சதுப்பு நிலத்தில் சவக் குழிகள்!

இங்கிலாந்து. மான்செஸ்டர் நகரம்.
1965 அக்டோபர் 7. காலை மணி: 06.20.
டேவிட் ஸ்மித் அந்தப் பொதுத் தொலைபேசியில் தட்டுத் தடுமாறி போலீஸ் நிலையத்தின் எண்ணைச் சுழற்றினான். பதற்றத்தில் கை, கால்கள் நடுங்கின. குழறலாகவும் குரல் நடுக்கத்துடனும் அவன் கூறியதைக் கேட்டு போலீஸ் திடுக்கிட்டது. அடுத்த சில நிமிடங்களில், அந்தத் தொலைபேசிக் கூண்டருகே போலீஸ் ஜீப் ஒன்று டயர்கள் தேய பிரேக் அடித்தது. மயங்கி விழும் நிலையில் இருந்த டேவிட் ஸ்மித்தை அள்ளி ஜீப்பில் போட்டுக்கொண்டனர், காவலர்கள்.
விடுப்பில் செல்லவிருந்த மேலதிகாரி உடனடியாக அவனை விசாரணை செய்ய அழைக்கப்பட்டார்.
மேலதிகாரி வருவதற்குள் சில முந்தைய தேதிகளுக்குப் போய் வருவோம்.
1963 ஜூலை 12. பின்மாலைப் பொழுது. மான்செஸ்டர் சாலையில் வேன் ஒன்று மெல்ல ஊர்ந்தது. சிறு இடைவெளிவிட்டு மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்தது.
வேனில் இருந்தவள் மைரா. 21 வயது.
இரவு எட்டு மணிக்குப் பிறகு, வெளிர் நீல கோட் அணிந்து, ஒரு பெண் தனியாக நடந்து செல்வதை அவர்கள் கவனித்தார்கள். வேன் நின்றது. வேனில் இருந்த மைராவுக்கு அவளை அடையாளம் தெரிந்தது. அவளுடைய தங்கையின் தோழி பாலின்.
'ஹேய் பாலின்..! எங்கே போகிறாய்..?'
'பிரிட்டிஷ் ரயில்வே கிளப்பில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்கு.. நீ?'
'நானும் அந்தப் பக்கம்தான் போகிறேன். வேனில் ஏறு' தனக்கு நிகழப்போகும் ஆபத்து பற்றி உணராமல், பாலின் ஆசையாக மைராவின் வேனில் ஏறிக்கொண்டாள்.
வேன் ஓர் ஒதுக்குப்புறமான சதுப்பு நிலத்தருகே நின்றது.
'பாலின், ஒரு சின்ன உதவி. என்னுடைய கையுறை இங்கேதான் எங்கேயோ விழுந்தது. அதை மட்டும் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு, உடனே போய்விடலாம்..'
பாலினும், அவளும் இறங்கினர். பின்னாலேயே மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.
'இது ப்ராடி.. என் பாய் ஃப்ரெண்ட்..' என்று அறிமுகப்படுத்தினாள், மைரா.

'ஹாய், ப்ராடி..' என்று புன்னகைத்தாள், பாலின்.
'மைரா, நீ இங்கே தேடு. நானும், பாலினும் அங்கே தேடுகிறோம்..' என்று ப்ராடி தன் டார்ச்சை அடித்துக்கொண்டு இருட்டுக்குள் நடந்தான். பாலின் அப்பாவியாகப் பின்தொடர்ந்தாள்.
கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு, ப்ராடி மட்டும் திரும்பி வந்தான். மைராவை அழைத்துப்போய்க் காட்டினான்.
பாலின், உடைகள் களையப்பட்டு, சம்மட்டியால் அடிக்கப்பட்டு உயிர் நீத்திருந்தாள். மண்வெட்டியால் அவள் புதைக்கப்பட வேண்டிய இடத்தைத் தோண்ட ஆரம்பித்தான், ப்ராடி.
1963 நவம்பர் 23. 12 வயது ஜான் கில்ப்ரெய்டு, மார்க்கெட்டிலிருந்து திரும்பும் வழியில் மைராவின் பார்வையில் விழுந்தான். வேனில் லிஃப்ட் கிடைத்தது. அதோடு காணாமல் போனான்.
1964 ஜூன் 16. தன் பாட்டி வீட்டுக்குப் போகும் வழியில், 12 வயது கீத் பென்னெட், மைராவின் வேனில் ஏறினான். தொலைந்துபோனான்.
1964 டிசம்பர் 26. 10 வயது நிரம்பிய லெஸ்லி யாருக்காகவோ தனியாகக் காத்திருப்பதை அறிந்து, நைச்சியமாகப் பேசி, மைரா அவளை வேனில் ஏற்றிச் சென்றாள். அவளும் வீடு திரும்பவில்லை.
