நாயுடன் நடந்தால், நமனுடன் சந்திப்பு..!

நவம்பர் 15. 1997. இங்கிலாந்து. தேவோன் நகரத்தின் புறநகர்ப் பகுதியான எக்ஸ்விக்.
பள்ளி மாணவி கேத் புஷெல், பக்கத்து வீட்டு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
'என்னடா, வாக் போகணுமா?' என்று நாயை முத்தமிட்டுவிட்டு, தன் அப்பாவிடம் ஓடினாள். 'அப்பா, டாகியோட வாக் போறேன்.'
''இருட்டறதுக்குள்ள வந்துரு'' என்றார், அவளுடைய அப்பா, ஜெரேமி.
''20 நிமிஷத்துல வீட்டுல இருப்பேன்.''
நாயை இழுத்துக்கொண்டு கேத் வீட்டைவிட்டு வெளிப்பட்டாள். 20 நிமிடங்கள், 40 நிமிடங்களாயின. 80 நிமிடங்களாயின. இரண்டு மணி நேரம் ஆனது. கேத் திரும்பி வரவில்லை. அவள் அப்பாவுக்குக் கவலை வந்தது. பக்கத்து வீட்டில் விசாரித்தார். நாய் இருந்தது. மகளைக் காணவில்லை. பயம் வந்தது. போலீஸை அழைத்தார்.
அவருடைய வீட்டிலிருந்து 1,000 அடி தொலைவில் புதருக்குப் பின்னால், இரவு ஏழரை மணியளவில் கேத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய தொண்டை மிகக் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டிருந்தது. அவளுடைய உடைகள் அதிகம் கலைக்கப்படாமல் இருந்தன.
போலீஸ் வாகனங்கள் குவிந்தன. 100-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் விசாரணையைத் தொடங்கினர்.
எந்தத் தவறும் செய்திருக்க முடியாத 14 வயதுச் சிறுமியை குரூரமான முறையில் ஒருவன் கொன்று போட்டுவிட்டுத் தப்பித்தது, பொதுமக்களை திடுக்கிட வைத்தது.
''ரத்தம் தோய்ந்த உடைகளுடன் ஒருவன் ஓடியதைப் பார்த்தேன்'' என்று ஒரு மூதாட்டி சொன்னார். வேறு சிலரும் அதையே சொன்னார்கள். ஆனால், யாராலும் தெளிவான அடையாளங்கள் கொடுக்க முடியவில்லை.

''கொலை செய்தவன் உறுதியானவனாக இருக்க வேண்டும். கேத்தைத் திமிறவிடாமல் பின்னாலிருந்து பிடித்துக்கொண்டு கழுத்தை வெட்டியிருக்கிறான்'' என்றார், உடலை ஆராய்ந்த போலீஸ் அதிகாரி.
எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் போலீஸ் தவித்தபோது, கரோல் எவரெட் என்ற பெண்மணி போலீஸைத் தேடிவந்தாள்.
''நான் சொல்வதை நம்புவது கடினம். கேத் கொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்தினம். நடு ராத்திரியில் மூச்சுத் திணறி விழித்துக்கொண்டேன். என் தொண்டையில் ஒரு கத்தியின் கூரான முனை அழுத்திப் பதிந்திருப்பதுபோல உணர்ந்தேன். அது கொடும் கனவு. கனவில் நான் பார்த்த மனிதன், ஒரு சிறுமியைத் தாக்கினான். சிறுமிக்கு நீளமான, கூந்தல் இருந்தது. மறுநாள் அதேபோன்ற ஒரு கொலை நடந்திருப்பது எனக்குத் திடுக்கிடலாக இருக்கிறது.''
எந்தத் துப்பும், அடையாளமும் கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்த போலீஸ், இந்தக் கனவை ஒதுக்க முடியாமல் தவித்தது.
'அவனுடைய அடையாளங்கள்?'
'20 வயது இருக்கலாம். உறுதியான உடலமைப்பு. அகலமான தோள்கள். சராசரியான உயரம். நினைவில் இருந்ததை வைத்து அவன் முகத்தை வரைந்திருக்கிறேன்...' என்று ஒரு கோட்டோவியத்தை கரோல் கொடுத்தாள்.
''என் அமானுஷ்ய சக்திகள் கொண்டு மேலும் சில விவரங்கள் தருகிறேன். வாகனங்கள் திருடி, போலீஸிடம் அவன் சிக்கியிருக்கலாம். பெயர் 'எம்’ என்ற எழுத்தில் தொடங்கக்கூடும். நகரத்தை ஒட்டி ஓடும் எக்ஸ் நதியின் அருகாமையில்தான் அவனுடைய குடியிருப்பு இருக்க வேண்டும்.''
'அவன் எப்போதும் ஏதோ யோசனையில் இருப்பவன். சோம்பேறி. கட்டுப்பாடுகள் பிடிக்காது. அமைதியில்லாத குடும்பப் பின்னணி. பெற்றோர் சண்டை போட்டுப் பிரிந்திருப்பார்கள். அம்மாவின் ஆதிக்கத்தில் வாழ்பவன். காதலிகளால் நிராகரிக்கப்பட்டவன். யாரிடமும் மரியாதை காட்டத் தெரியாது. கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருக்கக் கூடும். அயர்லாந்துடன் தொடர்புள்ளவன் என்றும் தோன்றுகிறது.''
