தப்பித்தால் தப்பில்லை..!

பொற்கோயிலில் நடந்த தாக்குதலுக்காக சீக்கிய மெய்க்காப்பாளரால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. இதை எதிர்த்து, பஞ்சாபில் சீக்கிய போராட்டக் குழுக்கள் பெருகின. முதல்வர் பியான்ட் சிங்கை, 'காங்கிரஸின் கைக்கூலி’ என விமர்சித்தன.
இந்தப் பின்னணியில், 1995. ஆகஸ்ட் 31. மாலை ஐந்து மணி. சண்டிகரில், பஞ்சாப் தலைமைச் செயலகம். அன்றைய பணிகள் முடிந்து, முதலமைச்சர் பியான்ட் சிங் புறப்பட்டார்.
போலீஸ் ஆபீஸர் திலாவர் சிங் பாபர், குண்டு துளைக்க முடியாத காரின் கதவைத் திறந்து பிடித்தார். முதல்வர் காருக்குள் அடியெடுத்து வைத்த நேரம், பெரும் சப்தத்துடன் பாதுகாப்பு ஆபீஸர் திலாவர் சிங் மனித வெடிகுண்டாக வெடித்தார். முதலமைச்சரும் இன்னும் 17 பேரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
பாபர் கல்சா இ்ன்டர்நேஷனல் என்ற சீக்கிய போராட்டக் குழுவைச் சேர்ந்த ஜக்தர் சிங் ஹவாரா என்பவனே இந்த மனித குண்டுவெடிப்புக்கு முழுவதுமாகத் திட்டமிட்டுத் தந்தவன். ஹவாரா, வெடிகுண்டு விஞ்ஞா னத்தில் பயிற்சி பெற்றிருந்தவன். திலாவர் மனித வெடிகுண்டாகச் செயல்படுவதற்கான பெல்ட்டைத் தயாரித்தவன். இந்தச் சதியில் உடந்தையாக இருந்த பியோரா, தாரா ஆகியோரும் பிடிபட்டனர்.
முதல்வர் கொல்லப்பட்டு, நான்கு மாதங்கள் கழித்து, ஜலந்தரில் ஹவாரா கைது செய்யப்பட்டான். அவனையும் சேர்த்து இன்னும் ஒன்பது பேர் மீது செக்ஷன் 302, 120-பி ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. ஹவாரா, புரைல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான்.
சிறையில் இருந்தபடியே தீவிரவாதிகளுக்குத் திட்டங்கள் தீட்டிக் கொடுத்தான் ஹாவாரா. 1997. பட்டிண்டாவில் ரயிலில் பாம் வெடித்தது. 38 பயணிகள் உயிர் இழந்தார்கள். பஞ்சாபில் உள்ளூர்த் தீவிரவாதிகளை உக்கிரமாக எதிர்த்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்பஜன் சிங். அவரும் கொல்லப்பட்டார்.
சிறைப்பட்டிருக்க ஹவாரா விரும்பவில்லை. தோழர்கள் இனிப்புகளில் ஒளித்துவைத்து, கொண்டுவந்த வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, சிறைச்சாலையின் சுவரைத் தகர்க்க முயற்சி செய்தான். இயலவில்லை. அடுத்து, சிறைச்சாலையின் சமையலறையிலிருந்து ஒரு சுரங்கம் வெட்டி, தப்பிக்க முனைந்தான். கடைசி நிமிடத்தில் பிடிபட்டான்.
1998. மே மாதம். அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான சி.ஐ.ஏ ஒரு முக்கிய ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டது.
'சண்டிகரிலிருந்து செய்யப்பட்ட சில தொலைபேசி உரையாடல்களைக் குறுக்கிட்டதில், பஞ்சாப் முதல்வர் கொலை வழக்கில் சிறைப்பட்டவர்கள் வசம் பல கிலோ கிராம் வெடிமருந்துப் பொருட்கள் இருப்பதாகத் தெரிகிறது...'
குறிப்பிட்ட சிறை அறைகளில் தேடியதில், அதேபோல் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன. உரிய நேரத்தில் கிடைத்த எச்சரிக்கையால், பேராபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. 2003, ஆகஸ்ட். புலனாய்வுத் துறை தலைமை அதிகாரி, பஞ்சாப் அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்.

