மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

மூவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..!

குற்றம் புரிந்தவர்

ப்பலில் நடந்த கொடூரக் கொலைகள் பற்றி விசாரித்த காவல் துறையின் கவனம் இப்போது முழுமையாக தாமஸ் பிராம் மீது திரும்பியது.

 'கொலைக் கருவியை கடலில் எறிந்து சாட்சியத்தை அழித்தாய். கொலை செய்யப்பட்டவர்கள் உடல்களையும் தூக்கி எறிய முயன்றாய். தவிர, நீ கொலை செய்ததை நேரில் பார்த்ததாக சார்லியின் சாட்சியமும் இருக்கிறது.. உண்மையைச் சொல்' என்று தாமஸ் பிராமை அதட்டியது.

''ஐயோ, நான் கொலை எதையும் செய்யவில்லை. கொலை நடந்த அன்று இரவு கப்பலைச் செலுத்திக்கொண்டிருந்த இடத்திலிருந்து, நான் இருந்த இடத்தை சார்லியால் பார்க்கவே முடியாது'' என்றான் தாமஸ் பிராம்.

''ஆக, அன்று இரவு கேப்டனின் அறையில் நீ இருந்ததை ஒருவாறு ஒப்புக்கொள்கிறாய்..'

காவல் துறை தாமஸ் பிராமை, 'கொலையாளி’ எனக் குற்றம்சாட்டி, அவன் மீது வழக்கு தொடர்ந்தது.

1896 டிசம்பரில் தொடங்கிய அந்த வழக்கில், தாமஸ் பிராமுக்கு எதிராக இருந்த ஆதாரங்களை கோர்ட்டின் முன் வைத்தது போலீஸ்.

வழக்கு விசாரணையின்போது கப்பல் சிப்பந்திகள் சிலர், 'இதற்கு முன்னால் சில பயணங்களில், கேப்டனையும், அதிகாரிகளையும் கொன்றுவிட்டு சரக்குகளைத் திருடி விற்று, பணத்தைப் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று தாமஸ் எங்களிடம் கூறியிருக்கிறான்...' என்று சாட்சி சொன்னார்கள்.

'தான் ஏற்கெனவே சில கப்பல்களை இந்த முறையில் கொள்ளை அடித்திருப்பதாக தாமஸ் எங்களிடம் பெருமை பீற்றிக்கொண்டிருக்கிறான்' என்று இன்னும் சில ஊழியர்கள் நீதிமன்றத்தில் சொன்னார்கள்.

தாமஸ் மீது சார்லி சாட்டிய கொலைக்குற்றம், வழக்கில் மிக முக்கியமான சாட்சியமாக மாறியது. தாமஸ் பிராம் அதை மறுத்தான். சார்லியால் அந்த நேரத்தில் தன்னைப் பார்த்திருக்கவே முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறினான்.

தாமஸ் பிராம் அந்தக் கொலைகளைச் செய்தானா, இல்லையா என்ற கேள்விக்கான பதில், கொலை நடந்த சமயத்தில் சார்லி சொல்வதுபோல் உண்மையாகவே அவன் இருந்த இடத்திலிருந்து, கேப்டனின் அறையில் நடந்ததைப் பார்த்திருக்க முடியுமா என்ற கேள்விக்கான பதிலில் புதைந்து கிடந்தது.

'சார்லியால் கப்பல் கேப்டன் அறையைப் பார்த்திருக்க முடியுமா, முடியாதா என்பதைத் தெரிந்துகொள்ள, சம்பந்தப்பட்ட இடங்களை நாங்களே நேரடியாகப் பார்க்க விரும்புகிறோம்' என்றார்கள், ஜூரர்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஹெர்பெர்ட் ஃபுல்லெர் தன் அடுத்த பயணத்தைத் தொடங்கிக் கடலில் சென்றுவிட்டது.

இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த நீதிபதிகள், அந்தக் கப்பலில் உள்ளதுபோலவே பல்வேறு பகுதிகளையும், அறைகளையும் கோர்ட் வளாகத்திலேயே உருவாக்கி, சார்லி பிரௌன் கப்பலைச் செலுத்திய இடத்திலிருந்து, கேப்டனின் அறையைப் பார்த்திருக்க முடியுமா என்று பரிசோதனை செய்தனர்.

குற்றம் புரிந்தவர்

அந்த ஆய்வின் முடிவு தாமஸ் பிராமுக்கு எதிராக அமைந்தது.  பெரும்பாலான நீதிபதிகள் 'சார்லியால் பார்த்திருக்க முடியும்’ என்ற முடிவுக்கு வந்தனர்.  அதன் அடிப்படையில் தாமஸ் பிராமைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்தது.

1897 மார்ச் மாதம், தாமஸ் பிராமுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஜூன் மாதம், 18-ம் தேதி தாமஸ் பிராம் தூக்கில் தொங்கவிடப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

'நான் கொலைகாரன் இல்லை, நிரபராதி' என்று தாமஸ் பிராம் கதறினான். தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகினான். அவனது கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் நடத்த உத்தரவிட்டது. வழக்கு மீண்டும் புதிதாகத் தொடங்கிய சமயத்தில் ஹெர்பெர்ட் ஃபுல்லெர் தனது கடல் பயணத்தை முடித்துக்கொண்டு, வழக்கு நடந்துகொண்டிருந்த பாஸ்டன் துறைமுகத்துக்குத் திரும்பி வந்தது.

நீதிபதிகள் கப்பலுக்குள்ளேயே சென்று சம்பவ இடங்களை நேரடியாகப் பார்வையிட்டனர். மேலும், கொலை நடந்தபோது இருந்த புயல், மழை கொண்ட சூழ்நிலையையே அங்கு செயற்கையாக உருவாக்கி, விஸ்வரூபம் எடுத்திருந்த அந்த முக்கிய கேள்விக்கு விடை தேடினர்.

'கப்பலைச் செலுத்தும் இடத்திலிருந்து, கேப்டனின் அறையைத் தெளிவாகப் பார்ப்பது கடினம். அப்படியே பார்க்க முடிந்தாலும், புயலும், மழையுமாக இருந்த அந்தச் சூழ்நிலையில், கேப்டனின் அறைக்குள், யாரோ ஒருவன் கோடரியைக் கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் என்பதுதான் புலனாகி இருக்குமே தவிர, இன்னார்தான் அந்தக் கொலையாளி’ என்று அடையாளம் குறிப்பிட்டுச் சொல்வது மிகவும் கடினம்’ என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.  

ஆனால், வேறு பல சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முறையும் தாமஸ் பிராம்தான் குற்றவாளி என்றே கோர்ட் தீர்மானித்தது.  ஆனால், சந்தேகத்தின் பலனை அளித்து, முன்பு அறிவித்த தூக்குத் தண்டனையை ரத்துசெய்து, ஆயுள் தண்டனையாக மாற்றியது. தூக்குமேடை வரை சென்று மீண்ட தாமஸ் பிராம், அட்லான்டாவின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான்.

சுற்றிச் சுழன்று சென்ற இந்தச் சுவையான கொலை வழக்கு இத்துடன் முடிந்திருந்தால், நிச்சயமாக இது இவ்வளவு பிரபலமாக மாறியிருக்காது. அமெரிக்க அதிபரின் கவனத்தையே கவர்ந்து, அவரைத் தலையிடவும் வைத்து, கொலைக் கைதியின் தலையெழுத்தையே மாற்றவும் வைத்திருக்காது. இந்தக் கொலை வழக்கு இந்த அளவுக்கு உலகப்புகழ் பெற்றதற்குக் காரணம் ஓர் எழுத்தாளர்!

மேரி ராபர்ட்ஸ் ரினிஹார்ட் (Mary Roberts Rinehart)  என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற துப்பறியும் நாவலாசிரியை. மர்மக் கதைகள் எழுதுவதில், அமெரிக்க அகதா க்ரிஸ்டி என்று அழைக்கப் பெற்றவர்.

