மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 28

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

லட்சம் மூளைகள்

ழுத்தாளர் கதிர்காமன், ஆபரேஷன் மேஜை மீது கிடத்தப்பட்டிருந்தார். அது ஒரு சாதிச் சங்கம் நடத்தும் ஆஸ்பத்திரி. சாதிக்கு எதிராகப் போராட்டம் செய்பவர்களைக் கடத்தி, மூளையின் நினைவுக்கிடங்கான ஃப்ரன்டல் கார்ட்டெக்ஸ் பகுதியை அகற்றுவதே அவர்கள் வேலை. இப்போது முதன்முதலாக ஓர் எழுத்தாளன். காரணம், அவன் எழுதிய ஒரு நாவல். 

'ஆபரேஷன் சக்சஸ்' என்றார் தலைமை மருத்துவர் சுவாமிநாதன்.

'இல்லை' என்றான் இளங்கோ. இளம் மருத்துவன்.

சுவாமிநாதன், நெற்றியை தன் கிளவுஸ் கையில் இருக்கும் கத்தரியால் சொறிந்தார். 'என்ன சொல்ற?' என்றார்.

இளங்கோ மானிட்டரை ஆன் செய்து, சுவாமிநாதனுக்கு எதிராகத் திருப்பினான்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 28

'கதிர்காமனின் மூளையின் ஃப்ரன்டல் கார்ட்டெக்ஸ் பகுதியில் லைவ் ஸ்கேன் இருக்கு. அதில் சாதிக்கு எதிரான அவரது மின்காந்தப் பதிவுகளை உற்றுப்பாருங்க. அவை ஏற்கெனவே காப்பி பண்ணப்பட்டிருக்கு. நாம இப்போ அழிச்சது, ஒரு ஜெராக்ஸ் பேப்பரைக் கிழிச்சுப் போட்டதுக்குத்தான் சமம்.'

'என்ன சொல்ற... புரியலை' என்றார் சுவாமிநாதன்.

'சார், நாம இதுவரை பண்ணின மாதிரி இல்ல இது. இவர் ஓர் எழுத்தாளர். இவரோட நினைவுக்கிடங்கான மூளையின் ஃப்ரன்டல் கார்ட்டெக்ஸ் என்பது, எல்லா மனிதர்களுக்கும் இருப்பதுபோல ஒண்ணே ஒண்ணு கிடையாது. இவரோட சாதிக்கு எதிரான பதிவுகள், இவர் மூளையில மட்டும் இல்ல. இதுவரைக்கும் இவரோட நாவல் ரெண்டாயிரம் காப்பி வித்திருக்குன்னா, இப்போ இவர் மூளையோட எண்ணிக்கை ரெண்டாயிரம். அதுவே அந்தப் புத்தகம் ஆயிரம், லட்சம்னு பரவப் பரவ, அந்த மூளைகளின் எண்ணிக்கையும் அதிகரிச்சுட்டேதான் இருக்கும்' என்றவன் 'எழுத்தாளனுக்கு லட்சம் மூளைகள், லட்சம் உடல்கள்' என்று முடித்தான்.

அனஸ்தீசியா மயக்கத்தில் இருக்கும் எழுத்தாளர் கதிர்காமனின் முகம் ஒரு கணம் புன்னகைப்பதுபோல சுவாமிநாதனுக்குத் தோன்றியது. 

கார்ப்பரேட் சித்தன்!

''தண்ணீரை முழுக்க முழுக்க தனியார்மயமாக்கணும்'' என்றான் கார்ப்பரேட் முதலீட்டாளன்.

''எதிர்காலத்துல கக்கூஸுக்குக்கூட கிரெடிட் கார்டு எடுத்துட்டுப் போகணுமோ?'' என்றான் கார்ப்பரேட் சித்தன்!  

அஞ்ஞானச் சிறுகதைகள் - 28

நிர்வாணம் என்பதும் ஒரு கலை

ன்ஸ்டல்லேஷன் என்பது, நவீன சிற்பக்கலையின் ஒரு வடிவம். கையில் கிடைக்கும் எதையும் 'கலை’ ஆக்கலாம் என்பதே இதன் தத்துவம். ஆனால், அதில் ஒரு 'ஆர்ட்டிஸ்டிக் இன்டர்பிரட்டேஷன்’ எனப்படும் 'கலைஞனின் தலையீடு’ இருக்க வேண்டும். அதாவது, கலைஞன் ஒரு கருத்தையோ, அனுபவத்தையோ அந்தக் கலைவடிவம் வழியாக பார்வையாளனுக்குக் கடத்த வேண்டும். நம் ஊரிலும் வல்சன் கொலேரி முதல் மு.நடேஷ் வரை பல கலைஞர்கள் இருக்கிறார்கள்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 28

பெரும்பாலும் அஃறிணைகளையே இன்ஸ்டல்லேஷன் கலைக்கு உபயோகப்படுத்தும் உலகில், ஸ்பென்ஸர் டுனிக் என்கிற கலைஞனுக்கு மட்டும் 'வேறு மாதிரி’யான ஓர் ஐடியா தோன்றியது. அடிப்படையில் இவர் ஒரு புகைப்படக் கலைஞர். இவரும் முதலில் அழகான சில நியூட் (நிர்வாண அழகியல்) புகைப்படங்களை எடுத்திருக்கிறார். ஒன்றிரண்டு மாடல்களை வைத்து ஸ்டுடியோவுக்கு உள்ளே புகைப்படங்கள் எடுப்பது என்பதைத் தாண்டி, 'இந்த நியூட் மேட்டரை என்ன பண்ணலாம்?’ என யோசித்தபோது, இருபது, முப்பது நியூட் மாடல்களைத் திரட்டி பொது இடங்களில் வைத்து போட்டோ எடுக்கலாம் எனத் தோன்றியது.

அந்தப் புகைப்படங்கள் அடைந்த வெற்றி, டுனிக்கை இன்னும் பிரமாண்டத்தை நோக்கித் தள்ளியது. ஒரு கட்டத்தில், ஒரே சமயத்தில் 18 ஆயிரம் மாடல்கள் வரை நிர்வாணமாக வைத்து, பிரமாண்டமான மனித இன்ஸ்டல்லேஷன்களை அமைத்து அதைப் புகைப்படங்களாக எடுத்திருக்கிறார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 28

ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... என எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இவருடைய புகைப்படங்களில் மனித உடல்கள் அலையாக, கடலாக, கட்டடங்களாக, நிலக்காட்சிகளாக விரிந்து பரவுகிறார்கள். நிர்வாணம் என்பது அசிங்கம் என்கிற சமூகப் பார்வையை இந்தக் கூட்டு நிர்வாணப் புகைப்படங்களின் வழியாகக் கேள்விக்குள்ளாக்கும் ஸ்பென்ஸர் டுனிக், புகைப்படங்களின் வழியாக உடல்களின் அழகியலை தொடர்ந்து பதிவுசெய்கிறார். அவருடைய புகைப்படங்களைக் காண, கூகிளில்  Spencer Tunick என 'டைப்’பிட்டுப் பார்க்கவும். (அதற்கு முன்னால் உங்களைச் சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.)