தமிழ் சீரியல்களில் பிரபலமான, பலருக்கும் பிடித்தமான நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி. இவரது நடிப்புக்கு பல வயதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது நடிப்பு மட்டும் அதற்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது. அவர் தேர்வு செய்த கேரக்டர் சாய்ஸ்கூட முக்கிய காரணம்.
நடிக்கும் கேர்டரை மட்டுமல்ல, தன் வாழ்க்கை குறித்த திட்டமிடலில்கூட தனக்குச் சரியெனப்படுவதை மட்டுமே தேர்வு செய்யும் குணம் கொண்டவர் நீலிமா. திருமணம், குழந்தைகள் என பல உதாரணங்களைச் சொல்லலாம்.... அந்த சாய்ஸ் பற்றி அவரிடமே கேட்டோம்.
``எனக்கு 2008-ல கல்யாணம் ஆச்சு. ஆனா நாங்க யாரும் எதிர்பாராதவிதமா என்னோட அப்பா 2009-ல இறந்துட்டார். அப்போ என் தம்பி பத்தாவதுதான் படிச்சுட்டு இருந்தான். அந்தச் சூழ்நிலையில குழந்தை பெத்துக்கிறது சரியானதா இருக்கும்னு தோணலை. அப்போ எனக்கு சரியான பொருளாதார வசதியும் இல்லை. அதனால என் தம்பி முதல்ல காலேஜ் முடிக்கட்டும்னு நினைச்சேன்.
என் தம்பி காலேஜ் முடிச்சுட்டான்னா, அவன் சொந்த கால்ல நிற்கத் தொடங்கிடுவான். அதுக்கப்புறம் நாம குழந்தை பெத்துப்போம்னு நினைச்சேன். இதை பத்தி என்னோட மாமனார், மாமியார்கிட்ட சொன்னபோது அவங்க யாருமே எனக்குத் தடை போடல.
தம்பி படிக்கிறதால 6 வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம்னு என் கணவர்கிட்ட நான் சொன்னபோது, அவர் அதுல இருந்த நியாயமான காரணத்தைப் புரிஞ்சுகிட்டார். இப்படி மத்தவங்களுக்குப் புரிய வைக்கவேண்டியது நம்ம கைல தான் இருக்கு. நம்ம சொல்ற விஷயத்துல நியாயம் இருக்கும்போது, யாரும் நம்ம முடிவுகளை மறுக்கமாட்டங்க.
ஆறு வருஷம் கழிச்சு நான் குழந்தை பெத்துக்க முடிவு பண்ணினபோது, அடுத்த வருஷமே அதிதி என் வயித்துல உண்டாயிட்டா. இது என்னோட அதிர்ஷ்டம்னும் சொல்லலாம். நான் கர்ப்பமா இருந்தபோதும் நான் வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள்னு சீரியல்கள்ல நடிச்சுட்டு தான் இருந்தேன். அதுவும் என்னோட சாய்ஸ் தான்.
நான் கர்ப்பமாக இருக்கறதால வேலையை விடணும்னு இல்லையே.... மத்த வேலைகள் மாதிரி இதுவும் ஒரு வேலை தான். அந்த நேரத்துல எனக்கு என்னோட தயாரிப்பாளர்கள் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. டெலிவரிக்கு பிறகும்கூட சின்ன பிரேக் எடுத்துட்டு, உடனே நடிக்க வந்துட்டேன். அப்புறம் கோவிட் காலத்துல எனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்தது.
நான் எப்பவுமே என்னோட சாய்ஸ்படி முடிவெடுக்கறதுல ரொம்ப தெளிவா இருப்பேன். பெண்கள் அவங்களோட சாய்ஸை வெளிபடுத்தறதுல போல்டா இருக்கணும். சமுதாயம் என்ன சொல்லுமோன்னு நம்ம சாய்ஸை மாத்திக்க வேண்டாம்" என்று புன்னகைக்கிறார்.