மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

நண்பா... துரோகி வந்திருக்கிறேன்!

குற்றம் புரிந்தவர்

ஃப்ராங்க் ஷீரன், நல்ல உயரம். ஆறடி, நான்கு அங்குலம். எப்போதுமே மிகச் சிறப்பாக உடுத்துவான். 200க்கு மேற்பட்ட டிசைனர் சூட்களை வைத்திருந்தான். 100 ஜோடிகளுக்கு மேல் ஷூக்கள் வைத்திருந்தான். அவனைப் பார்க்கும் யாரும் அவன் கூலிக்கொலைகாரன் என்று கருத மாட்டார்கள்.

 மனித உயிர்களைக் கூசாமல் எடுப்பதற்கு அவன் கற்றுக்கொண்டதே அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தபின்தான். இரண்டாம் உலகப்போரில் 400 நாட்களுக்கு மேல் பணிபுரிந்ததில், ரத்தமும சிதறும் உடல்களும் அவனுக்குப் பழக்கமாகிவிட்டன.

ஊர் திரும்பியதும், மாஃபியாவைச் சேர்ந்த ரஸல் புஃபாலினோவின் பாதுகாவலனாக இருந்து, உயிரைப் பறிக்கும் கூலிக் கொலைகாரனாக மாறிப்போனான்.

இளம் வயதிலேயே மாஃபியாவின் கூலிக் கொலைகாரனாகச் செயல்பட்டாலும், ஷீரனுக்கு குடும்பப் பாசம் அதிகம். மனைவியிடமும் மகள்களிடமும் மிகுந்த அன்புடன் இருப்பான்.

ஒரு முறை அவனுடைய இளம் மகள் மேரி, கடையில் பொருள் வாங்கச் சென்றாள். கைத்தவறுதலாக அங்கிருந்த ஒரு பாட்டிலை அவள் கீழே தள்ளிவிட்டாள். அதற்காகக் கடைக்காரர் அவளை அசிங்கமாகத் திட்டிவிட்டார். தன் அப்பா வீடு திரும்பியதும் அதைச் சொன்னாள்.

ஷீரன் நேரே அந்தக் கடைக்குப் போனான். தன் மகளைக் கடிந்துகொண்டவனை வீதிக்கு இழுத்தான். புரட்டிப் புரட்டி அடித்தான். கடைக்காரனின் கை எலும்புகள் முறிந்து, அவன் செயலற்று வீழ்ந்தபின்தான் வீடு திரும்பினான்.

இன்னொரு முறை தன் மூத்த மகளை எவனோ ஒருவன் தெருவில் கேலி செய்தான் என்று யாரோ ஷீரனிடம் சொல்லிவிட்டார்கள். 'அவன் யாரென்று இப்போதே காட்டு’ என்று ஷீரன் தன் மகளை இழுத்துக்கொண்டு கிளம்பினான். அந்தப் பையன் ஷீரனின் பார்வையில் பட்டான். அவனைத் தரதரவென்று வீட்டுக்கு இழுத்துப்போனான்.

''உன் அப்பாவை வெளியே கூப்பிடு..'' என்று மிரட்டினான். மிரண்டு போன பையனின் தந்தை வெளியே வந்ததும், அவரை நையப்புடைத்தான்.

'பையனை ஒழுங்காக வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு''  எச்சரித்துவிட்டு் வீடு திரும்பினான்.

குற்றம் புரிந்தவர்

தன் அன்பான மனைவி​யையும் மூன்று மகள்களையும் அணைத்தப்படி, ''இந்த உலகமே ஆபத்தானதாக இருக்கிறது.. கவனமாக இருங்கள்'' என்று நெகிழ்ந்த குரலில் சொன்னான்.

ஒருமுறை வீட்டில் தொலைக்​காட்சி ஓடிக் கொண்டிருந்தது. செய்தியறிக்கையில், ஷீரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதாகக் காட்டியதும்,  மகள், ''எதற்காக அப்பா சிறை செல்ல வேண்டும்..?'' என்றாள்.

