மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

கருப்பு அல்லியின் கடைசி தினங்கள்..!ஓவியம்: பாரதிராஜா

குற்றம் புரிந்தவர்

சொன்னபடியே, மறுநாள் லாஸ் ஏஞ்சல்ஸ் எக்ஸாமினர் பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதில், பெட்ரோல் வாசம் தூக்கலாக இருந்தது. பார்சலைக் கட்டியவன், தன்னுடைய கைரேகைகளை பெட்ரோல் கொண்டு துல்லியமாகத் துடைத்திருந்தான்.

 உள்ளே எலிஸபெத்தின் உடைமைகள், புகைப்படங்கள், அவளுடைய பிறப்புச் சான்றிதழ், சோஷியல் செக்யூரிட்டி கார்டு, மேத்யூ மைக்கேல் என்பவனின் காதல் கடிதங்கள், ஒரு முகவரிப் புத்தகம் ஆகியவை இருந்தன.

எலிஸபெத்தின் தந்தை க்ளியோ, அவளுடைய உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் வசித்தார். இந்த உடைமைகளை அனுப்பியவர் அவராகத்தான் இருக்க வேண்டும் என்று அவரை விசாரித்தது, போலீஸ்.

'கடந்த மூன்று வருடங்களாக எங்கேயிருக்கிறாள், என்ன செய்கிறாள் என்று எந்தத் தகவலும் என் மகளிடமிருந்து இல்லை.. வீட்டை சுத்தமாகப் பராமரிப்பதற்குத் தயாராய் இல்லாத பெண் அவள்..' என்று அவள் மீது அவருக்குக் கோபம்தான் இருந்தது. அவளுடைய உடலை வந்து அடையாளம் காட்டச் சொன்னபோதுகூட, க்ளியோ திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

அடுத்து முகவரிப் புத்தகத்தை போலீஸ் ஆராய்ந்தது. அதில், 75 ஆண்களின் முகவரிகள் இருந்தன. அந்தப் பட்டியலில் சிகாகோவைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியும் இருந்தார்.

போலீஸ் விசாரணையில், 75 பேரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள்.

குற்றம் புரிந்தவர்

'அவள் அழகால் கவரப்பட்டோம். பாரில் அவளுடன் சிறிது நேரம் செலவழித்தோம். அவளுக்கு மது வாங்கிக் கொடுத்தோம்.  ஆனால், அவளுடன் அதன்பின் எங்களுக்குத் தொடர்பில்லை..'

எலிஸபெத்தின் உடல், இரு வேறு பகுதிகளாகக் கச்சிதமாக வெட்டப்பட்டு பிரிக்கப்பட்டிருந்ததால், இது மருத்துவம் படித்தவரின் வேலையாக இருக்கலாமோ என்றும் போலீஸ் சந்தேகப்பட்டது. அவளுடைய உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகாமையில் இருந்த மருத்துவக் கல்லூரியில் மும்முரமான விசாரணை மேற்கொண்டது.  

எலிஸபெத்துக்கு எத்தனையோ ஆண்களுடன் பழக்கம் இருந்தாலும், யாரையும் அவளுடைய நெருக்கமான நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. பழகிய ஆட்களைவிட புதிய ஆட்களிடம் அவளுக்குக் கவர்ச்சி அதிகம் இருந்தது. விசாரிக்கப்பட்ட பலர், தங்களுக்குப் பிடிக்காத வேறு மாணவர்கள் பெயரை சந்தேகத்துக்கிடமானவர் என்று சொல்லிக் குழப்பினர். தடயங்கள் கிடைப்பதற்கு பதிலாக தலைவலிதான் பெருகியது.

அடுத்து, அவளுக்குக் காதல் கடிதங்கள் எழுதிய மேத்யூ மைக்கேல் யார் என்று போலீஸ் ஆராய்ந்தது.

1945. புத்தாண்டை வரவேற்கும் நள்ளிரவுக் கொண்டாட்டங்கள். சாகசப் பெண்ணாக அலைந்து கொண்டிருந்த எலிஸபெத், ஏற்கெனவே அறிமுகமான ராணுவ மேஜர் மேத்யூ மைக்கேலுடன் நடனமாடினாள். நடனத்தின் முடிவில் மேத்யூ அவளிடம் மண்டியிட்டு 'என்னைத் திருமணம் செய்துகொள்வாயா..?’ என்று கேட்டான். எலிஸபெத்தின் இதயத்தில் பூக்கள் பூத்தன. உடனடியாகத் தன் அம்மாவுக்குக் கடிதம் எழுதினாள்.

மேத்யூ மைக்கேல் போருக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய சூழல். ஆனால், மேத்யூ அவளுக்குத் தொடர்ந்து காதல் தோய்ந்த கடிதங்களாக எழுதித் தள்ளினான். போர் நிறுத்தப்பட்டது என்று அறிவிப்பு வந்தது. மேத்யூ எந்தக் கணமும் நாடு திரும்புவான் என்று, எலிஸபெத் பெருமகிழ்ச்சி கொண்டாள். அவளுடைய ஆனந்தத்தை ராணுவத்திலிருந்து வந்த தகவல் சிதறடித்தது.

