மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

உள்ளே ஓர் உளவாளி..!

குற்றம் புரிந்தவர்

மெரிக்கா. வாஷிங்டன். புறநகர்ப் பகுதியில் வெறிச்சோடியிருந்த சாலையில் அந்த கார் மெள்ள ஊர்ந்து, நின்றது.

காரிலிருந்து ஜான் ஆன்டனி வாக்கர் தன் வழுக்கையைத் தடவியபடி இறங்கினார். கையில் ஒரு காகிதப் பை.

'வேட்டையாடத் தடை செய்யப்பட்ட பகுதி’ என்ற அறிவிப்புப் பலகை பொருத்தப்பட்ட மரத்தை நெருங்கினார். அதன் பின்னால் அந்தக் காகிதப் பையைப் போட்டுவிட்டு வாக்கர் காருக்குத் திரும்பினார்.  

யாராவது பார்த்தால், அவர் குப்பையை வீசிவிட்டுப் போவதாகத்தான் தோன்றும். ஆனால், மழை பெய்தாலும் நனையாதபடி, பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றப்பட்டு, அமெரிக்கக் கப்பற்படையின் முக்கியமான பல ரகசியங்கள் அந்தக் காகிதப் பைக்குள் கிடந்தன.

அதே நேரத்தில் ஐந்து மைல்கள் தள்ளி, வேறொரு வாகனம் வேறொரு மரத்தடியில் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய ஆசாமி, வாக்கரைப் போலவே தன் கையிலிருந்த பெரிய காகிதப் பையை ஒரு குறிப்பிட்ட மரத்துக்குப் பின்னால் இருந்த பொந்தில் வைத்தான். அதில், இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் இருந்தன. அமெரிக்கக் கப்பற்படையின் அதிமுக்கிய ரகசியங்களை ரஷ்யர்களுக்குப் பரிமாற்றம் செய்வதற்கு வாக்கருக்குப் பேசப்பட்ட தொகை அது.

ரஷ்ய உளவுத் துறையைச் சேர்ந்தவர்களும், இந்த அமெரிக்க முன்னாள் கப்பற்படை அதிகாரியும் முகத்துக்கு முகம் சந்தித்துக்கொள்ளாமல் செய்துகொள்ளும் பண்டமாற்றம் இது.

குற்றம் புரிந்தவர்

ரஷ்யாவின் KGB உளவாளி, வாக்கர் வைத்துவிட்டுப் போன ரகசியங்களை எடுத்துச்செல்ல அந்த இடம் நோக்கி வர, அவன் பணத்தை வைத்த இடம் நோக்கி வாக்கர் பயணப்பட்டார்.

குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், வாக்கர் காரை நிறுத்தினார். டேஷ்போர்டிலிருந்து ஒரு வரைபடத்தை எடுத்தார். பிரித்தார். எந்தெந்த தேதியில் எந்தெந்த இடத்தில் பணப்பை இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வாக்கர் காரிலிருந்து இறங்கினார். இயல்பாக நடந்து அந்த மரத்தை அடைந்தார். வெறிச்சோடிய சாலையில் யாரும் இல்லை. பொந்தில் கையை விட்டார். துழாவிப்பார்த்தார். அதிர்ந்தார். அங்கே இருக்க வேண்டிய காகிதப் பையைக் காணவில்லை.

வரைபடத்தில் மீண்டும் சரி பார்த்தார். இந்த மரம்தான். இரண்டு லட்சம் டாலர்கள் எங்கே போயிற்று?

ஒருவேளை ரஷ்யர்கள் ஏமாற்றுகிறார்களா? கிட்டத்தட்ட 18 வருடங்களாக நடந்துகொண்டிருக்கும் பரிமாற்றங்களாயிற்றே?

ரஷ்ய உளவாளிக்குக் கடைசி நிமிடத்தில் வேறு ஏதாவது சிக்கலா? வாக்கர் உடனடியாகக் காரில் ஏறி, தான் ரகசியங்களை வைத்த இடத்துக்கு விரைந்தார். மரத்தடியில் அவர் வீசிவிட்டுப் போன காகிதப் பையையும் காணவில்லை.

உளவு ரகசியங்களின் பரிமாற்றத்தில் ஏதாவது குழப்பம் வந்தால், பரிமாற்றம் ஒரு வாரம் கழித்து வேறோர் இடத்தில் நிகழும். இது அவருக்கும், ரிநிஙிக்கும் எழுதப்படாத ஓர் ஒப்பந்தம்.

அடுத்த வாரம் அவருக்கான பணம் கிடைத்துவிடும் என்ற தைரியம் ஒரு பக்கமிருந்தாலும், முதல் தடவையாக ஒரு சிறு அச்சம் தலை தூக்கியது. ஒருவேளை திஙிமிக்கு சந்தேகம் வந்திருக்குமோ..?

