மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

மண்ணில் ஒரு மரண தேவதை..!

குற்றம் புரிந்தவர்

ருடம் 1873. தேதி மார்ச் 24.

இங்கிலாந்தில், துராம் சிறைச்சாலை. தூக்கு மேடை நோக்கி, 40 வயதான மேரி ஆன் காட்டன் (Mary Ann Cotton) கொண்டுவரப்பட்டாள். அவளுடைய கால்கள் நடுங்கின. கைகள் முகத்தில் அறைந்துகொண்டு கதறின.

'நான் நிரபராதி' என்ற அவளுடைய அலறல் அங்கு யாரையும் அசைக்கவில்லை. இத்தனைக்கும், சில நாட்களுக்கு முன்புதான் ஒரு குழந்தையைப் பிரசவித்தவள் அவள்.

யாருக்கும் எந்த இரக்கமும் பிறக்காத அளவு அப்படி என்ன குற்றம்தான் செய்தாள்?

சுரங்கப் பணியாளர் ஒருவருக்கு மகளாகப் பிறந்த மேரி, தன் ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தாள். 16-வது வயதில் ஒரு பணக்கார வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். அப்போதே தேவாலயத்தில் பணிபுரிந்தவருக்கும் அவளுக்கும் தொடர்பு இருந்தது என்று ஊர் பேசியது. மூன்றே ஆண்டுகளில் தேவோன் நகருக்கு இடம் பெயர்ந்தாள். 20-வது வயதில் வில்லியம் மௌபரி என்ற தொழிலாளியைக் கைப்பிடித்தாள். மணவாழ்க்கை தொடங்கியது.

அவளுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் அடுத்தடுத்து மரணத்தைத் தழுவின. பின்னர், சுந்தர்லான்ட் என்ற பகுதிக்குக் குடிபெயர்ந்த அவர்களுக்கு மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்களும் இறந்தார்கள். கடைசியாக கணவன் மௌபரியும் போய்ச் சேர்ந்தான்.

எல்லோருடைய மரணத்துக்கும் காரணம் – வயிற்றுக்கோளாறு.

ஆறுதலை நண்பர்களும், உறவினர்களும் வழங்க, மௌபரியின் பேரில் எடுத்திருந்த ஆயுள் காப்பீட்டுத் தொகையாக 35 பவுண்ட்களை இன்ஷூரன்ஸ் கம்பெனி வழங்கியது.

அடுத்து மேரி, ஜியார்ஜ் வுட் என்ற பொறியாளரை மறுமணம் செய்து கொண்டாள். 14 மாதங்களில் கணவன் ஜியார்ஜும் இறந்துபோனான்.

தனித்து விடப்பட்ட மேரி, ஜேம்ஸ் ராபின்ஸன் என்பவரின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். ஜேம்ஸ் மனைவியை இழந்தவர். அவருக்கு மூன்று குழந்தைகள். விரைவிலேயே, மேரி கருத்தரித்தாள். அதனால் ஜேம்ஸ் ராபின்ஸன் அவளைத் திருமணம் செய்துகொண்டார். சில நாட்களிலேயே, அவரது குழந்தைகளும் ஒருவர்பின் ஒருவராக இறந்தனர். அடுத்து, ராபின்ஸனுக்கும், மேரிக்கும் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றும் மரணமடைந்தது. இவர்களுடைய இறப்புக்குக் காரணம் – மீண்டும் வயிற்றுப்போக்கு.

குற்றம் புரிந்தவர்

குழந்தைகளை அடுத்தடுத்து இழந்த வேதனையில், ஜேம்ஸ் ராபின்ஸன் மேரியிடமிருந்து பிரிந்தார். உயிர் பிழைத்த அவருடைய மகள் இன்னொரு தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டாள்.

மேரி, தாய் வீட்டில் வசிக்கத் தொடங்கினாள். அவளுக்கு நர்ஸ் வேலை கிடைத்தது. 10 நாட்கள்கூட ஆகியிருக்காது. ஆரோக்கியத்துடன் இருந்த மேரியின் 54 வயதுத் தாய், திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள்.

அதன் பின்னர், இரு குழந்தைகளுக்குத் தகப்பனாயிருந்த ஃப்ரெட்ரிக் காட்டனுடன் மேரிக்கு தொடர்பு ஏற்பட்டது. மேரி மீண்டும் கருவுற்றாள். ஜேம்ஸ் ராபின்ஸனிடமிருந்து அவள் முறைப்படி விவாகரத்து பெறவில்லை என்று அறிந்திருந்தும், தன் குழந்தையைச் சுமந்த காரணத்துக்காக, மேரியின் நான்காவது கணவனானான், ஃப்ரெட்ரிக். அவர்களுக்கு ராபர்ட் என்ற ஆண்குழந்தை பிறந்தது.

