Published:Updated:

தஞ்சையில் தமிழ் மண்ணே வணக்கம்

''வரலாறு தெரியாமல் வாழ்வது தவறு!''

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 10-ம் தேதி 'தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் அரங்கம் நிறைந்து இருந்தது.

தஞ்சையில் தமிழ் மண்ணே வணக்கம்

மருத்துவர் கு.சிவராமன் பேச ஆரம்பித்த உடன் அரங்கம் நிசப்தமானது. ''இன்று ஏராளமான பெண்கள் ரத்த சோகையால் அவதிப்படுகின்றனர். சத்தான உணவுப் பொருட்களை உட்கொள்ளாததும், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளாததுமே அதற்குக் காரணம். செயற்கை உணவுகளை உண்பதாலும் ரத்த சோகை உண்டாகிறது. பெண்கள் கருத்தரிக்கும்போதுதான், ரத்த சோகை தெரிகிறது. வந்தபின் வருத்தப்பட்டு என்ன செய்வது? உணவு விஷயத்தில் எதை, எப்போது, எப்படி, எவ்வாறு என்று வரைமுறை செய்துகொள்ள வேண்டும். காலை உணவை யாரெல்லாம் தவிர்க்கிறார்களோ, அவர்களுக்குக் கண்டிப்பாக சர்க்கரை வியாதி வரும். இன¢னும் சிலர், காலை உணவாக நூடுல்ஸ் சாப்பிடுகிறார்கள். நூடுல்ஸைப் பக்குவப்படுத்துவதற்கும் பதப்படுத்துவதற்கும் பாலிஷ் போடுவதற்கும் மோனோ சோடியம், ப்ளூட்டமின் என்ற ரசாயனப் பொருட்கள¢ சேர்க்கப்படுகின்றன. அவை நம்முடைய நினைவாற்றலை மட்டுமின்றி, நம் குழந்தைகளின் நினைவாற்றலையும் இழக்கச் செய்கின்றன. புரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதா மாவை வெள்ளை நிறமாக மாற்றுவதற்கு 70-க்கும் மேற்பட்ட ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை, குடல் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை. பூரிதான¢ புஸ்ஸென்று உப்பும். சப்பாத்தி உப்பாது. ஆனால், சப்பாத்தி உப்பிப் பெரிதாவதாகத் தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டுகிறார்கள். அதிலும், ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதையெல்லாம் சாப்பிடும்போது எல்லா நோய்களும் நம்மைத் தொற்றும். நம் பாரம்பர்ய உணவுகளை மீட்டெடுத்து, அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அப்போதுதான் நோய் இல்லாமல் வாழ முடியும்'' என்று முடித்தார்.

தஞ்சையில் தமிழ் மண்ணே வணக்கம்

அடுத்ததாக எழுத்தாளர் எஸ்.ராம​கிருஷ்ணன் பேசினார். ''பெரியார் என்பது வெறும் பெயரல்ல. இந்தியாவில் உள்ள ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள், கல்வியில் உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த மகத்தான சக்தி அது. இப்போது, சாதி மத பேதமில்லாமல் அருகருகே உட்கார்ந்து நாம் கல்வி கற்கிறோம். அதற்கு, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களின் மகத்தான தியாகம்தான் காரணம். கேள்வியே கேட்காமல் எந்தக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கற்றுக்கொடுத்தவர் பெரியார். சிந்திக்கிற செயல்தான் மனிதனின் அடிப்படை உரிமை. சாதி, மதம், மூடநம்பிக்கை இவையெல்லாம்தான் மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கின்றன.

