மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

வாழ்விலும், சாவிலும் ஒன்றாக..!

குற்றம் புரிந்தவர்

மெரிக்கா. டல்லாஸ் நகரம். 1929.

போனி எலிஸபெத் பார்க்கருக்கு 18 வயது. காண்பவரை மயக்கும் அழகு. ஒரு மாலை நேரத்தில் தோழியின் வீட்டில் நடந்த விருந்தில், கிளைட் பர்ரோவைச் சந்தித்தாள். அவனைப் பார்த்த கணத்திலேயே இதயத்தில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. அறிமுகங்கள் முடிந்தன.

''பள்ளி நண்பன் ராயைக் காதலித்தேன். 16 வயதிலேயே எங்கள் கல்யாணம் முடிந்தது. ராய் திருடன். ஏமாற்றுக்காரன். குடிகாரன். என் மீது வன்முறை காட்டத் தயங்காதவன். திருட்டுக் குற்றத்தில் மாட்டி, இப்போது சிறையில் இருக்கிறான். கணவன் உயிரோடிருந்தும் விதவைபோல் உணர்கிறேன்'' என்றாள், போனி.

கிளைட் வசீகரமாகப் புன்னகைத்தான். ''விவசாயியின் மகன் நான். கிதார் மற்றும் சாக்ஸஃபோனை இசைக்கத் தெரியும். இசையில் பெரும் விருப்பம்'' என்றான்.

போனி அவனை ஏக்கத்துடன் பார்த்தாள். ''ஐயோ, என்னுடைய கனவும் சினிமாவில் பாடகியாக அறியப்பட வேண்டும் என்பதே.'' மனம்விட்டுப் பேசினார்கள். மது அருந்தினார்கள். விருந்து முடிந்தபோது, 20 வயது கிளைடும், 18 வயது போனியும் பருவம் விரித்த காதல் வலையில் விழுந்திருந்தார்கள்.

நெருங்கிப் பழகத் துவங்கியதும்தான், இசை தவிர, கிளைடின் இன்னோர் ஆர்வம் சொகுசுக் கார்களைத் திருடுவது என்று போனிக்குப் புரிந்தது. ஆனாலும் அது அவள் காதலை மாற்றவில்லை.

குற்றம் புரிந்தவர்

முதல் முறையாக போனியின் வீட்டுக்கு கிளைட் வந்த அதே இரவில் திருட்டுக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டான். அவனுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கிளைடின் மீது கொண்டிருந்த மோகத்தால் போனி, அவன் சிறையில் இருந்து தப்பிக்க உதவினாள். வெளியே வந்த கிளைட் மீண்டும் திருட்டில் ஈடுபட்டான். போலீஸில் பிடிபட்டான். இந்த முறை அவனுக்கு 14 வருட சிறை வாசம்.

ஈஸ்தம் சிறைச்சாலை கொடுமைகளுக்குப் பெயர்போனது. கிளைடுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலவிதமான கொடுமைகள் இழைக்கப்பட்டன. அந்த நரகத்திலிருந்து எப்படியாவது விடுதலை ஆகத் துடித்தான்.

சக கைதி ஒருவனுடைய உதவியுடன் தன் கால் விரல்களைத் துண்டித்துக்கொண்டான். காயத்தைக் காரணம் காட்டி, பரோலில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டான்.

திருட்டு அவர்களுடைய முழுநேரத் தொழிலானது. கிளைடின் நண்பன் ஜோன்ஸ், சகோதரன் பக், அவன் மனைவி ஆகியோரும் காதலர்களின் கொள்ளைக் கூட்டணியில் இணைந்தனர்.

நவீன துப்பாக்கிகள், புதுமையான ஆயுதங்கள் பலவற்றை வாங்கினார்கள். திருட்டுக் கார்களில் பயணம் செய்தார்கள். ஊருக்குள்ளிருந்த கசாப்புக் கடைகள் முதல் நகைக் கடைகள் வரை, ஊருக்கு வெளியே உணவு விடுதிகள் முதல் பெட்ரோல் பங்க்குகள் வரை அவர்களது தாக்குதல்களுக்கு ஆளாயின. திருடும் தொகை குறைவாக இருந்ததால், அடிக்கடி குற்றத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. தங்கள் பெயர்களையும், அடையாளங்களையும் அடிக்கடி மாற்றிக் கொண்டனர்.

குற்றம் புரிந்தவர்

ஒரு சமயம், போலீஸிலிருந்து தப்பித்தபின், பிணைக்கைதியாகக் கடத்திச்சென்றவனை விடுவித்தபோது, அவன் வீடு திரும்பத் தேவையான பணத்தைக் கொடுத்தனுப்பினான் கிளைட்.

