மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

வந்தான், வளர்ந்தான், விழுந்தான்...

குற்றம் புரிந்தவர்

மெரிக்க அரசியல் சரித்திரத்தில் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி எந்த அளவுக்குப் புகழ் பெற்றவரோ, அதே அளவு அவருடைய மரணமும் அதன் பின்னணி என்று கருதப்படும் சம்பவங்களும் புகழ் பெற்றவை. இதில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு கோணம் ஜிம்மி ஹோஃபா பற்றியது.

ஜிம்மி ஹோஃபா, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவன். நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த அவனுடைய தந்தை இளம் வயதிலேயே இறந்து போனார். ஹோஃபாவையும் அவனுடைய மூன்று உடன்பிறப்புகளையும் கரையேற்ற அவனுடைய விதவைத் தாய்,

வேலைக்குப் போக வேண்டியிருந்தது. ஹோஃபாவுக்கு படிப்பில் நாட்டமில்லை. ஏழாம் வகுப்போடு பள்ளியைவிட்டு விலகினான்.

டெட்ராய்ட்  நகரத்தில் ஒரு பெரிய அங்காடித்  தொடரின் கிளையில் மூட்டை களை இறக்கி ஏற்றும் வேலை கிடைத்தது. செய்யும் வேலைக்கு ஏற்ற நியாயமான ஊதியம் தரப்படவில்லை என்று ஹோஃபா கருதினான். தொழிலாளர்களை ஒன்றுகூட்டினான்.

'கொடுக்கும் காசுக்குக் கேள்வி கேட்காமல் உழைக்கிறோம். முதலாளி சுரண்டுவது தெரிந்தும், முணுமுணுக்கக்கூட தைரியமின்றி அடிமைகள் போல் உழைக்கிறோம். அனைவரும் ஒன்று திரண்டால், நமக்கென ஒரு சங்கம் அமைந்தால், இதைத் தட்டிக் கேட்டு, நிலைமையை மாற்றிக் காட்டுவேன்' என்றான்.

பொறுப்பேற்க ஓர் இளைஞன் முன்வந்ததும், சக பணியாளர்கள் தலை நிமிர்ந்தனர். புதிதாக ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வந்து சேர்ந்திருந்த ஒரு பொழுதைத் தங்க ளுக்குச் சாதகமாக ஹோஃபா பயன்படுத்திக் கொண்டான்.

'கூலியை உயர்த்திக் கொடுத்தாலொழிய பழங்களை இறக்கித் தரமாட்டோம்' என்று அனைவரும் போராட்டத்தில் இறங்கினர். முதலாளிகள் திகைத்தனர். உரிய நேரத்தில் இறக்கப்படவில்லை என்றால், பழங்கள் அழுகிப்போகும். முதலாளிகள் இறங்கி வந்தனர். தொழிலாளிகள் ஹோஃபாவைக் கொண்டாடினர்.

குற்றம் புரிந்தவர்

தன்னுடைய 17வது வயதிலேயே, ஹோஃபா தலைமைப் பொறுப்பேற்கத் தயங்கவில்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். சிதறிக் கிடந்த சிறு சிறு தொழிற்சங்கங்களை ஒன்றாக இணைத்து மாபெரும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஒன்று உருவாகிக்கொண்டிருந்தது. ஹோஃபா அதில் இணைந்தான்.

விரைவிலேயே டெட்ராய்ட் கிளைக்குத் தலைவனாகப் பதவியேற்றான். உறுப்பினர்களாக பெருவாரியான தொழிலாளர்கள் சேர்ந்தனர். பேச்சு வார்த்தைக்கு ஹோஃபா வந்தால், முதலாளிகள் வேறு வழியின்றி இறங்கி வந்தனர். ஹோஃபாவின் வாழ்வில் நண்பர்களைவிட எதிரிகள் அதிகமாயினர்.

தன்னுடைய 23வது வயதில், ஹோஃபா, ஜோஸ்பினை மணந்தான். பார்பரா, ஜேம்ஸ் என்று இரண்டு குழந்தைகள்.

தன்னுடைய 39வது வயதில், தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கே துணைத் தலைவராக அவன் பொறுப்பேற்றான். ஐந்தே வருடங்களில் தலைமைப் பதவியே அவனிடம் வந்து சேர்ந்தது.

ஆனால், அதிகாரமும், ஆள் பலமும் சேரும்போதுதானே புத்தி பிசகிப் போகிறது..? தொழிற்சங்கங்களுக்கு ஆதரவளிப்பதுபோல்  காட்டிக் கொண்டு, மாஃபியாக்கள் சில சமயங்களில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும். ஹோஃபா, அந்த வலையில் சிக்கினான்.

நாடெங்கிலும் இவர்களது அடாவடித்​தனங்கள் முதலாளிகளுக்குப் பெரும் தலைவலியாகிப் போயின. மாஃபியாவின் பின்பலம் கொண்டு ஹோஃபா செய்த அட்டூழியங்களைத் தாங்க முடியாமல், அவனை வீழ்த்த, சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தனர்.

