மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

மீண்டும் புதிய பறவை...ஓவியம்: பாரதிராஜா

குற்றம் புரிந்தவர்

ஜூலை, 1910.

இங்கிலாந்திலிருந்து கனடா நோக்கிப் பயணம் செய்த எஸ்.எஸ்.மான்ட்ரோஸ் என்ற அந்தக் கப்பல், கனடாவின் செயின்ட் லாரன்ஸ் துறைமுகத்தை நெருங்கியது.

கப்பலின் மேல்தளத்தில், மேகங்கள் அற்ற நீலவானையும், மறுபுறம் தொடுவானம் தொட்ட நீலக் கடலையும் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜான் ஃபிலோ ராபின்ஸன். அவருடன் கைகோத்து அமர்ந்திருந்தான், அவரது வாலிப மகன் ஜான்.

கப்பல் நங்கூரம் பாய்ச்சி நின்றது. கேப்டன் உடையில் இருந்த ஒருவர், உதவியாளர் பின்தொடர கப்பலில் ஏறி, ஜான் ராபின்ஸனை அணுகினார். புன்னகைத்தார்.

''குட் மார்னிங் டாக்டர் க்ரிப்பன்'' என்றார்.

''நான் க்ரிப்பனில்லை. ராபின்சன்.''

''நானும் கேப்டனில்லை. டிடெக்டிவ் வால்டர் ட்யூ'' என்றவர், பக்கத்தில் இருந்த இளைஞன் பக்கம் திரும்பினார். ''குட் மார்னிங் மிஸ் ஈதல். தந்தையும் மகனுமாக நீங்கள் பயணம் செய்தாலும், உங்கள் கண்களில் தெரிந்த மயக்கமும், நீங்கள் நெருக்கமாகப் பழகிய விதமும் உங்களைக் காதலர்கள் என்று காட்டிக் கொடுத்துவிட்டது.. நான்தான் இங்கிலாந்துக்கு தந்தி கொடுத்தேன்'' என்றார், கப்பலின் உண்மையான கேப்டன், கென்டல்.

''அதிவிரைவு ஸ்டீமரைப் பிடித்து அவசரமாக உங்களுக்கு முன் இங்குவந்து சேர்ந்தேன்'' என்றார், டிடெக்டிவ் வால்டர் ட்யூ.

அவர்களைத் தேடி அவர் வந்ததற்கான காரணம்  காதலும், துரோகமும், காமமும் நிறைந்த ஒரு முன் கதையில் இருக்கிறது.

1893-ம் ஆண்டு. நியூயார்க்கின் ப்ரூக்ளின் மருத்துவமனையில், ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றி வந்தார் டாக்டர் க்ரிப்பன்.

31 வயதிலேயே மனைவியைப் பறிகொடுத்து, தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்தார். 17 வயது கோரா டர்னர் அப்போதுதான் அவருக்கு அறிமுகமானாள். கவர்ச்சியான உடலமைப்பு. துடிப்பான தோற்றம். யாரோ ஒருவனுடன் நெருங்ங்ங்கிப் பழகியதால் கருத்தரித்து, கரு கலைந்து, அறுந்த திரையாகத் தளர்ந்து அவரிடம் சிகிச்சைக்கு வந்தாள்.

டாக்டர் க்ரிப்பன் அவளைச் சீராக்கினார். அவளது ஓட்டமும், துள்ளலும், இமைகளின் பட்டாம்பூச்சிப் படபடப்பும் அவரைக் கவர்ந்தன. கோரா டர்னருக்கு ஓபரா பாடகியாக ஜொலிக்கவேண்டும் என்ற ஆசை. டாக்டர் அவளுக்கு இசைப்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார்.

ஒரு முன்னிரவுப் பொழுதில் அவளை ஒரு நல்ல உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று ஒற்றை ரோஜாவை நீட்டி தனது காதலைத் தெரிவித்தார். கோரா நாணத்துடன் சம்மதித்தாள். திருமணம். தேனிலவு. சொர்க்கம்.

குற்றம் புரிந்தவர்

கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே சொர்க்கம் நிலைத்தது. கோரா, பகட்டான வாழ்க்கையை ஆதரித்தாள். அவள் அணிந்த உடைகளால் மற்ற ஆண்களின் இதயத் துடிப்பு எகிறியது. ஸ்டார் ஹோட்டல்கள், வி.ஐ.பிகளுடன் நட்பு, நடனம் போன்றவை அவளைக் கவர்ந்தன.

டாக்டர் க்ரிப்பன் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். கண்டிப்பான பெற்றோர்கள். கஷ்டப்பட்டுப் படித்து மருத்துவரான க்ரிப்பன் எளிமையான வாழ்க்கையை விரும்பியவர்.

