மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

அட்லான்டாவின் கறுப்பு தினங்கள்..!

குற்றம் புரிந்தவர்

ட்லான்டாவில் மோசமான நேரம் 1979-ல் தொடங்கிய, இரண்டு ஆண்டுகள். நண்பர்களைப் பார்க்கச் சென்று திரும்பாதவர்கள், விளையாடச் சென்று திரும்பாதவர்கள் என்று 24 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள்  மாயமாய் மறைந்து போயினர்.  

தீவிரமாக ஆராய்ந்ததில், சில ஒற்றுமைகள் புலப்பட்டன. அனைவரும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏழு முதல் பதினான்கு வயதுக்கு உட்பட்டவர்கள். சில வாரங்கள் கழித்து, புதர்களிலோ, நதிகளிலோ அவர்கள், பிணமாகவே கண்டெடுக்கப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் கழுத்து நெரிபட்டு, கொலையாகி இறந்திருந்தனர்.

எதிர்க்கும் திறனற்ற வயதினரை யாரோ ஒருவன் பின்புறத்திலிருந்து தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுகிறான் என்று காவல் துறை யூகித்தது.

கறுப்பர் இன மக்களிடையே பீதி பரவியது. மாலை மங்கியதும், தெருக்களும், பொது இடங்களும் வெறிச்சிட்டன. பெற்றோர்கள், குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தார்கள். மக்கள் இரவு முழுக்க ரோந்து வரத் தொடங்கினார்கள்.  

காவல் துறை பல சிறப்புக் குழுக்களை நியமித்து, கண்காணிப்பையும், பாதுகாப்பையும் அதிகரித்தது. சந்தேகத்தின் பேரில் பலரைத் தீவிரமாக விசாரித்தது. திஙிமியும் களத்தில் இறங்கியது.

கொலையுண்டவர்களிடம் பணமோ, பொருளோ கொள்ளையடிக்கப்படவில்லை; பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை. பின்னர் கொலைகளுக்கு என்னதான் காரணம்?

'ஒருவேளை இது நிறவெறி பிடித்த வெள்ளையர் கூட்டம் ஒன்றின் வெறியாட்டமா அல்லது எவனாவது சைக்கோவின் வேலையா?’ என்று FBI-யும் தலையைப் பிய்த்துக்கொண்டது.

பொதுவாக இரு கொலைகளுக் கிடையில் மூன்றுவார இடைவெளி இருப்பது கவனிக்கப்பட்டது. கொலையாளி, மூன்று வாரத்துக்கு ஒருமுறை அட்லான்டாவுக்குள் நுழைந்து, குற்றம் புரிந்துவிட்டு தப்பித்துப் போகிறானோ?

அட்லான்டாவுக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் பயன்பட்ட பாலம் தெற்குப்பகுதியில் இருந்தது. அதை ரகசியமாகக் கண்காணிக்க ஏற்பாடானது.

இந்தப் பின்னணியில்..

1981. மே 22. இரவு.

பாலத்தின் மறைவில், வழக்கம்போல் போலீஸ் அதிகாரிகள் பதுங்கியிருந்தனர். திடீரென நதியில் 'தொபுகடீர்’ என ஏதோ ஒன்று விழுந்த சப்தம் கேட்டது.

'என்ன நடக்கக் கூடாது என்று பயந்தோமோ, அந்த விபரீதம் நடந்து விட்டது..’ என்று போலீஸ்காரர்கள் திடுக்கிட் டார்கள். இரண்டு போலீஸ்காரர்கள் உடனே நீரில் பாய்ந்து தேட ஆரம்பித்தார்கள்.

தண்ணீரில் சத்தம் கேட்ட அதே நேரத்தில் பாலத்தைக் கடந்துசென்ற வாகனம், ஓர் அதிகாரியால் பின்தொடரப்பட்டது. மடக்கப்பட்டது.