அந்த ஓவியத்தை கேத்தின் பெற்றோர், கேத்துக்கு நெருக்கமானவர்கள், அந்தப் பகுதியில் வசித்தவர்கள் ஆகியோரிடம் காட்டி விசாரித்தார்கள். நகரம் முழுவதும் கேத்தின் போஸ்டர்கள் கொலைகாரனைப் பற்றி துப்பு கொடுக்கச் சொல்லிக் கெஞ்சின. பயனுள்ள துப்பு கொடுப்பவருக்கு 20,000 பவுண்டுகளை பரிசளிக்க லண்டனைச் சேர்ந்த ஒரு வணிகர் முன்வந்தார். குற்றவாளி பிடிபட்டால், கூடுதலாக 5,000 பவுண்டு பரிசளிப்பதாக ஒரு தேசிய நாளிதழ் அறிவித்தது. 11 மாதங்கள் கழித்து, 1998. அக்டோபர் 20.
கான்வால் என்ற இடத்தில் லிண்டா ப்ரையன்ட் என்ற நடுத்தர வயதுப் பெண்மணி தன்னுடைய நாயை வாக் அழைத்துப் போனாள். விரைவிலேயே, ஒரு சுற்றுலாப் பயணியால் புதரில் அவளுடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்தது. முதுகு, கழுத்து, தொண்டை என்று பல பகுதிகளில் லிண்டா கத்தியால் குத்தப்பட்டிருந்தாள். அவள் கடைசிவரை தன் உயிருக்காகப் போராடியிருக்கிறாள் என்பது தெரிந்தது.
லிண்டா இரண்டு மகள்களின் தாய். அவள் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, லிண்டா யாரோ ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் இருந்தனர். அவர்கள் கொடுத்த அடையாளங்களை போலீஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. ஆனால், லிண்டாவைக் கொலை செய்தவனோ, கொலை ஆயுதமோ கடைசிவரை கிடைக்கவில்லை.
கரோல் உடனடியாக காவல் துறையைத் தொடர்புகொண்டாள். 'கேத் புஷெலைக் கொலை செய்தவனே இந்த முறையும் தாக்கியிருக்கிறான்.. அவனுக்கு சர்ச் குறித்தும், மதம் குறித்தும் சில அழுத்தமான நம்பிக்கைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. சர்ச் அல்லது இடுகாடு அருகில் இதேபோன்ற இன்னொரு தாக்குதல் நிகழும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது'' என்றாள்.
ஓர் உள்ளுணர்வை நம்பி அறிவிப்புகள் வெளியிட்டால், சமூகத்தில் தேவையற்ற பீதி கிளம்பும் என்று கருதியதால், போலீஸ் அறிவிக்காமல் தவிர்த்தது. போலீஸிடம் கரோல் வேறொரு கனவையும் பகிர்ந்துகொண்டாள்.
'மூன்று வாரங்களுக்கு முன் கேத் போன்ற சிறுமி என் கனவில் வந்தாள். அவளைக் கொலை செய்தவன் தலையில் முக்காடு போட்டிருந்தான் என்று குறிப்பால் உணர்த்தினாள். சிவப்பும், நீலமும் கலந்த ஸ்கார்ஃப் அது.. அவன் ஓட்டிவந்த கார், சிவப்பு நிறம்.''
''கொலையாளியின் நெருக்கமான உறவினர்கள் அவனைப் பாதுகாப்பதற்காக விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்தீர்களேயானால், மேற்கொண்டு கொலைகள் நடக்கக் கூடாது என்பதற்காகவாவது அவனைக் காட்டிக் கொடுங்கள்..' என்று கேத்தின் குடும்பத்தினர், தொலைக்காட்சிகளில் உருக உருக கோரிக்கை வைத்தனர்.
இன்னும் இரண்டு வருடங்கள் போயின. ஜூலை, 2000.
கார்மன் பாக்ஸ்வெல் என்ற 46 வயதுப் பெண்மணி அவசரமாக போலீஸை அழைத்தாள். அவள் உடைகள் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தன. கிலியில் மூச்சிரைக்கப் பேசினாள்.
'என் அல்சேஷன் நாய் டாப்ஸியுடன் வாக் போனேன். நீல நிற வால்வோ காரிலிருந்து ஒருவன் இறங்கினான். கையில் கூர்மையான கத்தியுடன் என்னைத் தொடர ஆரம்பித்தான். 'ஐயோ, என்னைக் கொல்லப் போகிறான்..!’ என்று, அச்சத்துடன் நாயுடன் வேகமாக நடந்தேன். அவனும் அதே வேகத்தில் என்னைப் பின்தொடர்ந்தான். டாப்ஸி, ஆபத்தை உணர்ந்துவிட்டது. அவனைப் பார்த்து ஆக்ரோஷமாகக் குரைத்தது. அவன் மீது பாயவும் தயாராக இருந்தது. கத்தியால் டாப்ஸியின் கழுத்தையும் சீவிவிட்டு, என்னையும் வெட்டுவான் என்று பயந்தேன். ஆனால், டாப்ஸியின் ஆக்ரோஷம் கண்டு அவன் சட்டென்று திரும்பி விலகிவிட்டான். என்னுடைய டாப்ஸி இல்லாதிருந்தால், இந்நேரம் பிணமாகியிருப்பேன்..'