கோராவின் நடவடிக்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. என்றாலும், 'இளம் பெண். அனுபவிக்க ஆசைப்படுகிறாள். அனுபவிக்கட்டுமே’ என்று கண்டுகொள்ளாமல் விட்டார்.

மூன்று வருடங்கள் கழித்து, லண்டனுக்கு மனைவியுடன் அவர் இடம்பெயர்ந்தார். அவருடைய ஹோமியோபதி கல்வித் தகுதி லண்டனில் டாக்டராகப் பணியாற்ற அனுமதிக்கவில்லை. ஒரு மருந்து கம்பெனியில் வேலை கிடைத்தது.

புதிய நகரம். புதிய சூழ்நிலை. மனைவி மாறிவிடுவாள் என்று டாக்டர் நம்பினார். மாற்றங்கள் நிகழ்ந்தன. அவை விபரீதமாக இருந்தன. லண்டனில் கோரா செயற்கைச் சிகை அலங்காரங்கள், கவர்ச்சியான ஆடைகள், ஜிகினா நகைகள் ஆகியவற்றுடன் சுற்றத் தொடங்கினாள். புது நண்பர்கள் பெருகினர்.

கிளப், பார்ட்டி, குடி, கூத்து! வீடு குப்பை மேடாக மாறியது.

1905-ம் ஆண்டு. பணி நிமித்தமாக, சில மாதங்கள் வெளிநாடு சென்று திரும்பினார் டாக்டர்.

கோரா அவரிடம், 'ப்ரூஸ் மில்லர் என்ற மேடைப் பாடகனைக் காதலிக்கிறேன்...' என்றாள்.

டாக்டர் நொறுங்கிப் போனார். ஆனாலும் மனைவியின் மீது இருந்த காதல் மாறவில்லை. அவள் மனதை மாற்றும் முயற்சியில் இறங்கினார். அவளை சந்தோஷப்படுத்த பணக்காரர்கள் வாழும் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார். வீடு வசதியாக அமைந்ததும், கோராவின் நண்பர்கள் அந்த வீட்டுக்கே வந்து குடித்துக் கும்மாளமிட்டார்கள்.

'கோரா.. என்ன இது?' என்று நொந்துபோய்க் கேட்டார், க்ரிப்பன்.

'கண்ணசைத்தாலே விரும்பியதை எல்லாம் கொண்டுதர இளைஞர்கள் காத்திருக்கின்றனர். கேள்விகேட்டால், ஒரேயடியாகப் போய்விடுவேன், ஜாக்கிரதை!' என்று மிரட்டினாள், கோரா.

நினைத்த நேரத்துக்கு, விரும்பிய ஆட்களுடன் வீட்டுக்கு வருவது, இஷ்டம்போல் ஆட்டம் போடுவது என்பது அவள் வாடிக்கையானது. சமூகத்தில் குடும்ப மரியாதை கெட்டுப்போகும் என்று மனைவியின் அட்டகாசங்களைத் தட்டிக் கேட்கத் தயங்கினார், க்ரிப்பன்.

நிலைகுலைந்து போயிருந்த அவர் வாழ்வில், புதிய தென்றல் ஒன்று வீசத் தொடங்கியது.

அவர் பணிபுரிந்த நிறுவனத்தில், ஈதல் லே நேவ் என்னும் இளம் கன்னியை டாக்டர் க்ரிப்பன் சந்தித்தார். அமைதியான அழகு. அடக்கமான குணம். பெண்மையின் நளினம் எல்லாமே அவளிடம் குடிகொண்டிருந்தன.

கோராவைப்போன்ற பிசாசுடனான வாழ்க்கையில் இதுபோன்ற தேவதையைச் சந்தித்தால்? திருமணம் ஆனவர் என்று தெரிந்திருந்தும், க்ரிப்பனின் கம்பீரமும், கண்ணியமும், பெருந்தன்மையும் ஈதலிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இத்தனைக்கும் ஈதல் இருபதையே தொடாத இளம் கன்னி. அவளுடைய அன்பு அவருக்குப் பாலைவனப் பசுஞ்சோலை! தேன்மழைத் துளிகள்! விரைவிலேயே அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. காதல் மலர்ந்தது.

விஷயம் கோராவின் காதுகளை எட்டியது. டாக்டரைப் பழிவாங்குவதுபோல, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த தொகையை வழித்து எடுத்தாள். பரிதாபமான நிலைக்கு டாக்டர் தள்ளப்பட்டார்.