தொலைந்துபோன இளம்வயதினர் பல நாட்களாகியும் திரும்பவில்லை. பெற்றோர்கள் போலீஸில் புகார் செய்தார்கள். பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்தார்கள். எந்தப் பலனும் இல்லாததால் அச்சமும், கண்ணீருமாகக் குழந்தைகளைத் தேடிக் கொண்டேயிருந்தார்கள்.
'குழந்தைகள் கடத்தப்பட்டிருந்தால், ஏன் யாரும் பணயப் பணம் கேட்கவில்லை? மாயமாகிப் போனவர்கள் என்ன ஆனார்கள்?’ என்றெல்லாம் போலீஸ் குழம்பியது.
இந்த நிலையில், அந்த முக்கிய நாள் வந்தது.
1965 அக்டோபர் ஆறு. 17 வயது நிரம்பிய எட்வர்டு ஈவன்ஸ் என்பவனை மான்செஸ்டர் ரயில் நிலையத்தில் கண்டான், ப்ராடி. நட்பாகப் பேசி, தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்.
அதற்கப்புறம் என்ன நடந்தது என்பதை போலீஸ் உயர் அதிகாரியிடம் டேவிட் ஸ்மித் மற்றும் அவன் மனைவி மாரின் இருவரும் சொல்வதைக் கவனிப்போம்.
டேவிட் ஸ்மித் நடுங்கும் குரலில் விவரித்தான்.
'நேற்றிரவு என் மனைவியின் அக்கா மைரா எங்கள் வீட்டுக்கு வந்தாள். 'இருட்டில் தனியாக வீட்டுக்கு நடக்க பயமாயிருக்கிறது. என்னுடன் துணைக்கு வருவாயா?'' என்று கேட்டாள். அவளை வீட்டில் கொண்டுபோய் விட்டேன். 'உள்ளே வா, ஒயின் பாட்டில்கள் வாங்கிப்போ’ என்றாள். அவள் தன் காதலன் ப்ராடியுடன் அங்கே வாழ்கிறாள் என்று தெரியும். கிச்சனில் அவள் கொடுத்த ஒயின் பாட்டில்களை நான் பார்த்துக்கொண்டு இருந்தபோது, திடீரென்று ஒருவன் பெரும் வலியில் அலறும் ஓலம் கேட்டது. பின்னாலேயே 'உடனே உதவிக்கு வா’ என்று என்னை மைரா சத்தம்போட்டு அழைத்தாள். ப்ராடிக்குதான் ஏதோ ஆகிவிட்டது என்று அங்கு ஓடினேன். கண்ட காட்சி என் ரத்தத்தை உறையவைத்தது. படுக்கையிலும், தரையிலுமாக ஓர் இளைஞன் விழுந்துகிடந்தான். ப்ராடி ஒரு கோடாலியை தன் தலைக்கு மேல் உயர்த்தி, இளைஞனின் தோளில் ஓங்கி இறக்கினான். மீண்டும் மீண்டும் கோடாலியால் தாக்கப்பட்டதில், அந்த இளைஞன் ரத்தவெள்ளத்தில் உயிரைவிட்டான்.
'போராட்டத்தில் ப்ராடியின் கணுக்கால் சுளுக்கிக்கொண்டுவிட்டது. செத்தவனை இழுத்துப்போட்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்ய நீ அவனுக்கு உதவு. நான் போய் டீ போட்டு எடுத்து வருகிறேன்..' என்று மைரா அதிராமல் சொன்னாள். அவளும் அவள் காதலனும் நடந்துகொண்ட விதம் பார்த்து ஒன்றைப் புரிந்துகொண்டேன். எதிர்த்து ஏதாவது செய்தால், கோடாலி என் தலையிலும் இறங்கிவிடும். பேசாமல் அந்த இடத்தைச் சுத்தம் செய்ய அவர்களுக்கு உதவினேன்.. 'காலையில் மீண்டும் வந்து உடலை அப்புறப்படுத்த உதவுகிறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவந்துவிட்டேன்.. என் மனைவியிடம் நடந்ததைச் சொன்னேன். உடனே போலீஸில் சொல்லிவிடு என்றாள். போன் செய்தேன்..'
டேவிட் ஸ்மித் சொன்னது கேட்டு, காவல் துறையினர் அதிர்ந்து போயினர்.
ப்ராடியின் வீட்டுக்குப் படையெடுத்தது, போலீஸ். வந்திருப்பது காவல் துறையினர் என்று தெரிந்தபின்னரும், ப்ராடியும், மைராவும் அவர்களைத் தைரியமாக எதிர்கொண்டனர். மாடியில் பூட்டப்பட்டிருந்த அறையைத் திறந்து காட்ட மறுத்தனர். போலீஸ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி கதவை உடைத்துத் திறந்தது.
உள்ளே மூட்டையாகக் கட்டப்பட்டிருந்த உடலைக் கண்டெடுத்தது.
விசாரணை துவங்கியது.
