குற்றம் புரிந்தவர்

பூதம் வந்து தூக்கிப்போனதா?
ஃபிலடெல்ஃபியா. 1945. ஜனவரி 25.
டாரதி, கடைவீதியில் காணப்பட்டாள். அன்றைய இரவு சமையலுக்குத் தேவையான இறைச்சியையும், ரொட்டிகளையும் வாங்கினாள். தோழி ஒருத்தி எதிர்ப்பட்டாள்.
''ஹாய் க்ளாரா..''
''வாழ்க்கை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது, டாரதி.?''
'மிக சந்தோஷமாக...''
''உன் கணவனுக்கு நீதிபதியாகப் பதவி உயர்வு கிடைத்துள்ளதாமே..?''
''எல்லாம் இறைவன் செயல்...''
''அவர் உன்னிடம் அன்புடன் இருக்கிறாரா..?''
''முற்றிலுமாக. முதல் மனைவி மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் யாருக்கோ பிறந்த குழந்தைகளாக நானும் நடத்தவில்லை. என்னை இரண்டாவது மனைவியாகவே அவரும் நடத்தவில்லை. அம்மா இல்லாத குறை தெரியாமல், குழந்தைகளும் என்னிடம் பாசத்துடன் இருக்கின்றன.''
''குழந்தைகள் எங்கே?''

''கடைவீதிக்கெல்லாம் அழைத்துவர வேண்டாமே என்று பக்கத்து வீட்டில் விட்டிருக்கிறேன்.. அப்புறம் ஒரு நாள் வீட்டுப் பக்கம் வாயேன், க்ளாரா'' என்று அவளிடம் விடைபெற்றாள், டாரதி.
முதல் மனைவி இறந்ததும், அவளை வந்து சந்தித்த ஜூல்ஸ் ஃபார்ஸ்ட்டன்[Jules Forstein], அவளுடைய பால்ய சினேகிதன். அவனுடன் வாழத் தீர்மானம் செய்த தினத்திலிருந்தே டாரதி மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள்.
கணவனின் முதல் இரண்டு குழந்தைகளான மிர்ணா, மார்சி இருவருக்கும் தாயாகப் பொறுப்பேற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், தனக்குப் பிறந்த குழந்தை எட்வர்டையும் அவர்களுக்குச் சமமாகவே அவள் நடத்திவந்தாள்.
இரண்டு கைகளிலும் சுமைகளுடன் டாரதி வீடு திரும்பினாள். அது மூன்று மாடி செங்கல் கட்டடம். ''உள்ளே வைத்துவிட்டு வந்து குழந்தைகளை அழைத்துக்கொள்கிறேன்'' பக்கத்து வீட்டு மரியாவிடம் புன்னகையை உதிர்த்துவிட்டு, கதவைத் திறந்து நுழைந்தாள். வாழ்நாளின் பேரதிர்ச்சியைச் சந்தித்தாள்.
படிக்கட்டுகளுக்குக் கீழ் இருந்த இருள் முக்கோணத்திலிருந்து எந்த முன்னறிவிப்புமின்றி யாரோ அவள் மீது திடீரென்று பாய்ந்ததும் கையிலிருந்த பொருட்கள் சிதற, அவள் விழுந்தாள். பாய்ந்தவன் அரக்கன்போல் வலுவாக இருந்தான். தன்னுடைய முஷ்டியை மடக்கி மீண்டும் மீண்டும் டாரதியைத் தாக்கினான். முனை மழுங்கிய ஆயுதத்தைக்கொண்டு டாரதியை ஓங்கி அடித்தான்.
