Published:Updated:

மேடம் ஷகிலா-16: வானதியின் வெற்றி, சுப்புலட்சுமியின் தோல்வி… தேர்தல் முடிவும், பெண்களின் தீர்ப்பும்!

தேர்தல்
News
தேர்தல்

பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்களை குறிப்பிட்டு அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கிற குற்றச்சாட்டை திமுக முன்வைத்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதாக உறுதியளித்தது. ஆனால், சம்பவம் நடந்த பொள்ளாச்சியிலேயே அதிமுக வென்றிருக்கிறது.

Published:Updated:

மேடம் ஷகிலா-16: வானதியின் வெற்றி, சுப்புலட்சுமியின் தோல்வி… தேர்தல் முடிவும், பெண்களின் தீர்ப்பும்!

பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்களை குறிப்பிட்டு அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கிற குற்றச்சாட்டை திமுக முன்வைத்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதாக உறுதியளித்தது. ஆனால், சம்பவம் நடந்த பொள்ளாச்சியிலேயே அதிமுக வென்றிருக்கிறது.

தேர்தல்
News
தேர்தல்
வரலட்சுமி (தி.மு.க), மரகதம் (அ.தி.மு.க), வி.அமுலு (தி.மு.க), சித்ரா (அ.தி.மு.க), சி.சரஸ்வதி (பா.ஜ.க), கயல்விழி (தி.மு.க), வானதி (பா.ஜ.க), தேன்மொழி (அ.தி.மு.க), சிவகாமசுந்தரி (தி.மு.க), தமிழரசி (தி.மு.க), கீதா ஜீவன் (தி.மு.க), விஜயதாரணி (காங்கிரஸ்)

2021தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் நுழையும் இந்தப் பெண்களுக்கு வாழ்த்துகள். தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் என நான்கு கட்சிகளிலிருந்து மொத்தமாக 12 பெண்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். 2021 தமிழகத் தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 4,57,76,311. இதில் ஆண்கள் 2,26,03,156 பேர். பெண்களோ 2,31,71,736 பேர். ஆண்களைவிட 5 லட்சத்து 68 ஆயிரத்து 580 பெண்கள் அதிகமாக வாக்களித்திருந்தார்கள். தேர்தலின்போது மகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்தச் செய்தி, தேர்தலில் வெற்றிப் பெற்ற பெண்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தம் கொள்ளச் செய்கிறது.

பொன்னுத்தாயை ஆதரித்து நடிகை ரோகிணி பிரசாரம் செய்தபோது...
பொன்னுத்தாயை ஆதரித்து நடிகை ரோகிணி பிரசாரம் செய்தபோது...

முன்னாள் அமைச்சர்களாக இருந்த அரசியலில் சீனியர் பெண்கள் தோற்றிருப்பதும், புதிய கட்சிகளின் முதல்முறை வேட்பாளராக நிற்பவர்கள் கணிசமான வாக்குகள் வாங்கியிருப்பதும் மக்கள் எதன் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்பதை கட்சிகள் தீவிரமாக ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களை மையப்படுத்தும் திட்டங்கள், பெண்கள் மீதான அவதூறு பேச்சுகள், அதன் விளைவாக சர்ச்சைகள், பெண்களுக்குப் பாதுகாப்பின்மையை முன்வைத்து பிரசாரம் எனக் கடந்த தேர்தல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே அமைந்திருந்தது.

பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுக்கப்படும் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதலில் அறிவிக்க, அடுத்து மாதம் 1000 ரூபாய் அரசு கொடுக்கும் என்று தி.மு.க-வும், 1500 கொடுப்பதாக அ.தி.மு.க-வும் அறிவித்திருந்தது. ஆண்டுக்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்களும், வாஷிங்மெஷினும் கொடுப்பதாக அ.தி.மு.க கூறியிருந்தது. தி.மு.க-வைவிட பெண்களுக்கு அதிகமாக செய்வதாக சொன்ன அ.தி.மு.க தோற்றிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இடதுசாரிகள் மக்கள் பிரச்னைகளில் உடன் நிற்பவர்கள், வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டார்கள், எளிமையானவர்கள் என்பது இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் பிரதான பிரசார முழக்கமாக இருந்தது. 12 தொகுதிகளில் போட்டியிட்ட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து 4 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கின்றன. அதிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரே பெண் வேட்பாளர் பொன்னுத்தாய் திருப்பரங்குன்றம் தொகுதியில் 12.5 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

கனிமொழி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
கனிமொழி - சுப்புலட்சுமி ஜெகதீசன்

மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மப்ரியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது சமூக வலைத்தளங்களில் முக்கிய பேசுபொருளாக இருந்தார். வீடியோக்கள் மூலம் பிரபலமாகியிருந்த அவர் அரசியல் தெரியாது என்ற கேலி செய்யப்பட்டார்.

