Published:Updated:

மலாலை ஜோயாவுக்கு நோபல் பரிசு கிடையாதா?

மலாலை ஜோயாவுக்கு நோபல் பரிசு கிடையாதா?

அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்​பட்டதால், உலகின் கவனத்தை மீண்டும் ஒருமுறை ஈர்த்துள்​ளார் மலாலா. பாகிஸ்தானில், பெண்களின் கல்வி உரிமைக்குக் குரல் கொடுத்த காரணத்துக்காக, தாலிபன் தீவிரவாதிகளால் மலாலா சுடப்பட்டார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சொந்த நாடான பாகிஸ்தானுக்குத் திரும்பாமல், லண்டனில் வசித்து வருகிறார். நோபல் பரிசுக்காக மலாலா தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வரும் இன்னொரு பெண் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். அவர் பெயர், மலாலை ஜோயா.  

மலாலா - மலாலை... இருவரின் பெயர்​களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. பெண்களுக்கான கல்வி உரிமை என்ற விஷயத்திலும் இருவரும் ஒரே கருத்து கொண்டவர்கள். ஆனாலும், நோபல் பரிசுக்கு மலாலா தேர்வு செய்யப்பட்டது, மலாலை ஜோயாவின் பெயர் பரிசீலிக்கப்படாதது ஆகியவற்றுக்குப் பின்னால், மிகப்பெரிய அரசியல் இருக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

மலாலை ஜோயாவுக்கு நோபல் பரிசு கிடையாதா?

தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார் என்ற காரணத்துக்காக மட்டுமே, மேற்குலக நாடுகளால் மலாலா அரவணைக்கப்படவில்லை. அவர் ஒரு சிறுமி என்பதால், அவரது தலைக்குள் மேற்குலகின் அரசியல் அபிலாஷைகளை இலகுவாகத் திணிக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டிஷ் மகாராணி என்று உலகின் மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் சிறுமி மலாலாவைச் சந்தித்தனர். இப்போது, நோபல் பரிசும் கொடுத்தாகிவிட்டது. இனிமேல் அவர் மேற்குலகின் 'அபிவிருத்தி’ திட்டங்களின் உள்ளூர்ப் பிரதிநிதியாகப் கௌரவிக்கப்படுவார். அடுத்த பல ஆண்டுகளுக்கு, பாகிஸ்தானில் மேற்கத்தியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த உதவுவார்.

மலாலை ஜோயாவுக்கு நோபல் பரிசு கிடையாதா?

ஆனால், மலாலை ஜோயாவை மேற்குலக நாடுகள் எப்படிப் பார்க்கின்றன? ஆப்கானிஸ்​தான் ஒரு காலத்தில் சோஷலிச நாடாக இருந்தது. அந்தக் காலங்களில் பெண்களுக்கு நிறைய சுதந்திரம் இருந்தது. பெண் கல்வியை கம்யூனிஸ்ட்கள் ஊக்குவித்தனர். ஃபர்தா அணியாத பெண்கள், பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினர். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ராணுவம் வெளியேறியவுடன், மத அடிப்​படைவாதி​களான முஜாகிதீன் குழுக்கள் ஆட்சியைப் பிடித்தன. பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்தனர். 

பாகிஸ்தானின் ஆப்கன் அகதி முகாம்களில், சோஷ‌லிச சிந்தனை கொண்ட பெண்கள் ஒன்றுகூடி அமைப்பாகத் திரண்டனர். RAWA (Revolutionary Association of the Women of Afghanistan)  என்ற பெயரில் புரட்சிகர அமைப்பை உருவாக்கினர். அகதி முகாம்களில் வாழ்ந்த சிறுமிகளுக்குக் கல்வி கற்​பிக்கப் பாட​சாலைகளை நடத்தினர். அகதிச் சிறுமியான மலாலை ஜோயா, அந்தப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தார். தற்போது, 36 வயதாகும் மலாலை ஜோயா, இடதுசாரி அமைப்புகளில் துடிப்போடு செயல்பட்டு வருகிறார்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படை​யெடுத்து, தாலிபன்களை வெளியேற்றிய பின்னர், அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட மலாலை ஜோயா, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்​வானார். முன்னாள் யுத்தப் பிரபுக்கள், மத அடிப்​படை​வாதிகள், பிற்போக்குவாதிகள் ஆகியோர் பெரும்பான்மையாக இருந்த நாடாளுமன்றத்தில், ஒரு துணிச்சலான, நேர்மையான அரசியல்​வாதியாக மலாலை அமர்ந்தார். 

தாலிபன்களுக்கு எதிராக தீவிரமாகப் போராடுகிறார். அமெரிக்க ஏகாதிபத்தியம், முன்னாள் முஜாகிதீன் குழுக்கள், நிலப் பிரபுக்கள், மதத் தலைவர்கள், போன்ற பல ஆதிக்க சக்திகளையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். 'இங்கே அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பலர், முஜாகிதீன் யுத்​தப் பிரபுக்களாக இருந்த காலத்தில் புரிந்த போர்க்குற்றங்களுக்காக, சர்வதேச நீதிமன்றத்​தினால் தண்டிக்கப்பட வேண்டும்...' என்று நாடாளுமன்றத்தில் துணிச்சலுடன் பேசினார் மலாலை. அதற்கு நேரடி யாகப் பதிலளிக்காத பிற்போக்குவாதிகள், 'மலாலை ஒரு கம்யூனிஸ்ட்!' என்று குற்றம் சாட்டினர். அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் கொலை மிரட்டல்கள் வந்தன. வீட்​டுக்குள் முடங்க வேண்டிய நிலைக்கு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அடிக்கடி தன் இருப்பிடத்தை மாற்றி வாழ்ந்து வருகிறார். ஒரு பெண்ணாக அத்தனை சவால்களையும் சமாளித்து அரசியல் நடத்துவது சாதாரண காரியம் இல்லை.

ஆனாலும், தாலிபன் போன்ற மத அடிப்படைவாத தீவிரவாதிகளுக்கு எதிராகவும் பெண்களின் கல்வி உரிமைக்கு ஆதரவாகவும் துணிச்சலுடன் போராடி வருகிறார் மலாலை ஜோயா. அவரது பெயர் நோபல் பரிசு தேர்வுக்குழுவினரின் கண்களுக்குத் தெரியாமல் போனது ஏன்? அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதாலா?

- ஆல்பர்ட்