மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்

னதைப் பதைபதைக்க வைக்கும் மரணம்... அதைச் சுற்றிலும் முடிச்சு அவிழாத மர்மம்!  இவையே பெரும்பாலான குற்றக் கதைகளுக்குச் சிக்கலான அடித்தளம் அமைக்கின்றன. பொதுவாக எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் திரட்டப்பட்ட தடயங்கள், நடத்தப்பட்ட விசாரணைகள், வாங்கப்பட்ட வாக்குமூலங்கள் இவற்றை வைத்தே குற்றவாளியை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஆனால், குற்றத்தைச் செய்தவரும், பிடிபட்டு தண்டனையை அனுபவிப்பவரும் ஒரே நபர்தான் என்று நூறு சதவிகிதம் எந்தத் தீர்ப்பினாலும் சொல்ல இயலாது.

குற்றம் புரிந்தவர்

 அதிபுத்திசாலியான குற்றவாளிகள், காவல் துறையை வெகுவாகக் குழப்பிய வழக்குகளும் உண்டு. மாட்டிக்கொள்ளாமல் குற்றம் எப்படி செய்யப்படலாம் என்று புரிந்துகொண்டவர் குற்றம் புரிகையில், கடைசிவரை பிடிபடாமல், சட்டத்தால் தண்டிக்கப்படாமலேயே தப்பித்துப் போன கதையும் உண்டு. குற்றம் எப்படி நிகழ்ந்திருக்கிறது என்று புரிந்துகொண்டவர் சாதுர்யமாகத் தேடுகையில் குற்றவாளி மாட்டிய கதையும் உண்டு. இப்படிக் குற்றம் 'புரிந்தவர்’ பற்றியது, இந்தத் தொடர்!

காவல் துறையினர் கண்டுபிடித்த, கண்டுபிடிக்க முடியாமல் கைவிட்ட, யூகித்த, யூகம் பொய்யான பல வழக்குகளை இந்தத் தொடரில் அலசப் போகிறோம். முதலிலேயே ஒரு விஷயத்துக்காகக் கைதூக்கி விடுகிறோம். உலகின் வெவ்வேறு பாகங்களில் நடந்த குற்றங்களை எடுத்துச் சொல்கையில், சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் அயல்நாட்டுப் பெயர்கள் உச்சரிக்கப்படும் விதத்தில் சில குழப்பங்கள் நேரலாம். 'குவால்ட்ரோ என்று எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் அது, 'க்வால்ட்ரா’ என்று யாரும் சண்டைக்கு வராதீர்கள். உண்மைக் குற்றவாளி யார் என்பதை வரிக்கு வரி கண்டுபிடிக்க முடிகிறதா என்பதைக் கவனமாகப் பாருங்கள்.

- உங்கள் சுபா

காசேதான் கடவுளடா!

ஆண்டு: 1892. தேதி: ஆகஸ்ட் நான்கு.

ஃபால் ரிவர் என்னும் சிறிய அமெரிக்க நகரம். கோடை வெயில் தகித்துக்கொண்டிருந்தது. நகரத்தின் இரண்டாவது தெரு. 92 இலக்க வீடு.

காலை 11 மணி இருக்கும். ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்த குடும்பத் தலைவர் ஆன்ட்ரூ போர்டன் களைப்புடன் வீடு திரும்பினார். மாடியும், கீழுமாக இருந்த அந்த வீட்டின் கீழ்த் தளத்தில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். திடீரென்று வீட்டிலிருந்து 'ஐயோ...' என்று ஒரு பெண்ணின் அவலமான ஓலம் கேட்டது.

'ஓடி வாருங்கள்... அப்பாவை யாரோ கொன்றுவிட்டார்கள்!'