'போர் முடிந்து, நாடு திரும்பும்போது, விமானம் விபத்துக்குள்ளாகி தலத்திலேயே மேத்யூ மைக்கேல் இறந்துபோனார். எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..!’ என்றது அந்தச் செய்தி.

அடுத்த பல நாட்கள் எலிஸபெத் வெளியே வரவேயில்லை. மேத்யூ அவளுக்கு எழுதிய காதல் கடிதங்களை மீண்டும், மீண்டும் படித்துக் கொண்டேயிருந்தாள்.

இந்த வேதனையிலிருந்து வெளிவருவதற்கு அவளுக்கு ஒரு வழிதான் தெரிந்தது. மியாமிக்குக் குடிபெயர்ந்தாள். அங்கு எந்தக் கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொள்ளாமல் மனதுக்குப் பிடித்த ஆண்களுடன் இரவுகளைச் செலவழிக்க ஆரம்பித்தாள். ராணுவ வீரர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என்று எல்லா தரப்பினரும் அவளால் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.

உணவு, மது, புதிய துணிமணிகள், செலவுக்குப் பணம்.. எது கேட்டாலும், அவள் காலடியில் கொண்டுவந்து கொட்ட ஆண்கள் தயாராக இருந்தார்கள்.

ராணுவ வீரர்கள் என்றால், அவளுக்குக் கூடுதலான கவர்ச்சி இருந்தது. விரைவிலேயே ஜோசப் கார்டன் என்ற இன்னொரு விமானப் படை அதிகாரியுடன் அவளுக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஜோசப் கம்பீரமான ஆணழகன். கவர்ந்து இழுக்கும் வசீகரமான கருவிழிகள்.

பிற்பாடு, ராணுவப் பணி நிமித்தமாக ஜோசப் வெளியூர் கிளம்பிப் போன பிறகும், பிரதி மாதமும் அவளுடைய செலவுகளுக்கு என நூறு டாலர் பணம் அனுப்பி வந்தான். எலிஸபெத் இறக்கும் வரை இது தொடர்ந்தது.

குற்றம் புரிந்தவர்

அவளுடைய வாழ்வின் கடைசி ஆறு மாதங்கள் எலிஸபெத்தின் முகவரி அடிக்கடி மாறியது. ஹோட்டல்கள், வீடுகள், விருந்தினர் குடியிருப்புகள் என்று தாவிக் கொண்டே இருந்தாள். இலவசமாக எங்கெல்லாம் தங்க முடியுமோ அந்த இடங்களுக்கெல்லாம் அவள் நகர்ந்துகொண்டே இருந்ததிலிருந்து, அவளுக்குப் பெரும் பணத் தட்டுப்பாடு இருந்திருக்க வேண்டும் என்று போலீஸ் அனுமானித்தது.    

அவளைக் கடைசியாக உயிருடன் பார்த்தவர் யார் என்று கண்டுபிடிக்க முனைந்தது, போலீஸ்.

ஒரு குறிப்பிட்ட மாதம், ஹாலிவுட்டில் மிகச் சிறிய அபார்ட்மென்ட் ஒன்றில் இன்னும் எட்டு பெண்களுடன் தங்கியிருந்தாள். வீட்டு மேனேஜர் வரும்போது அந்த சொற்ப வாடகையைக்கூட கொடுக்க முடியாமல் எலிஸபெத் பல முறை கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறாள். 'ஒவ்வோர் இரவும் வேறு வேறு பாய்ஃப்ரெண்டுகளுடன் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்..'' என்று அறைவாசிகள் சொன்னார்கள்.

ஒரு கட்டத்தில், வாடகைப் பணம் கொடுக்க இயலாமல், 24 மணி நேரமும் தொடர் காட்சிகள் ஓடிய ஒரு தியேட்டரில் டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டரிலேயே முழு நாளையும் எலிஸபெத் கழித்தாள். அதைக் கவனித்து அவள் மீது பரிதாபம்கொண்டு அவளுக்குத் தங்குவதற்கு இடம் கொடுத்தது, ஒரு குடும்பம். ஆனால், அவர்களுக்கும் அவளுடைய விட்டேற்றியான நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. வெளியே அனுப்பிவிட்டார்கள்.

எலிஸபெத் ஒரு முச்சந்தியில் தனியாக எந்த இலக்குமில்லாமல் நின்றிருந்தபோது, சிகப்புத் தலைமுடியுடன் ஓர் இளைஞன் அவளை கவனித்தான். தன் காரில் ஏற்றிக்கொண்டான்.

'நான் ராபர்ட் மன்லே.. 25 வயது'

'நான் எலிஸபெத்.. 22 வயது' இருவரும் ஒரு நெடுஞ்சாலை விடுதியில் அன்றிரவு தங்கினார்கள். அந்த விடுதியில் கிடைத்த தகவலை வைத்து, மன்லேயை நெருங்கியது, போலீஸ்.