1910-ம் ஆண்டு ஜனவரி 31. நண்பர்கள் சிலரை விருந்துக்காக வீட்டுக்கு அழைத்திருந்தாள் கோரா. கேளிக்கைகள் முடிந்து விருந்தினர்கள் நள்ளிரவுக்கு மேல் புறப்பட்டுப் போனார்கள். அதுவே அவர்கள் அவளைக் கடைசியாகப் பார்த்த நாள்.

அதற்கடுத்த நாட்களில் ஊரில் நடந்த கேளிக்கைகளிலும், பார்ட்டிகளிலும் கோரா தென்படவில்லை. டாக்டரிடம் நண்பர்கள் விசாரித்தார்கள்.

''கோராவின் நெருங்கிய உறவினர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரைப் பார்க்க அமெரிக்காவுக்குப் போயிருக்கிறாள்'' என்றார், க்ரிப்பன்.

சில நாட்களுக்குப் பின், 'சென்ற இடத்தில், கோராவுக்கு நிமோனியா’ என்று தெரிவித்தார்.

1910 மார்ச் 24. கோராவின் நண்பர்களுக்கு, 'கோரா நேற்றிரவு இறந்து விட்டாள்’ என்று டாக்டர் க்ரிப்பனிடமிருந்து ஒரு தந்தி வந்தது. இரண்டு நாட்களில், பத்திரிகைகளில் 'கோராவுக்குக் கண்ணீர் அஞ்சலி’ என்றும் விளம்பரம் கொடுத்தார்.

மூன்று மாதங்கள் கழித்து, கோராவின் அமெரிக்க நண்பரான நாஷ் என்பவர் க்ரிப்பனைச் சந்தித்தார்.

''கலிஃபோர்னியாவில் விசாரித்தேன். கோரா இறந்ததாக எந்தச் செய்தியும் கேள்விப்படவில்லையே..?''

டாக்டர் அளித்த பதில்களில் நாஷ் திருப்தி அடையவில்லை. கோராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ஸ்காட்லேண்ட் யார்டை அணுகினார்.

ஜூலை 8ம் தேதி ஸ்காட்லேண்ட் யார்டைச் சேர்ந்த துப்பறியும் அதிகாரி வால்டர் ட்யூ டாக்டரை விசாரித்தார்.

''கோரா இறந்ததற்கான மரணச் சான்றிதழ் இருக்கிறதா?'' என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

''உண்மையைச் சொல்கிறேன். தன் காதலன் ப்ரூஸ் மில்லருடன் அவள் ஓடிப் போய்விட்டாள். வெளியே தெரிந்தால், குடும்பத்துக்கே அசிங்கம். அதனால் கோரா இறந்ததாகப் பொய் சொன்னேன்.''

புன்னகையுடன் கைகுலுக்கிவிட்டு வால்டர் ட்யூ விடை பெற்றார். ஆனால், அன்றோடு டாக்டர் க்ரிப்பனின் நிம்மதி தொலைந்தது.

''கோரா இருந்தாலும் பிரச்னை, இல்லாவிட்டாலும் பிரச்னை. அவளது நண்பர்கள், போலீஸ் என்று யாராவது கேள்விகளால் துளைப்பார்கள். பேசாமல் அமெரிக்காவுக்குப் போவோம். அங்கே, அமைதியாக வாழலாம்'' என்று ஈதலிடம் சொன்னார். ஈதல், மறுபேச்சு பேசாமல் அவருடன் கிளம்பத் தயாரானாள்.

யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று, மீசையையும், மூக்குக் கண்ணாடியையும் எடுத்து விட்டு, ராபின்ஸன் என்ற பெயரில் அவரும், அவருடைய இளைய மகன்போல் ஆண் வேடத்தில் ஈதலும் எஸ்.எஸ்.மான்ட்ரோஸ் கப்பலில் பயணம் மேற்கொண்டதுதான் சிக்கலுக்கு வழிவகுத்தது.

அவர்களைக் கப்பலில் மடக்கி, ''உங்கள் இருவரையும் கைது செய்கிறேன்.. கோரா டர்னரின் கொலைக்காக'' என்று புன்னகை மாறாமலேயே டிடெக்டிவ் ட்யூ கூறினார்.

க்ரிப்பன் மீது குற்றம் சுமத்தப்பட்டதுபோல், உண்மையிலேயே அவர் மனைவி கோரா கொல்லப்பட்டாளா? அப்படியே இருந்தாலும், அந்தக் குற்றத்தைச் செய்தது அவள் கணவன்தான் என்று போலீஸ் நிச்சயித்தது எவ்வாறு?

அடுத்த இதழில் தொடரும்..

- குற்றம் தொடரும்