குற்றம் புரிந்தவர்

வீட்டில் இருந்தவர்களும், அண்டை வீட்டுக்காரர்களும் விழுந்தடித்து ஓடி வந்தார்கள். ரத்தத்தை உறைய வைக்கும் அந்தக் காட்சியைக் கண்டார்கள். நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே, மண்டை பிளந்து, சிதைந்து, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார் ஆன்ட்ரூ போர்டன். வீட்டில் கொலை நடந்திருக்கிறது. கொலையுண்டவரின் மகள் போட்ட கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் ஓடி வந்திருக்கிறார்கள். இவ்வளவு களேபரங்கள் நடந்தும், இறந்து போனவரின் மனைவி அபி போர்டன் ஏன் ஓடி வரவில்லை என்று வந்தவர்கள் வியந்தார்கள். போர்டன் கொலையான சமயத்தில் வாசல் கதவு தாழிடப்பட்டிருந்ததால், அவள் வெளியே சென்றிருக்க வாய்ப்பு இல்லை. எனவே, வந்திருந்தவர்கள் அபியை வீட்டுக்குளேயே தேடினார்கள். கீழே அவள் இல்லை. மெல்ல மாடிப் படிகளில் ஏறினார்கள். அங்கே அவர்கள் அபி போர்டனைக் கண்டு பிடித்தார்கள். பிணமாக!

அபியும், மண்டை உடைந்து, சிதைந்து, ரத்த வெள்ளத்தில் பிணமாய்க் கிடந்தாள். கணவன், மனைவி இருவரும், வீட்டுக்குள்ளேயே, ஒரே நேரத்தில், ஒரே முறையில், மிகக் கொடுமையாகக் கொலை செய்யப்பட்ட செய்தி நாட்டையே உலுக்கியது. போலீஸ் மேற்கொண்ட தீவிர விசாரணையில், போர்டனின் குடும்பப் பின்னணி, அவர்களது வாழ்க்கை முறை மற்றும் குடும்பத்துக்குள் நிலவிய மனக்கசப்புகள் போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இறந்தவர் உடல்களை அடக்கம் செய்வது முதல், சொத்துகளை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் வேலை வரை பலவகையான தொழில்களைச் செய்து வந்த ஆன்ட்ரூ போர்டன் அப்படி ஒன்றும் நேர்மையானவர் இல்லை. பணம் சம்பாதிப்பது ஒன்றையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். பல குள்ளநரி வேலைகள் செய்து பெரும் செல்வத்தைக் குவித்திருந்தார். ஆனால் படு கஞ்சன். மலிவான உணவு, நைந்து போன உடைகள், ரிப்பேர் செய்யப்படாத வீடு என்று யாவற்றிலும் அவரது கஞ்சத்தனம் வெளிப்பட்டது. வேறு வழியின்றி அவரது குடும்பத்தினர் பிச்சைக்காரர்களைப்போல வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.  

குற்றம் புரிந்தவர்

அபி, போர்டனின் இரண்டாவது மனைவி. ஆன்ட்ரூ போர்டனுக்கும், அவரது முதல் மனைவியான சாரா போர்டனுக்கும், எம்மா, லிஸ்ஸி என்ற இரண்டு பெண்கள் இருந்தனர். 1862-ல், இரண்டாவது மகளான லிஸ்ஸிக்கு இரண்டு வயதானபோது, சாரா இறந்து போனாள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஆன்ட்ரூ போர்டன், நடுத்தர வயதுள்ள அபியை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். குறைந்த சம்பளத்தில் வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள எந்த வேலைக்காரியும் முன் வராததால்தான், அழகோ, பெண்மையின் நளினமோ இல்லாத அபியை போர்டன் மணந்துகொண்டார். ஆனால், அபி தன் அப்பாவைக் கல்யாணம் செய்துகொள்ள முன்வந்தது அவரது பணத்தைக் குறிவைத்து மட்டும்தான் என்று எண்ணினாள் போர்டனின் இளைய மகள் லிஸ்ஸி. சிறு வயதிலிருந்தே மற்றாந்தாயை வெறுத்துக் கொண்டிருந்தாள் லிஸ்ஸி. சித்திக்கும் அவளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையே கிடையாது.