'எலிஸபெத் தன் உடைகளைக் கழற்றாமல்தான் தூங்கினாள். எங்களுக்குள் செக்ஸ் உறவு இல்லை' என்று ராபர்ட் மன்லே சொன்னான்.

'ஜனவரி 9 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் பஸ் நிலையத்தில் தன்னுடைய பெட்டியை வைத்துவிட்டு வந்தாள். பில்ட்மோர் ஹோட்டலில் தன் சகோதரியைச் சந்திக்கப் போவதாகச் சொன்னாள். மாலை ஆறு மணியளவில், அங்கு அவளை டிராப் செய்தேன். அதன்பின் அவளைச் சந்திக்கவேயில்லை.. என் குடும்பத்துக்குத் திரும்பிவிட்டேன்..' என்று ராபர்ட் மன்லே சொன்னான்.

பில்ட்மோர் ஹோட்டல் பணக்கார சுற்றுலாப் பயணிகள் வளைய வரும் ஹோட்டல். அழகான பெண்கள் தங்கள் கண்களாலும், கவர்ச்சியான உடைகளாலும் ஆண்களுக்கு வலைவிரிக்கும் இடம். அவ்வளவு அலங்காரமான ஹோட்டலில் ஜனவரி 9 அன்று கடைசியாக உயிரோடு பார்க்கப்பட்ட எலிஸபெத் ஒரு வாரம் கழித்து இறுதியாகக் கண்டெடுக்கப்பட்டதோ ஒதுக்குப்புறமான ஒரு புதரில்.

இடைப்பட்ட காலத்தில் அவளைப் பயன்படுத்திக்கொண்டவன் மிகக் கொடூரமான முறையில் அவளைச் சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறான் என்பது மட்டும் புலப்பட்டது.  

ஜனவரி 25, எலிஸபெத்தின் தோல் பையும், செருப்புகளும் பல மைல் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டன. ராபர்ட் மன்லே அவற்றை அவளுடையது என்று அடையாளம் காட்டினான்.

பொய் நிரூபமானி (lie detector) கருவி பொருத்தப்பட்டு, ராபர்ட் மன்லேயிடம் விசாரணை தொடர்ந்தது.  அவன் மீது குற்றம் இல்லை என்று இறுதியில் விடுவிக்கப்பட்டான்.

எலிஸபெத்தை அறிந்தவர்கள், எலிஸபெத்துக்குத் தெரிந்தவர்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீஸ் விசாரித்து ஃபைல்கள்தாம் பெரிதாயின. உண்மையான கொலையாளி சிக்கவில்லை.

அன்றாடம் ஒரு புது ஆணுடன் செலவு செய்யத் தயாராக இருந்தவள் என்பதால், கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீஸ் திணறியது.

கவர்ச்சியான அழகி, ஆண்களை மயக்குபவள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாளே தவிர, ஒரு பெற்றோரின் மகளாகவோ, நால்வரின் சகோதரியாகவோ எலிஸபெத் கவனிக்கப்படவேயில்லை. பொதுவாகக் கறுப்பு நிறத்தைக் காதலித்த காரணத்தால், எலிஸபெத் கருப்பு டாலியா, அல்லது கருப்பு அல்லி என்று செல்லமாக அழைக்கப்பட்டாள்.

எலிஸபெத் இறுதியாக மவுன்ட்டன் வியூ இடுகாட்டில் புதைக்கப்பட்டபோது, சில போலீஸ் தலைகளைத் தவிர அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேர் மட்டுமே அதில் பங்குகொண்டார்கள்.

எலிஸபெத்தைக் கடைசியாக உயிருடன் பார்த்திருந்த ராபர்ட் மன்லே குற்றமற்றவன் என்று விடுவிக்கப்பட்டாலும், எலிஸபெத்தின் குரல் காதில் அவ்வப்போது கேட்பதாக அவன் சொன்னதால், ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

எலிஸபெத்தின் வாழ்க்கையும், நெஞ்சை உலுக்கும் மரணமும், தீர்வு காணாத மர்மமும் இன்று வரை செய்தியாளர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

அவளுடைய சாகசம் நிறைந்த வாழ்வில் மேலும் கற்பனைகள் சேர்த்து, பல புத்தகங்கள் வெளியாயின. அவளுடைய வாழ்க்கை கதையாக்கப்பட்டு, நாடகமானது. ஒரு வீடியோ கேமுக்கும் அவள் நாயகி.

ஹாலிவுட்டில் நாயகியாக வலம் வரவேண்டும் என்று ஆசைப்பட்ட எலிஸபெத்தின் வாழ்வு அதே ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டதுதான் மிச்சம்.

குற்றம் நடந்து, 60 வருடங்கள் ஆகியும், உண்மையான கொலையாளி யார் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எலிஸபெத்தைக் கொலை செய்தது யார் என்று ஆராய்வது இன்றைக்கும் பல துப்பறிவாளர்களுக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. 

- குற்றம் தொடரும்