமன்ற உறுப்பினராகக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், அந்த இளம் பெண்ணை அறிவு இல்லை என ட்ரோல் செய்வதோடு நிறுத்திவிடவில்லை இந்தச் சமூகம். அந்தப் பெண்ணின் அழகு, அவருக்கு எப்படி வேட்பாளர் வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி எல்லாம் இணையத்தில் மிகக் கேவலமான முறையில் விவாதிக்கிறது. “எனக்கு அந்த தொகுதியில் வாக்கு இல்லையே”, ”எங்கள் தொகுதிதான்... பிரசாரத்திற்கு எங்கள் ஏரியா பக்கம் வரும். அன்று லீவு போட்டு பார்க்கவேண்டும்” என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

2021-லும் ஒரு பெண் அரசியலில் அடியெடுத்துவைத்தால் இதுதான் நிலைமை.
வாக்குச் சாவடியில் ஜெ...
வாக்குச் சாவடியில் ஜெ...
File Photo

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட 17 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். அதில் 8 கோடி பேர் பெண்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் அதற்கு முந்தைய 2016 சட்டமன்ற தேர்தலிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. இப்போது தேர்தலின் முடிவை, யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற தீர்ப்பை வழங்கக்கூடிய சக்தியாக பெண்கள் இருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் பல கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இன்னமும் 10 சதவிகிதத்திற்கு குறைவாகவே இருக்கின்றது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு பிரதான மாநில கட்சிகளும் தலா 12 பெண் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. அதாவது 10 சதவிகிதத்திற்கும் குறைவாக. இதில் அரசியல் வாரிசுகளை தவிர்த்தால் அந்த சதவிகிதம் இன்னும் குறையும்.

முப்பதாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு அரசு வேலையில் 30 சதவிகித இடஒதுக்கீடு மற்றும் 1996 உள்ளாட்சி தேர்தலில் 33 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து இந்தியாவின் முன்னோடியாக இருந்த தி.மு.க-வில் கூட இந்தமுறை பெண்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. தி.மு.க-வின் கட்சி பொறுப்புகளில் மூன்றில் ஒரு இடம் பெண்களுக்கு என விதி இருக்கின்றது. ஆனால் அப்படிப் பொறுப்பில் இருக்கும் பெண்களில் ஒரு சிலரை தவிர யாரும் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறவில்லை.

இரும்பு மனுஷி, பெண்களுக்கு முன்மாதிரி என்று கொண்டாடப்படும் ஜெயலலிதாவும் தன்னுடைய கட்சியில் பெண்களுக்கான முறையான பிரதிநிதித்துவத்தைக் கொடுத்ததில்லை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக கட்சியை வழிநடத்திய ஜெயலலிதாவிற்குப் பிறகு அவரது கட்சியில் குறிப்பிட்டு சொல்லும்படியான பெண் அரசியல்வாதிகள் ஒரு சிலரே. அவர் முதலமைச்சராக இருந்தபோதும் அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் கனிமொழி
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் கனிமொழி

அக்காலத்தில் பெண்கள் அரசியலுக்கு வர யோசித்தபோது பெண்களை அரசியல் படுத்த தமிழ்நாட்டில் அரசியல் கட்சியில் மகளிரணியை உருவாக்கியவர் அண்ணாதுரை. அதற்குப் பிறகு வந்தவர்கள் மகளிர் அணியை வெறும் அணியாக மட்டுமே வைத்து இருந்தார்களே ஒழிய மகளிருக்கான சம ஒதுக்கீடு ஆட்சியில் இல்லை.