ஓர் இளைஞர், சேகுவேரா படம் பொறிக்கப்பட்டு இருந்த சட்டையை அணிந்து இருந்தார். 'ஏன் இந்தச் சட்டையைப் போட்டிருக்கிறாய் தம்பி?’ என்றேன். அதற்கு, சேகுவேராவின் தாடி ப¤டித்திருக்கிறது என்றார். அதைத்தாண்டி, சேகுவேரா பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சேகுவேரா படம் பொறித்த சட்டையை அணிவது மகிழ்ச்சிதான். அதேநேரத்தில் பகத்சிங், நேதாஜி போன்ற தலைவர்களின் படங்கள் பொறித்த சட்டைகளையும் அவர்கள் அணியவில்லையே என¢பதுதான¢ வருத்தமாக இருக்கிறது. வெள்ளையனை எதிர்த்ததற்காக 16 வயதில் தூக்கிலிடப்பட்ட குதிராம் கோஷை நாம் மறந்துவிட்டோம்.  அவருடைய உருவமே நமக்குத் தெரியாது. இந்தியாவின் தலைசிறந்த புரட்சியாளர் பகத்சிங். 10,000 இளைஞர்கள் பகத்சிங் உருவம் பொறித்த சட்டைகளை அணிந்துகொண்டு நாங்களும் பகத்சிங்கைப் போன்றவர்கள் என்று வீரவசனம் பேச வேண¢டாமா? ஜாலியன் வாலாபாக்கில், உங்கள் கால்தடம் பதித்து, குண்டுகள் பதிந்த அந்த இடங்களைத் தொட்டுப் பார்க்க வேண¢டாமா? தஞ்சாவூரைச் சேர்ந்த ஆப்ரகாம் பண்டிதர் எழுதிய 'கர்ணாமிர்தசாகரம்’ பற்றி எத¢தனை பேருக்குத் தெரியும்? 100 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைத்து மருத்துவம் கொடுத்தவரையே நாம் மறந்துவிட்டோம்.

ராஜராஜன் சிலையை யாரோ, எங¢கேயோ எடுத்துக்கொண்டுபோய் ஒரு மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள். நம்முடைய சிலையை மீட்டுக்கொண்டு வரத்தான¢ முடியவில்லை... 1000-வது ஆண்டு விழா சமயத்திலாவது, அதைக் கொண்டுவந்து தமிழகம் முழுவதும் சுற்றிக் காண்பித்து இருக்கலாமே. ராஜராஜன் உருவம் இப்படித்தான¢ இருக்கும் என்று மக்கள் பார்த்திருப்பார்கள். நம் கண் முன்னே செல்வங்களும், வரலாறுகளும் காணாமல் போகின்றன. சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் நடக்கின்ற நிகழ்ச்சிகள் அத்தனையும் அவமானமாக உள்ளன. அதை நாம் பார்த¢து ரசித்துக்கொண்டு இருக்கிறோம். அதற்குப் பதிலாக, சுதந்திரத்துக்குக் காரணமாக இருந்த தியாகிகளைச் சந்தித்து கைகுலுக்கி நீங்கள் வாழ்த்துச் சொல்லியது உண்டா? எங்கே, எதை, எப்படிச் செய்ய வேண¢டுமென அறிந்து செய்வதுதான் புத்திசாலித்தனம். எதையும், எப்படியும், எங்கே வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மூர்க்கத்தனம், முட்டாள்தனம், முரட்டுத் தனம். படித்து முடித்துவிட்டு அமெரிக்கா சென¢று செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணம்தான¢ நிறைய இளைஞர்களுக்கு இருக்கிறது, வளமையான இந்தியாவை ஏன் வெறுக்க வேண்டும்?

ஜாலியன் வாலாபாக் படுகொலையை நேரில் பார்த்த இளைஞன் உத்தம்சிங். அந்தப் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரை அவன், சுட்டுத்தள்ளிவிட்டு ஆங்கிலேயரிடம் சரணடைந்துவிட்டான். எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்கு உத்தம்சிங் என்று பெயர் வைத்துள்ளோம்? அப்படி யாராவது, உத்தம்சிங் என்று பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டினால், அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். எனவே நண்பர்களே வரலாறு தெரியாமல் வாழ்வது தவறு'' என்று பேசி, உண்மையான தேசபக்தி, வரலாறு பற்றிய சிந்தனைகளில் மாணவர்களை மூழ்கவைத்தார்.

அடுத்து நாகப்பட்டினத்தில்...!

படங்கள்: கே.குணசீலன்