'சிறையில் ஜக்தர் சிங் ஹவாரா மாபெரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அந்தச் சதிவேலை என்ன என்று குறிப்பிடும் அளவு விவரங்கள் கிடைக்கவில்லை. கவனமாயிருக்கவும்.’
காவல் துறை அதிகாரிகள் அவசரமாகக் கூடினர். பேசினர். 'ஹவாராவும் அவன் தோழர்களும் எப்போதும் உற்சாகமாகக் காணப்படுகிறார்கள். மற்றபடி வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. சதி என்னவென்று தெரியாமல் என்ன செய்வது? 100 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட பிணத்தைப் பற்றி விசாரணை நடத்தச் சொல்வதுபோல் இருக்கிறது...' என்று ஒரு போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
எல்லோருக்கும் வேறு முக்கிய வேலைகள் இருந்ததால், புலனாய்வுத் துறையின் எச்சரிக்கை கிடப்பில் போடப்பட்டது.
2004. ஜனவரி 21. அதிகாலை. மொத்தம் நான்கு கண்காணிப்புக் கோபுரங்கள் கொண்ட புரைல் சிறைச்சாலையில் ஹவாராவைக் காணவில்லை. அவனுடன் அடைக்கப்பட்டிருந்த பரம்ஜித் சிங் பியோரா, ஜக்தர் சிங் தாரா மற்றும், தயாசிங் என்ற ஒரு கொலைக் கைதியும் காணாமல் போயிருந்தனர்.
அவர்களுடைய சிறை அறையின் தரையில் எட்டடி ஆழத்துக்கு மாபெரும் பள்ளம் வெட்டப்பட்டிருந்தது. அதற்குள் இறங்கிப் பார்த்தால், பூமிக்கடியில் 108 அடி நீ........ளச் சுரங்கம்!
அந்தச் சுரங்கப் பாதையின் வழியே தவழ்ந்து போனால், அரண்கள் போன்ற சிறைச்சாலையின் இரு பெரும் சுவர்களைத் தாண்டி வெளியேறும் இடம் வந்தது. அந்தப் பெரும் சுவர்களுக்கு இடையில், இரண்டு உயரமான கண்காணிப்பு கோபுரங்கள். அங்கே எப்போதும் பணியில் இருக்கும் ஆயுதம் ஏந்திய காவலர்கள். வேடிக்கை என்னவென்றால், கண்காணிப்பு கோபுரத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில் சுரங்கத்திலிருந்து வெளியேறும் இடம். அது கைதிகள் பயிற்சிகள் செய்யும் பரந்த மைதானம்.
சுரங்கத்திலிருந்து அங்கே வெளிப்பட்டு, அங்கிருந்து கிட்டத்தட்ட 60 அடி தொலைவில் இருந்த வெளிச்சுவர் வரை யார் கண்ணிலும் படாமல் ஓடி, 12 அடி உயர பாதுகாப்புச் சுவரில் ஏறி, நால்வரும் இருளில் கலந்திருந்தார்கள்.
விஷயம் வெடிகுண்டாய் வெடித்தது. 'ஸ்பூனையும், அலுமினியத் தட்டையும் வைத்து, எட்டடி ஆழமும், 110 அடி நீளமும்கொண்ட சுரங்கத்தைக் குடைய முடியுமா? ஆயுதங்களே இல்லாமல், ஒலியே எழுப்பாமல் இப்படியொரு பாதாளச் சுரங்கத்தைக் குடைவது சாத்தியமா? தோண்டி எடுத்த மண்ணை சட்டைப் பாக்கெட்டிலா மறைத்து எடுத்துப் போனார்கள்?' என்று கேள்விகள் வீசப்பட்டன.
பத்திரிகையாளர்களையும் கேள்விகளையும் சந்திக்க முடியாமல் சிவந்துபோன முகங்களுடன் சிறை அதிகாரிகள் திணறினர்.
ஒவ்வொன்றாக, உண்மை வெளிப்பட்டது. ஹவாரா, தன் சிறை அறையில் தரையில் பல மாதங்களாகத் தோண்டப்பட்ட சதுரத்தின் மீது படுக்கையை விரித்து அதை மறைத்து வந்திருக்கிறான். பூமியைத் தோண்டும்போது ஒலி வெளியே கேட்காமல் இருக்க, தொலைக்காட்சியின் ஒலியை உரக்க வைத்திருக்கிறான். உடற்பயிற்சி செய்யும் அறையிலிருந்து இருபுறமும் எடைகளை மாட்டும் இரும்புக் கம்பியை எடுத்து வந்து, தோண்டுவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை கக்கூஸில் கரைத்திருக்கிறார்கள். டர்பன் துணிகளை முறுக்கி கயிறுகளாகப் பயன்படுத்தி சுவரில் ஏறியிருக்கிறார்கள்.