அம்மாவின் கண்ணீர்தான் அவளுக்கு பதிலாகக் கிடைத்தது.

மாஃபியாவால், ஷீரன் செல்லமாக 'ஐரிஷ்மேன்’ என்று அழைக்கப்பட்டான். மாஃபியாவின் வேலை நிமித்தம், அவன் யூனியன் லீடர் ஜிம்மி ஹோஃபாவைச் சந்தித்தான்.

ஹோஃபா, ஷீரனின் உயரத்தை அண்ணாந்து பார்த்தான். ''நீ வீடுகளுக்கு வர்ணம் அடிப்பவன் என்று கேள்விப்பட்டேன்'' என்றான். ஒரு கொலை நடக்கும்போது, சுவர் எங்கும் ரத்தம் பீய்ச்சியடிப்பதைத்தான் மாஃபியாவில் 'வர்ணமடிப்பது’ என பூடகமாகக் குறிப்பிடுவார்கள்.

''வர்ணம் பூசுபவன் மட்டுமல்ல. தச்சு வேலைகளையும் செய்வேன்'' என்று சிரித்தபடியே பதில் சொன்னான், ஷீரன். தச்சு வேலை என்றால், சவப்பெட்டியைக் குறிக்கும். கொலை செய்வதோடு நிற்காமல், அந்த உடலைக் காணாமல் அடிக்கும் வேலையிலும் ஷீரன் தேர்ந்தவன் என்று ஹோஃபா புரிந்துகொண்டான்.

''பொதுவாக என்னைப் பார்த்தால், மாஃபியாவைச் சேர்ந்தவன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். தொப்பியை அணிந்துகொண்டால் ஒரு லாரி டிரைவரைப் போலத்தான் தோற்றமளிப்பேன்'' என்று  சிரித்தான், ஷீரன்.

முதல் சந்திப்பிலேயே அவர்கள் நெருக்கமானார்கள். தொடர்ந்த சில வருடங்களில், ஷீரன் ஹோஃபாவுக்காகவும் சில தலைகளைக் கிள்ளியெறிந்தான். ஷீரன் மீதுகொண்ட அன்பின் காரணமாக, ஜிம்மி ஹோஃபா, அவனுக்கு தங்கமும், வைரமும் பதிக்கப்பட்ட ஒரு விலை உயர்ந்த வாட்சைப் பரிசளித்தான். அந்த வாட்சை ஷீரன் தன் இறுதி மூச்சுவரை அணிந்திருந்தான்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி கென்னடி, மாஃபியாவின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்டார். அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக மூன்று ரைஃபில்களை டல்லாஸ் நகரத்துக்கு எடுத்துப் போனதாக ஷீரன் பிற்பாடு குறிப்பிட்டிருக்கிறான்.

''ஜனாதிபதி கென்னடியைக் கொலை செய்த ஆஸ்வால்ட் தனியாக வேலை செய்யவில்லை. அந்தக் குற்றத்தைச் செய்துவிட்டு தப்பித்துவிட முடியும் என்று அவன் நம்பினான். ஜாக் ரூபி அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை'' என்று ஷீரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னான்.

1975 ஜூலை 30. ஷீரன் சற்றும் எதிர்பாராத உத்தரவு ஒன்று மேலிடத்திலிருந்து அவனுக்கு வந்தது.

''ஜிம்மி ஹோஃபா..'' என்று இரண்டு சொற்கள் செவியில் மோதின. ஷீரன் திடுக்கிட்டான். ஹோஃபா அவனுடைய நெருங்கிய நண்பன். ஆனால், மாஃபியா உத்தரவு கொடுத்தபின், அதை மீறினால், அவன் உயிருக்கே உத்தரவாதமில்லை.

ஹோஃபாவைக் குறிவைத்துச் சிறையில் அடைத்த பாபி கென்னடி, ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடியின் சகோதரர். ஹோஃபாவின் பொருட்டே, ஜனாதிபதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ஒரு வதந்தி உண்டு.