ஒரு சமயம் அவர்கள் மிசௌரி என்ற இடத்தில் ஒரு பாழ்வீட்டில் ஒளிந்திருந்தனர். இரவுகளில் குடித்துக் கும்மாளமிட்டு, அவர்கள் போட்ட இரைச்சல்கள் குறித்து, போலீஸுக்குப் புகார் போனது.

அந்தப் பகுதியை போலீஸ் முற்றுகையிட்டபோது, போனி மிரண்டான். மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்குமோ என்ற பயம் அவனைச் செலுத்தியது. காவலர்களைச் சுட்டுவிட்டுத் தப்பிக்கலாம் என்று நண்பன் ஜோன்ஸ் ஆரம்பித்து வைக்க, கிளைட் முதன்முறையாக வன்முறையில் இறங்கினான். நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஓர் அதிகாரி இறந்தார். இன்னொரு காவலர் காயப்பட்டார். காரில் தப்பிக்கும்போது, போனியும் தன் பங்குக்கு, ரைஃபிளை இயக்க, வேறோர் அதிகாரி படுகாயமடைந்தார்.

அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை போலீஸ் ஆராய்ந்தது. ஆயுதங்கள், பரோல் அனுமதிக் கடிதம், போனியின் காதல் கவிதைகள், ஒரு கிதார், தவிர கழுவப்படாத ஒரு ஃபிலிம் ரோல் ஆகியவை அங்கு  கண்டெடுக்கப்பட்டன.

'போலீஸிடமிருந்து அந்த கிடாரை மட்டும் திரும்ப வாங்கிவிடு..’ என்று கிளைட் தன் அம்மாவிடம் சொன்னான். ஆனால், போலீஸ் அதைத் தர மறுத்துவிட்டது. ஃபிலிம் ரோல் பிரின்ட் போடப்பட்டது.

போனியும், கிளைடும் துப்பாக்கிகளை வைத்து விளையாட்டாக எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் கிடைத்தன. ஒரு படத்தில் காதலர்கள் ஹாலிவுட் ஸ்டைலில் மிக அழுத்தமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். போலீஸுக்குப் போக்குக் காட்டும் இவர்களைப் பற்றி சுவாரசியமான செய்திகளை ஆவலுடன் படித்து வந்தனர், மக்கள்.

சிறைச்சாலைக்குச் செல்ல சற்றும் விரும்பாததால், எங்கே மடக்கப்பட்டாலும், எதிரில் இருப்பவர்களைக் கொலை செய்துவிட்டு தப்பிப்பதே கிளைடின் புதிய குறிக்கோளானது. ஒரு கொள்ளையின்போது, கிளைடால் கொல்லப்பட்ட ஓர் இளம் அதிகாரிக்கு மறுவாரம் திருமணம் நடக்கவிருந்தது. மணமகள், திருமண உடையில் கண்ணீருடன் அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்டாள். இந்தச் செய்தி மக்களின் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போனி, கிளைட் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று அனைவரும் குரல் கொடுத்தனர். கண்காணிப்பு தீவிரமானது. உணவுப் பொருட்களைக் கொள்ளையடித்து உண்டு, பாழடைந்த கட்டடங்களிலும், காடுகளிலும், வெட்டவெளிகளிலும் அவர்கள் வசிக்கத் தொடங்கினார்கள்.

போனி, கிளைட் இருவருமே தங்கள் குடும்பத்தின் மீதும் பாசம்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது சொந்த ஊருக்கு வரும்போது, அவர்கள் வீட்டைக் கடந்து கார் வேகமாகச் செல்லும். காருக்குள்ளிருந்து ஒரு பாட்டில் வெளியே வீசப்படும். பாட்டிலில், ஒரு காகிதத்தில் ஊருக்கு வெளியே எங்கே அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற விவரம் இருக்கும். இருவரின் பெற்றோரும் சங்கேத முறையில் தகவலைப் பரிமாறிக்கொள்வார்கள். குறிப்பிட்ட இடத்தில் காதலர்களைச் சந்திப்பார்கள். கொள்ளையடித்த பணத்தில் அவர்களுடைய செலவுக்கும் கொடுக்கப்படும்.

போனியோ, கிளைடோ காயப்பட்டு வந்தபோதெல்லாம் குடும்பத்தினர் மருத்துவ உதவிகள் வழங்கினர். பிற்பாடு, கிளைடின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் குற்றவாளிகளுக்குத் துணைபோனதற்காகச் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருந்தது.

1933. ஜூன் மாதம். வெலிங்டன் பகுதியில் மலைப்பாதையில் விரைந்துகொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாடு இழந்து, ஒரு பள்ளத்தில் பாய்ந்தது.

