வட்டமிட்ட இயந்திரப் பருந்து..!

அயர்லாந்து. அக்டோபர் 28, 1973. ஞாயிறு. 'ஐரிஷ் ஹெலிகாப்டர்ஸ்’ கம்பெனியின் மேனேஜரைச் சந்திக்க வந்தவன், நல்ல உயரமாக இருந்தான்.
'என் பெயர் லியோனார்டு. அமெரிக்காவிலிருந்து வருகிறேன். எங்கள் படக்குழு அயர்லாந்தின் அற்புதமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த விரும்புகிறது. அதற்கு முன்னோடியாக உங்கள் நாட்டின் வசீகரமான பகுதிகளைச் சுற்றிப் பார்த்து படம் பிடித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறேன். எனக்கு ஒரு ஹெலிகாப்டர் தேவைப்படும். உங்களிடம் வாடகைக்குக் கிடைக்குமா..?'
மேனேஜர் வந்தவனை உபசரித்து, தங்கள் கம்பெனியின் ஹெலிகாப்டர்களைப் பார்வையிட அழைத்துச் சென்றார். ஐந்து பேர் அமரக்கூடிய ஒரு சக்திமிக்க ஹெலிகாப்டரைத் தேர்வு செய்தான், லியோனார்டு.
'அக்டோபர் 31 வருகிறேன்..' என்று விடைபெற்றான்.
சொன்ன நேரத்தில் லியோனார்டு வந்து சேர்ந்தான். காற்றில் கலந்திருந்த அதீதக் குளிர் அவனை பயமுறுத்தவில்லை. அயர்லாந்தின் எந்தப் பகுதிகளை உலகத்துக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்று மேனேஜரும் ஆவலுடன் ஒரு பட்டியல் தயாரித்து அவனிடம் கொடுத்தார்.
காலைப் பனியில், ஹெலிகாப்டர் பளபளப்பாக மின்னியது. அதைச் செலுத்தவிருந்த பைலட் தாம்சன், 'இந்த அமெரிக்கர்கள்தாம் வாழ்க்கையை எவ்வளவு உன்னதமாக வாழ்கிறார்கள். சினிமாவுக்குக் களம் தேடக்கூட இவ்வளவு செலவு செய்ய முடிகிறது இவர்களால்..!’ என்று லியோனார்டைப் பொறாமையோடுப் பார்த்தார்.
லியோனார்டை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஜிவ்வென்று மேலேறியது.
'காத்திருக்கும் என் கேமரா குழுவையும் ஏற்றிக்கொள்ள வேண்டும்' என்று சற்று ஒதுக்குப்புறமாய் இருந்த பகுதியில், ஹெலிகாப்டரைத் தரையிறக்கச் சொன்னான் லியோனார்டு.
அது தரையிறங்கியதும், லியோனார்டு குதித்து இறங்கி வெளியேறினான். அவன் கொடுத்த அமெரிக்க சாக்லேட்டை ருசித்து சுவைத்துக் கொண்டிருந்த பைலட்டின் பின்கழுத்தில் திடீரென்று ஒரு பிஸ்டலின் சில்லென்ற வட்டம் அழுத்தியது. சடாரென்று இருவர் ஹெலிகாப்டருக்குள் பாய்ந்து ஏறினர். இருவரும் அடையாளத்தை மறைத்து, முகமூடி அணிந்திருந்தனர்.
பைலட்டின் வாயிலிருந்த சாக்லேட் நழுவியது. 'உங்களுக்கு என்ன வேண்டும்? லியோனார்டு எங்கே?'
'கேள்விகள் கேட்காதே. மைக்கை அவிழ்த்துப்போடு. இந்தக் கணத்திலிருந்து யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசக் கூடாது.. நாங்கள் சொல்லும் வழியில் ஹெலிகாப்டரைச் செலுத்து..' என்று கரகரத்த குரல் கட்டளையிட்டது.

யார் அந்த லியோனார்ட்? எந்த அமெரிக்கத் திரைப்படக் குழுவைச் சேர்ந்தவன்? துப்பாக்கி முனையில் மிரட்டியவர்கள், ஹெலிகாப்டரைத் கடத்திப்போனது எங்கே?
உண்மையில் அந்தக் கடத்தலின் பின்னணியில் இருந்த வரலாறே வேறு..
இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று புரட்சியில் ஈடுபட்ட அயர்லாந்துப் போராளிகளில் முக்கியமானவன் சீமஸ் த்வோமி. 'ஐரிஷ் ரிபப்லிக்கன் ஆர்மி’ என்ற புரட்சி இயக்கத்தின் தலைவன்.
1972 ஜூலையில், இங்கிலாந்து அரசாங்கத்துடன் புரட்சி இயக்கம் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன் விளைவு?
