மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

மிதக்கும் கப்பல், குவியும் பிணங்கள்..!ஓவியம்: பாரதிராஜா

குற்றம் புரிந்தவர்

ஜூலை மாதம். 1896. 13-ம் தேதி நள்ளிரவு.

நட்ட நடுக்கடலில், பயங்கரமான கடும் புயலில் சிக்கித்  தத்தளித்துக் கொண்டிருந்தது ஹெர்பெர்ட் ஃபுல்லர் என்னும் அந்தக் கப்பல்.

ஹெர்பெர்ட் ஃபுல்லர் ஐந்து நாட்களுக்கு முன்புதான் மரக்கட்டைகளையும், நூற்றுக்கணக்கான பயணிகளையும் சுமந்துகொண்டு அமெரிக்காவின் பாஸ்டன் துறைமுகத்திலிருந்து அர்ஜென்டினாவை நோக்கிப் புறப்பட்டிருந்தது. கடலில் சுமார் 1,200 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்திருந்தபோதுதான் பயங்கரமான கடல் கொந்தளிப்பில் அது சிக்கிக்கொண்டது.

ஆர்ப்பரிக்கும் அலைகளின் இரைச்சல், சூறாவளிக் காற்றின் ஓலம் ஆகியவற்றின் இடையில் எந்த வினாடியில், என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் அரைகுறைத் தூக்கத்தில் தவித்துக்கொண்டிருந்தனர் பயணிகள்.

திடீரென்று 'உர்ர்ரும்...’ என்ற சுழற்காற்றின் ஓசையை ஊடுருவிக்கொண்டு 'ஓ...’ என்ற ஓர் அலறல் ஒலித்தது. ஒரு பெண்ணின் அலறல்.

லெஸ்டர் மாங்க்ஸ் என்ற இளம் பயணி அந்த அலறலைக் கேட்டான். திடுக்கிட்டு, படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். மீண்டும் அலறல் கேட்டது. கப்பல் கேப்டனின் அறை இருந்த திசையில் இருந்துதான் குரல் வந்தது.

லெஸ்டர் அந்த அவசரத்திலும் கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டான். அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.

சரம், சரமாக மழை. பேய்க்காற்று. கப்பலின் ஊசலாட்டம். அவற்றின் ஊடே கேப்டனின் அறையை நோக்கி லெஸ்டர் மாங்க்ஸ் தடுமாறியபடி நடந்தான்.

கப்பல் தலைவனின் அறைக்கதவு திறந்து கிடந்தது. அறைக்குள்  மெதுவாக அடியெடுத்து வைத்தான். பளீரென்ற மின்னல் வெட்டில் அந்தக் காட்சியைக் கண்டான். அவனது கண்கள் அச்சத்தில் விரிந்தன.

கட்டில் கவிழ்ந்து கிடந்தது. அருகே தரையில், கப்பல் தலைவன் சார்லஸ் நாஷ் மண்டை உடைபட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

லெஸ்டர் மாங்க்ஸ் பயத்தில் உறைந்தான். இந்தக் காட்சியைப் பார்த்து விட்டுதான் ஏதோ ஒரு பெண் அலறியிருக்கிறாள். அவள் எங்கே? துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தபடி பார்வையைச் செலுத்தினான்.

அடுத்த மின்னல் ஒளியில் அறை மூலையில், கப்பல் கேப்டனின் மனைவியும், அதேபோல் மண்டை உடைபட்டு ரத்தம் வழிய, வழியப் பிணமாகக் கிடந்தது தெரிந்தது.

லெஸ்டர் வெளியே ஓடி வந்தான். மேல்தளத்தில் பணியில் இருந்த முதல் துணைக் கேப்டன் தாமஸ் பிராமிடம், ''கேப்டனும், அவர் மனைவியும் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார்கள்'' என்று மூச்சிரைக்க அதிர்ச்சித் தகவலைக் கூறினான். அவனை இழுத்துக்கொண்டு ஓடிவந்து பிணங்களைக் காட்டினான்.

குற்றம் புரிந்தவர்

''தாமஸ், கொலைகாரன் கப்பலில்தான் இருக்கிறான். அவன் மேலும் விபரீதமாக ஏதாவது செய்வதற்குள் உடனே துணை கேப்டன் அகஸ்ட் ப்ளோம்பெர்க்கிடம் நடந்ததைச் சொல்லி உடனே அவனை எச்சரியுங்கள்'' என்று படபடத்தான், லெஸ்டர் மாங்க்ஸ்.

ஆனால், தாமஸ் பிராம், 'அகஸ்ட் ஒரு சதிகாரன். எனக்கு எதிராக மற்றவர்களைத் தூண்டிவிடுபவன்' என்று கூறி அவனது அறைக்குச் செல்வதைத் தவிர்த்தான்.

