``தொழில்நுட்பத்தில் பெண் வழக்கறிஞர்கள், ஆண் வழக்கறிஞர்களை விட திறமை பெற்றவர்களாக உள்ளனர்" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
கடன் மீட்புத் தீர்ப்பாயங்களிலும், கடன் மீட்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களிலும், கடனின் அளவு 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் மீட்கப்பட வேண்டி இருந்தால் மட்டுமே இணையவழிப் பதிவு என்பது, விதிகள் மூலமாக திருத்தம் செய்யப்பட்டு, அனைத்து மீட்பு வழக்குகளுக்கும் இணைய வழிப்பதிவு கட்டாயமாக்கப்பட்டது.

இந்த திருத்தத்தினை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், பெண் வழக்கறிஞர்கள் மற்றும் முதியோர்களுக்கு இணைய வழி வழக்குப்பதிவில் இருந்து விலக்குக் கோரப்பட்டிருந்தது. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தால் தொடுக்கப்பட்ட இவ்வழக்கில், கடன் மீட்புத் தீர்ப்பாயங்களிலும் (DRT), கடன் மீட்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களிலும் இணையவழி வழக்குப் பதிவை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
அதே நேரம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா மற்றும் ஜே.பி.பர்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வானது, கட்டாய இணையவழி வழக்குப் பதிவில் இருந்து பெண் வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை நிராகரித்தது.
இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட், ``பெண் வழக்கறிஞர்கள் திறைமையற்றவர்கள் என்று கூறுகிறீர்களா? தொழில்நுட்பத்தில் பெண் வழக்கறிஞர்கள், ஆண் வழக்கறிஞர்களைவிட திறமை பெற்றவர்களாக உள்ளனர்.

பெண் வழக்கறிஞர்கள் தகவமைத்துக் கொள்ள மாட்டார்கள் அல்லது தொழில்நுட்பத்தில் மோசமாக உள்ளனர் என்ற முன் அனுமானத்தைக் கொண்டிருப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
``இளைய வழக்கறிஞர்கள், அலுவலர்கள் போன்றோர் இணைய வழி வழக்குப் பதிவை அறிந்திருக்கக்கூடும். ஜர்க்கண்ட், அலகாபாத், மத்தியப்பிரதேசம் போன்ற இடங்களில் மூத்த வழக்கறிஞர்கள் இதை அறியாதிருக்கக் கூடும்” என்ற அந்த அமர்வு, “தீர்ப்பாயங்களுக்குச் செல்லும் வழக்கறிஞர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்வும் தெரிவித்தது.
- நிலவுமொழி செந்தாமரை