புலியிடம் சிக்கிய மான்!

ஹரியானா. சண்டிகரை ஒட்டி பஞ்ச்குளா பகுதி.
1990, ஆகஸ்ட். இளமையின் வாயிற்படியில் ருச்சிகா. 14 வயது. 10-ம் வகுப்பு. தன் நெருங்கிய தோழி ஆராதனாவுடன் டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள். வக்கிரமான இரண்டு கண்கள் அந்த இளம்பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்தக் கண்களுக்கு உரியவர் ரத்தோர். 49 வயதான ஐ.பி.எஸ் அதிகாரி. உள்ளூர் டென்னிஸ் சங்கத்தின் செயலதிகாரி.
ருச்சிகாவின் வீடு தேடிவந்தார், ரத்தோர். அவளுடைய தந்தை கிரோத்ராவிடம் தேனொழுகப் பேசினார். 'ருச்சிகாவின் டென்னிஸ் திறமையைப் பட்டை தீட்டினால், மாநில அளவில் விளையாட முடியும். நாளைக்கு வந்து சந்திக்கச் சொல்லுங்கள்.'
மனமகிழ்ந்து சம்மதித்தார், கிரோத்ரா.
ஆகஸ்ட் 12, 1990. ஞாயிற்றுக்கிழமை. ருச்சிகா, தன் இணைபிரியா தோழி ஆராதனாவையும் அழைத்துக் கொண்டாள்.
ரத்தோரின் வீட்டு கேரேஜ்தான், டென்னிஸ் விளையாட்டுச் சங்கத்தின் அலுவலகம். ருச்சிகா மட்டும் தனியாக வருவாள் என்று எதிர்பார்த்திருந்த ரத்தோருக்கு ஏமாற்றம்.
'ஆராதனா, மைதானத்துக்குப் போ. டென்னிஸ் கோச் தாமஸைக் கையோடு அழைத்து வா' என்று தோழியைத் துரத்தினார்.
மைதானத்தை நோக்கி ஓடும் வழியில் பெண்களுக்கே உரிய உள்ளுணர்வு ஆராதனாவை நிறுத்தியது. ருச்சிகாவைத் தனியாக விட்டுவிட்டு வந்ததை எண்ணி அவளுக்குக் கலக்கம். மறுபடியும் ரத்தோரின் வீட்டுக்கு ஓடி வந்தாள். அங்கு அவள் பார்த்த காட்சி பதைக்க வைத்தது.

ருச்சிகாவின் ஒரு கையை ரத்தோரின் ஒரு கை பற்றியிருந்தது. இன்னொரு கை அவளுடைய இடுப்பை வளைத்து, அவளை முன்னால் இழுத்து, அவருடைய உடலுடன் அழுத்திக்கொண்டிருந்தது. ரத்தோரின் போலீஸ் பிடியிலிருந்து விடுபட ருச்சிகா திமிறித் தோற்றுக்கொண்டிருந்தாள். இத்தனைக்கும், ரத்தோரின் மகள் ப்ரியாஞ்சலி ருச்சிகாவின் வகுப்புத்தோழி.
ஆராதனாவைப் பார்த்ததும் ரத்தோருக்கு அதிர்ச்சி.
'ஏய், கோச் இல்லாமல் ஏன் வந்தாய்?' என்று இரைந்தார்.
அவருடைய கவனம் சிதறிய கண நேரத்தில் ருச்சிகா தன் கையை உருவிக்கொண்டாள். அவரைப் பிடித்துப் பின்னால் தள்ளினாள். இரண்டு பெண்களும் அந்த அறையிலிருந்து தப்பித்து வெளியே ஓடினார்கள்.
ருச்சிகா பயத்தில் அழ ஆரம்பித்தாள். 'வீட்டில் சொன்னால், டென்னிஸ் ஆட அனுப்பவே மாட்டார்களே!'
'யாரிடமும் சொல்ல வேண்டாம். ரத்தோர் இல்லாத நேரமாகப் பார்த்து விளையாடப் போவோம்.'
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் தொந்தரவின்றிப் போயின. ஒரு மாலை நேரத்தில் பந்துகளைப் பொறுக்கிப் போடும் சிறுவன் பட்லூ ருச்சிகாவிடம் வந்தான். 'ரத்தோர் சார் கூப்பிடறார்' என்றான்.
ருச்சிகாவும் ஆராதனாவும் அந்த இடத்தைவிட்டு உடனடியாக விலகி ஓடினர்.
ருச்சிகாவுக்குத் தாயில்லை. ஒரே ஒரு வயது மூத்தவனான அண்ணன் ஆஷுவிடமோ, அப்பாவிடமோ இதை எப்படிச் சொல்வது?
'என் அம்மாவிடம் சொல்வோம்' என்றாள் ஆராதனா.