ஹோஃபாவுக்காக இவ்வளவு செய்தும், அவன் சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு, நன்றியுள்ளவனாக அடங்கியிருக்கவில்லை என்பதே மாஃபியாவின் கோபத்துக்குக் காரணம்.

யூனியனுக்காக, தொழிலாளர்கள் கட்டும் பணத்திலிருந்து மாஃபியா ஆட்கள் பெரும் பகுதியை தங்களுடைய திட்டங்களுக்குத் திருப்பிவிட்டிருந்தார்கள். இந்த விஷயம் ஹோஃபா மூலம் வெளியில் தெரியவந்தாலோ அல்லது ஹோஃபா அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிப் பெரும் பங்கைக் கேட்டாலோ, தேவையற்ற பிரச்னை என்று மாஃபியா அவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தது என்று ஷீரன் உணர்ந்தான்.

ஹோஃபாவின் குற்றங்களை மாஃபியா மன்னிக்கக் காத்திருக்கிறது என்று அவன் பொது இடத்துக்கு வரவழைக்கப்பட்டான். அங்கிருந்து அவன் காணாமல் போனான்.

அதே நாள், ஷீரன் தன் வீட்டுக்கு போன் செய்தான். ''ஜிம்மி காணாமல் போய்விட்டான்'' என்றான்.

போனை எடுத்தது, மகள் டொலோரிஸ். ''நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்..?''  என்று கேட்டாள்.

''இங்கு பக்கத்தில்தான் ஒரு திருமணத்துக்காக வந்திருக்கிறேன்..'' என்று ஷீரன் சொன்னதை அவன் வீட்டாரே நம்பவில்லை. பிற்பாடு, எஃப்.பி.ஐ அவன் மீது சந்தேகம்கொண்டு பல முறை சிறைப்படுத்தியது. ஷீரன் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். ஆனால், ஜிம்மி ஹோஃபாவின் மரணத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றே அவன் சாதித்தான். காலம் ஓடியது. தன் 74ம் வயதில் ஷீரன் வேறொரு காரணத்துக்காகச் சிறைப்பட்டிருந்தபோது, உடல் நலமிழந்தான். அவனுக்காக சார்லஸ் பிராண்ட்  என்ற வழக்கறிஞரை மாஃபியா நியமித்தது. மருத்துவக் காரணங்களை ஏற்று கோர்ட் அவனை விடுதலை செய்தது.

வாழ்க்கையின் கடைசி நாட்களைச் சந்திக்க நேர்ந்தபோது, ஷீரன் கலங்கினான். கத்தோலிக்க நம்பிக்கைகளை தான் முறையாகப் பின்பற்றவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி அவனைக் குடைந்தது. ஏசுவிடம் பாவ மன்னிப்பு கேட்க விழைந்தான்.

மகள் டொலோரிஸ் அவனை சர்ச்சுக்கு அழைத்துச் சென்றாள்.

''பாவ மன்னிப்பு கேட்டுவிட்டு, வீடு திரும்பியபோது, அப்பாவிடம் அதுவரை நான் காணாத மகிழ்ச்சி காணப்பட்டது...'' என்று டொலோரிஸ் குறிப்பிட்டாள்.

ஏசுவிடம் சொன்னதை வெளிப்படையாக மற்றவர்க்கும் சொல்ல முடிவு செய்தான், ஷீரன். தனக்காக வாதாடிய வக்கீல் சார்லஸ் பிராண்டை அழைத்தான்.

''என்னைப்பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்கிறேன். அதைப் புத்தகமாக எழுதுங்கள்'' என்றான்.

ஐந்து வருடங்களில் அவரிடம் அவன் அத்தனை உண்மைகளையும் தெளிவாக முழுமையாக எடுத்துச் சொன்னான். கேட்கக் கேட்க, பல சந்தர்ப்பங்களில் அவர் முதுகெலும்பு சில்லிட்டுப்போனது.