கல்லூரிகளில் இலவச சானிடரி நாப்கின்கள், பெண்களுக்கு பொருளாதார உதவியாக 1,000/1,500 ரூபாய், இலவச கேஸ் சிலிண்டர் இவையெல்லாம் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புகள். ஆனால், திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களில் பெண்களின் எல்லா உணர்வுகளையும் ஆண்களே கற்பனையாக எழுதுவதுபோல இந்த 2021-லும் பெண்களுக்கு எது நன்மை, எது தேவை என்பதை ஆண் ஆட்சியாளர்களே முடிவு செய்கிறார்கள். தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு நலத்திட்டங்கள் அறிவித்தால் மட்டுமே போதும் என்று அரசியல் கட்சிகள் நம்புகின்றன. பெண்களும் கூட அதையேதான் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து பாலினருக்குமான நல்லாட்சி என்பது இந்த எல்லா நலத்திட்டங்களையும்விட அனைத்து பாலினருக்கும் ஆட்சியில் சமமான பிரதிநிதித்துவம் தருவது.

திடீரென்று தேர்தலின்போது இடம் ஒதுக்க முடியாது. அதற்கான தகுதியான வேட்பாளர் இல்லாமல் இருக்கலாம் என்கிற வாதத்தை கிட்டத்தட்ட அனைத்து கட்சியினரும் முன்வைக்கிறார்கள். சட்டமன்றம் செல்லத் தகுதியான பெண் வேட்பாளர்கள் உருவாகாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

வாக்குரிமை பெற்ற வயதிலிருந்தே கட்சிப்பணிகளில் ஈடுபடும் பெண்களில் பலரும் அரசியலில் இருந்து விலக திருமணம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆண்களைப் போல பெண்களால், அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை ஒருசேர நன்றாக வைத்துக்கொள்ள முடிவதில்லை. அரசியலில் இருந்தால் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள முடியாது என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர். அரசியல் வாரிசுகளாக இல்லாமல் அடிப்படை உறுப்பினராக இருந்து முன்னேறும் பெண்களுக்கு கள அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சமநிலை, பொருளாதாரம் என எண்ணற்ற தடைகள் உள்ளன.

பெண் அரசியல் பிரபலங்கள்
பெண் அரசியல் பிரபலங்கள்

ஒழுக்க விதிகளின் அடிப்படையில் பெண்கள் மீது விழும் குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் பெண்களை அரசியல் பேசுவது மற்றும் அரசியலில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கிறது. இது ஒருபக்கம் என்றால் எல்லா துறைகளிலும் இருப்பது போல அரசியலிலும் பாலியல் தொந்தரவுகள் அதிகம். சினிமா துறையைவிடவும், அரசியலில் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்முறைகள் அதிகம் என்கிற குற்றச்சாட்டுகளைப் பெருமளவில் கேட்கமுடிகிறது. இப்படிப்பட்ட பாலியல் தொந்தரவுகளால் சத்தம் இல்லாமல் அரசியலைவிட்டே விலகிய பல பெண்கள் இருக்கிறார்கள். வட்டம், ஒன்றியம், மாவட்டம் என எல்லா நிலையையும் கடந்து ஒரு பெண் ஒரு கட்சியில் தலைமைக்கு வருவதற்குள் பல போராட்டங்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. இந்த பாலியல் தொந்தரவுகளை எதிர்த்து வெற்றிபெறும் பெண்கள்தான் தொடர்ந்து அரசியலில் நீடிக்கிறர்கள். இதுதான் யதார்த்தம்.

பெண்களுக்கான அரசியல் வாய்ப்புகள் இடஒதுக்கீட்டின் மூலம் அதிகம் கிடைப்பது போல் தெரிந்தாலும் அதை பயன்படுத்தி உள்ளாட்சி பதவிகளில் இருந்து சட்டமன்றம் செல்பவர்கள் மிகக் குறைவு.

ஆண்கள் அதிகமாக புழங்கக்கூடிய இடங்களில் முக்கியமானது அரசியல். ஊழல், கொள்ளை போன்ற மோசமான குற்றங்கள் அதிகம் நடக்கக்கூடிய இடமாகவும் அரசியல் களம் இருக்கிறது. அதனாலேயே பெண்கள் அரசியலில் வர விரும்பினால் அது பணம் மற்றும் புகழுக்காக என பார்க்கப்படுகிறது. மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய நினைப்பவர்கள் இப்போது இருக்கிறார்களா என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. அப்படி ஓன்றிரண்டு பேர் இருந்தாலும் அவர்களையும் நம்பமுடியாத சூழல் உள்ளது.