ஆராதனாவின் தாய் மதுவிடம் ருச்சிகா ரகசியமான குரலில் தனக்கு நேர்ந்ததை விசும்பலுடன் விவரித்தாள். ஆராதனாவின் தந்தை ஆனந்த் பிரகாஷிடமும் விஷயம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
தாயில்லாத பெண் என்பதால், ருச்சிகாவின் மீது ஆராதனாவின் பெற்றோருக்கு அன்பு அதிகம். அவளுடைய கண்ணீரைத் துடைத்தார், ஆனந்த் பிரகாஷ். உடனடியாக ருச்சிகாவின் தந்தையைச் சந்தித்தார்.
''நம்மைப்போல் டீன் ஏஜ் மகள்களை வைத்திருக்கும் பல குடும்பங்கள் இங்குள்ளன. ருச்சிகாவுக்கு நேர்ந்ததுபோல் இன்னொரு பெண்ணுக்கு நேராமல் இருக்க வேண்டும். மேலிடத்தில் புகார் கொடுப்போம்'' என்றார்.
இருவருமாக ஹரியானாவின் தலைமைச் செயலதிகாரியைச் சந்தித்தனர். நடந்ததைக் கேட்டுக்கொண்ட அவர், ''உள் துறை அமைச்சரிடம் பேசுகிறேன்'' என்றார்.
உள் துறை அமைச்சர், டி.ஜி.பி ராம் ரக்ஷ்பால் சிங்கை இதுகுறித்து விசாரிக்கச் சொன்னார்.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும், ரத்தோர் கொதித்துப் போனார். ரத்தோரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளூர் விஷமிகள் சிலர் டி.ஜி.பியின் அலுவலகம் மற்றும் வீட்டின் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 3, 1990. ''ரத்தோர் குற்றம் செய்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம்'' என்று, தலைமைச் செயலதிகாரியிடம், டி.ஜி.பி தன் பரிந்துரையைச் சமர்ப்பித்தார். பரிந்துரை உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அமைச்சர் அதை அங்கேயே புதைத்தார்.
ரத்தோரை எதிர்ப்பது, பாம்புப் புற்றுக்குள் கைவிடுவதுபோல் என்று பாவப்பட்ட ருச்சிகாவின் தந்தையான கிரோத்ரா விரைவிலேயே உணர்ந்தார்.
ரத்தோருக்கு நெருக்கமானவர் ஜக்தீத் சிங் டிக்கா. முன்னாள் எம்.எல்.ஏவான அவருடைய அரசியல் கூலிப்படை ருச்சிகாவின் வீட்டின் முன் கூடி, புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி, அசிங்கமான கோஷங்களை எழுப்பியது.
செப்டம்பர் 20, 1990. ருச்சிகாவை தலைமை ஆசிரியை செபாஸ்டினா தன் அறைக்கு அழைத்தார்.
''நீ ஏன் இன்னும் ஃபீஸ் கட்டவில்லை?''
''பலமுறை ஃபீஸ் கட்ட முயன்றேன். என்னிடம் வாங்கிக்கொள்ள பள்ளிக்கூட ஆபீஸ் மறுத்துவிட்டது'' என்று கலங்கினாள், ருச்சிகா.
''அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்னை டிஸ்மிஸ் செய்கிறேன்.'' உரிய நேரத்தில் பணம் கட்டப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி, ருச்சிகா வெளியே துரத்தப்பட்டாள்.
தன் வயதொத்த ருச்சிகாவிடம், தன் தந்தை தகாத முறையில் நடந்துகொண்டதால், வகுப்பில் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் ரத்தோரின் மகள் ப்ரியாஞ்சலி சங்கடப்பட்டதால் வந்த வினை இது.
பள்ளியிலிருந்து துரத்தப்பட்டபின் ருச்சிகாவின் வீட்டு வாசலில் நின்று ரத்தோரின் ஆட்கள் பேரிரைச்சல் போட்டனர். ருச்சிகா குன்றிப்போனாள். வீட்டைவிட்டு வெளியே வராமல், வீட்டுக்குள்ளேயே தன்னைச் சிறைப்படுத்திக்கொண்டாள். எப்போதாவது கடைகளுக்கு அவள் புறப்பட்டால், ரத்தோரின் ஆட்கள் அவளைத் தொடர்ந்தனர். கேவலமான வார்த்தைகளை வீசி, வம்புக்கு இழுத்தனர்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, ரத்தோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (திமிஸி) பதிவு செய்யப்பட வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியது, அந்தப் பரிந்துரை அலட்சியம் செய்யப்பட்டது. துறை வாரியான விசாரணை நடத்தினால் போதும் என ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. குற்றம் செய்யும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பெருகியிருந்ததால், காவல் துறையின் உயர் பதவியில் இருந்த ரத்தோரின் நட்பும், ஒத்துழைப்பும் அவர்களுக்கும் தேவைப்பட்டன.