ஒரு பேட்டியில் இடஒதுக்கீடு பற்றிய கேள்விக்குப் பதிலளிக்க மறுத்ததோடு கேமராவை அணைக்குமாறு பத்மப்ரியா கூறும் வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூகநீதியின் அடிப்படையிலான இடஒதுக்கீடு முக்கிய காரணம். அப்படியிருக்க அடிப்படையே தெரியாமல் அல்லது அதை பற்றி பேச விரும்பாதவர்களை ஏற்கக்கூடாது என அவருக்கு எதிராக விவாதங்கள் நடந்தன.

ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக பத்மப்ரியா 33 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் இரண்டு பெரிய கட்சிகளிடையே மட்டுமே நிகழ்ந்து வருகிறது. இதை விரும்பாமல் மாற்றாக மூன்றாவது அணி அல்லது கட்சி உருவாவதில் சிலர் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களின் நம்பிக்கையாக ஒரு சில பகுதிகளில் இம்முறை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பார்க்கப்பட்டது. பத்மப்ரியா வாங்கிய வாக்குகளுக்கு அது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். அதே சமயம் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காத, தமிழ்நாட்டு அரசியலுக்கு தேவையான அடிப்படை அறிவு இல்லாதவர் என்றெல்லாம் கேலி செய்யப்பட்ட ஒருவருக்கு, ஒரு பொழுதுபோக்கு செயலியில் பிரபலமாக இருந்த ஒரே காரணத்தின் அடிப்படையில் மக்கள் வாக்களித்திருப்பதை பார்க்கும்போது மாநிலத்தில் மக்களிடையே அரசியல் கல்வியை தீவிரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று புரிகிறது.

கள நிலவரத்தை சமூக வலைத்தளங்கள் பிரதிபலிப்பதாக தோன்றினாலும் சில நேரங்களில் அது வெறும் மாயபிம்பம் என்பது போல் ஆகிவிடுகிறது. நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு வேட்பாளர் பட்டியலில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறது என்பதே பெரிய பிரசாரமாக இருந்தது. ஆனால் அவர்களில் ஒரு பெண்கூட வெல்லவில்லை. வாக்கு சதவிகிதத்தில் இரண்டாம் இடம்கூட அக்கட்சியில் யாரும் வரவில்லை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

வானதி
வானதி

தி.மு.க-வின் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை, பா.ஜ.க-வின் சரஸ்வதி வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கும், விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராகவும் போராடி வரும் மொடக்குறிச்சி மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களித்திருக்கின்றனர். முதன்முறை வேட்பாளரான சரஸ்வதி அந்தப் பகுதியை சேர்ந்த பிரபலமான மருத்துவர். குறுகிய காலத்தில் அப்பகுதியில் இருக்கும் பெண்களிடத்தில் பெருமளவில் பா.ஜ.க-வை கொண்டு சேர்த்திருக்கிறார். அதே சமயம் இரண்டு முறை அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

இன்னொரு முன்னாள் அமைச்சரான தி.மு.க-வை சேர்ந்த பூங்கோதை ஆலடி அருணா ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரிடம் தோற்றிருக்கிறார். ஒருமுறை ஆளுங்கட்சி அமைச்சராகவும், மறுமுறை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த அவரின் தோல்விக்கு உட்கட்சி பூசல், தொகுதி பக்கம் சரிவர வராதது என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக முழுக்க முழுக்க சாதியை முன்னிறுத்தி பிரசாரம் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர் ஹரி நாடார் 37,727 வாக்குகள் வாங்கியிருக்கிறார். மற்ற முக்கிய வேட்பாளர்களும் அதே சாதியை சார்ந்தவர்கள் என்றாலும் தன்னுடைய சாதியை சார்ந்தவர்கள் மட்டும் தனக்கு வாக்களித்தால் போதும் என வெளிப்படையாக பேசிய அவருக்கு பெண்களும் வாக்களித்திருக்கிறார்கள். எல்லா தொகுதியிலும் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாக சாதியும் இருக்கிறது. இன்றைய இளம்பெண்களும் அத்தகைய உணர்வுகளுக்குள் சிக்கிக் கொள்வது பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிரானது.

