Published:Updated:

தமிழ்ச்செல்வனுக்கு வாக்களித்த மராட்டிய மக்கள்!

25 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ ஆனார் ஒரு தமிழர்!

மும்பை சயான் கோலிவாடா சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகியிருக்கும் 'கேப்டன்’ தமிழ்ச்செல்வன், மராட்டியத்தை மட்டுமல்லாது, தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர், நம் புதுக்கோட்டை பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர். பிழைப்புக்காக மும்பை சென்ற தமிழ்ச்செல்வன், தனது கடின உழைப்பாலும் சமூக சேவையாலும் படிப்படியாக உயர்ந்து இன்று எம்.எல்.ஏ ஆகிவிட்டார்.  

'மும்பை வந்த அந்த நாட்கள் பற்றிச் சொல்லுங்கள்?

''18 வயது வரை சொந்த ஊரில் இருந்த நான், அதன்பிறகு, மும்பைக்கு வந்தேன். தினக்கூலியாகத் தொடங்கியது என் வாழ்க்கை. அதன்பிறகு ரயில்வே பார்சல் புக்கிங் ஏஜென்ஸியில் சேர்ந்தேன். பின்பு, தொழில் அதிபராக உயர்ந்த நான், தற்போது அரசுக் கட்டடங்களைக் கட்டும் ஒப்பந்தக்காரராக இருக்கிறேன். இங்குவந்த 36 வருடங்களில், ஏழை எளிய மக்களுடைய கஷ்டம் எனக்குத் தெரியும். எதுவுமே இல்லாமல் மும்பை வந்த எனக்கு, இன்று அனைத்தையும் தந்தது இந்த மண்தான்.

தமிழ்ச்செல்வனுக்கு வாக்களித்த மராட்டிய மக்கள்!

சம்பாதித்த பணத்தை வைத்து கஷ்டப்பட்ட மக்களுக்காக உதவி செய்தேன். சமூகப் பணிக்காக மராட்டிய-தமிழ் கூட்டமைப்பை ஏற்படுத்தினேன். சமூகப் பணிக்கு அரசியல் அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக பி.ஜே.பி-யில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து, இப்போது கட்சியின் மும்பை மாநகர் செயலாளராக இருக்கிறேன். சமூக சேவைக்காக மக்கள் என்னை அன்போடு 'கேப்டன்’ என்று அழைத்தனர். அதுவே எனக்கு நிலைத்துவிட்டது. மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது பாதிக்கப்பட்டவர்களைத் தள்ளுவண்டியில் வைத்து நானும் எனது நண்பர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தோம். அந்தச் சம்பவம் மும்பை பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்காக என்னை பாராட்டி விருதும் வழங்கினார் கவர்னர். மும்பை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த என்னை, மக்கள் இன்று சட்டமன்றத்துக்குள் செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளனர்!''

'உங்கள் குடும்பம்?’

''எனது தந்தை ராமையா, தாயார் தங்கம். என்னுடன் பிறந்த எட்டுப் பேர்களில் இருவர் மட்டும் சகோதரிகள். எனது சகோதரர்களில் ஒருவரான நேரு, மதுரையில் காவல் துறை துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார். மனைவி கமலா மற்றும் இரண்டு மகள்கள். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் சமூகப் பணிக்காகத்தான் உழைக்கிறார்கள். அவர்களின் ஆதரவுதான் எனக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. எனக்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை, தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரும் மும்பை வந்து வாக்குச் சேகரித்தனர். எனது குடும்ப அங்கத்தினர்களாக அவர்கள் காட்டிய பாசம் என்னை நெகிழச் செய்தது.''

''எம்.எல்.ஏ. பதவி மூலமாக உங்களது அடுத்த கட்டப் பணி என்ன?''

''இங்கு பெரும்பாலும் வெளிமாநில ஏழை மக்கள்தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட மாநில அரசுடன் பேசி நடவடிக்ககை எடுக்க திட்டம் வகுத்துள்ளேன். இரண்டரை லட்சம் பேர் உள்ள தொகுதியில், ஒரேயொரு மாநகராட்சி மருத்துவமனை மட்டுமே உள்ளது. மேலும், இங்கு பல மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என திட்டங்கள் வைத்துள்ளேன். 'மறு மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் குடிசை மக்களை ஏமாற்றுவதைத் தடுப்பேன். சாதிச் சான்றிதழ் வாங்குவதில் நிறைய பிரச்னைகள் உள்ளன. இந்த இரண்டையும் உடனடியாகத் தீர்த்துவைக்க முயற்சிப்பேன்.''

''மும்பையில் மண்ணின் மைந்தர்களுக்கும் தமிழர்களுக்கும் உறவு எப்படி உள்ளது?''

''பல ஆண்டுகளுக்கு முன் பிரச்னை இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் சகோதரர்களாக உள்ளோம். இங்கு தமிழர்கள் குறைவாகவும், மராட்டியர்கள் அதிக அளவிலும் உள்ளனர். மராட்டியர்களின் வாக்குகளும் என்னை வெற்றிபெற வைத்தன. என்னைத் தவிர, மற்ற எல்லா கட்சி வேட்பாளர்களும் உள்ளூர்க்காரர்கள்தான். அவர்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு என்றும் சேவகனாக இருப்பேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் சார்பில் தமிழர் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ-வானார். இப்போது நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.''

தொடரட்டும் சமூகப்பணி!

- எஸ்.முத்துகிருஷ்ணன்