சில நாட்களிலேயே ஃப்ரெட்ரிக்கின் சகோதரி மார்கரட் இறந்துபோனாள். அதன்பின், ஃப்ரெட்ரிக் இறந்தான். மேரியின் மகன் ராபர்ட்டும், ஃப்ரெட்ரிக்கின் ஒரு குழந்தையும் அடுத்தடுத்து இறந்துபோனார்கள். சார்லஸ் என்ற ஃப்ரெட்ரிக்கின் மகன் மட்டும் மிச்சமிருந்தான். தன் ஆயுள் இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்று தெரியாத அந்தச் சிறுவன் மட்டும் மேரியுடன் வாழ்ந்தான்.

இந்தநிலையில், மேரி தன் முந்தைய காதலன் ஜோசப் நட்ராஸ் என்பவனுடன் தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டாள். ஆனால், அவளுடைய சபல மனம் ஓரிடத்தில் நிலைக்கவில்லை.

தான் செவிலியாகப் பணிபுரிந்த மருத்துவமனையில் அம்மை நோயால் தாக்கப்பட்ட ஜான் க்விக் என்ற அரசு அதிகாரிக்கு மேரி பணிவிடைகள் செய்தாள். அவர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிப்போன பின்னரும், அவர் மூலம் கர்ப்பம் தரிக்குமளவு நெருக்கமானாள்.

பழைய காதலன் ஜோசப் நட்ராஸ் கேள்விகள் கேட்டான். இன்னொரு சவப்பெட்டிக்கு வேலை வந்தது. இன்னொரு கல்லறைக்கு இடம் பார்க்க வேண்டியிருந்தது. ஆம், அவனும் விரைவிலேயே பரலோகம் போய்ச் சேர்ந்தான். மேரிக்கு 30 பவுண்டுகள் காப்பீட்டுத் தொகையாகக் கிடைத்தது.

அரசு அதிகாரி ஜான் க்விக்கைத் தன் புதிய துணையாக ஏற்று வாழ மேரி முடிவு செய்தபோது, கடைசியாகக் குறுக்கில் நின்றது, ஏழே வயதான சார்லஸ் மட்டுமே. ஏதோ ஒரு கருணையான தருணத்தில், அவனை அருகில் இருந்த சேவை மையத்தில் கொண்டுவிட முடிவு செய்தாள்.

சமூக சேவகர் தாமஸ் ரைலி என்பவர், வறுமை மற்றும் நோயில் வாடிய மக்களுக்கு உதவியாக, தங்கும் விடுதி, சுகாதார நிலையம் போன்றவற்றை நடத்தி வந்தார்.

'பணத்தட்டுப்பாடு. அதை சமாளிக்க, வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்குவிட விரும்புகிறேன். இவன் என் வளர்ப்பு மகன் சார்லஸ். உங்கள் விடுதியில் சேர்த்துக்கொண்டு உதவ வேண்டும்...' என்று அவரிடம் கோரினாள், மேரி.

சேவை மையத்தை நடத்திவந்த ரைலி அவளை இரக்கத்துடன் பார்த்தார். 'மன்னியுங்கள். விடுதி நிரம்பி வழிகிறது. இடமில்லை, அம்மணி...' என்று அவளைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

சில நாட்கள் கழித்து, அவர் மேரியின் வீட்டைக் கடந்துபோக வேண்டியிருந்தது. கர்ப்பிணியாயிற்றே, நலம் விசாரிக்கலாம் என்று அவளது வீட்டுக்குச் சென்றார்.

'வளர்ப்பு மகன் எங்கே? விளையாடப் போயிருக்கிறானா..?' என்று அன்புடன் கேட்டார்.  

மேரியின் முகத்தில் சோகம்!

'சார்லஸ் இறந்துவிட்டான்' என்றாள் மேரி வருத்தத்துடன்.

ரைலி திடுக்கிட்டார்.

'நான் பார்த்தபோது, சார்லஸ் ஆரோக்கியமாகத்தானே இருந்தான்..?'

'என்ன நேர்ந்ததோ? நிற்காத வயிற்றுப்போக்கு. அவனைக் காப்பாற்ற இயலவில்லை..' என்று மேரி கண்ணீர் சிந்தினாள்.

தன் அனுதாபங்களைத் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார், ரைலி. ஆனால், நேராக காவல் நிலையத்துக்குச் சென்றார்.

'தன் வாழ்க்கைக்கு குறுக்கே நிற்கிறான் என்று வளர்ப்பு மகனை விடுதியில் சேர்க்க முயன்றாள். முடியவில்லை. சில நாட்களிலேயே, அவன் இறக்கிறான்! இதில் ஏதோ தப்பு நடந்திருக்கிறது' என்று மனதில் பட்டதைக் காவலர்களிடம் தெரிவித்தார்.

சார்லஸின் வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கில்பர்னுக்கும் சார்லஸின் மரணச் செய்தி திடுக்கிடலாக இருந்தது.

புதைக்கப்பட்ட சிறுவனின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. தீவிரமான பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறுவன் சார்லஸின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றில் ஆர்ஸனிக் என்னும் கொடிய விஷத்தின் அறிகுறிகள் தென்படுவதாக பரிசோதனை முடிவுகள் அறிவித்தன.

