ரோல்ஸ் ராய்ஸ் ரகளை..!

முரியலுக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்வதற்கு முன், அவளைக் கடத்தியவர்கள் பற்றி பார்ப்போம்.
ஆர்தர் ஹோசின், ஓர் ஏழைத் தையல்காரனுக்குப் பிறந்தவன். பெரும் செல்வந்தனாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற கனவு, மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து அவனை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தது. தன்னைவிட வயதில் மூத்த எல்ஸா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். பெரும் தொகையைக் கடனாகப் பெற்று, ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ரூக்ஸ் ஃபார்ம் என்ற இடத்தில் ஒரு பண்ணை வீட்டைச் சொந்தமாக்கிக்கொண்டான். கோழிகளையும் பன்றிகளையும் வளர்த்து விற்பதிலும், அரை ட்ரவுசர் தைத்துக் கொடுத்து ஈட்டுவதிலும் மட்டும் தன் பணக்காரக் கனவுகள் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை என்று புரிந்தது. 12 வயது இளையவனான நிசாமுதீன் ஹோசின், தன் அண்ணன் குடும்பத்துடன் வாழ அங்கே வந்தான்.
சகோதரர்கள் இருவரும் ஒருநாள் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றைப் பார்க்க நேரிட்டது. பிரபல செய்தித்தாளின் முதலாளி ரூபர்ட் முர்டோக், அவர் மனைவி அன்னா இவர்களுடனான ஒரு நேர்காணல் நிகழ்ச்சி அது.
''கோடிகளுக்கு அதிபரான இவர்தான் நம் கனவை நிறைவேற்றப் போகிறார்' என்றான் ஆர்தர்.
அடுத்த நாளே அவருடைய அலுவலகத்துக்கு அருகே ஒளிந்திருந்து நோட்டமிட்டான். பளபளப்பான ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏறி அவர் புறப்படுவதை கவனித்தான்.

காரின் எண்ணைக் குறித்துக்கொண்ட நிசாமுதீன் பதிவாளர் அலுவலகத்துக்கு போன் செய்தான்.
''ஷெரீஃபின் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன். ஒரு கார் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சொந்தக்காரர் யார் என்று தெரிய வேண்டும்...' என்று காரின் எண்ணைச் சொன்னான்.
ரூபர்ட்டின் பெயர் சொல்லப்பட்டது. அடுத்த சில நாட்கள் கழித்து, அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரைத் தொடர்ந்து சென்று அது நிறுத்தப்படும் வீட்டைக் கவனித்தார்கள் சகோதரர்கள்.
திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அவர்கள் குறிவைத்த ரூபர்ட்டும், அன்னாவும் ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறையில் சென்றுவிட, அந்த காரை துணைத் தலைவர் பயன்படுத்தியதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. திட்டமிட்டபடி கடத்தல் நடந்தது. மாட்டியவள் முரியல்.
கடத்தியவர்களிடமிருந்து இரண்டாம் முறை பணத்தை எங்கே வைக்க வேண்டும் என்ற அழைப்பு வந்தது.
'சென்றமுறை போலீஸ் காத்திருந்ததை அறிவோம். இந்த முறையாவது ஒழுங்காகப் பணம் கொடுத்து உன் மனைவியை மீட்டுக்கொள்...'
இந்த முறையும், பணம் வைக்கப்பட்ட இடத்தில் தற்செயலாகத் தேவையற்ற கூட்டம் சேர்ந்துவிட்டது. கடத்தியவர்கள் பணத்தை நெருங்கவே மிரண்டு திரும்பிவிட்டனர். காவல் துறையினர் காத்திருந்து ஏமாந்தனர். அலிக் நம்பிக்கையிழந்தார். ஆனால், மீண்டும் போன் வந்தது.
'இதுவே இறுதி எச்சரிக்கை. இந்தமுறை நாங்கள் சொல்லும் இடத்துக்கு பணத்துடன் உன்னுடன் உன் மகளும் வர வேண்டும்' என்று போன் குரல் மிரட்டியது. மகளையும் ஆபத்துக்குள்ளாக்குவதா என்று அறியாமல் கலங்கினார்.
'உங்கள் மனைவி உயிருடன் இருக்கிறாள் என்பதற்கு கடத்தியவர்கள் எந்த ஆதாரமும் தரவில்லை. , உங்கள் இருவர் உயிரையும் பணயம் வைக்க எங்களுக்கு விருப்பம் இல்லை...' என்று அதிகாரிகள் தீர்மானமாகச் சொல்லிவிட்டனர்.
'பின் என்னதான் செய்வது..?'
அலிக் மக்காய் மற்றும் அவருடைய மகள் போன்று காவல் துறையிலிருந்து அதிகாரிகள் இரண்டு பெட்டிகளை எடுத்துக்கொண்டு தயாரானார்கள்.