அந்த வாகனத்தில் வெள்ளைக்காரன் ஒருவனை எதிர்பார்த்திருந்தது, போலீஸ். அவன் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் என்பது அவர்களைக் குழப்பியது.

'உன் பெயர்?'

'வேய்ன் பெர்ட்ராம் வில்லியம்ஸ்.'

'வயது?'

'23.'

'எங்கே போய்விட்டு வருகிறாய்..?'

'ரேடியோவில் அறிவிப்பாளராக வேண்டும் என்பது என் கனவு. அது தொடர்பாக என்னைச் சந்திக்க விரும்பி ஒரு பெண்மணி போன் செய்தாள். அவளைச் சந்திக்கப் போனேன்.'

குற்றம் புரிந்தவர்

'அவள் முகவரி என்ன..?'

வில்லியம்ஸ் முகவரியைச் சொன்னான். ஆனால், 'அந்த முகவரியை நீங்கள் தேடுவது வீண். என்னாலேயே கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிக்கொண்டிருக்கிறேன்' என்றும் சொன்னான்.

அதிகாரிகளுக்குச் சந்தேகம் வலுத்தது. அவனைக் கைது செய்தார்கள்.

மறுநாள் நதியில் 27 வயது நத்தேனியல் கார்ட்டர் என்பவனின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் அதே நதியில் ரே பைனி என்னும் இன்னோர் இளைஞனின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் கறுப்பர் இனம். இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு, கொல்லப்பட்டு நதியில் வீசப்பட்டிருந்தனர்.  

அதுவரை குழந்தைகளை மட்டுமே குறிவைத்துக்கொண்டிருந்த கொலையாளி, முதல் முறையாகப் பெரியவர்களையும் வேட்டையாடத் தொடங்கியிருந்தான்.          

கைதான வில்லியம்ஸ் மீது சந்தேகம் கூடுவதற்கு, போலீஸுக்குக் காரணம் இருந்தது.

தனது காரின் ரேடியோவில் உரிய அலைவரிசையைத் தேடிப்பிடித்து, காவல் துறையினர் ஒயர்லெஸில் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் குற்றம் மற்றும் விபத்து போன்ற பரபரப்பான நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வித்தை அவனுக்குத் தெரிந்திருந்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, செய்தி சேகரிப்பான்.  போட்டோக்கள் எடுத்து, அவற்றைப் பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் நல்ல விலைக்கு விற்பான்.  

சில சமயம் போலீஸையே அவன் முந்திக்கொள்வான். தவிர, தன்னை ஒரு காவல் துறை அதிகாரியாக அறிவித்து ஆள்மாறாட்டம் செய்த குற்றத்துக்காக ஒருமுறை தண்டனையும் அவனுக்குக் கிடைத்திருந்தது.

மடக்கப்பட்ட அவனுடைய காரில் சில நூல் இழைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை கொலையுண்ட கார்ட்டர் மற்றும் பைனியின் ஆடைகளில் இருந்த நூலிழைகளை ஒத்திருந்தன. அதையே ஆதாரமாகக் காட்டி, காவல் துறை அந்த இருவரின் கொலைக்காக 1981 ஜூன் மாதத்தில் வில்லியம்ஸைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது.

வில்லியம்ஸின் பெற்றோர் பள்ளி ஆசிரியர்களாகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்கள். தங்கள் மகன் குற்றமற்றவன் என்று அவர்கள் கதறினார்கள்.

வில்லியம்ஸ் கொலை செய்ததைப் பார்த்த நேரடி சாட்சிகள் எதுவும் இல்லை. நூலிழைகள் என்பதெல்லாம் வலுவற்ற ஆதாரம் என்று அரசு வழக்கறிஞர் தயங்கினார்.

'கறுப்பர்களில் பலவீனமானவர்களைத் தீர்த்துக்கட்டி, தனது இனத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடனேயே, வில்லியம்ஸ் இந்த இரண்டு கொலைகளைச் செய்தான்’ என்ற சோகையான காரணத்தைக் கூறியது, காவல் துறை.

