ஓவியம்: பாரதிராஜா

சாத்தானின் புதல்வர்கள்
அமெரிக்கா நியூயார்க் நகரத்தில் ஓர் இனிய மாலைப்பொழுது. சற்றே ஒதுக்குப்புறமான பிரதேசத்தில் அந்த கார் தனியாக நின்றிருந்தது.
காரில் அமர்ந்திருந்த 20 வயது ஆணழகனான பாபி, கல்லூரி மாணவியான தன் காதலி ஸ்டேஸியின் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்துச் சுவைத்தபடி 'ஐ லவ் யூ’ என்று கிசுகிசுத்துக் கொண்டிருந்தான். காதலனின் அன்பான அணைப்பில் கிறங்கி, செருகிய கண்களுடன் இருந்த ஸ்டேஸி அதற்கு என்ன பதில் சொல்ல விரும்பினாள் என்பது யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.
ஆம்.. சரியாக அதே தருணத்தில் காரின் கண்ணாடியைத் துளைத்துப் பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு ஒன்று, பாபியின் முகத்தில் பாய்ந்தது. தொடர்ந்து வந்த அடுத்த குண்டு, ஸ்டேஸியை வீழ்த்தியது. காதலன் கண்களை இழந்தான்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் காதலர்களுக்கு அருகே ஒரு துண்டுச் சீட்டைக் கண்டெடுத்தது போலீஸ். அதில் 'சாமின் புதல்வன் நான்’ என்று எழுதப்பட்டிருந்தது.
நியூயார்க்கைப் பொறுத்தவரை 1977 ஒரு துரதிர்ஷ்டமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் நகரத்தையே நடுங்க வைப்பதுபோல் அடுத்தடுத்துப் பல கொலைகள் நிகழ்ந்தன. அவற்றில் இதுவும் ஒன்று. இளம் ஜோடிகளையும் பொது இடங்களில் காதல் வயப்பட்டிருந்தவர்களையும் பெண்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டார்கள். மனிதர்கள் மட்டுமல்லாமல், இந்த வெறிச் செயல்களில் நாய்களும் கொல்லப்பட்டன. படுகாயம் அடைந்தவர்களோ இன்னும் அதிகம்.

எப்போதும் பரபரப்பாக இயங்கும் நியூயார்க் பீதி வசப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட துப்பறியும் போலீஸ்காரர்களைக்கொண்ட ஒரு தனிப்படை தீவிரத் தேடலில் இறங்கியது. தாக்குதல்களைக் கச்சிதமாக நடத்திவிட்டு, எந்தச் சுவடும் இல்லாமல் குற்றவாளி மாயமாகிக் கொண்டிருந்தான்.
'இந்தக் கொலைகளைச் செய்வது ஒரு தனி மனிதனா, ஒரு கும்பலா? இதுபோன்ற பயங்கர குற்றங்களைச் செய்வதன் நோக்கம் என்ன?’ போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் மிகவும் குழம்பிப்போனது போலீஸ். அந்த நேரத்தில்தான் மிகச் சாதாரண சம்பவம் ஒன்று நடந்தது. நியூயார்க்கின் புறநகர்ப் பகுதியில், கார் பார்க்கிங் மைதானம் ஒன்றில் தவறான முறையில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அபராதம் விதித்து, அதற்கான தொகையைச் செலுத்த உத்தரவிடும் 'பார்க்கிங் டிக்கெட்’ எனப்படும் சீட்டை, காரின் முன் கண்ணாடியில் ஒட்டியது போக்குவரத்துக் காவல் துறை.
காவல் துறையினர் அப்பால் நகர்ந்ததும் அங்கு வந்த காரின் சொந்தக்காரன் அந்த டிக்கெட்டை ஆவேசமாகக் கிழித்து எறிந்தான். அந்த ஆளின் இந்தச் செயலை அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற பெண் ஒருத்தி பார்த்தாள். சட்டங்களை மிகவும் மதித்து நடக்கும் இயல்புள்ள அமெரிக்கர்களின் இடையே இப்படி ஒரு ஆளா என்று அவள் ஆச்சர்யப்பட்டாள். சற்று அருகே சென்று பார்த்தபோது அதிர்ந்தாள். அந்த ஆளின் கையில் ஒரு துப்பாக்கி. அவளுக்கு பயத்தில் வியர்த்தது. அந்தக் கிறுக்கனின் கண்ணில்படாமல் காரின் எண்ணைக் குறித்துக்கொண்டு விரைவாக அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.
வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், நடந்த நிகழ்ச்சியை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தாள். அவ்வளவு ஆவேசமாகக் காரில் ஒட்டப்பட்டிருந்த டிக்கெட்டைக் கிழித்துப் போட்டபோதும்கூட, அந்தக் கிறுக்கனின் முகத்தில் ஒரு வினோதமான புன்னகை தவழ்ந்தது அவளது நினைவுக்கு வந்தது.
உடனே காவல் துறையுடன் தொடர்புகொண்டாள். நடந்ததை விவரித்து, கார் எண்ணையும் குறிப்பிட்டாள். அந்த ஆளின் முகத்தில் தான் கண்ட அந்த வினோதமான புன்னகையைப் பற்றியும் குறிப்பிட்டாள். முதலில் அசட்டையாக அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த காவல் துறையினர், அந்த வினோதமான புன்னகையைப் பற்றி அவள் சொன்னதும் நிமிர்ந்து அமர்ந்தனர். சில கொலைகள் நடந்தபோது சம்பவ இடங்களில் இருந்த சிலர், இதுபோன்ற வினோதமான புன்னகையுடன் அங்கே காணப்பட்ட ஒரு மனிதனைப் பற்றிக் கூறியிருந்தார்கள். இலக்கில்லாமல் அங்குமிங்கும் தேடிக்கொண்டிருந்த காவல் துறை, உடனே அந்தக் காரைத் தேடும் முயற்சியில் இறங்கியது.