ஜான் எஃப்.கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவருடைய சகோதரர் ராபர்ட் கென்னடி, அட்டார்னி ஜெனரலாகப் பதவியேற்றதும், காவல் துறையையும் நீதித்துறையையும் முடுக்கிவிட்டார். அவை ஹோஃபாவைக் குறிவைத்து வேட்டையாடின.

தொழிற்சங்கப் போர்வையில் முதலாளிகளிடம் பெருந்தொகைகளை வற்புறுத்திப் பெறுவதாகவும், தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதற்காக வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து 17 லட்சம் டாலர்களை கையாண்டதாகவும் அவன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன.

நீதிமன்றத்தில் இருதரப்பு விவாதங்களும் முடிந்தன. ஜூரர்கள் கூடினர். ஹோஃபாவைக் குற்றமுள்ளவனா, குற்றமற்றவனா என்று இறுதித் தீர்ப்பு எழுத இயலாமல் சமமான இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றனர். சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால், ஹோஃபா வெளியில் வந்திருக்கலாம். ஆனால், அவசரப்பட்டான். எதிரணியில் இருந்த ஒரு  ஜூரரை விலைக்கு வாங்கப் பார்த்தான்.

ஜூரர்களுக்கு லஞ்சம் கொடுத்தான் என்ற புதிய வழக்கு அரசாங்கத்தின் வாதத்துக்குப் பெரும் பலம் சேர்த்தது. ஹோஃபாவுக்கு எட்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இடையில் ஜான்கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆட்சி மாறியது.

அடுத்த மூன்று வருடங்கள் ஹோஃபா அப்பீலுக்கு மேல் அப்பீல் செய்தும் தண்டனை உறுதி செய்யப்பட்டு, ஹோஃபா சிறைக்குள் போனான்.

1967... ஹோஃபாவுக்கு விதிக்கப்பட்ட13 வருட சிறைவாசம் தொடங்கியது. ஹோஃபாவின் வலது கையாக விளங்கிய ஃபிராங்க் சிம்மன்ஸ் யூனியன் தலைவராக இருக்க வேண்டும் என்று மாஃபியா முடிவு செய்தது. அவன் வெள்ளை மாளிகைக்கும் மாஃபியாவுக்கும் பாலமாக இருந்தான்.

புதிய ஜனாதிபதியாக நிக்சன் பொறுப்பேற்ற பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹோஃபாவுக்கு மன்னிப்பு வழங்கச் சம்மதித்தார்.

1971... ஹோஃபா விடுதலையானான். மாஃபியா இதற்காக, நிக்ஸனின் தேர்தல் செலவுகளுக்கென்று ஒரு மில்லியன் டாலருக்கு மேல் வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. நிக்ஸனின் சில நிழலான நடவடிக்கைகளுக்கு மாஃபியாவின் அடியாட்கள் பேருதவி செய்யவும் தலைமையால் பணிக்கப்பட்டனர்.

ஹோஃபாவுக்கு ஒரே ஒரு நிபந்தனை. சிறையில் இருந்திருந்தால், தண்டனைக் காலம்  முடியும் வரை அவன் தொழிற்சங்கப் பதவிகளில் அமரக்கூடாது.

அதிகாரத்தை ருசிபார்த்தவனுக்கு அதை விட்டுக்கொடுக்க மனம் வருமா? ஹோஃபா மீண்டும் தொழிற்சங்கங்களைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர மும்முரமாக ஈடுபட்டான்.

சட்டமும், அரசாங்கமும் துரத்திக்கொண் டிருக்கும் ஒருவனை தொழிற்சங்கத் தலைவனாக வைத்துக்கொள்வதில் மாஃபியாவுக்கு விருப்பமில்லை. தொழிற் சங்க நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என்று ஹோஃபா பலமுறை எச்சரிக்கப்பட்டான்.  ஆனால், மாஃபியாவின் பேச்சைக் கேட்க மறந்தான்.

1975. ஜூலை 30.

ஹோஃபாவின் நண்பனிடமிருந்து ஃபோன்.

'ஹோஃபா, உனக்கும் மாஃபியாவுக்கும் இருக்கும் பிரச்னையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பிற்பகல் இரண்டு மணிக்கு ரெட்ஃபாக்ஸ் ரெஸ்டாரன்ட்டுக்கு வந்துவிடு..'

சொன்ன நேரத்துக்கு ஹோஃபா அங்கே சென்றான். அழைத்த நண்பனுக்காகக் காத்திருந்தான். 30 நிமிடங்கள் ஆயின.

யாரும் வரவில்லை. வெறுத்தான்.

மனைவிக்கு போன் செய்தான்.

'இன்னும் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு வீடு திரும்புவேன்..' என்றான். அதுவே அவனுடைய மனைவி, அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட கடைசித் தருணம்.