கல்யாணமான புதிதில், அபியின் சகோதரி வீடு ஏலத்துக்கு வந்தது. மனைவியின் வேண்டுகோளை ஏற்று, பணத்தைச் செலவு செய்து, அந்த வீட்டைக் காப்பாற்றிக் கொடுத்தார் போர்டன். லிஸ்ஸியின் சந்தேகம், இந்த நிகழ்ச்சியால் மேலும் வலுவடைந்தது. இது நடந்து சில நாட்களிலேயே, வீட்டின் மாடியிலிருந்த அபியின் படுக்கை அறை ஒருநாள் சூறையாடப்பட்டு, பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. 'திருடர்கள்தான் இப்படிச் செய்திருக்கிறார்கள்’ என்ற லிஸ்ஸியின் பேச்சை நம்பி, போர்டன் போலீஸில் புகார் செய்ய, 'இதைச் செய்தது லிஸ்ஸிதான், வேறு யாரும் அல்ல!’ என்பது அவர்களது விசாரணையில் வெளிப்பட்டது. மாற்றாந்தாய் மீது லிஸ்ஸி கொண்டிருந்த வெறுப்பு வளரத் தொடங்கியது. குடும்பத்துக்குள் பெருகிய பகைமை உணர்வு, நாளடைவில் வீட்டின் மாடியில் இருந்த படுக்கை அறைகளுக்குப் போவதற்குக்கூட பெற்றோர்களும் பெண்களும் தனித்தனி மாடிப்படிகளை உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.

'கொலைகளுக்கான துப்பு ஏதாவது கிடைக்குமா?’ என போலீஸ் நடத்திய வேட்டையில், கீழே கூடத்தை ஒட்டிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடரி ஒன்றின் இரும்பாலான மேற்பகுதி அகப்பட்டது. வீட்டுக்குள் இருக்கும் யாரோதான் கொலைகளைச் செய்திருக்க வேண்டும் என்று காவல் துறை சந்தேகப்பட்டது. கோடரியிலோ கைரேகைகள் எதுவும் இல்லை. கொலையாளி யாராக இருந்தாலும் சாமர்த்தியமாகச் செயல்பட்டிருப்பது புரிந்தது. போலீஸின் கவனம் வீட்டில் இருந்தவர்கள் மீது பதிந்தது. போர்டனின் மூத்த மகள் எம்மா, சிலநாட்கள் முன்னர்தான் தன் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தாள். கொலை நடந்த நேரத்தில் இளைய மகள் லிஸ்ஸியும் வேலைக்காரி பிரிட்ஜெட்டும்தான் வீட்டில் இருந்தார்கள். பிரிட்ஜெட்டை போலீஸ் தோண்டித் துருவியது. கொலை நடந்த நேரம், உடல் நிலை சரியில்லாததால் வேலையை சீக்கிரமே முடித்துக்கொண்டு, வீட்டின் ஒரு மூலையில் முடங்கியிருந்திருந்ததாக அவள் சொன்னாள். மேலும் போர்டனையும் அபியையும் கொலை செய்யும் அளவுக்கு அவளிடம் எந்தக் காரணமும் இல்லை. அடுத்து, போலீஸின் கவனம் இரண்டாவது மகள் லிஸ்ஸியின் பக்கம் முழுமையாகத் திரும்பியது.

லிஸ்ஸி 32 வயது முதிர் கன்னி. அதிகம் பேசாதவள். எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவள். லிஸ்ஸியிடமும் லிஸ்ஸியைப் பற்றி மற்றவர்களிடமும் தீர விசாரித்ததில், போலீஸ் ஒன்றை மட்டும் நிச்சயமாகத் தெரிந்துகொண்டது. லிஸ்ஸியிடம் பெற்றோரைக் கொல்வதற்குப் பல காரணங்கள் இருந்தன. கொலை நடப்பதற்கு முதல் நாள், அருகில் இருந்த பார்மஸியில் கடும் விஷம் ஒன்றைத் தருமாறு லிஸ்ஸி கேட்டதாக மருந்துக் கடைக்காரர் போலீஸாரிடம் கூறினார். தவிரவும், கொலை நடந்த அன்று காலை 11 மணிக்கு போர்டன் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வாசல் கதவைத் திறந்துவிட்ட வேலைக்காரி பிரிட்ஜெட், அதே நேரம் பின்னால் இருந்த படிகள் வழியாக லிஸ்ஸி மாடியிருந்து கீழே இறங்கி வந்ததைப் பார்த்ததாகச் சொல்லியிருந்தாள்.