டாரதி தாக்கப்பட்டபோது, ஒரே ஒரு அதிர்ஷ்டம் அவள் பக்கம் இருந்தது. அவளை அறியாமலேயே அங்கிருந்த தொலைபேசியில் அவள் முழங்கை இடித்தது. அந்த வேகத்தில் தொலைபேசி ரிசீவர் அவிழ்ந்து தொங்கியது. இன்றைக்கு இருப்பது போன்ற தானியங்கி தொழில் நுட்பம் அன்றைக்கு இல்லை. மற்றொருவருடன் பேச வேண்டுமென்றால் தொலைபேசியை எடுத்து ஓர் ஆபரேட்டர் மூலமாகவே தொடர்புகொள்ள வேண்டும்.
மறுமுனையில் 'ஹலோ, ஹலோ’ என்று குரல் கொடுத்த டெலிஃபோன் ஆபரேட்டர் பெண், அவிழ்ந்து தொங்கிய ரிசீவர் வழியே ஒரு பெண்ணின் அலறலும் ஹீனமான முனகலும் கேட்டு உஷாரானாள். உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தாள்.
டாரதியின் விபரீதமான குரல் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடி வந்தபோது, அவளைத் தாக்கியவன் மாயமாகியிருந்தான்.
போலீஸ் உடனடியாக வந்துசேர்ந்தது.
டாரதி ரத்தத்தில் புரண்டு கிடந்தாள். அவளுடைய தாடை உடைபட்டிருந்தது. மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. தோள்பட்டை எலும்பு முறிந்திருந்தது. டாரதி நிலைகுலைந்து மயக்கமாகி இருந்தாள்.
டாரதியின் கணவர் நீதிபதி ஜூல்ஸ் பதறிக்கொண்டு ஓடிவந்தார். அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
போலீஸ் விசாரித்தபோது, அண்டைவீட்டு மரியா குழப்பமாகவே பதில் சொன்னாள். ''டாரதியின் பின்னால் யாரோ வந்தாற்போல் இருந்தது. என் கற்பனையாகவும் இருக்கலாம்''
மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சைகள் முடிந்து டாரதி கண்விழித்தாள். படுக்கை அருகில் கேப்டன் ஜேம்ஸ் கெல்லி காத்திருந்தார்.
''என்ன ஆயிற்று, மேடம்..?''
''வீட்டுக்குள் இருட்டில் ஒளிந்திருந்த எவனோ ஒருவன் என் மீது பாய்ந்தான். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. என்னை மீண்டும் மீண்டும் தாக்கினான்'' என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.
போலீஸ் வீட்டை மும்முரமாக ஆராய்ந்தது. வீட்டில் எந்தப் பொருட்களும் களவு போகவில்லை. அதனால் இது கொலைக்கான முயற்சி என்றே தோன்றியது. முதல் சந்தேகம் உறவினர் மீது விழும் என்பதால், நீதிபதியாக இருந்தபோதிலும், ஜூல்ஸ் ஃபார்ஸ்டனை அவர்கள் கேள்விகளால் துளைத்தனர். ஆனால், அசைக்க முடியாத அலிபியை அவர் வழங்கினார்.

டாரதியிடம் துருவித் துருவி விசாரித்தனர். ''என்னைக் கொலை செய்யும் அளவுக்கு யாருடனும் பகைமை இல்லை. யார் மீதும் சந்தேகமும் இல்லை.''
பல கோணங்களில் போலீஸ் ஆராய்ந்தது. டாரதியின் கணவன் ஜூல்ஸ் நீதிபதியாக இருந்ததால், அவரால் தண்டனை விதிக்கப்பட்ட யாரோ அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மனைவியைத் தாக்கியிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்தது. தன்னால் தீர்ப்பளிக்கப்பட்ட யாரோ தன் குடும்பத்தின் மீது பழிதீர்த்துக்கொள்வார்கள் என்று ஜூல்ஸாலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. கடைசிவரை யாரையும் கைது செய்யாமல் கேஸ் முடிந்தது.
டாரதி மெள்ள மெள்ள தன் காயங்களிலிருந்து குணம் பெற்று சகஜ வாழ்க்கைக்குத் திரும்பினாள். ஆனால், அன்றைய மாலை நிகழ்வு முற்றிலுமாக அவள் தைரியத்தைக் குலைத்துவிட்டது.