2.45க்கு ஹோஃபா பொறுமையிழந்து ஹோட்டலுக்கு வெளியே வந்தான். ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் அவனுக்குப் பரிச்சயமானவர்களாக இருந்திருக்க வேண்டும். அதில் அவன் ஏறியதோடு சரி.

ஜிம்மி ஹோஃபா திடீரென்று மாயமானதில் தொடர்புடையவர்கள் என்று ஒரு சந்தேகப் பட்டியல் தயாரானது. அதில் முக்கியமாக இருந்தவர்கள் டோனி, ரஸல், தாமஸ், கேப்ரியல், ஷீரன் ஆகியோர். யார் யார் மீது சந்தேகம் வலுத்ததோ, அவர்கள் அனைவருமே உறுதியான அலிபி வைத்திருந்தார்கள். ஹோஃபா திட்டமிட்ட ஒரு சதிவலைக்குள் இழுக்கப்பட்டிருந்தான் என்று புரிந்தது.

ஹோஃபா யாரோ ஒரு புதிய காதலியுடன் பிரேசில் நாட்டுக்கு ஓடிப் போய்விட்டான் என்று பெரும்பாலான தொழிற்சங்க உறுப்பினர்களிடம் ஒரு கதை பரப்பப்பட்டது.

'ஹோஃபாவின் நண்பன் ஒருவன் இதன் பின்னணியில் இருந்தான் என்று எல்லோரும் அறிவோம். ஆனால், ஆதாரங்கள் எதுவும் இல்லை. சாட்சிகள் சொல்ல யாரும் முன் வரவில்லை...' என்று வேறு ஒரு யூனியன் அதிகாரி குறிப்பிட்டார்.

பல வருடங்கள் ஹோஃபாவைத் தேடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டது. ஹோஃபா கடைசி வரை உயிருடனோ, பிணமாகவோ கிடைக்கவில்லை. ஏழு வருடங்கள் கழித்து, அவன்  இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சந்தேகப் பட்டியலிலிருந்த பெரும்பாலான வர்கள், வேறு வேறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். மறக்காமல் ஹோஃபா பற்றிய கேள்விகள் அவர்கள் மீது வீசப்பட்டன.

'ஹோஃபாவின் உடல் ஓர் இரும்பு ட்ரம்மில் போடப்பட்டு, மாஃபியாவைச் சேர்ந்தவரின் நிலத்தில் புதைக்கப்பட்டது..' என்பது, ஒரு கைதியின் வாக்குமூலம்.

'நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஹெலிபேடுக்குக் கீழ் புதைக்கப்பட்டான்’ என்றும், 'இறைச்சிகள் வெட்டும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டான்’ என்றும் வெவ்வேறு கைதிகள் கூறினர்.

ஹோஃபா எங்கே புதைக்கப்பட்டான் என்று அவ்வப்போது அதிகாரிகளுக்கு மர்மமான நபர்களிடமிருந்து தகவல்கள் வரும். ஆனால், இதுவரை அவனுடைய உடல் கண்டெடுக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 26 வருடங்களுக்குப் பிறகு, எந்த வாகனத்தில் ஹோஃபா ஏறினான் என்று சொல்லப்பட்டதோ, அந்த வாகனம் கண்டு பிடிக்கப்பட்டது. சில டி.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. காய்ந்த குருதியும், முடிகளும், ஹோஃபா அதில் பயணம் செய்தான் என்று உறுதி செய்தன. ஆனால், அதற்கு மேல் வேறு முன்னேற்றம் இல்லை. ஆன்டனி ஜோசஃப் ஜெரிலி மாஃபியாவைச் சேர்ந்தவன். 2013, ஜூன் மாதம் தன் 86வது வயதில் தன்னிடம் சுத்தமாகப் பணம் இல்லை என்றும்,  ஹோஃபா பற்றிய சில உண்மைகளை விற்கத் தயாராக இருப்பதாகவும் அவன் அறிவித்தான்.

'குறிப்பிட்ட நாளில்  ஜிம்மி  ஹோஃபா நண்பர்களின் காரில்  ஏறியதும்,  ஒரு   மண்வெட்டியால் பின்னந்தலையில் தாக்கப்பட்டான். உயிருடன் புதைக்கப்பட்டான். அந்த இடம் எனக்குத் தெரியும்..' என்று அவன் சொன்னான்.

மிச்சிகனில் உள்ள ஓக்லேண்ட் டவுன்ஷிப்பில் அவன் குறிப்பிட்ட இடம் தோண்டப்பட்டது. ஆனால், எந்த உடலின் மிச்சமும் அங்கு கண்டெடுக்கப்படவில்லை.

குற்றத்தில் தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து உண்மைகளைச் சொன்னாலொழிய ஹோஃபா மாயமாக மறைந்த புதிருக்கான விடை தெரியப் போவதில்லை என்ற சூழலில்...

பல வருடங்கள் கழித்து ஃபிராங்க் ஷீரன் மனம் திறந்தான்...

- குற்றம் தொடரும்