குற்றம் புரிந்தவர்

ஜான் ஃபிலோ ராபின்ஸன் மற்றும் அவரது மகன் ஜான் என்ற பெயர்களில் பயணம் செய்து கொண்டிருந்த டாக்டர் க்ரிப்பனும், அவரது காதலி ஈதலும், நட்ட நடுப்பயணத்தில் கப்பலில் கைது செய்யப்பட்டனர்.
ஆர்வமும், பயமுமாய் மலையுச்சியிலிருந்து பாதாளத்தை நோக்கும் குழந்தையைப்போல், க்ரிப்பனின் மனம் முரண்களும், சிக்கல்களும் நிறைந்த தன் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்க்க நேர்ந்தது.
'உங்கள் மனைவி காணாமல் போனது பற்றி விசாரித்துவிட்டுச் சென்ற சில நாட்களிலேயே, வேறு சில சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, உங்களைச் சந்திக்க வீடு தேடிப் போனேன். வீடு பூட்டியிருந்தது! அக்கம்பக்கத்தில் விசாரித்தேன். 'டாக்டரும், ஈதலும் லண்டனைவிட்டே போய்விட்டனர்..!’ என்ற தகவல் கிடைத்தது. முதல் முறையாக உங்கள் மீது சந்தேகம் பிறந்தது...' என்றார், போலீஸ் அதிகாரி வால்டர் ட்யூ.
டாக்டரின் வீடு, தோட்டம் எல்லாவற்றையும் போலீஸ் படை சோதனை இட்டது. ஏறக்குறைய வீண் சந்தேகம் என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டார், ட்யூ. இறுதியாக குளிர் காய்வதற்கான கணப்பு நெருப்புக்குத் தேவையான கரியைச் சேமித்து வைக்கும் பாதாள அறையைச் சோதனையிடச் சென்றார். அங்கே தரையில், ஒரு கல் சமீபத்தில் பெயர்த்து எடுக்கப்பட்டு, மீண்டும் பொருத்தப்பட்டிருந்ததுபோல் தோன்றியது.
அதைத் தூக்கிப் பார்த்தபோது, போலீஸார் அதிர்ந்தனர். உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த மனித உடல் ஒன்று கடும் துர்நாற்றத்துடன் வெளிப்பட்டது.
எலும்புகள் அற்ற, சதை, தோல், தலைமுடி போன்றவை மட்டுமே கொண்ட அழுகிப்போன சடலம் அது. ஒரு பைஜாமாவில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அந்த மனித மிச்சத்தை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினார்.
'ஆணா, பெண்ணா என்று சொல்ல முடியாத அளவு, எலும்புகள்கூட இல்லாமல் சிதைக்கப்பட்டுள்ளது. ஆனால், சற்றே பருமனான பெண்ணுடையதாக இருக்க வாய்ப்புள்ளது' என்றது மருத்துவ அறிக்கை.
டாக்டரின் காணாமல் போன மனைவி கோராவின் அங்க அடையாளங்களுடன் அந்த உடல் ஒத்துப் போகிறது என்று போலீஸ் முடிவுக்கு வந்தது.
'டாக்டர் க்ரிப்பனுக்கும், அவர் மனைவிக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. மனைவியின் நடத்தை சரியில்லை. கணவனுக்கு திடீரென்று ஓர் இளம் காதலி கிடைத்திருக்கிறாள். மனைவி காணாமல் போகிறாள். அவள் வெளிநாடு போயிருப்பதாகவும், பின்னர் இறந்துவிட்டதாகவும் கணவன் கூறுகிறான். சந்தேகப்பட்டு போலீஸ் விசாரித்தால், அதை மாற்றி வேறு கதை சொல்கிறான். காதலியையும் கூட்டிக் கொண்டு நாட்டை விட்டே தப்பி ஓடுகிறான்.’

வால்டர் ட்யூ ஒவ்வொன்றாகக் கோத்துப்பார்த்தார். 'கோராவைக் கொன்று புதைத்தது டாக்டர் க்ரிப்பன்தான். அதற்கு அவரது காதலி துணை புரிந்திருக்கிறாள்..’ என்ற முடிவுக்கு வந்தார்.
