மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

ரோல்ஸ் ராய்ஸ் ரகளை..!

குற்றம் புரிந்தவர்

ங்கிலாந்து. டென்னிஸ் விளையாட்டுக்குப் பெயர் போன விம்பிள்டன். 1969, டிசம்பர் 29.

வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு’ செய்தித்தாள் நிறுவனத்தின் துணைத் தலைவர் அலிக் மக்காய், பணியை முடித்துவிட்டு, இரவு எட்டு மணிக்கு, வீட்டுக்குத் திரும்பினார்.

அழைப்பு மணியை இரண்டு முறை ஒலித்தும், யாரும் வரவில்லை. கதவைத் தட்ட கை வைத்தபோது, தாழிடாத கதவு தானாகத் திறந்துகொண்டது. அலிக் மக்காய் உடனடியாக உஷாரானார். அதிக கவனத்துடன், வீட்டை எப்போதும் பூட்டியே வைத்திருக்க வேண்டும் என்று தன் மனைவிக்கு அறிவுறுத்தியிருந்தது நினைவுக்கு வந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும், கண்ட காட்சி அவரைத் தாக்கியது. மனைவியின் கைப்பையும் பையிலிருந்த பல பொருட்களும் மாடிப்படிகளில் சிதறிக் கிடந்தன. இணைப்பு துண்டிக்கப்பட்ட தொலைபேசி கீழே வீசப்பட்டிருந்தது. உணவருந்தும் மேஜை மீது நைலான் கயிற்றுச் சுருள் ஒன்றும் துருப்பிடித்த வெட்டரிவாள் ஒன்றும் கிடந்தன.

அலிக் மக்காயை அச்சம் தாக்கியது. 'முரியல்..! முரியல்..!’ என்று மனைவியை அழைத்துக்கொண்டே மாடிப்படிகளில் ஏறி ஓடினார். அங்கு முரியல் இல்லை. அவசரம் அவசரமாக இழுப்பறைகளைத் திறந்து பார்த்தார். நகை​களும், பணமும் காணாமல் போயிருந்தன.

அலிக் மக்காய் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ஓடினார். 'என் மனைவியைக் காணவில்லை. சந்தேகப்படும்படியான நடமாட்டம் ஏதாவது இருந்ததா?'

'அப்படி எதுவும் பார்க்கவில்லையே' என்று பதில் வந்தது.

அலிக் போலீஸுக்கு போன் செய்தார்.

பொதுவாக இப்படிக் காணாமல் போகிறவர்கள் பற்றி சற்று ஆறப்போட்டுதான் போலீஸ் விசாரிப்பது வழக்கம். ஏனென்றால், கொலை செய்துவிட்டு, 'மனைவியைக் காணவில்லை’  என்று குற்றவாளிக் கணவனும், 'கணவனைக் காணவில்லை’ என்று குற்றவாளி மனைவியும் காவல் துறையில் புகார்கள் கொடுத்திருந்த அனுப​வமும் அவர்களுக்கு இருந்தது.

அலிக் மக்காய் தன்னுடைய செல்வாக்கை முழுமையாகப் பயன்படுத்தினார். செய்தித்தாளுடன் தொடர்புடையவர் என்பதால்,, போலீஸ் தாமதம் செய்யாமல் வந்தது. அவர் வீட்டிலேயே துப்புத் துலக்கத் தொடங்கியது.  

அன்று இரவு. அதாவது டிசம்பர் 30, இரவு ஒரு மணிக்கு வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. உஷாரான போலீஸ் அதிகாரி ஓர் இணைப்பை எடுத்துக் கொண்டு அதன் இணையான இணைப்பை எடுக்கச் சொல்லி சைகை செய்தார்.

அலிக் மக்காய் போனை எடுத்தார். பேசியவன் குரல் மெலிதாக இருந்தது.

'நான் M-3 மாஃபியா குழுவைச் சேர்ந்தவன். உன் மனைவி எங்களிடம் இருக்கிறாள். புதன்கிழமைக்குள் ஒரு மில்லியன் பவுண்டை தயார் செய்.'

'மில்லியன் பவுண்டுக்கு எங்கே போவேன்?'

'நண்பர்களைக் கேள். உன் முதலாளியைக் கேள். உன் மனைவி எங்களிடம் மாட்டியதற்கு அவர்தானே காரணம்?'

'என்ன சொல்கிறாய்? என் முதலாளியா?'