மாடியில் அந்தப் படிக்கட்டுகள் முடிவடைந்த இடத்தில் இருந்த படுக்கை அறையில்தான், அபி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். 'கொலை நடந்த நேரங்களில் எங்கே இருந்தாய்?’ என்று போலீஸ் அவளைத் துளைத்தெடுத்தபோது லிஸ்ஸி முன்னுக்குப்பின் முரணான பதில்கள் அளித்தாள். 'லிஸ்ஸிதான் கொலைகளைச் செய்திருக்கிறாள்’ என்று காவல் துறை தீர்மானித்துவிட்டது. ஆனால், போலீஸ் சற்றும் எதிர்பாராத விதத்தில் வழக்கு முற்றிலும் வேறு திசையில் செல்லத் தொடங்கியது. லிஸ்ஸிக்கு எதிரான சாட்சிகள் பலர், தங்களது முந்தைய வாக்குமூலங்களை மாற்றிச் சொல்லத் தொடங்கினார்கள். வழக்கு லிஸ்ஸிக்கு ஆதரவாகத் திரும்பியது. போலீஸ் பெரிதும் நம்பியிருந்த ஆதாரங்கள் பலவற்றை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 'வீட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதம்தான் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா? அப்படியே இருந்தாலும், அதில் ரேகை எதுவும் இல்லாத நிலையில், லிஸ்ஸிதான் குற்றவாளி என்று நிச்சயமாகச் சொல்வது எப்படி?’ என்ற இரண்டு முக்கியக் கேள்விகளுக்கு போலீஸிடம் விடை இல்லை. சந்தேகத்தின் பலனை அளித்து, 'லிஸ்ஸி குற்றவாளி அல்ல’ என அவளை நீதிமன்றம் விடுதலை செய்தது.

குற்றம் புரிந்தவர்

'இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்தது யார்?’ என்ற கேள்விக்கு விடை தெரியாமலே, வழக்கு இழுத்து மூடப்பட்டது. மக்களோ, 'தர்மம் வென்றது. துன்புறுத்தப்பட்ட நிரபராதிக்கு நியாயம் கிடைத்துவிட்டது!’ என்று கூறி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். சகோதரி எம்மாவுடன் இணைந்து, தந்தையின் திரண்ட சொத்துகளுக்கு வாரிசாக செல்வத்தில் புரண்ட லிஸ்ஸி, வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துவிட்டு, 1927-ம் ஆண்டு தனது 67-ம் வயதில் மரணமடைந்தாள். வழக்கு முடிந்து சொந்த ஊர் திரும்பிய பணிப்பெண் பிரிட்ஜெட், திடீர்ப் பணக்காரியாய் மிக வசதியாய் வாழத் தொடங்கியது பலரை ஆச்சர்யமும், சந்தேகமும் கொள்ள வைத்தது.

'இந்த வழக்கு நியாயமாக நடந்ததா? வென்றது தர்மமா, அதர்மமா?’ என்ற கேள்வி முதல் முறையாக பலர் மனதில் எழுந்தது.

உண்மையில் நடந்தது என்ன?

மதி கெட்ட தகப்பனும் அவனது நிதியைத் தேட்டம் போட வந்த மாற்றாந்தாயும் உயிரோடு இருக்கக் கூடாது என்று தீர்மானித்து அவர்களைக் கொன்றது லிஸ்ஸிதான். இந்த விஷயத்தைத் தனக்கு நெருங்கியவர்கள் பலரிடம் லிஸ்ஸியே பெருமையாகச் சொல்லியிருந்தாள்.  

பின் அவள் எப்படி விடுவிக்கப்பட்டாள்? லிஸ்ஸிக்கு பயந்து அவளுக்கு நெருங்கியவர்கள் யாரும் நீதிமன்றப் படியேறவில்லை. கூண்டில் ஏறிய மற்ற சாட்சிகளை பணத்தாலும், நீதிபதியை செல்வாக்காலும் விலைக்கு வாங்கி, நீதியின் கண்களிலேயே வெற்றிகரமாக லிஸ்ஸி மண்ணைத் தூவினாள்.