கமல் - வானதி
கமல் - வானதி

பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் தனது போட்டி வேட்பாளரான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் வானதி சீனிவாசனை 'அனுபவமில்லாத அரசியல்வாதி' என்கிற ரீதியில் கமல் விமர்சனம் செய்தார். பதிலுக்கு கமலின் தனிப்பட்ட வாழ்கையை பற்றி பிரசாரத்தில் மிக அருவருக்கத்தக்க வகையில் வானதி பேசினார். வானதியின் இந்த விமர்சனம் பெண்களே முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. அது மட்டுமல்லாமல் பா.ஜ.க-வின் யோகி ஆதித்யநாத் பிரசாரத்திற்கு வந்தபோது கோவையில் இந்து முன்னணியினர் ஊர்வலமாக சென்றது, கடைகளை அடைக்கச் சொன்னது என மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இவற்றை எல்லாம் தாண்டி வானதி அப்பகுதியில் வென்றிருப்பதோடு பா.ஜ.க மீண்டும் தமிழ்நாட்டில் தனது கணக்கை திறக்க காரணமானவர்களில் ஒருவராகி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான முகமான பா.ஜ.க-வின் குஷ்பு சுந்தர் வெறும் 28.99 சதவிகித வாக்குகள் வாங்கி தோல்வியுற்றார். அதேபோல் பிரேமலதா விஜயகாந்த் நிர்வகிக்கும் தே.மு.தி.க கட்சி இம்முறை மொத்தமாக டெபாசிட் இழந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்களை குறிப்பிட்டு அதிமுக ஆட்சியில் மேற்கு மாவட்டங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்கிற குற்றச்சாட்டை தி.மு.க முன்வைத்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதாக உறுதியளித்தது. இது பெருமளவில் பெண்கள் வாக்குகளை பெற்றுத் தரும் என்றும், முன்பைவிட தி.மு.க சில இடங்கள் கூடுதலாக வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், சம்பவம் நடந்த பொள்ளாச்சியிலேயே அ.தி.மு.க வென்றிருக்கிறது.

பத்மபிரியா
பத்மபிரியா

தனது பள்ளிக்காலம் முதலே மக்களுடன் கள அரசியலில் இருக்கும் இடதுசாரி பெண் வேட்பாளர் தோற்றிருக்கிறார். பிரசாரத்தின்போதே மதத்தின் பேரில் வன்முறை செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்று எதிர்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டவர் வென்றிருக்கிறார். கொரோனா லாக்டெளன் போன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர் தோற்றிருக்கிறார். கட்சியின் மீது விமர்சனங்கள் இருந்தபோதும் உள்ளூரில் 'நல்லவர் பிம்பம்' இருக்கும் புதியவர் 45 ஆண்டுகளாக அரசியலில் இருந்த சீனியரை வென்றிருக்கிறார். ஒன்றும் தெரியாத இளம்பெண் என ட்ரோல் செய்யப்பட்டவர் தலைநகரின் முக்கிய பகுதியில் 12.2 சதவிகிதம் ஓட்டுகள் வாங்கியிருக்கிறார். இவை எல்லாவற்றிலும் பெண் வாக்காளர்களின் பங்கு இருக்கிறது. அதேசமயம் வெறுமனே பெண் வேட்பாளர்களுக்காக பெண்கள் வாக்களிப்பார்கள் என்பதை பெரும்பாலான இடங்களில் பெண்கள் மாற்றிக் காட்டி இருக்கிறார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

பொதுவாக தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றிருந்த நிலையை உடைத்து 2016-ல் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதற்கு ஜெயலலிதா மிக முக்கிய காரணமாக இருந்தார். அ.தி.மு.கவின் மீது இருக்கும் விமர்சனங்கள் அனைத்தும் ஜெயலலிதா எனும் பிம்பத்தின் பின்னால் மறைந்தன. ஜெயலலிதா ஒரு பெண் என்பதாலேயே வாக்களித்ததாகச் சொன்ன பெண்கள்தான் பெரும்பான்மையானோர். அநேகமாக பெண் என்பதால் மட்டுமே வாக்குகள் பெற்ற கடைசிப் பெண் வேட்பாளர் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவாக இருப்பார்.

கடந்த தேர்தல் முடிவுகள், பெண்கள் இம்முறை பாலினம் சார்ந்து முடிவெடுக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கின்றன. கட்சிகள் இப்போதிருந்தே தொகுதிவாரியாக பெண்களிடத்தில் உரையாடல்கள் நிகழ்த்த வேண்டும், அவர்களின் பிரச்னைகளை மேம்போக்காக அல்லாமல் தீர்வு காணும் வகையில் கேட்டறிய வேண்டும் என இந்த முடிவுகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன. அதேபோல் அனைத்து கட்சிகளும் பெண்களுக்கான உரிய இடஒதுக்கீட்டை கட்சி நிர்வாகத்திலும் அளிக்க வேண்டும். அதுதான் அடுத்து வரும் தேர்தலுக்கு தகுதியான கள அரசியலை நன்கு அறிந்த பெண் வேட்பாளர்களை உருவாக்கும்.