சுமார் 80 நிமிடங்களுக்குள் 26 வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், புரட்சி இயக்கத்தின் கார் வெடிகுண்டுகள் வெடித்தன. 'ரத்தக்களரியான வெள்ளிக்கிழமை’ என்று அந்த ஜூலை 21 அழைக்கப்பட்டது.
'எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இதுவே எங்கள் பதில்’ என்று உறுமினான், சீமஸ் த்வோமி.
மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டபோது, பங்குகொள்ள த்வோமிக்கு விருப்பம் இல்லை.
'போராடி, ஒட்டுமொத்தமாகச் சுதந்திரத்தைப் பெற வேண்டுமே தவிர, அமைதிக்கான பேச்சுவார்த்தை என்ற பெயரில் நிறைய விஷயங்களை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது' என்றான். இங்கிலாந்தின் ராணுவ வீரர்களைச் சொல்லொணாத் தொல்லைகளுக்கு உள்ளாக்கியது, புரட்சிப் படை.
ஒரு வழியாக, அயர்லாந்து பாதுகாப்புப் படையினரால் 1973 அக்டோபரில் சீமஸ் த்வோமி கைது செய்யப்பட்டான். அவன் கைதானதும் ஐரிஷ் ரிபப்லிக்கன் ஆர்மியே தவித்துப் போனது.
அரசியல் கைதிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலைக்கு த்வோமி இழுத்துச் செல்லப்பட்டான். சிறைச்சாலையின் பெயர்ப் பலகையைப் படித்ததும், த்வோமியின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் இம்மியளவும் இடமில்லாத ஒரு சிறைச்சாலைக்கு எதற்கு 'மவுன்ட்ஜாய்’ என்று பெயர்? காவலர்களின் கனத்த பூட்ஸ்களின் ஒலி பகலும், இரவும் எதிரொலிக்கும் ஒரு நரகத்துக்கு எதற்கு பொருத்தமில்லாமல் இப்படி ஒரு பெயர்? த்வோமி கோபத்தில், சிறைச்சுவரில் ஓங்கிக் குத்தினான்.
தன்னுடன் அடைக்கப்பட்ட கெவில் மேலன், ஜேபி ஓ ஹேகன் இருவரிடமும் தன் மனதைத் திறந்தான். 'பல நூற்றாண்டுகளாகக் கிடைக்காத சுதந்திரத்தைப் பெற்றுத் தரவேண்டிய போராளிகள் நாம். ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்துடன் நம் புரட்சி இயக்கத்தில் இணைந்து கொண்டிருக்கும் வேளையில், நாமே சிறையில் மாட்டினால், அவர்கள் நம்பிக்கை என்னாகும்? இங்கிருந்து தப்பிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?'
'24 மணி நேரமும் காவலர்கள் கண்கொத்திப் பாம்புபோல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பள்ளம் தோண்டி பூமிக்கடியில் குகை அமைத்து நாம் தப்பிக்க முடியாது. மாறு வேஷத்தில் ஏமாற்றிவிட்டுத் தப்பிக்கவும் வாய்ப்பில்லை' என்று ஹேகன் தளர்வுடன் சொன்னான்.
'ஆனால், என் உள்ளுணர்வு இங்கிருந்து தப்பிப்போம் என்றது' என்றான், மேலன்.
இது இப்படியிருக்க, மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒரு பனி படர்ந்த காலை வேளையில்தான் அந்த ஹெலிகாப்டர் கடத்தப்பட்டது.
அதே நேரம். மவுன்ட்ஜாய் சிறைச்சாலை. உடற்பயிற்சிகள் செய்வதற்காக கைதிகள் மைதானத்தில் கூடியிருந்தனர். பாதுகாவலர்கள் கவனம் சிதறாமல் கைதிகளின் மீது பார்வையை வைத்திருந்தார்கள்.
த்வோமி, ஹேகன் இருவரிடமும் மேலன் ரகசியமாக, 'என் அருகிலேயே இருங்கள்..' என்று சொன்னான். உட்கார்ந்து எழுவதும், கைகால்களை நீட்டுவதுமாக, மூவரும் அருகருகே நின்றபடி, தங்கள் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்தனர்.
திடீரென்று ஆகாயத்தில் ஹெலிகாப்டரின் பெரும் சிறகுகளின் இரைச்சலான ஒலி கேட்டது. மேலன் ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தான்.
'தயாராயிருங்கள்' என்றான்.
மவுன்ட்ஜாய் சிறைச்சாலையின் திறந்தவெளி மைதானத்தின் மீது ஹெலிகாப்டர் காணப்பட்டதும், சிறை அதிகாரிகள் விரைந்தனர்.அமைச்சகத்தில் இருந்து அதிகாரிகள் யாரோ சிறைக்கு முன்னறிவிப்பின்றி வருகை தருகிறார்கள் என்றுதான் அவர்கள் முதலில் நினைத்தார்கள். அவர்களை வரவேற்க அவசரமாகத் தயாரானார்கள்.
மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென்று இரையைக் கண்டுவிட்ட பருந்து போலப் பாய்ந்து இறங்கியது.
என்ன நடக்கிறது என்று பாதுகாவலர்கள் உணரும் முன், ஹெலிகாப்டர், சிறைச்சாலையின் மைதானத்தில் தரையைத் தொடும் தூரத்தில் அந்தரத்தில் நின்றது. மேலன் தன் நண்பர்களை இழுத்தபடி ஹெலிகாப்டரை நோக்கி ஓடினான்.
உஷாராகி, பாதுகாவலர்களும் ஹெலிகாப்டரை நோக்கி ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் ஹெலிகாப்டரின் கதவு திறந்து, மூன்று கைதிகளும் உள்ளே இழுத்துக்கொள்ளப்பட்டார்கள். இரையைப் பற்றிவிட்ட பருந்துபோலவே ஹெலிகாப்டர் வானில் மேலேறிப் பறந்தது.
கைதிகள் தப்பிப்பதை உணர்ந்துகொண்டு காவலர்கள் முன்னேறியபோது, மற்ற கைதிகள் அவர்களை குறுக்கில் நின்று மறித்தனர். அங்கு மேலும் குழப்பம் உண்டானது.
ஓர் அதிகாரி, பழக்க தோஷத்தில் 'கேட்டைப் பூட்டுங்கள், கேட்டைப் பூட்டுங்கள்..' என்று அலறினார். சிறைச்சாலையின் கேட்டை கூடுதலாகப் பூட்டுவதற்கு ஆட்கள் ஓடினர். கேட்களை மூடி, ஹெலிகாப்டரைத் தடுக்க முடியாது என்பதைக்கூட அந்தக் கணத்தில் அவர்கள் உணரவில்லை.
உணர்ந்ததும், சிறைக் காவலர்கள் தங்கள் ரைஃபிள்களை இயக்கினர். உயிருக்கு பயந்து, தன் திறமையையெல்லாம் பயன்படுத்தினார், பைலட். துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து தப்பித்து ஹெலிகாப்டர் புரண்டு புரண்டு சர்ரென்று மேலேறியது. புள்ளியாகி மறைந்தது.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, 'குதிரைப் பந்தயம் நடக்கும் மைதானத்தில் இறக்கு' என்று உத்தரவு பிறந்தது. பயணிகள் ஐவரும் வெளியே குதித்து இறங்கினர்.
'திறமையாகச் செலுத்தினாய். நன்றி..' என்று பைலட்டிடம் சொன்னான், ஒரு முகமூடி. அங்கு காத்திருந்த ஒரு கார், அவர்களை அள்ளிக்கொண்டு பறந்தது.
பட்டப்பகலில் திட்டமிட்டு, கண்ணெதிரே சிறையிலிருந்து வான் வழியே தப்பியவர்களைக் காவலர்களால் தடுக்க முடியவில்லை.
பிற்பாடு, த்வோமி பலவிதங்களில் தங்கள் புரட்சி இயக்கத்தின் குரலை வன்முறையாகவே அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்திக்கொண்டிருந்தான்.
டிசம்பர் 1977. நிழலான ஓர் ஆயுதப் பரிமாற்றம் நடக்கும் இடத்தில், தன் கார் அருகில் கறுப்புக் கண்ணாடிகளை அணிந்து நின்றிருந்த த்வோமியை பெல்ஜியன் போலீஸார் சூழ்ந்தனர். த்வோமி காரில் பாய்ந்து ஏற..
ஒரு நீண்ட துரத்தலுக்குப் பிறகு, ஒருவழியாக த்வோமி கைதானான். எத்தனையோ உயிர்களைப் பறித்த வெடிகுண்டுகளுக்குப் பின்னால் இருந்தவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா?
ஐந்து வருட சிறைவாசம்.
1982ம் ஆண்டு விடுதலையான பிறகும், புரட்சிப் போராட்டங்களில் த்வோமி தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ளத் தவறவில்லை.
அமெரிக்காவுக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும், தன்னுடைய பெயரை ஜேம்ஸ் டூமி என்று மாற்றிக்கொண்டு தைரியமாக அமெரிக்காவிலும் சில காலம் இருந்தவன் த்வோமி.
இறுதியாக உடல் நலம் சரியில்லாமல் 1989ல் செப்டம்பர் மாதத்தில் வானில் மேகங்கள் குழுமியிருந்த ஒரு நாளில் மரணம் எய்தினான்.
தனது இறுதி மூச்சு பிரியும் வரை, சிறையிலிருந்து மயிர்க்கூச்செறியும் விதத்தில் சகாக்களுடன் தான் தப்பித்த கதையை, நண்பர்களிடமும் உறவினர்களிடமும் த்வோமி பலமுறை பகிர்ந்துகொள்ளத் தவறவில்லை.
- குற்றம் தொடரும்