அந்த எழுத்தாளருக்கு தாமஸ் பிராமின் வழக்கு மீது ஒரு பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. வழக்கு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்தார். வழக்கைப் பற்றிய பத்திரிகைச் செய்திகள் அனைத்தையும் படித்தார். வழக்குடன் தொடர்புள்ள பலரைச் சந்தித்துப் பேசினார். அவருக்குப் பல ஐயங்கள் எழுந்தன.

'தாமஸ் பிராம் சற்றே அசடன். ஓட்டை வாய் கொண்ட சவடால் பேர்வழி. அவன் இந்தக் கொலைகளைச் செய்யவில்லை. அவன் நிரபராதி. சக ஊழியர்களின் சதியால், இந்தக் கொலைகளில் சிக்க வைக்கப்பட்டு, அநியாயமாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறான்.

'சார்லி பிரௌன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தாமஸ் பிராம் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறான். சார்லி பிரௌனின் வாக்குமூலம் அவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று எவ்வாறு சொல்லமுடியும்? அவன் மட்டும் என்ன சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வப்பிறவியா? கப்பலில் நடந்த கொலைச் சம்பவங்கள், பின்பு நடந்த வழக்குகள் ஆகிய அனைத்திலும் முக்கியப்பங்கு வகித்த சார்லி பிரௌன் ஏன் உண்மையான வில்லனாயிருக்கக் கூடாது?’ என்று ஒரு புதிய கோணத்தில் அவர் இந்த வழக்கை அலசினார்.

கப்பலில் நடந்த கொலைகளையும், வழக்கையும் மையமாகக் கொண்டு, மேரி ராபர்ட்ஸ் ரினிஹார்ட் 'தி ஆஃப்டர் ஹவுஸ்’ என்ற தலைப்பில் ஒரு துப்பறியும் மர்ம நாவலை எழுதினார்.

1914-ல் வெளியான இதில் குற்றம் எதுவும் செய்யாத அப்பாவி தாமஸ் பிராம், நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டுவிட்டான் என்று உணர்ச்சிகள் கொப்பளிக்கும் விதத்தில் விவரிக்கப்பட்டது.

அமெரிக்க மக்களிடையே இந்த நாவலின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அரசின் உயர்மட்ட நிலைகளையும் இதன் தாக்கம்விட்டு வைக்கவில்லை. எங்கு பார்த்தாலும், இந்த நாவல் தெரிவித்த செய்தி தீவிரமான விவாதப் பொருள் ஆனது. இறுதியில், அது அமெரிக்க ஜனாதிபதியின் கவனத்துக்கும் போய்ச் சேர்ந்தது.

அன்றைய அமெரிக்க அதிபராயிருந்த உட்ரோ வில்சன் 'தி ஆஃப்டர் ஹவுஸ்’ நாவலை ஆர்வத்துடன் படித்தார். அதன் பின் வழக்கு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் விசாரித்து அறிந்து கொண்டார். இறுதியில் எழுத்தாளர் மேரி ராபர்ட்ஸ் ரினிஹார்டின் கருத்தையும், முடிவையும் ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த அதிபர் உட்ரோ வில்சன், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் நாள் தாமஸ் பிராமுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, ஒரு சுதந்திர மனிதனாக அவன் மீண்டும் உலவ வழி வகுத்தார்.

தாமஸ் பிராம் சிறையிலிருந்து வெளியே வந்தான். 'அல்வேனா’ என்று ஒரு கப்பல் வாங்கி அதன் கேப்டனாகச் செயல்பட்டான். கடல் பயணங்களில் அவன் வாழ்க்கை தொடர்ந்தது.

ஆனால், அன்றும், இன்றும், என்றும் ஒரு கேள்வி மட்டும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. 'அந்தக் கொடூரக் கொலைகளை தாமஸ் பிராம் செய்தானா? இல்லையா? அவன் செய்யவில்லை எனில், அவற்றைச் செய்தது யார்?’    

புயல் அடித்த அன்றைய இரவில், கப்பலில் அநியாயமாக இறந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது!
- குற்றம் தொடரும்