சிறைச்சாலையில் நடத்தப்பட்ட ஆய்வுகள், பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தின. அபாயகரமான தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேரும், சாதாரண கைதிகள் போல ஒரே அறையில் ஒன்றாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். தொலைக்காட்சி, மொபைல் போன் என்று எல்லா வசதிகளும் அவர்களிடம் இருந்தன. பாகிஸ்தான் உளவாளி, அபித் மெஹ்மூத்கூட ஹவாராவை அடிக்கடி சந்தித்ததாக ரெக்கார்டுகள் சொல்லின.

அடுத்த வருடம் மே மாதம் 22-ம் தேதி. இரவு 8.15. டெல்லியில் லிபர்ட்டி என்ற தியேட்டரில், இருக்கைக்குக் கீழே வைத்த குண்டு வெடித்தது. 20 நிமிடங்கள் கழித்து, டெல்லி சத்யம் தியேட்டரில் டாய்லெட்டில் குண்டு வெடித்தது. இருவர் இறந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஒன்பது நாட்கள் கழித்து, பல்வீந்தர் சிங், மற்றும் ஜகன்னாத் யாதவ் என்ற இருவரின் செல்போன் அழைப்புகளை வைத்து டெல்லி போலீஸ் அவர்களைக் கைது செய்தது. தியேட்டர் குண்டுவெடிப்புக்குப் பின், ஹவாராவால் பயிற்சி கொடுக்கப்பட்ட நான்கு நபர்கள் செயல்பட்டது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட செல்போன்களில் கிடைத்த எல்லா உரையாடல்களும் கேட்கப்பட்டன.தேடப்பட்டவர்களில் வதாவா என்பவன் ஹவாராவைத் தொடர்புகொண்டான். ''எனக்குப் பாதுகாப்பான இடம் வேண்டும்.'
'நீ பாட்டியாலாவுக்கு வா'' உறுதி தந்தது, ஹவாராவின் குரல்.
பாட்டியாலாவில் காத்திருந்த ஹவாராவை டெல்லி போலீஸ் சுற்றி வளைத்தது.
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் விசித்திரமான சட்டப்பிரிவுகளின் காரணமாக, கடைசி நிமிடத்தில் அவனுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது, டெல்லி திஹார் சிறையில் ஆயுள்கைதியாக காலத்தை நகர்த்துகிறான், ஹவாரா.
- குற்றம் தொடரும்
அமைச்சர்களுக்கு நன்றி!
கடிதங்கள்
சுதந்திரப் போராட்டம் குறித்த அரைகுறை ஞானஸ்தர்களின் விபரீத வில்லங்கமே 'கோட்சே’வுக்கு சிலை. சிவராசன் சிலைக்கு அனுமதிப்பார்களா என்ற நியாயமான கேள்வி கேட்ட விடுதலையார்(!) 'தாலிபன்கள்கூட தங்கள் செயலுக்கு நியாயம் வைத்திருக்கிறார்கள்’ என்றது அநியாயம்.
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.
நேர்மையோடும் துணிச்சலோடும் கிரானைட் மாஃபியாக்கள்மீது நடவடிக்கை எடுக்க நம்பிக்கையோடு போராடும் சகாயத்தின் பயணத்துக்கு ஒரு ராயல் சல்யூட்!
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.
'சாமி... கருணை காமி!’ கட்டுரை ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் பயன் உள்ளது. அதாவது ஆன்மிக சுற்றுலாவுக்கு தமிழகத்தில் உள்ள கோயில்களின் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு நன்றி.
- செ.விஸ்வநாதன், சென்னை-02.
ஒரு கம்ப்யூட்டரும் இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும், யாரைப்பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற ஆபத்தான நிலை. இன்று ஒரு செல்போன் இருந்தாலே அதை செய்துவிடலாம் என்பதைப் படித்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்!
- சி.கொ.தி.முருகேசன், கோபி.