வீட்டின் கதவுகளுக்குக் கூடுதலான பூட்டுகள் பொருத்தப்பட்டன. சந்தோஷமும், குதூகலமுமாகப் போய்க்கொண்டிருந்த டாரதியின் வாழ்வு திசை மாறியது. எப்போதும் பதற்றமாகவே காணப்பட்டாள். ஜன்னலிலிருந்து பூனை குதித்தால்கூட திடுக்கிட்டு நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள்.
ஐந்து வருடங்கள் நிம்மதியான இடைவெளிவிட்டு, அடுத்த புயல் வீசியது. 1949 அக்டோபர் பதினெட்டு. மாலை ஜூல்ஸ் வீட்டுக்கு போன் செய்தார். ''ஒரு முக்கிய விருந்து. சென்று வரவா?''
''இங்கு ஒரு பிரச்னையும் இல்லை. மூத்தவள் தன்னுடைய தோழி வீட்டுக்குப் போயிருக்கிறாள். எட்வர்டும், மார்சியும் என்னுடன்தான் இருக்கிறார்கள். (விருந்தில்) என்னை மிஸ் பண்ணுவீர்கள் என்று நம்புகிறேன்'' உற்சாகமாக பதில் சொன்னாள்.
இரவு மணி 11.30. ஜூல்ஸ் வீடு திரும்பினார். தன்னிடம் இருந்த சாவியால் வாசல் கதவைத் திறந்தார். ஓர் அமானுஷ்யமான சூழல் அவரைத் தாக்கியது. மாடியில் குழந்தைகளின் அழுகையும் முனகலும் கேட்டன.
ஜூல்ஸ் பதறிக் கொண்டு படிகளில் ஏறி ஓடினார். தங்கள் படுக்கையறையில் டாரதியைக் காணாமல், குழந்தைகளின் படுக்கையறையைத் திறந்தார். எட்வர்டும், மார்சியும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அழுதுகொண்டிருந்தனர். அவர்கள் உடல்கள் கட்டுப்பாடின்றி நடுங்கின.
''மார்சி, அம்மா எங்கே?'' என்று பதறும் குரலில் கேட்டார்.
''அம்மாவை அவன் தூக்கிப் போய்விட்டான்!'' என்று ஒன்பது வயது மார்சி விசும்பினாள்.
டாரதியின் பர்ஸ், பணம், வீட்டு சாவி எல்லாம் அங்கேயே கிடந்தது. ஜூல்ஸ் குழம்பினார். இளம் குழந்தைகளைத் தன்னந்தனியாக விட்டுவிட்டு, டாரதி யாருடனாவது செல்வாளா என்ன? அவருக்குத் தெரிந்த அத்தனை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் செய்து விசாரித்தார். டாரதி எங்கும் வரவில்லை.
வேறு வழியின்றி, விவரம் போலீஸுக்குப் போனது. மீண்டும் கேப்டன் கெல்லி.
மருத்துவமனைகள், மார்ச்சுவரிகள், தங்கும் விடுதிகள் என்று ஃபிலடெல்ஃபியாவில் அனைத்துப் பகுதிகளிலும் டாரதி தேடப்பட்டாள். எங்கும் அவள் காணப்படவில்லை. அக்கம்பக்கத்திலிருந்த ஒவ்வொரு வீட்டிலும் கேப்டன் கெல்லியே கதவைத் தட்டி விசாரித்தார். 'யாரும் எதையும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை’ என்றார்கள்.
சுற்றிச்சுற்றி விசாரணை அந்த ஒன்பது வயதுச் சிறுமியிடமே வந்து நின்றது. ''மார்சி, நடந்ததைத் தெளிவாகச் சொல்..!''