அரசியலில் இருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் பேருக்கு மட்டுமே பதவியில் இருக்கின்றனர். அதிகாரங்கள் அவர்கள் குடும்பத்து ஆண்களிடம் இருக்கின்றது. ஜெயலலிதாவின் பின்னாலும் கூட அதிகாரங்கள் அவருடைய வீட்டில் இருந்தவர்களுக்குப் பகிரப்பட்டு இருந்தது என்கிற உண்மைகள் அவர் இறந்தபிறகு சம்பந்தப்பட்டவர்கள் மூலமாக நேரடியாகவே சொல்லப்பட்டது.

ஒரு அரசியல் கூட்டம் அல்லது மாநாட்டிற்கு பெண்கள் வரும்போது அவர்களுக்கான பாதுக்காப்பான தங்குமிடங்கள், சரியான வாகன வசதி, கழிப்பறை வசதிகள் என அத்தியாவசிய தேவைகளைகூட கட்சிகள் கவனம் எடுத்து முறையாகச் செய்வதில்லை. அதனாலேயே பெரும்பாலான அரசியல் மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் ஆண்கள் நிறைந்ததாக இருக்கின்றன.

அரசியல் களம் கண்ட நடிகைகள்
அரசியல் களம் கண்ட நடிகைகள்

நான் வெளிப்படையாக அரசியல் பேசும்போது என்னை முதலில் எச்சரித்தவர்கள் பெண்கள். பெண்கள் அரசியல் பேசுவது கேவலம் என்று வெளிப்படையாகவே சொன்னவர்கள் உண்டு. ”இது உனக்கு தேவையில்லாத வேலை” என்றார்கள். ”அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்வது தவறு” என போதனை செய்தார்கள். ”நீ அரசியலில் குதிக்க விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். அரசியல் பேசுவதே பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு பதவிக்கு வரத்தான் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள் நம்மக்கள்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாட்டின் அரசியலில் இணைந்தே இருக்கிறோம். அரசியல் கட்சிகளில் பொறுப்பில் இருப்பது, தேர்தலில் நின்று ஆட்சியில் பங்கு வகிப்பது போன்றவை வேறு, அரசியலை தெரிந்து கொள்வதும், அரசியல் பேசுவதும் வேறு.

கட்சி பதவிகளில் ஈடுபாடு இல்லாமல் ஒருவர் இருக்கலாம். அது தனிப்பட்ட விருப்பம். ஆனால் நாளும் புதுப்புது கட்சிகளும், புது புது முதல்வர் வேட்பாளர்களும் உதிக்கும் இக்காலத்தில் வாக்குரிமை உள்ள ஒருவர் வேட்பாளர்களை, அவர்களது கூட்டணி கட்சிகளை, அவர்தம் கொள்கைகளை, முந்தைய ஆட்சிக்காலத்தில் அரசியல் செயல்பாடுகளை எல்லாம் அறிந்திருப்பது அவசியம். வெறுமனே சின்னங்களைப் பார்த்தும், முகக்கவர்ச்சியை பார்த்தும் ஓட்டு போட்ட காலம் இனியும் தொடரக்கூடாது.

சுற்றியிருப்பவர்கள் அரசியலில் நமக்கு எதிர்கருத்து கொண்டிருந்தால் அவர்களிடம் உரையாடி அவர்கள் சொல்வது சரி என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நம் கருத்து சரி என்றால் அவர்களுக்கு புரிய வைக்கலாம். உரையாடல்கள் மூலம்தான் புரிதல் ஏற்பட்டு சரியான அரசியல் பாதையை நோக்கிச் செல்ல முடியும்.