வில்லியம்ஸ் தரப்பில் ஆல்வின் பைண்டர் என்ற புகழ் பெற்ற வழக்கறிஞர் களம் இறங்கினார். காவல் துறையினர் முன்வைத்த பலவீனமான ஆதாரத்தையும், பிராசிக்யூட்டரின் வாதத்தையும் எடுத்த எடுப்பிலிருந்தே அவர் கிழி, கிழி என்று கிழிக்கத் தொடங்கினார்.

தான் விடுதலை செய்யப்படுவதற்கான சூழ்நிலை உருவாவதை உணர்ந்தான், வில்லியம்ஸ்.

'காவல் துறையினர் உள்நோக்கத்துடன் நிரபராதியான என்னை இதில் சிக்க வைத்திருக்கிறார்கள். இவர்கள் சார்பாக வாதிடும் அரசு வழக்கறிஞர் ஒரு முட்டாள்’ என்று நீதிமன்றத்திலேயே கொக்கரித்தான்.

கார்ட்டர் மற்றும் பைனி ஆகியோரின் கொலைகளை மட்டும் வைத்து, வில்லியம்ஸைக் குற்றவாளி என நிரூபிப்பது இயலாத காரியம் என்பதை காவல் துறையினர் உணர்ந்தனர்.

சிறுவர் சிறுமியர்களின் கொலைகளுக்கும் இவனே பொறுப்பாளி என அறிவித்து, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாலொழிய வில்லியம்ஸுக்குத் தண்டனை பெற்றுத்தர இயலாது என்ற நிலை.

முக்கியமான சில ஆதாரங்களைத் திரட்டி, கோர்ட்டில் சமர்ப்பிக்க கால அவகாசம் தேவை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரினார்.

வில்லியம்ஸின் எதிர்ப்பை மீறி அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அதையடுத்து காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்தனர். நூற்றுக்கணக்கான பெற்றோரையும், குழந்தைகளையும் விசாரித்து, குழந்தைகள் கொலையுண்டது தொடர்பான ஆதாரங்களைத் திரட்டத் தொடங்கினர்.

போலீஸை இந்த முறை அதிர்ஷ்டதேவதை அணைத்தாள்.  

'நான் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, வில்லியம்ஸ் என்னைத் தகாத முறையில் தொட்டு, உடலைத் தடவினான். அவனிடமிருந்து தப்பியோடினேன்’ என்று ஒரு 15 வயதுச் சிறுவன் முதன்முதலாக வாய் திறந்தான்.

'பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட லூபி என்னும் 14 வயதுச் சிறுவனுடன் வில்லியம்ஸை பார்க்கக்கூடாத நிலையில் பார்த்தேன்’ என்று இன்னொருவன் உறுதியாகக் கூறினான்.  

கொலையுண்ட பல சிறுவர்களுடன் வில்லியம்ஸைப் பார்த்ததாகச் சொன்னவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

'நான் ஒரு காலத்தில், இந்த நகரத்தின் மேயராகலாம். ஏன், நான் இப்போது ஒரு கொலைகாரனாகக்கூட இருக்கலாம்’ என்று வில்லியம்ஸ் ஒருமுறை தனக்கு எழுதியதை நினைவு கூர்ந்தான், அவனுடைய நண்பன் ஒருவன்.

காவல் துறைக்குத் தெம்பு கூடியது. புதிய சாட்சிகள், அவனது குற்றப் பின்னணி குறித்த புதிய ஆதாரங்கள் இவற்றை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தது. 'வில்லியம்ஸ் தொடர்கொலைகள் செய்பவன்’ என ஆணித்தரமாக வாதிட்டது.