ஹுக்கம் சிங், ஓம் பிரகாஷ் சௌதாலா, பஜன்லால் என்று யார் ஹரியானாவின் முதல்வராக வந்தாலும், அவர்களுடைய முதன்மையான ஆதரவு ரத்தோருக்கு இருந்தது.
1993, செப்டம்பர் 23. ருச்சிகாவின் அண்ணன் ஆஷு, வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்பில் இழுத்துச் செல்லப்பட்டான். குற்றப்புலனாய்வுப் பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்தத், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெய் நாராயண் இருவரும் அவனைப் பந்தாடினர். ஆஷுவின் கைகளும், கால்களும் பின்புறமாகக் கட்டப்பட்டன.
பின், ரத்தோர் அங்கு வந்தார். ''உன் குடும்பத்துக்கு புத்தியே வராதா..? புகாரை வாபஸ் வாங்க மாட்டீர்களா?'' என்று ஆஷுவை ஓங்கி அறைந்தார். படுக்க வைக்கப்பட்டு, நான்கு கான்ஸ்டபிள்கள் அவனை மிதித்தனர். ''இவனிடம் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்குங்கள்'' என்றார், ரத்தோர்.
சித்ரவதை தாங்காமல் 18 வயதே ஆன ஆஷு கையெழுத்திட்ட வெற்றுத் தாள்கள் பிற்பாடு அவனுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. வலியில் அவன் அலறியபோது ரத்தோர் வக்கிரமாகச் சிரித்தார். ''இந்த அலறலை உன் தங்கை கேட்க வேண்டுமே'' என்றார். ஆஷுவைக் கைவிலங்கிட்டு ருச்சிகாவின் தெருவில் அக்கம் பக்கத்தினர் பார்க்கும்படி தரதரவென்று இழுத்து வந்தார் ரத்தோர். அவன் வீட்டு முன் நிறுத்தினார். ருச்சிகாவின் கண்ணெதிரே ஆஷுவை இரக்கமின்றி நையப் புடைத்தார். ருச்சிகா கதறி அழுதாள்.
''இதெல்லாம் தொடரக்கூடாது என்றால் உடனடியாகப் புகாரை வாபஸ் வாங்கு.இல்லையென்றால், நாளைக்கு உன் அப்பாவுக்கும், உனக்கும் இதுதான் கதி'' என்று ரத்தோர் மிரட்டினார்.
அடுத்து, வங்கி மேலாளராக இருந்த ருச்சிகாவின் தந்தை கிரோத்ரா மீது பல ஊழல் வழக்குகள் போடப்பட்டன. ரத்தோரின் செல்வாக்கால், வங்கிப் பணியிலிருந்து அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ருச்சிகாவின் தோழி ஆராதனாவுக்கு 'ஏய், என்னடீ..? ஒழுங்கா வாழப் பிரியமில்லையா..?' என்று அடிக்கடி மிரட்டல் போன் வந்தது. அவளுடைய தந்தை ஆனந்த் பிரகாஷ், ஹரியானா வேளாண்மைத் துறையில் பிரதான பொறியாளராக இருந்தவர். ரத்தோரின் செல்வாக்கால் அவர் மீது புகார்கள் பதியப்பட்டன. வேலையிலிருந்து அவரும் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், கஜீந்தர் சிங் என்று கார்களைத் திருடுபவன் ஒருவன் பிடிபட்டான்.
''உன்னை அதிக தண்டனையில்லாமல் விடுவிக்கிறேன். ஆனால், நான் சொல்பவனை உன்னுடைய கூட்டாளி என்று காட்ட வேண்டும்'' என்றார், ரத்தோர்.
''சரி, சாஹேப்.''
சித்ரவதைசெய்து, ஆஷுவிடம் கையெழுத்து வாங்கப்பட்ட வெற்றுத் தாள்களில், 11 கார்களைத் திருடிய கூட்டாளி என்று அவன் வாக்குமூலம் கொடுத்ததாக எழுதப்பட்டது.
1993, நவம்பர், 11. மார்க்கெட் போயிருந்த இடத்தில், ருச்சிகாவின் அண்ணன் ஆஷுவைக் காவலர்கள் அள்ளிச்சென்றனர். அவன் காவல் நிலையச் சிறையில் அடைக்கப்பட்டான். காரணமில்லாமல் சித்ரவதை செய்யப்பட்டே அவனுடைய பதின்மப் பருவம் கழியலாயிற்று.
உண்மைக் குற்றவாளி கஜீந்தர் சிங் காவல் துறையின் உதவியுடன் தலைமறைவாகிவிட்டான்.
17 வயதில், ருச்சிகாவின் சின்னஞ்சிறு சிறகுகள் வெட்டப்பட்டிருந்தன. இளமையின் சுதந்திரத்தை ருசிபார்க்க முடியாமல், ஒடுங்கிக்கிடந்த ருச்சிகா இந்த நேரத்தில் ஒரு முக்கிய முடிவெடுத்தாள்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
- குற்றம் தொடரும்