''படுத்திருந்தேன். யாரோ வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஓடிப்போய்ப் பார்த்தேன். படிகளில் ஒருவன் ஏறி வந்து கொண்டிருந்தான். பிரௌன் நிற தொப்பியும் பிரௌன் நிற குளிர் ஜாக்கெட்டும் அணிந்திருந்தான். அவனை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அம்மாவை எழுப்பலாம் என்று அவள் அறைக்கு ஓடினேன். அவளுடைய படுக்கையறைக் கதவு திறந்திருந்தது. அவள் தரைக்கம்பளத்தில் குப்புறக் கிடந்தாள்''
''அப்புறம்..?''
''வந்தவன் அம்மாவை அப்படியே ஆட்டுக்குட்டியைப்போல் தூக்கி, தன் வலது தோளில் போட்டுக்கொண்டான். அம்மா கண் திறக்கவே இல்லை. வழியில் அவனை மறித்தேன். 'என் அம்மாவை விடு’ என்றேன். அவன் செல்லமாக என் தலையை வருடிக் கொடுத்தான். 'போ கண்ணு.. தூங்கு! அம்மாவுக்கு உடம்பு சரிஇல்லை. ஆனால், இனிமேல் எல்லாம் சரியாகிவிடும்’ என்றான்.. அம்மா அவன் முதுகில் ஊசலாட, படிகளில் இறங்கினான். கதவைத் திறந்தான். இழுத்து சாத்திக்கொண்டு போய்விட்டான். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து அப்பா வந்து சேர்ந்தார்''
கடைசிவரை போலீஸால் சில கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
யாரும் திறந்துவிடாமல், பூட்டப்பட்ட வீட்டுக்குள் ஒருவன் எப்படி முதலில் நுழைந்தான்? அவன் வீட்டுக்குள் நுழையும்போதே மார்சி பார்த்துவிட்டாள் என்றால், அதற்குமுன்பே டாரதி தாக்கப்பட்டாளா? டாரதி தன் அறையில் மயக்கமாகக் குப்புறக் கிடப்பாள் என்று வரும்போதே அவனுக்கு எப்படித் தெரியும்? தோளில் ஒரு பெண்ணை சுமந்துகொண்டு, ஒருவனால் தடுமாறாமல் படிகளில் இறங்க முடியுமா? இரவு 11 மணியானாலும், தோளில் தொங்கும் பெண்ணுடன் சாலையில் நடந்து யார் கண்ணிலும் படாமல் அவன் காற்றோடு கரைய முடியுமா? சந்தேகத்துக்கிடமான ஒரு தடயமோ, கைரேகையோ கடைசிவரை கிடைக்கவில்லையே, இது எப்படி சாத்தியம்?
டாரதி அதன்பின் உயிருடனோ, பிணமாகவோ எங்கும் கிடைக்கவில்லை. சந்தேகத்துக்குரிய நபர்களோ, தடயங்களோ, விளக்கங்களோ எதுவுமே கிடைக்காமல் காவல் துறையினர் ஓய்ந்தனர்.
வேறொரு சாரார், 'டாரதி தூக்கிச் செல்லப்படவேண்டும் என்று திட்டமிட்டே ஜூல்ஸ் வெகு தாமதமாக வீடு திரும்பினாரா? வீடு புகுந்தவனுக்கு சாவி கொடுத்து அனுப்பியது அவர்தானா? அவருடைய செல்வாக்கு போலீஸை திசை திருப்பிவிட்டதா? குழந்தைகளை அதிக நேரம் தனியாக விடாமல், டாரதி விலக்கப்பட்டதும், 15 நிமிடங்களில் அவர் வீடு வந்து சேர்ந்தது எப்படி?’ என்று கேட்க மறக்கவில்லை. ஆனால், இந்தக் குற்றத்துக்கான மோடிவ் என்ன என்று அவர்களாலும் சொல்ல முடிவதில்லை.
65 வருடங்கள் கடந்தும் டாரதி எப்படி மாயமானாள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
- குற்றம் தொடரும்