Published:Updated:

Corona Live Updates: `ஒரே நாளில் 3,680 பேருக்கு தொற்று... சென்னையில் 1,205’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம்

கொரோனா
Live Update
கொரோனா

10.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

10 Jul 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்:

தமிழகத்தில், இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,163 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 64 ஆகக் கூடிய நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது.

Corona Live Updates: `ஒரே நாளில் 3,680 பேருக்கு தொற்று... சென்னையில் 1,205’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம்

சென்னையில் மேலும் 1,205 பேருக்கு தொற்று:

சென்னையில் மட்டும், இன்று 1,205 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து ஏழாவது நாளாக 2,000-க்கும் குறைவாகப் பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது.

10 Jul 2020 5 PM

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கியை நிறுவவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

10 Jul 2020 4 PM

அரியலூரில் பூ வியாபாரி கொரோனாவுக்கு பலி!

அரியலூர் மாவட்டத்தின் முக்கிய கடைவீதியான மங்காய் பிள்ளையார் கோயில் தெருவில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தவர் ஒவருக்கு மூன்று நாள்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாபாரி இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆய்வு செய்யும் அதிகாரிகள்
ஆய்வு செய்யும் அதிகாரிகள்

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அவருடன் பழகியவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என எல்லோருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க இருக்கிறார்கள். இந்நிலையில் அவருடன் வியாபாரம் செய்த கடைப்பகுதியில் அரை கிலோமீட்டர் தூரத்துக்குக் கடைகளை அடைக்க நகராட்சி நிர்வாக ஆணையர் குமரன் உத்தரவிட்டதோடு, மறு உத்தரவு வரும்வரை கடைகளைத் திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

10 Jul 2020 1 PM

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா தொற்று!

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே மின்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட அ.தி.மு.கவினருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

10 Jul 2020 1 PM

2 நாள்கள் மூடப்படும் தலைமைச் செயலகம்!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசின் தலைமைச் செயலகம் இரண்டு நாள்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துவதற்காகத் தலைமைச் செயலகம் மூடப்படுகிறது.

10 Jul 2020 10 AM

இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona
corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,604 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,513 ஆகவும் உயர்ந்துள்ளது.

10 Jul 2020 10 AM

கொரோனா - உலக நிலவரம்

Corona
Corona
Pixabay

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,23,87,826 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 71,87,447 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,57,405 ஆக உயர்ந்துள்ளது.