இயான் ப்ராடிக்கு 27 வயது. மைரா ஹின்ட்லேவுக்கு 23 வயது. ப்ராடி மீது பெரும் காதல்கொண்டு, மைரா பழைய காதலனை உதறிவிட்டு அவனுடன் வந்திருந்தாள். ப்ராடி குமாஸ்தாவாகவும், ஹின்ட்லே டைப்பிஸ்டாகவும் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அலமாரிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சில புகைப்படங்கள் போலீஸிடம் சிக்கின. கொலைசெய்து, சிதைக்கப்பட்ட சிறுவர்களின் உடல்களுக்கு அருகே வெற்றிச் சிரிப்புடன் பெருமையுடன் நின்று ப்ராடியும், மைராவும் எடுத்துக்கொண்ட படங்கள் அவை. செய்தித்தாள்களில் வெளியான அந்தப் புகைப்படங்களைப் பார்த்து நாடே அதிர்ச்சியில் உறைந்துபோனது.
ப்ராடியும் மைராவும் கைதுசெய்யப்பட்டனர்.
சித்ரவதை செய்து, ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் போலீஸ் மிகத் தீவிரமாக இறங்கியது. மாயமாகிப்போன சிறுவர்களின் சிதைக்கப்பட்ட உடல்கள் பூமிக்கு அடியில் கண்டு எடுக்கப்பட்டன.
செய்தியறிந்து இங்கிலாந்து நாடே கொதித்துப்போனது. இந்தக் கொடூரக் கொலையாளிகளைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொல்ல வேண்டும் என பத்திரிகைகளும், மக்களும் ஆத்திரத்துடன் குரல் எழுப்பினார்கள்.
நீதிமன்ற விசாரணை தொடங்கியது. ப்ராடியும், மைராவும் சிறு வயதிலிருந்தே, பிறரைக் கொடுமைப்படுத்தி அதில் பேரின்பம் காணும் பயங்கரமான சாடிஸ்டுகளாக இருந்து வந்திருப்பதை நீதிமன்றம் உணர்ந்தது.
அந்த அரக்கர்களிடம் சிக்கிய குழந்தைகள் சித்ரவதையை அனுபவித்தபோது, அந்த நெஞ்சை உருக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்தும், அந்த நேரங்களில் அந்தப் பிஞ்சுகள் கெஞ்சிக் கதறி அழுததை, ஒலி நாடாக்களில் பதிவு செய்தும் மைராவும் ப்ராடியும் சேமித்து வைத்திருந்தது, காவல் துறையினருக்குப் பெரும் ஆதாரங்களாக விளங்கின.
தாங்க இயலாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, இரக்கமின்றி கொலைசெய்யப்பட்ட தருணத்தில் சிறுமி லெஸ்லி எழுப்பிய நெஞ்சை உருக்கும் ஓலத்தையும் அழுகையையும் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிப்பதற்காக கொலைகாரர்கள் பதிவுசெய்து வைத்திருந்த ஒலி நாடாவை கோர்ட்டில் போலீஸார் இயக்கினர். அதைக் கேட்டுக் கதறி அழாதவர்களே இல்லை.
கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிச்சயம் என மக்கள் முழுமையாக எதிர்பார்த்தனர். ஆனால், இடையில் இங்கிலாந்து அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட ஒரு மிக முக்கியமான திருத்தம் அந்த நம்பிக்கையைத் தகர்த்தது.
அவலத்திலும் அவலமாக, இந்தப் பரபரப்பான வழக்கு தொடங்கியபோது இங்கிலாந்தில் அமலில் இருந்த தூக்குத் தண்டனை, வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாவதற்கு முன் ஒழிக்கப்பட்டுவிட்டது.
இயான் ப்ராடியையும், மைரா ஹின்ட்லேயையும் கொடூரக் குற்றவாளிகள் என்று முடிவு செய்தது நீதிமன்றம். 1966ம் வருடம் மே ஆறாம் தேதி தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அந்த நேரத்தில் உச்சபட்ச தண்டனையாய் இருந்த ஆயுள் தண்டனையே இருவருக்கும் வழங்கப்பட்டது.
சிறைக்காவலர்களோ, சக கைதிகளோ யாருமே அவர்களோடு ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. மற்றவர்களின் வெற்றுப்பார்வை மட்டுமே அவர்களைத் துளைத்தது. அவர்களது கெஞ்சலான அழைப்பும் அவலமான அழுகையும் யார் மனதையும் இறுதிவரை கரைக்கவில்லை. தனிமைச் சிறையில் நடைப் பிணங்களாகவே அவர்கள் உயிர்வாழ நேர்ந்தது.
மக்களின் ஒட்டுமொத்தக் காழ்ப்பையும் பெற்றோர்களின் கடும் சாபத்தையும் கைதிகளிடம்கூட வெறுப்பையும் சம்பாதித்திருந்த ப்ராடிக்கும் மைராவுக்கும் மரண தண்டனை கிடைக்காதது அதிர்ஷ்டமா அல்லது துரதிருஷ்டமா?
- குற்றம் தொடரும்