காவல்துறை அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது. டாக்டர் க்ரிப்பன் மற்றும் ஈதல் ஆகியோரது புகைப்படங்கள், அங்க அடையாளங்கள் ஆகியவற்றுடன் நாலா பக்கமும் செய்தி பரவியது. அந்த நாட்களில் விமானப்பயணம் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை. எனவே ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் கப்பல்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸின் வலை தங்களைச் சுற்றி வெகு வேகமாகப் பின்னப்படுவதை அறியாத டாக்டர் க்ரிப்பன், பழைய நினைவுகளைப் புதைத்துவிட்டு, காதலியுடன் கைகோத்துக்கொண்டு, மாற்று அடையாளங்களுடன் நிம்மதியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.
ஆனால் அந்த வயதான 'தந்தை’யும், பெண் சாயல்கொண்டிருந்த அவருடைய இளம் 'மகனும்’, சந்தேகத்துடன் கவனிக்கப்பட்டார்கள். காரணம் காதலன் காதலி உறவுபோல் அவர்களிடையே நிலவிய நெருக்கம். போலீஸ் அனுப்பிய தகவல்கள், அடையாளங்கள் இவற்றைச் சரிபார்த்து, கப்பலின் கேப்டன் கென்டல் அவர்களுக்கு தந்தி கொடுத்துவிட்டார்.
விரைவு ஸ்டீமரில் துப்பறியும் அதிகாரி வால்டர் ட்யூ வந்து சேர்ந்துவிட்டார்.
கைது செய்யப்பட்ட டாக்டர் க்ரிப்பனையும், ஈதலையும் தனித்தனி அறைகளில் அடைத்து போலீஸார் வேறு கப்பலில் இங்கிலாந்துக்கு அழைத்து வந்தனர்.
பயணத்தின்போது ஒரே ஒரு முறை மட்டும், அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். கலங்கியிருந்த அவர்கள் கண்கள் கலந்தன. இருவர் கண்களிலும் காதல் வழிந்தது.
'இவ்வளவு நடந்த பின்பும் என்னை நீ இன்னும் நேசிக்கிறாயா ஈதல்?'
'என்ன நடந்தால் என்ன? உங்கள் மீது நான் கொண்ட காதல் என்றும் அழியாதது.'
இருவரது கண்களும் இவ்வாறு மௌன மொழியில் பேசிக்கொண்டன.
1910-ம் ஆண்டு அக்டோபர் மாதம், லண்டன் நீதிமன்றத்தில் அவர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டி, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது போலீஸ்.
போலீஸ் விசாரணையிலும் சரி, நீதிமன்றத்திலும் சரி, 'நான் குற்றமற்றவன்’ என்றே வாதிட்டார் டாக்டர் க்ரிப்பன்.
'ஒருவேளை அந்தப் பிணம் எனக்கு முன்பு அந்த வீட்டில் இருந்தவர்களால் புதைக்கப்பட்டிருக்கலாம். அது என் மனைவியின் உடல் என்று எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படவில்லை..' என்று டாக்டர் கதறினார்.
ஆனால், சாட்சியங்களும், சந்தர்ப்பச் சூழ்நிலைகளும் டாக்டருக்கு எதிராகவே இருந்தன.
கோராவின் பழைய காதலன் ப்ரூஸ் மில்லர், அவள் தன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவே இல்லை என்று சாட்சி கூறினான்.
'மனைவி காணாமல் போனபின், டாக்டர் அவளைத் தேடவில்லை. அவள் எங்கிருக்கிறாள் என்று தெரிந்துகொள்ளக்கூட முயற்சி எடுக்கவில்லை. பிணம் சுற்றி வைக்கப்பட்டிருந்த பைஜாமாத்துணியில் இருக்கும் கடைப் பெயரை வைத்து விசாரித்தோம். அதே கடையிலிருந்து அதே போன்ற துணியில் தைக்கப்பட்ட உடையை டாக்டர் வாங்கியிருக்கிறார். விசாரணை தொடங்கியதும், டாக்டரும், ஈதலும் தங்கள் உண்மை அடையாளங்களை மறைத்து ஏன் ஊரை விட்டே ஓட வேண்டும்?' என்றது போலீஸ் தரப்பு.
கூடுதலாக, 'இந்தக் கொலையில் டாக்டர் க்ரிப்பனுக்கு அவரது காதலி ஈதலும் உடந்தை' என்றும் போலீஸ் வாதிட்டது.
இது க்ரிப்பனை வெகுவாகக் கலக்கியது.
நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மறுபடி, மறுபடி கூறியதோடு நில்லாமல்.. தன் உயிர்க் காதலி ஈதலை இந்த வழக்கிலிருந்தும், பழியிலிருந்தும் முற்றிலுமாக விடுவிக்க வேண்டி, ஈதலுக்காக ஒரு சிறந்த வழக்கறிஞரை அவர் நியமித்தார்.
'டாக்டர் இந்தக் கொலையைச் செய்தாரா, இல்லையா என்பது வேறு விஷயம்! ஆனால், ஈதலுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. அவளுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. அவள் செய்த ஒரே குற்றம், தான் நேசித்த மனிதரின் சொல்பேச்சைக் கேட்டு, மாற்றுப் பெயரில் கப்பலில் பயணம் செய்தது மட்டுமே..!' என்று வாதிட்டார், ஈதலின் வழக்கறிஞர்.
இந்த விஷயத்தில் டாக்டர் க்ரிப்பன் வெற்றி பெற்றார். ஆம், வழக்கின் முடிவில், ஈதல் நிரபராதி என விடுவிக்கப்பட்டாள்.
ஆனால், 'டாக்டர் க்ரிப்பன் தன் மனைவியைக் கொலை செய்தது நிரூபணமாகியுள்ளது. அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது' என்று தீர்ப்பளித்தது, நீதிமன்றம்.
கண் எதிரே நின்ற தனது மரணத்தைவிட, எந்தவிதப் பழியும், களங்கமும் இன்றி ஈதல் விடுதலையானதே டாக்டருக்கு நிறைவாக இருந்தது.
டாக்டர் சிறைச்சாலைக்குள் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தபோது, ஈதல் சிறைவாயிலில் அவர் நினைவிலேயே தங்கியிருந்தாள்.
உள்ளத்தை உருக்கும் கடிதங்கள் மூலம் அவர்கள் காதல் உயிர்ப்புடன் அங்கு உலவியது.
48 வயதில், க்ரிப்பனின் ஆயுள் முடிவுக்கு வந்தது.
தூக்கு மேடைக்குப் போகும் தருணம் வந்தது.
'எனக்கு இந்த உலகில் கடவுள் அளித்த ஒரே ஆறுதல் ஈதல் மட்டுமே, மரணத்தை முத்தமிடவிருக்கும் இந்தத் தருணத்தில் உலகுக்கு ஒன்றை தைரியமாகச் சொல்வேன். ஈதல் என்னைக் காதலிப்பதுபோல, எந்தக் காலத்திலும், வேறு எந்தப் பெண்ணும், வேறு எந்த ஆணையும் காதலிக்கவே முடியாது..' என்று சிறைக் காவலர்களிடம் கண்ணீருடன் கூறினார் அவர்.
'உங்கள் கடைசி ஆசை என்ன..?' என்று அவரிடம் கேட்கப்பட்டது.
'ஈதலின் புகைப்படங்களும், அவள் எழுதிய காதல் கடிதங்களும் என்னுடன் புதைக்கப்படவேண்டும்' என்றார், டாக்டர் க்ரிப்பன்.
1910 நவம்பர் 23. தூக்குமேடை அந்தக் காதலனைக் காவுகொண்டது.
தன் இதயத்தின் ஆழத்தில் அவரை வைத்துப் பூஜித்து வந்த ஈதல், அவரது நினைவுடன் மட்டுமே வாழ்ந்தாள்.
'ஒரு கண்ணியமான நல்ல மனிதரைத் தூக்கில் தொங்கவிட்டதற்காக, என் மனம் வருந்துகிறது' என்றான், தூக்குக் கயிற்றை முடிச்சிட்டவன்.
ஈதலின் புகைப்படங்களும், கடிதங்களும் அவர் உடலுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டன. அங்கு அழியாக் காதலின் சின்னமாக ஒரு ரோஜாச் செடி நடப்பட்டது.
தன் இதயத்தின் ஆழத்தில் அவரை வைத்துப் பூஜித்து வந்த ஈதல், வேறொரு துணையை நாடாமல், தனிமையில் தன் வாழ்நாளைக் கழித்து மறைந்தாள்.
வழக்கு முடிந்து தீர்ப்பானாலும், ஒரு கேள்வி இன்றுவரை குடைகிறது:
குற்றம் புரிந்தவர் யார்? அன்புக்காக ஏங்கி, தவறான பெண்ணை நேசித்த, டாக்டர் க்ரிப்பனா அல்லது அவரது இளகிய மனதைக் கறையானாய் அரித்துச் சிதைத்த கோரா டர்னரா?
- குற்றம் தொடரும்