குற்றம் புரிந்தவர்

'ஆமாம். உண்மையில் நாங்கள் உன் முதலாளி ரூபர்ட் முர்டோக்கின் மனைவி அன்னாவைக் கடத்தி, அவரிடம்தான் பணம் கேட்க நினைத்தோம். அவர்களுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை நீ பயன்படுத்தியதால், ஒரு குழப்பம் நேர்ந்துவிட்டது. அன்னாவுக்கு பதில் உன் மனைவி சிக்கினாள். பணயத்தொகையைத் தயார் செய்.'

'என் மனைவியுடன் நான் பேச வேண்டும்.'

'அவள் உயிருடன்தான் இருக்கிறாள் என்பதற்கு ஆதாரம் நாளைக்கு உனக்குக் கிடைக்கும்' தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மறுநாள், அலிக் மக்காய் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. மக்காயின் கடத்தப்பட்ட மனைவி முரியலிடமிருந்து கடிதம்.

'என் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இங்கு குளிர் நடுக்குகிறது. கேட்கும் பணத்தைக் கொடுத்து, என்னை எப்படியாவது வீட்டுக்கு அழைத்துப் போங்கள். உங்களையும், குழந்தைகளையும், நண்பர்களையுமே நினைத்து வாடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு எதற்கு இந்த அவல நிலைமை?

காதலுடன், முரியல்.’

'இது என் மனைவியின் கையெழுத்துதான்' என்று கண்ணீர் சிந்தினார், அலிக்.

காவலர்கள் விசாரித்தவரை வி3 என்றொரு மாஃபியா குழு இருப்பதாகவே தெரியவில்லை. கேட்ட பணயத் தொகையோ மிக மிக மிக அதிகம்.  

களவுபோன நகைகள் எங்காவது அடமானம் வைக்கப்படுகிறதா, விற்கப்படுகிறதா என்று போலீஸார் மும்முரமாக அத்தனை அடகுக் கடைகளிலும், நகைக் கடைகளிலும் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஒரு முழு வாரம் ஓடியது. ஆனால் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், டென்மார்க்கைச் சேர்ந்த ஜெரார்டு என்பவர் பொதுவாக, பூமிக்கடியில் பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டவல்ல கூடுதல் சக்தி பெற்றிருந்தார் என்று நம்பப்பட்டது. அவரிடம் நண்பர்கள் மூலம் முரியல் எங்கே என்று விசாரித்துப் பார்த்தார், அலிக். லண்டனிலிருந்து 40 மைல் தொலைவில் அவள் இருக்கக்கூடும் என்று வரைபடத்தில் அவர் குறிப்பிட்டார். இந்த யூகங்களை போலீஸ் சீரியஸாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

திடீரென்று கடத்தியவர்களிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. அலிக் கலங்கினார்.

புத்தாண்டு பிறந்தது. உலகே கொண்டாடியது. அலிக்கின் குடும்பத்தினரோ சோகத்தில் தோய்ந்திருந்தனர். அலிக், முரியல் தம்பதியின் மகள் டயானா, அவள் கணவர் ஆகியோர் தொலைக்காட்சியில் தோன்றி கடத்தியவர்களிடம் முரியலை விடுவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்த காட்சி நேயர்களைக் கலங்க வைத்தது.

ஜனவரி முதல் வாரத்தில் முரியல் மக்காயின் புகைப்படம் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டது. இன்டர்போல் மூலம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற எல்லா நாடுகளின் விமானத்தளங்களும் கண்காணிக்கப்பட்டன.

எந்த முன்னேற்றமும் இன்றி, நாட்கள் நகர்ந்தன. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வடக்கு லண்டனில் அஞ்சலில் சேர்க்கப்பட்ட ஒரு கடிதம் வந்து சேர்ந்தது.

'டார்லிங்.

என் மீது உங்களுக்குக் கருணை இல்லையா? மறுபடி என்னை உயிருடன் பார்க்க வேண்டுமென்றால், போலீஸை விலகி இருக்கச் சொல்லுங்கள். பணயத்தொகையை விரைவில் ஏற்பாடு செய்து, தயவுசெய்து என்னை உயிருடன் காப்பாற்றுங்கள்.

முரியல்.’

அந்தக் கடிதத்துடன் ஒரு மில்லியன் பவுண்டு தொகை கேட்டு மறுபடியும் நினைவூட்டல்.

அடுத்த நாள் விட்டுவிட்டு, மூன்று முறை தொலைபேசி அழைப்பு வந்தது.

'மாஃபியாவின் வி3 குழுவைப் பற்றி நீ சாதாரணமாக நினைத்துவிட்டாய்.'

'என் மனைவி உயிருடன் இருக்கிறாள் என்று தெரியாமல் பணத்தை எப்படிக் கொடுப்பேன்?'