அவர்கள் பக்கம் அதிர்ஷ்டக்காற்று வீசியது. அடுத்த நாளே, அதே காரை ஓட்டி வந்து, ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, இறங்கி வந்தபோது, அந்த மனிதனை போலீஸ் சுற்றி வளைத்தது. அவன் தனது பையிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுக்க விடாமல் அவனை நெருக்கிப் பிடித்தார்கள், காவலர்கள். 'யார் நீ?’ என்ற போலீஸாரின் கேள்விக்கு 'என் பெயர் சாம்’ என்று மிருதுவான குரலில் பதில் கூறினான். அடுத்த வினாடியே, 'நான் சாமின் மைந்தன்..’ என்றும் கூறினான்.
சூதுவாதே அற்ற குழந்தைத்தனமான முகத்தில் ஒரு வினோதமான புன்னகை தவழக் காட்சியளித்த அவனது உண்மையான பெயர் டேவிட் பெர்கோவிட்ஸ். விசாரணையின்போது, ரத்த வெறி பிடித்த பிசாசுகள், ஆவிகளின் தூண்டுதலால்தான், தான் இந்தக் கொலைகளைச் செய்ததாக அவன் கூறினான். அவன் சுட்டுக் கொன்ற ஒரு நாயின் உடலில் 6,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனுடைய ஆவி குடிகொண்டிருந்ததாகவும், அதுவும் இவனைக் கொலை செய்யத் தூண்டியதாகவும் அவன் சொன்னபோது, பலருக்குத் தலை சுற்றியது. 'பல தாக்குதல்களை நடத்தி, பல கொலைகளையும் செய்தவன் நானே..’ என்று அவன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான். அந்த ஒப்புதல் வாக்குமூலம் காவல் துறைக்கு சாதகமாக அமைந்தது.
வழக்கு விசாரணைகள் விரைவில் முடிவடைந்து டேவிட் பெர்கோவிட்ஸை நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்து 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. வழக்கு விசாரணையின்போது, டேவிட் பெர்கோவிட்ஸ் தன்னை 'நியூயார்க் சாத்தான்களின் சங்கம்’ என்னும் ரகசியக் குழுவின் உறுப்பினர் என்றான்.
பத்திரிகைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், டேவிட் பெர்கோவிட்ஸ் கொடுத்த இந்த வாக்குமூலம் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியது. கொலை தொடர்பாக வெளியான பல தகவல்களைப் பத்திரிகைகள் அலச ஆரம்பித்தன. அதன் விளைவாக பல வியப்பான செய்திகள் வெளியாகத் தொடங்கின. 'இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்த உண்மையான குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டு தண்டிக்கப்பட்டு விட்டார்களா?’ என்ற ஐயம் மக்கள் மனதில் எழுந்தது. குறிப்பிட்ட அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களில், சில ஆண்களைத் தவிர, ஓர் இளம்பெண்ணும் கொலைகளில் தனக்கு உதவியதாக பெர்கோவிட்ஸ் சொல்லியிருந்தான். இதற்கு என்ன சமாதானம் சொல்வது என்று யோசித்த காவல் துறை ஓர் அறிக்கைவிட்டது. 'குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டான். மேலும் கொலைகளில் தொடர்புடைய மற்றவர்களைப் பற்றிய தகவல்கள் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டான். எனவே, இந்தக் கொலைகள் அனைத்தையும் செய்தது டேவிட் பெர்கோவிட்ஸ் மட்டுமே. அதற்கான தண்டனையும் அவனுக்குக் கிடைத்துவிட்டது.’
மேற்கண்ட அறிக்கையின் மூலம் அந்தப் பரபரப்பான வழக்குக்கு, ஓர் இறுதி முற்றுப்புள்ளி வைத்து, கடையைக் கட்டியது அமெரிக்கக் காவல் துறை. ஆனால், காவல் துறை அறிவித்ததுபோல் டேவிட் பெர்கோவிட்ஸ் தனியே செயல்பட்டிருக்க முடியாது என்று பத்திரிகைகள் கதறின. சில வருடங்களுக்குப் பிறகு, காவல் துறை இந்த வழக்கை மீண்டும் திறந்தது. புதிய தடயங்கள் எதுவும் கிட்டாமல், வேறு யாரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படாமல், மூடப்படாமலேயே விடப்பட்ட இந்த வழக்குக்கு ஒரு சிறப்பு உண்டு. சிறையில் இருந்த பெர்கோவிட்ஸ் தன் சரிதத்தை எழுத முன்வந்ததும், பெரும் தொகை கொடுத்து அதை வாங்கி வெளியிட பல பதிப்பாளர்கள் போட்டிபோட்டனர். ஒரு கொடூரனை நாயகனாக்கும் இந்த முயற்சி அரசுக்குக் கடும் சவாலாய் இருந்தது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் புதியதொரு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த மாதிரியான புத்தகங்களை வெளியிட்டு பதிப்பாளர்கள் பெறும் தொகை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, சமூக நலன்களுக்குச் செலவிடப்படும் என்பதே அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம். இந்தச் சட்டம் 'ஷிஷீஸீ ளியீ ஷிணீனீ’s லிணீஷ்' என்றே இன்று வரை அழைக்கப்படுகிறது.
- குற்றம் தொடரும்