சார்லஸ் எழுதிய கையெழுத்துப் பிரதியை முழுவதுமாகப் படித்துப் பார்த்தான், ஷீரன். திருப்தி ஆனான். அச்சுக்குப் போகலாம் என்று அனுமதி கொடுத்தான். அன்றிலிருந்து உணவு உண்ண மறுத்தான். ஆறே வாரங்களில் தன் 83வது வயதில் ஷீரன் மரணம் எய்தினான்.

I heard you paint houses

(ஷீரனிடம் ஜிம்மி ஹோஃபா முதலில் உதிர்த்த வார்த்தைகள்) என்ற தலைப்பில் புத்தகம் வெளியானது.

''ஷீரன் பொதுவாக எல்லோராலும் விரும்பப்படுபவனாகவே இருந்தான். எங்கள் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் அவன் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து அவன் ஒரு கொலைகாரன் என்பதை என் மனைவி நம்ப மறுத்தாள். அறிவும், அழகும், நகைச்சுவையும் நிரம்பப் பெற்றவன்.. நான் வக்கீலாக இருப்பதால் எதையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல் பல குறுக்குக் கேள்விகள் கேட்டு, விஷயத்தை வாங்கினேன். ஷீரன் சொன்னவற்றை ஒரு முறைக்கு இரு முறை மற்றவர்களிடமும் கேட்டு, சரிபார்த்தேன்..'' என்கிறார், சார்லஸ்.

போலீஸோ, எஃப்.பி.ஐயோ கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமல் போன பல கொலைகளின் பின்னணியில் ஷீரன் இருந்தது, உலகுக்குத் தெரியவந்தது.

ஜிம்மி ஹோஃபா பற்றி ஷீரன் என்ன சொன்னான் என்பதே இங்கு முக்கியம்.

''ஜிம்மி ஹோஃபா என் நெருங்கியத் தோழன். ஆனால், என் பாஸ் ரஸல் என்னை அழைத்து அவன் கதையை முடிக்கச் சொன்னபோது, மறுக்க இயலவில்லை. பேச்சுவார்த்தைக்குப் போகலாம் என்று நான் அழைத்ததும், நம்பிவந்தான். காரில் ஏற்றிப் போனோம். ஒரு காலியான வீட்டுக்குள் அழைத்துப் போனேன். என் துரோகத்தை அவன் உணரும் முன், அவனுடைய பின் மண்டையில் இரு முறை சுட்டேன். உயிரற்று அவன் கீழே விழுந்ததும், அந்த வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன். ஜிம்மியின் உடலை எடுத்துச் சென்று புதைக்கும் வேலையை 'சிவப்புத் தலையன்’ என்று அழைக்கப்பட்ட ஃப்ரான்சிஸிஸும், மாஃபியாவைச் சேர்ந்த மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர்.''

ஜிம்மி ஹோஃபா மாயமானதன் மர்மம் உலகுக்கு விளங்கியது. ஆனால், ஷீரன் புத்தகத்தில் சொன்னதை வாக்குமூலமாக ஏற்க திஙிமி முன்வரவில்லை. அவனைக் கைது செய்ய அவன் உயிருடனும் இல்லை.

''என் அப்பாவைப் போன்ற பல கூலிக்கொலைகாரர்கள், மோசமான மரணத்தையே சந்தித்திருக்கிறார்கள். என் அப்பாவோ தன் குற்ற உணர்ச்சியை முற்றிலுமாகக் களைந்துவிட்டு, தன் பாவங்களை எல்லாம் இறக்கிவைத்துவிட்டு, தன் மரண நாளைக்கூட தானே தேர்ந்தெடுத்து, இந்த உலகிலிருந்து விடைபெற்றார்'' என்று அவனுடைய மகள் டொலோரிஸ் அவன் மரணத்தில் மட்டுமே பெருமைகொள்ள முடிந்தது.