ஜெயலலிதா - கருணாநிதி
ஜெயலலிதா - கருணாநிதி
நமது கல்வி, சுதந்திரம், பொருளாதார முன்னேற்றத்திற்கு யார் வழிவகை செய்வார்கள் எனும் அடிப்படையில் கட்சி/வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் அரசியல் பேசாமல் ஒரு காலத்திலும் நமக்கான உரிமைகளைப் பெறவே முடியாது.

1996 தேர்தலின்போது அம்மா, அத்தை, சித்தி என வீட்டுப் பெண்கள் தேர்தலை அவ்வளவு ஆர்வமாக எதிர்கொண்டார்கள் என்பது இன்றும் நினைவிருக்கிறது. வீட்டில் தேர்தல் பற்றிய பேச்சுக்கள் அதிகமாக இருக்கும். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் இடையில் மாபெரும் போட்டி இருந்த சமயம் அது. கூடுதலாக ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப் போகிறார் என்கிற பரபரப்பு வேறு. பெண்கள் வீட்டு வேலையை முடித்தப்பிறகு எந்நேரமும் தேர்தல் பற்றிய பேச்சுகளும், செய்திகளும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். படிப்படியாக இது மாறி வந்து இப்போது முப்பது வயதுக்கும் குறைவாக இருக்கும் பெண்களிடத்தில் அரசியல் பற்றி பேசினால் ”எனக்கு அரசியல் பிடிக்காது” என்று நேரடியாக சொல்லிவிடுகிறார்கள்.

மெரினா புரட்சி என்றழைக்கப்படும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ''அரசியல்வாதிகள் போராட்டக்களத்தின் உள்ளே வரக்கூடாது'' என்று சொன்னது நினைவிருக்கலாம். இங்கே அரசியல் படுத்தப்படாத எந்தப் போராட்டமும் மிக மோசமான பின்விளைவுகளை கொண்டிருக்கும் என்பதற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் மீனவ கிராமங்களில் நடந்த சம்பவங்கள்தான் சாட்சி.

மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுக்கூடி நடத்தும் போராட்டமாக இருந்தாலும் இறுதியில் ஒரு சட்டத்தை இயற்றவோ/நிராகரிக்கவோ தேவையான ஒரு முடிவிற்கு பெரும்பாலும் சட்டரீதியான போராட்டமே வழிவகுக்கும். அதற்கு நீண்ட கால அவகாசமும், உழைப்பும் தேவைப்படும். அது இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் மட்டுமே செய்யமுடியும். தனிநபர்களும், சிறு குழு போராட்டக்காரர்களும் செய்ய இயலாது. அதுபோக நமது பிரச்னைகளுக்கு நாள்தோறும் நாமே தெருவில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கவும் முடியாது.

ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜல்லிக்கட்டு போராட்டம்

அதனால் நமக்கான சரியான பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது அவசியம். அது திடீரென்று ஒரேநாளில் தேர்தலின்போது மட்டும் செய்யமுடியாது. நாள்தோறும் அரசியல் பேசாமல், தேர்தல் நேர பரப்புரை மற்றும் வாக்குறுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு சரியான ஒரு நபரை தேர்ந்தெடுக்க முடியாது. நாம் அரசியல் பேசாத வரையில் நமக்கான ஆட்சியாளர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள்.

நாடு சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி, வேலை, அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சம அளவில் இருந்திருக்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறைகள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் முன்னெப்போதையும்விட நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.

பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க பெண் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியம். வாரிசுகள் அல்லாத கணவரோ, அப்பாவோ நிழலாக செயல்படாத தனி பெண் ஆளுமைகள் உருவாகுதல் மிக அவசியம். அவர்களால் மட்டும்தான் பெண்களுக்காக சிந்திக்க முடியும். அப்படி உருவாக வேண்டுமானால் பெண்கள் முதலில் சகஜமாக அரசியல் பேச வேண்டும்.