உடனே இரண்டாவது துணை கேப்டனிடம் தகவலைச் சொல்ல ஓடினான் அவன். அடுத்த சில நிமிடங்களிலேயே, ''துணை கேப்டன் அகஸ்ட் ப்ளோம்பெர்க்கும் அவனது அறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறான்'' என்று அலறியபடி ஓடிவந்தான்.

நடுக்கடலில், கப்பலில், ஒரே இரவில், அடுத்தடுத்து மூன்று கொலைகள். நடந்த செய்தி கசிந்து, சிப்பந்திகளும், பயணிகளும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

கப்பல் ஊழியர்களும், பயணிகளும் மேல்தளத்தில் கூடினார்கள். அங்கே குழுமியிருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் இந்தக் கொலைகளைச் செய்திருக்க வேண்டும் என்ற நினைவே அவர்களிடையே பெரும் பயத்தையும் சந்தேக உணர்வையும் ஏற்படுத்தியது.

திடீரென்று தாமஸ் பிராம், ''அங்கே பாருங்கள்... அங்கே பாருங்கள். அந்த ஆயுதத்தைக் கொண்டுதான் கொலைகள் எல்லாம் நடந்திருக்கின்றன'' என்று கூச்சலிட்டபடி கப்பலின் ஒரு மூலையை நோக்கிப் பாய்ந்தான். அவன் கைகளில், ரத்தம் தோய்ந்த, சதைத் துணுக்குகள் ஒட்டிக்கொண்டிருந்த கோடரி.

''இதுதான் கொலை ஆயுதம். இது இங்கிருப்பது ஆபத்தானது. இதை உடனே கடலில் எறிந்து விடவேண்டும்' என்றபடி, கப்பலின் விளிம்புக்கு ஓடினான் தாமஸ் பிராம்.

''வேண்டாம்... வேண்டாம், அதை எறியாதே'' என்று மற்றவர்கள் அவனைத் தடுத்து நிறுத்துவதற்கு முன், கோடரியை தாமஸ் கடலில் வீசி எறிந்தான். அந்தக் கொடூரக் கொலைகளுக்கான ஒரே ஆதாரமும் கடலுக்கடியில் போய்ச் சேர்ந்தது.

''முட்டாளே.. என்ன காரியம் செய்தாய்? யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க உதவும் ஒரே ஆதாரத்தையும் அழித்து விட்டாயே'' என்று மற்றவர்கள் அவன் மீது பாய்ந்தார்கள்.

''பொறுங்கள்... பொறுங்கள்'' என்று அவர்களைத் தடுத்த தாமஸ், ''குற்றவாளி யார் என்று எனக்குத் தெரியும்'' என்றான்.

''யார்?''

''இரண்டாம் துணை கேப்டன் அகஸ்ட் ப்ளோம்பெர்க்தான் கொலைகாரன். கேப்டனையும், அவர் மனைவியையும் கொன்றுவிட்டு, அந்தக் கைகலப்பில் அவனும் காயப்பட்டு செத்து விழுந்திருக்கிறான்'' என்று உறுதியான குரலில் கூறினான்.

கூடவே, ''கப்பலிலேயே பிணங்கள் இருப்பது நம் எல்லோருக்கும் பயத்தையும், அருவருப்பையும் தரும். ஆகவே அவற்றையும் கடலில் வீசிவிடலாம். செத்தவர்கள் போய்த் தொலையட்டும். உயிரோடு இருப்பவர்கள் நிம்மதியாக இருப்போம்'' என்று கூறினான். அவனது அந்த யோசனையை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

பயணிகளில் ஒருவர், ''கொலை நடந்த சமயத்தில், சார்லி ப்ரௌன் தன் ஆடைகளைக் கழற்றிவிட்டுப் புது ஆடைகளை அணிவதை நான் பார்த்தேன்'' என்றார். சார்லி கப்பல் பணியாளர்களில் ஒருவன்.

'ஒருவேளை ரத்தக் கறை படிந்திருந்ததால்தான், சார்லி தன் பழைய உடைகளைக் களைந்துவிட்டு, புது உடைகளை அணிந்துகொண்டானோ?’ என்ற சந்தேகம் சிலரிடையே எழுந்தது.

''ஆமாம், அப்படித்தான் இருக்கவேண்டும். சந்தேகமில்லாமல் அவன்தான் கொலைகாரன்'' என்று சட்டென்று ஆவேசமாகக் கூச்சலிட்ட தாமஸ் பிராம், உடனே சார்லி பிரௌனை கப்பலின் அறை ஒன்றில் சிறை வைத்தான்.

மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், சார்லி பிரௌன் அமைதியாகவே சிறைப்பட்டான். அவனுடைய அந்தச் செயல் அங்கிருந்தவர்களுக்கு வியப்பாக இருந்தது.

ஆனால் தாமஸ் பிராமுடைய பேச்சை எவ்வளவு பேர் நம்பினார்கள் என்று கூறுவது கடினம். கப்பலில் இருந்த ஒவ்வொருவரும், மற்றவர்களைச் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கினார்கள். யாரும் நிம்மதியாக உறங்கவில்லை.

அந்தப் பயணத்தை விரைவில் முடிப்பதற்காக அருகிலிருந்த ஹாலிபேக்ஸ் என்ற துறைமுகத்தை நோக்கிக் கப்பல் திரும்பியது. அது கரையை அணுகிக்கொண்டிருந்த நேரத்தில், அதுவரை வாயே திறக்காமல் மௌனமாகச் சிறைப்பட்டிருந்த சார்லி பிரௌன், அந்தக் குண்டைத் தூக்கிப் போட்டான்.

''கேப்டனும், அவரது மனைவியும் கொலையுண்ட நேரத்தில் நான் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு சிறிய ஜன்னல் வழியாக கேப்டனின் அறையை என்னால் பார்க்க முடிந்தது. கோடரியை ஏந்திக் கொண்டிருந்த ஒருவன் அந்தக் கொலைகளைச் செய்ததைப் பார்த்தேன். கொலைகாரன் முதல் துணை கேப்டன் தாமஸ் பிராம்தான்!' என்றான் அவன் உறுதியான குரலில்.

''ஐயோ இது பச்சைப்பொய்'' என்று கூக்குரலிட்டான் தாமஸ் பிராம்.  

வினோதமான நடவடிக்கைகளின் காரணமாக தாமஸ் பிராமின் மீது ஏற்கெனவே சந்தேகம் கொண்டிருந்த மற்றவர்கள் அவனையும் பிடித்து ஓர் அறையில் அடைத்தனர்.

கொலையுண்டவர்களின் உடல்கள் மூன்றையும், 'கொலையாளி’கள் இருவரையும் சுமந்துகொண்டு, ஜூலை 21-ம் நாள் ஹாலிபேக்ஸ் பட்டினத்தைக் கப்பல் அடைந்தது.

பயணத்தில் நடந்த பயங்கரங்கள் போலீஸிடம் தெரிவிக்கப்பட்டன. காவல் துறை உடனே செயலில் இறங்கியது. முதலில் விசாரிக்கப்பட்டது, சார்லி பிரௌன்.

''கொலை நடந்த இரவு, புயலின் காரணமாக மிகவும் குளிராக இருந்தது. நான் அணிந்திருந்த மெலிதான உடையைக் களைந்துவிட்டு, குளிருக்கு அடக்கமான உடையை அணிந்தேன். அது தப்பா? நம்புங்கள், என் கண்ணால் பார்த்தேன். தாமஸ் பிராம்தான் கொலைகளைச் செய்தான்'' என்று அவன் உறுதியாகக் கூறினான்.

''அப்படியானால், உன் மீது குற்றம்சாட்டப்பட்டபோதே ஏன் இதைக் கூறவில்லை?'' என்று போலீஸ் அவனைக் குறுக்குக் கேள்வி கேட்டது.

''ஐயோ.. நான் மறுத்துப் பேசியிருந்தால், அந்தக் கொலைகாரப் பாவி என்னையும் கொன்றிருப்பான். கப்பல் சிறையில் அடைந்து கிடப்பதே அதைவிட நிம்மதியல்லவா? அதனால், கப்பல் கரையை நெருங்கும் வரை காத்திருந்து, உண்மையைக் கூறினேன்.''

சார்லியின் பதிலில் நேர்மை இருப்பதாகக் காவல் துறை நம்பியது. அவனை விடுவித்தது.

எஞ்சி இருந்தவன் தாமஸ் பிராம் மட்டும்தான். அவன்தான் அந்தப் புயல் அடித்த இரவில், மூன்று கொடூரமான கொலைகளைச் செய்தவனாக இருக்க முடியும் என்று தீர்மானித்தது.

'அவ்வளவுதான். வழக்கு முடிந்தது’ என்று போலீஸ் கணக்கு போட்டது. ஆனால், இந்த வழக்கு யாருமே எதிர்பாராத பல திருப்பங்களைச் சந்திக்கப் போவதை அப்போது யாராலும் யூகித்திருக்க முடியாது.

அது அடுத்த இதழில்...

- குற்றம் தொடரும்