சாட்சியாக வந்த குழந்தைகளை வில்லியம்ஸின் வழக்கறிஞர் அதட்டி, மிரட்டி குறுக்கு விசாரணை செய்தார். ஆனால், சிறுவர்கள் மிரளாமல், சாட்சியத்தில் உறுதியாக நின்றனர். அடுத்து யாரை சாட்சியாக நிறுத்தப் போகிறார்கள் என்று புரியாமல், வில்லியம்ஸ் தரப்பு தயார் செய்துகொள்ள முடியாமல் தவித்தது.

வில்லியம்ஸ் கைது செய்யப்பட்டதிலிருந்து, அட்லான்டாவில் நடந்து வந்த கொலைகள் திடீரென்று  நின்று போய்விட்டதைச் சுட்டிக் காட்டியது, போலீஸ்.

பொய் நிரூபமானி கொண்டு அவனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவன் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதையெல்லாம் திஙிமி முன்வைத்தது.

வழக்கு வில்லியம்ஸுக்கு எதிராகத் திரும்பியது. வில்லியம்ஸ் கடைசிவரை தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தான்.  

இருப்பினும், சந்தர்ப்பச் சூழ்நிலைகள், சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், நீதிமன்றம் வில்லியம்ஸைக் குற்றவாளி என அறிவித்தது. அவனுக்கு இரட்டை ஆயுள்தண்டனை என்று தீர்ப்பளித்தது.

வில்லியம்ஸ் மேல் முறையீடு செய்தான். உயர் நீதிமன்றமும் அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.

'ஐயோ, பொய்யான ஆதாரங்கள் காட்டி, என்னை அநியாயமாகத் தண்டித்து விட்டனர்' என்று வில்லியம்ஸ் கூச்சலிட்டான்.

ஆனால், அவனுடைய புலம்பலும், அவன் பெற்றோரின் கதறலும் எடுபடவில்லை.

வில்லியம்ஸ் தன் வாழ்க்கையின் மிச்ச நாட்களை சிறையில்தான் கழிக்க நேர்ந்தது.

மக்களிடம் நிம்மதி திரும்பியது. அட்லாண்டாவின் தெருக்களில் மீண்டும் குழந்தைகள் தைரியமாக விளையாடத் தொடங்கினர்.

- குற்றம் தொடரும்

நம்பிக்கை தெரிகிறது!

கடிதங்கள்

இளம்பெண் மர்மச்சாவு...  மீண்டும் நித்தியின் ஆசிரமத்தில் சோதனையா... 'எது வந்தாலும் சட்டப்படி சந்திப்போம்’ என்று ஓட்டையில் தப்பிவிடுவார். ஆன்மிகப் போர்வை அவரை காப்பாற்றிவிடும்.

- காந்திலெனின், திருச்சி.

இலங்கைத் தேர்தலில் எப்படியோ காலமகள் கண் திறந்துவிட்டாள். இலங்கையின் புதிய அதிபர் சிறீசேன தமிழர்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருப்பார் என்பது இனிவரும் காலம் பதில் சொல்லிவிடும். ராஜபக்‌ஷே அளவுக்கு இன்னல் கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை மட்டும் இப்போதே தெரிகிறது.

- செ.ரா.ரவி, செம்பட்டி.

ஜெ-வுக்கு ஜெயமோ இல்லையோ, 'இந்தியாவின் சுவாரஸ்யமான வழக்கு விசாரணைகளில் ஜெவின் சொத்துக் குவிப்பு முக்கிய இடம் வகிக்கும்’ என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை!

சிவமைந்தன், சென்னை-78.

கனிமவள ஆக்கிரமிப்பு செய்திகளைப் படிக்கும்போது அதிர்ச்சியளிக்கிறது. சகாயம் நிச்சயம் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவார் என நம்புகிறோம். பணத்துக்காக மலை, வயல், வாய்க்கால் கடைசியில் நரபலி என்பது பிரமிப்பூட்டுகிறது.

ரேவதிப்ரியன், ஈரோடு-1.