காவல் துறையினர் மேரியின் கடந்த காலத்தை ஆராய்ந்தனர். மேரி சென்ற இடமெல்லாம், ஆட்டுக்குட்டிபோல் மரணமும் தொடர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.

மேரி கைது செய்யப்பட்டாள். சார்லஸை விஷமிட்டுக் கொன்ற குற்றத்துக்காக, அவள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

போதுமான மருத்துவர்களும், தரமான சிகிச்சைகளும், சுகாதாரமானச் சூழலும், அரசின் தீவிர கண்காணிப்பும் இல்லாத காலம். மேரியின் குடும்ப உறுப்பினர்களின் மரணங்கள், வயிற்றுக் கோளாறுகளின் காரணமாகவே ஏற்பட்டிருந்த போதும், சந்தேகம் எழாமலேயே மேரி தப்பித்து வந்திருந்தாள்.

பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வீடுகளில் வைப்பதும் அப்போதெல்லாம் இயல்பான நிகழ்வாகவே இருந்தது. தவிர, ஒரு நர்ஸாக பணிபுரிந்ததால், சந்தேகம் எழுப்பாமல் ஆர்ஸனிக்கை வாங்கவும் மேரியால் சுலபமாக முடிந்திருந்தது.

பூமிக்குக் கீழ், நிரந்தர உறக்கத்துக்குப் போயிருந்த பல உடல்கள் வெளியே கொண்டுவரப்பட்டு, மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவுகள் மேரிக்கு எதிராக அமைந்தன.

'மேரிக்கு முதல் திருமணம் ஆன நேரத்திலிருந்து, கடந்த 20 ஆண்டுகளில், அவளுக்கு நெருக்கமான 21 பேர் ஒரேவிதமாக மரணமடைந்திருக்கின்றனர். காலமானவர்களின் ஆயுள் காப்பீட்டுத் தொகை எல்லாம் மேரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேரியின் மூன்றாவது கணவர் ஜேம்ஸ் ராபின்ஸன் காப்பீடு எடுக்க மறுத்ததால்தான் உயிர் பிழைத்தார். நான்காவது கணவன் ஃப்ரெட்ரிக்கின் சகோதரி மார்கரட்டின் வங்கிக் கணக்கில் இருந்த பணமும் அவள் இறந்தபின், மேரிக்கு வழங்கப்பட்டது. தன் குழந்தைகள், பிறர் குழந்தைகள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல், தன் சொகுசு வாழ்க்கைக்குத் தடையாக உள்ளவர்கள் என்று கருதியவர்களை எல்லாம் பயங்கரமான சுயநலத்துடன் மேரி விஷம் வைத்துக்கொன்றாள்' என்று காவல் துறை அடுக்கடுக்காக அவள் மீது குற்றம் சாட்டியது.

1873 மார்ச் 5. நீதிமன்றத்தில் மேரி ஆஜர்படுத்தப்பட்டபோது, அவளைக் காண மக்கள் திரளாகத் திரண்டார்கள்.  'மரண தேவதை!’ என பத்திரிகைகள் அவளை வர்ணித்தன.  

வழக்கு விசாரணையின்போது, சார்லஸின் மரணத்துக்கு முன் மருந்துக் கடையில் மேரி, ஆர்ஸனிக் என்ற விஷத்தை வாங்கியதற்கான ஆதாரத்தை முன்வைத்தது போலீஸ்.

'மூட்டைப் பூச்சிகளை ஒழித்துக்கட்ட வாங்கிய பூச்சிக்கொல்லி அது..' என்று மேரி வாதிட்டாள். 'கர்ப்பமாயிருக்கிறேன். கருணை காட்டுங்கள்..' என்று கதறினாள்.

அவளது கதறல் நீதிமன்றத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவள் தரப்பில் சாட்சி சொல்லவும் யாரும் முன்வரவில்லை.

நீதிபதி, அவளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

சிறையிலிருந்தபோது, பத்திரிகைகளுக்கு தான் நிரபராதி என்று மேரி கடிதத்துக்கு மேல் கடிதமாக எழுதிப் போட்டாள். யாரும் பொருட்படுத்தவில்லை.

சிறையிலேயே அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை ஒரு தம்பதியருக்கு தத்து கொடுக்கப்பட்டது.

இறுதியில்... தூக்குமேடையில், வெள்ளைத் துணி கொண்டு அவள் முகம் மூடப்பட்டது. கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டப்பட்டது. தூக்குமேடை அவளை இரக்கமின்றி காவுகொண்டது.

உயிர்களைப் பேண வேண்டிய பெரும் பொறுப்பு உள்ள ஒரு செவிலி இரக்கமற்ற தொடர் கொலைகாரியாக இங்கிலாந்தின் குற்றப்பக்கங்களில் பதிவாகிவிட்டாள்.

- குற்றம் தொடரும்