வண்டியைச் செலுத்தி வந்த கிளைடும், மற்றவர்களும் வெளியே தூக்கி எறியப்பட்டனர். ஆனால், தீப்பற்றி எரிந்த காருக்குள் போனி மட்டும் மாட்டிக்கொண்டாள். அங்கிருந்த விவசாயிகள் தீயுடன் போராடி போனியைக் காப்பாற்றினர். உடலெங்கும் தீக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் இருந்த அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். விரைவிலேயே அவர்களுக்கும் சந்தேகம் எழுந்தது. போலீஸுக்குத் தகவல் போயிற்று.

போலீஸ் வந்தபோது, கண்மூடித்தனமாக சுட்டுக் கொண்டே அங்கிருந்து அவர்கள் எப்படியோ தப்பினார்கள். ஆனால் துப்பாக்கிச் சண்டையில், கிளைட் ஒருவனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மோசமாக அடிபட்டார்கள். உடல் வெந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த போனிக்கு முறையான சிகிச்சை அளிக்க இயலாமல் தவித்தான், கிளைடு. அவர்கள் சரியாகச் சாப்பிட்டோ, தூங்கியோ பல நாட்கள் ஆகியிருந்த நிலையில்...

ஓரிடத்தில் உணவுக்காகக் காரை நிறுத்தினார்கள். அடுத்த கணம், போலீஸ் படை, அவர்களைச் சூழ்ந்து கொண்டு சுடத் தொடங்கியது. கிளைடின் நண்பன் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டான். கிளைடின் சகோதரன் பக் பிடிபட்டான். அவனும் சில நாட்களில் மருத்துவமனையில் இறந்துபோனான். சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த அவன் மனைவி சிறைத் தண்டனை பெற்றாள்.

ஆனால் அந்தத் தாக்குதலின்போது, நடைப்பிணமாக இருந்த உயிர்க் காதலி போனியை மட்டும் எப்படியோ காப்பாற்றிக் கூட்டிக்கொண்டு, கிளைட் காரில் தப்பித்துச் சென்றான்.

குற்றம் புரிந்தவர்

போனியின் பொருட்டு ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்யச் சொல்லி நண்பன் ஒருவனிடம் கேட்டுக்கொண்டான், கிளைட். இதை அறிந்ததும், போலீஸ் அவர்களுக்கு வலை விரித்தது.      

1934. மே 23. காலை மணி 09.15.

லூஸியானா மாநில நெடுஞ்சாலையில் தான் திருடிய சொகுசுக் காரை ஓட்டி வந்தான் கிளைட். நெடுஞ்சாலையின் ஓரத்தில், அந்த நண்பனின் தந்தை காத்திருந்தார். காரை நிறுத்திக் கண்ணாடியை இறக்கினான்.

அடுத்த கணம், புதர்களின் பின்னால் ஒளிந்திருந்த காவல் துறையினரின் இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாது இயங்கின. காதலன் சுடப்பட்டதும் போனி கதறினாள். துப்பாக்கிகள் அவளை நோக்கித் திரும்பின.

காரெங்கும் பொத்தல்களிட்டு, கிளைடின் உடலில் 17 தோட்டாக்களும், போனியின் உடலில் 26 தோட்டாக்களும் பாய்ந்தன.  

இளம் வயதில் சினிமா ஆசை வந்தபோது, தன் தோழிகளிடம், 'என்னுடைய பெயரை நிச்சயம் செய்தித்தாள்களில் பார்ப்பீர்கள்...’ என்று போனி சொல்வது உண்டு. ஆசைப்பட்டபடி, தலைப்புச் செய்திகளில் காதலனுடன் அவள் இடம்பெற்றாள். ஆனால், பாடகியாகவோ, நடிகையாகவோ அல்ல. கொலைகாரியாக.

போனி மிக ஆவலுடன் வாசித்த சினிமா பத்திரிகைகள் அவர்கள் திருடிய கார்களில் பல முறை கண்டெடுக்கப்பட்டன. இறுதியாக கிளைடும், போனியும் உயிரைவிட்ட காரில், துப்பாக்கிகளுடன், கிளைட் பர்ரோவின் சாக்ஸஃபோனும் கண்டெடுக்கப்பட்டது.

காதலர்களை அருகருகே அடக்கம் செய்வதற்கு, போனியின் தாய் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாள். இன்பத்திலும் துன்பத்திலும் இணை பிரியாது வாழ்ந்து, இணைந்தே பல கொலை கொள்ளைகளில் ஈடுபட்டவர்களின் இறுதிச் சடங்குகள் மட்டும் தனித்தனியே நடந்தன.

- குற்றம் தொடரும்