குறிப்பிட்ட பொதுத் தொலைபேசி அருகில் அவர்கள் காத்திருந்தபோது, அங்கிருந்து பெத்னால் க்ரீன் சாலைக்கு வரச்சொல்லி அடுத்த உத்தரவு வந்தது. அங்கே போனதும், எப்பிங் வந்து சேர் என்றார்கள். எப்பிங் சென்றடைந்ததும், 'ஒரு டாக்ஸியைப் பிடித்து, பிஷப்ஸ் ஸ்டோர்ட்ஃபோர்ட் வா. அங்கிருக்கும் கேரேஜ் வாசலில், ஒரு மினி வேன் நிற்கும். அங்கே பெட்டிகளை வைத்துவிட்டு நிற்காமல் போய்விடு' என்று அடுத்த உத்தரவு வந்தது.
போலீஸ் மோப்பம் பிடித்துவந்து விடக்கூடாது என்று கடத்தியவர்கள் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், அலிக் மக்காய், அவர் மகள் இருவரைப்போல உடை அணிந்து எல்லா இடங்களுக்கும் மாறி மாறிப் பயணம் செய்துகொண்டிருந்தது காவலர்கள்தாம் என்று கடத்தியவர்களுக்குத் தெரியவில்லை.
காவல் அதிகாரிகள் குறிப்பிட்ட மினிவேன் அருகில் அந்தப் பெட்டிகளை வைத்துவிட்டு நிற்காமல் போயினர். அடுத்தத் திருப்பத்தில், அந்த வாகனத்திலிருந்து ரகசியமாக, பிளாண்ட் என்று ஓர் அதிகாரி உருண்டு இறங்கினார்.
அப்போது நேரம் இரவு எட்டு மணி.
பெட்டிகளை எடுத்துப் போக யார் வருகிறார்கள் என்று பார்த்துக்கொண்டு, பிளாண்ட் ஒளிந்திருந்தார். இரவு பத்தரை மணி ஆனது. அதுவரை யாரும் பெட்டியை எடுக்க வரவில்லை.
ஆனால், போலீஸ் சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அந்த வழியே போய்க்கொண்டிருந்த ஒரு தம்பதி, பெட்டிகள் அநாதரவாக அங்கே கிடப்பதைப் பார்த்துக் குழம்பினார்கள். உள்ளூர் போலீஸை அழைத்து வந்தார்கள். விவரம் தெரியாமல், அவர்கள் அந்தப் பெட்டிகளைக் கைப்பற்றி, தங்கள் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்படியாக, இரவு பதினொன்றரை மணிக்கு மேல், அந்தத் திட்டமும் வீணானது.
ஆனால், ஒரு நீல நிற வோல்வோ கார், அந்த இடைப்பட்ட நேரத்தில் மூன்று, நான்கு முறை மினிவேனை நெருங்குவதும், தயங்குவதும், வேகமெடுப்பதுமாக வந்துபோனதை பிளாண்ட் கவனித்து, அந்த காரின் பதிவெண்ணைக் குறித்து வைத்திருந்தார்.
காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்தபோது, ஆர்தர் ஹோசினின் முகவரி கிடைத்தது. ஆர்தரின் ரூக் பண்ணை வீடு. காவல் துறையினர் கதவைத் தட்டியதும், ஆர்தர் ஹோசினின் மனைவி எல்ஸா, வெளிப்பட்டாள்.
''இந்த வீட்டைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறோம்''
''ஏழைகள் என்றால் உங்களுக்கு இளக்காரம்'' என்று எல்ஸா சற்றுக் கோபப்பட்டாள். வீட்டிலிருந்த ஆர்தர் சற்றும் கவலைப்படவில்லை.
எந்தத் தடயமும் கிடைக்காமல் போலீஸ் சோர்ந்தனர். இடையூறுக்கு மன்னிப்பு கேட்டு கிளம்பவிருந்த கடைசி தருணத்தில், மாடியறையிலிருந்து ஓர் இளம் டிடெக்டிவ், ''இதைப் பாருங்கள்'' என்று கூச்சலிட்டார்.
அவர் கொண்டுவந்தது, ஒரு நோட்டுப் புத்தகம். அதிலிருந்து சில தாள்கள் கிழிக்கப்பட்டிருந்தன. அதே தாள்கள்தான் முரியலிடமிருந்து வந்த கடிதங்கள் எழுதப் பயன்பட்டிருந்தன. மேலாக இருந்த தாளில் கரும்பொடி தூவியபோது, முந்தின தாளில் முரியல் எழுதிய எழுத்துகளின் அச்சு கிடைத்தது. மேலும், ஆர்தர் ஹோசினின் கைவிரல் ரேகை, அஞ்சல்தலையில் கண்டெடுக்கப்பட்ட ரேகையுடன் ஒத்துப்போனது.
சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். ''முரியலை என்ன செய்தாய்?'' என்று துருவித் துருவிக் கேட்டபோதும், சொல்ல மறுத்துவிட்டான் ஆர்தர்.
இளையவன் நிசாமுதீனோ, விசாரணைக்கு வந்த கணத்திலிருந்து மிக நடுங்கிப் போயிருந்தான்.
'இந்த வெட்டரிவாளை உனக்கு நினைவிருக்கிறதா..?' என்று மக்காய் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதத்தைக் காட்டியபோது, அவன் உடல் உதறியது.
''எனக்கு எதுவும் தெரியாது.. எனக்கு எதுவும் தெரியாது'' என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதான். வழக்கு சூடுபிடித்தது.
'வீட்டுக்கு வந்த போலீஸார், என்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள்..' என்று ஆர்தரின் மனைவி எல்ஸா சொன்னபோது, ''அவர்கள் ஒன்றும் உன் வீட்டுக்கு விருந்துக்கு வரவில்லை..' என்று நீதிபதி கோபமாகச் சொன்னார்.
''பாருங்கள், நீதிபதி இப்போதே ஒரு பக்கம் சாய்ந்துவிட்டார். எங்களைக் குற்றவாளிகளாகவே பார்க்கிறார். நாங்கள் முரியல் மக்காயைக் கொல்லவில்லை. கொன்றதாகச் சொன்னால், அந்த உடலைக் காட்டுங்கள்'' என்றான் ஆர்தர்.
ஹோசினுக்காக ஆஜரான வழக்கறிஞரும் அதையே முக்கிய வாதமாய் முன்வைத்தார்.
காவலர்கள் பண்ணை பூமியில் தோண்டிப் பார்த்து உடல் கிடைக்காமல் தோற்றனர். இடையில் அந்த வீட்டைப் பரிசோதனை செய்தபோது, மக்காய் வீட்டில் கண்டெடுத்தது போலவே, வேறொரு வெட்டரிவாள் அங்கு கண்டெடுக்கப்பட்டது.
'இது ஏன் இங்கு வந்தது..?'
'ஒரு கன்றுக்குட்டியை வெட்டுவதற்காகக் கொண்டுவந்தேன்..' என்றான், ஆர்தர் கூலாக.
அவன் வெட்டிப் போட்டது செத்துப்போன கன்றுக்குட்டியையா.. அல்லது கடத்திப்போன முரியலையா என்று அவர்கள் கூடுதலாகக் குழம்பினார்கள். ஆர்தர் ஹோசினின் அலட்சிய பதில், அவனுக்கு எதிராகவே அவர்களுடைய உணர்ச்சிகளைத் திருப்பிவிட்டது. முரியலின் உடல் கிடைக்கவில்லை என்பதை முன்வைத்து ஆர்தரை விடுவிக்க ஜூரர்கள் தயாராயில்லை.
சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுத் தீர்ப்பானது. ஆர்தருக்குக் கூடுதலாக 15 வருடங்கள் கடும் தண்டனை.
'என் மனைவியின் உடல் எங்கே என்று சொல்லுங்கள்..' என்று அலிக் மக்காய் பல முறை அவர்களிடம் கெஞ்சிக் கேட்டார். அவர்கள் பதில் சொல்லவில்லை.
சிறை நண்பனிடம், 'முரியல் உடலை ஏரியில் வீசிவிட்டேன்..' என்று ஆர்தர் சொன்னதாக அறிந்ததும், காவல் துறையினர் அந்த ஏரித் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிக்கூடத் தேடினர்.
கடைசிவரை முரியலின் உடல் கண்டெடுக்கப்படவில்லை.
முரியல் மக்காய் எப்போது கொல்லப்பட்டாள்? எப்படிக் கொல்லப்பட்டாள்? அவளுடைய உடல் என்ன செய்யப்பட்டது..? விடைகள், ஆர்தர் மற்றும் நிசாமுதீன் ஹோசினுக்கு மட்டுமே தெரியும்.
அலிக் மக்காய், தன் வேதனையை பின்வருமாறு குறிப்பிட்டார்.
''மரணத்தை எதிர்கொள்ள எல்லோரும் தயாராகத்தான் இருக்க வேண்டும். அதை ஏற்று வாழ்க்கையை நடத்திச் செல்லத்தான் வேண்டும். உண்மையில் முரியல் சந்தித்த கொடூரமான அந்தக் கடைசிக் கணங்களைப் பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. முரியல் மீண்டும் எங்கள் வீட்டுக்குத் திரும்பி வரப்போவதில்லை என்று என் உள்ளுணர்வு சொன்னாலும், அவள் உடலைக் கண்ணாரக் காணாமல், அவள் இறந்துவிட்டாள் என்று மனம் ஏற்க மறுக்கிறது. இது சாகும்வரை என்னை உறுத்திக்கொண்டுதான் இருக்கும்...''
- குற்றம் தொடரும்