'அவன் எப்படியிருந்தான்..?'
'சருமம் வெள்ளை நிறம். 40 வயது. அடர்பச்சையில் பேன்ட். நீல பனியன்.'
போலீஸ் அதிகாரிகள் குவிந்தனர். ஹெலிகாப்டர் வைத்து அந்தப் பிரதேசமே சல்லடை போட்டு தேடப்பட்டது. ஆனால், அவள் குறிப்பிட்ட நபரோ, காரோ கிடைக்கவில்லை.
பின்னணியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோல் குறிப்பிட்டதுபோல், ஓர் இடுகாடு இருந்தது மட்டுமே போலீஸுக்கு வியப்பாயிருந்தது.
நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கேத்தின் கொலை வழக்கில் ஈடுபட்டனர். 5,000 கைரேகைகள் ஒப்பிடப்பட்டன. சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து டி.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து கேத் கொல்லப்பட்ட அதே பகுதிக்கு ஆவிகளைத் தொடர்புகொள்ளக்கூடிய ஊடகர்கள் சிலர் அழைத்துவரப்பட்டனர். கேத் நாயுடன் நடந்த அதேபோன்ற மாலைப் பொழுதில், அதே பாதையில் அவர்கள் நடந்தனர். தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை உரக்கச் சொன்னார்கள்.
'ஆல்கஹால் வாசம் வீசுகிறது. இதோ இங்கே நாய் மோப்பம் பிடித்துக்கொண்டு நிற்கிறது..' என்றாள், ஒருத்தி.
'யாரோ என்னைப் பின்தொடர்கிறான்..' என்றான், அடுத்தவன்.
'அசுத்தமான உடைகள் அணிந்திருக்கிறான். மனநலம் சரியில்லாதவன்..' என்றாள் மூன்றாமவள்.
'கேத்தைவிட ஓரடியாவது உயரம் அதிகம். திடீரென்று பின்னாலிருந்து அவளை வலுவாகப் பற்றுகிறான்..'
'இளம் வயதில் அவனுக்கு நெருக்கமான யாரையோ நாய்க்கடிக்கு பலி கொடுத்தவன்..'
'கேத்தின் கழுத்தில் வெட்டியதும், அவளை அப்படியே கிடத்திவிட்டு, தப்பித்து ஓடுகிறான்..'
'ஆனால், அவன் முகம் தெரியவில்லை..'
அந்த ஊடகர்களாலும் கேத் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கனவில் குறிப்புகள் கிடைக்கப்பெறுபவர். ஆவிகளுடன் பேசும் ஊடகர்கள். தடயங்களை வைத்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் காவலர்கள். இவ்வளவு பேர் முயன்றும், இன்றுவரை கேத் புஷெலின் கொலையாளி யார் என்று அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை என்பதே நிதர்சனம்.
- குற்றம் தொடரும்
கடிதங்கள்
கொடூரமான விபரீதம்!
ரஜினியின் பெயர் சொல்லி கோடிகளை அள்ளியது அந்தக் காலம். இப்போ, தெருக்கோடியில் 'லிங்கா’ தள்ளியது இந்தக் காலம். நஷ்டத்தில் கண்ணீர் வடிக்கும் விநியோகஸ்தர்களின் கஷ்டத்தை துடைக்க வேண்டும். ஏமாறும் ரசிகர்களுக்கும் இனி நல்லசேதி சொல்லவேண்டும்!
- காந்திலெனின், திருச்சி.
டெங்குவை மர்மக் காய்ச்சல் என்றாலும் ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்றாலும் ஏற்றுக் கொள்ளும் ஏமாளிகள்தானே நாம்... மற்ற துறைகளைப் போலவே சுகாதாரத் துறையும் தன் பங்குக்கு மக்களை ஏமாற்றுவது கொடூரமான விபரீதம்!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
காமராஜரின் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜரின் சிதிலமடைந்த ஆளுயர அற்புதமான ஓவியத்தின் முன்பு குமுறிய ஓவியர் வீரசந்தானத்தின் மனக்குமுறல்கள் வேதனைக்குரியன. காமராஜர் உட்பட மாமனிதர்களின் வரலாற்று ஆவணங்களை பத்திரப்படுத்தி வைப்பது தமிழக அரசின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.
ஜெயின் எதிர்காலம் ஒரு நீதிபதியின் கையிலே இருக்கிறது என கூறுவதே தவறு. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். இங்கு சலுகைகள் கிடைக்காது. 'ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என்ற பாடல் வரியே இதற்கு சரியான விடை.
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)