'நாளைக்கு அஞ்சலில் பார்' தொடர்பு அறுந்தது.

மறுநாள் அஞ்சல் வந்தது. காணாமல்போன தினத்தில், முரியல் அணிந்திருந்த உடைகளிலிருந்து சில பகுதிகள் வெட்டியெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தன. வழக்கில் கூடுதலாக நேர்ந்த ஒரே முன்னேற்றம் அந்தக் கவரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டாம்ப்பிலிருந்து மீட்கப்பட்ட கட்டை விரல் ரேகைதான். அது, முரியல் மக்காயின் கைரேகை அல்ல.

'மேலும் தாமதம் செய்தால், என் மனைவி உயிருடன் கிடைப்பாளா என்று பயமாயிருக்கிறது'  அலிக் போலீஸிடம் தன் தவிப்பைத் தெரிவித்தார்.

பணத்தைக் கொடுப்பதாகச் சொன்னால் ஒழிய, கடத்தியவர்கள் மீண்டும் தொடர்புகொள்ள மாட்டார்கள் என காவல் துறையினர் உணர்ந்தனர்.

பிப்ரவரி 1. இந்த முறை, அலிக்  முரியல் தம்பதியின் மகன் இயானுக்கு அழைப்பு வந்தது.

'மொத்தமாகக் கொடுக்க முடியவில்லை என்றால், ஐந்து ஐந்து லட்சம் பவுண்டுகளாகத் தரலாம். முதல் தவணையை நீ எங்கே வந்து தர வேண்டும் என்று சொல்கிறோம். குறித்துக்கொள்..'

இதற்காகவே காத்திருந்த போலீஸ் பரபரப்பானது. அவசரமாகத் திட்டம் தீட்டப்பட்டது. இயானுக்கு பதில், அவனிடத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் போவது என்று முடிவு செய்யப்பட்டது.

'காவலர் போனால், என் மனைவி உயிருடன் கிடைப்பாளா?' என்று அலிக் பதற்றத்துடன் கேட்டார்.

'உங்கள் மனைவி முரியலிடமிருந்து வந்த கடிதங்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட பக்கங்கள் என்று கண்டுபிடித்திருக்கிறோம். கடத்தப்பட்ட தினத்திலேயே அவளை மிரட்டி அடுத்தடுத்து இந்தக் கடிதங்களை எழுதவைத்து வாங்கப்பட்டிருக்கலாம். அவளைக் கடத்தியவர்கள் அவள் உயிருடன் இருப்பதாக நம்மை நம்ப வைக்க, ஒவ்வொரு கடிதமாக அனுப்பிக்கொண்டிருக்கலாம். முரியலின் குரலைக் கடைசி வரை நீங்களோ, காவல் துறையினரோ கேட்க இயலவில்லை என்பதை மறக்காதீர்கள். காவல் துறையுடன் நீங்கள் ஒத்துழைத்தால்தான் குற்றவாளிகளைப் பிடிக்க முடியும்' என்று அதிகாரிகள் கூறினர்.

அலிக் வேறு வழியின்றி தலையசைத்தார்.

ஐந்து லட்சம் பவுண்டு என்பது மாபெரும் தொகை. போலீஸ் ஒரு தந்திரம் செய்தது. சாதாரண காகிதங்களை பவுண்டு கரன்ஸியின் அதே அளவுக்கு வெட்டி, அடுக்கடுக்காகக் கட்டினர். அதைப் பெட்டியில் அடைத்தனர்.

300 பவுண்டுகள் மட்டுமே செல்லும் காசு. மற்றதெல்லாம் வெறும் காகிதக் குப்பை. இயானுக்கு பதிலாக காவலர் ஒருவர் பணப்பெட்டியுடன் சென்றார்.

போனில் பேசியவன் குறிப்பிட்டபடி கிராஸ்ரோடில் பணப்பெட்டியை வைத்துவிட்டு, காவலர் ஒளிந்து காத்திருந்தார். ஆனால், கடத்தியவர்கள் இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார்கள். பெட்டியை எடுக்க அவர்கள் கடைசிவரை வரவே இல்லை. காவலர் ஏமாற்றத்துடன் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு திரும்பினார்.

முரியல் என்னதான் ஆனாள்? அவளைக் கடத்தியவர்கள் மாஃபியாவைச் சேர்ந்தவர்கள் இல்லையென்றால், உண்மையில் அவர்கள் யார்?

அடுத்த இதழில் பார்ப்போம்.

- குற்றம் தொடரும்