எச்சரிக்கை உணர்வினால் வாக்கர் வீட்டுக்குத் திரும்பாமல், ஒரு ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கினார். உறக்கம் வராமல் புரண்டுகொண்டே கடந்து வந்த பாதையை அசைபோட்டார்.

வாக்கரின் அப்பா பெரும் குடிகாரர். பதின்ம வயதில், வாக்கர் ஒரு திருட்டுக் குற்றத்துக்காகக் கைதானார். தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக கப்பற்படையில் சேரத் தயார் என்றார்.

விரைவிலேயே, கப்பற்படையின் தகவல் பரிமாற்றத்தில் மிகச்சிறந்த பயிற்சி பெற்று, வாக்கர் பதவி உயர்வுகள் பெற்றார். நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் குறித்த அத்தனைத் தகவல்களும் அவர் வசம் இருந்தன. அமெரிக்கக் கப்பற்படையில் அதிகாரியாக மட்டும் இருந்திருந்தால், வாக்கருக்குப் பிரச்னை வந்திருக்காது.

பணத்துக்கு ஆசைப்பட்டு, அவர் சொந்தமாக ஒரு மதுவிடுதி நடத்த முனைந்தார். வியாபாரம் சரியாக நடக்கவில்லை. புதைமணலில் போட்டதுபோல் முதலீடு காணாமல் போனது. பெரும் நஷ்டங்களை சமாளிப்பது எப்படி என்று தவித்தார்.

1967. அக்டோபர்.

வாக்கருக்கு 30 வயது. வாஷிங்டனில், சோவியத் தூதரகத்தின் அருகில் காரை நிறுத்தினார். யாரும் பார்க்கவில்லை என்று நிச்சயித்துக்கொண்டு, விடுவிடுவென்று உள்ளே நுழைந்து, ஓர் அதிகாரியை சந்தித்தார்.

'கப்பற்படையின் முக்கிய ரகசியங்கள் வேண்டுமா? எனக்குப் பணம் தேவை' என்று ஓர் உயர் அதிகாரியை வாக்கர் நம்ப வைத்தார். அந்த அதிகாரி, தன்னுடைய காரில் வாக்கரை அழைத்துக்கொண்டு, தூதரகத்தைவிட்டு வெளியே போனார்.

குற்றம் புரிந்தவர்

கையோடு மாதிரிக்குக் கொண்டுவந்திருந்த கப்பற்படையின் சங்கேத ரகசியங்கள் சிலவற்றை காசு வாங்காமல் கொடுத்து, அவருடைய நன்மதிப்பைப் பெற்றார், வாக்கர். வாக்கர் உண்மையில் பணக் கஷ்டத்தில் இருக்கிறார்; மற்றபடி அமெரிக்க உளவாளி இல்லை என்று ரஷ்ய அதிகாரியின் அனுபவம் சொன்னது.

பேரம் படிந்தது. எங்கே, எப்படி, எப்போது ரகசியங்கள் வைக்கப்படும் என்பதும், அவற்றுக்கான தொகை எங்கே கிடைக்கும் என்றும் எழுதப்படாத ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு, ரஷ்யர்களுக்கும், அவருக்கும் நேரடியாக முகத்துக்கு முகம் சந்திப்பே கிடையாது. எக்காரணம்கொண்டும் தங்களுக்கு ரகசியங்களை விற்கும் அமெரிக்கன் யாரென்று ரஷ்ய உளவு அமைப்பான                   கே.ஜி.பியில் இருப்பவர்களுக்குத் தெரியக் கூடாது. அதே சமயம், எந்த ரஷ்ய உளவாளி வாக்கர் வைக்கும் ரகசியங்களை எடுத்துச் செல்கிறான் என்பது அவருக்கும் தெரியக் கூடாது. யார் மாட்டினாலும், உளவுச் சங்கிலி அறுபடாது என்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு இது.

அமெரிக்காவில் பிறந்த ஓர் அதிகாரி, ஜென்மப் பகை நாடாகக் கருதப்படும் ரஷ்யாவுக்குத் தங்கள் நாட்டின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் முக்கிய ரகசியங்களை விற்பார் என்று அவர்கள் சந்தேகமே கொள்ளவில்லை.

வாக்கருக்கு, பணம், மேலும் பணம் என்று செல்வம் குவிந்தது. கடன்கள் அடைக்கப்பட்டன. புதிய வீடுகள் வாங்கப்பட்டன. சொகுசுக் கார்கள் கிடைத்தன. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது.

'அமெரிக்காவின் துளைக்க முடியாத ரகசிய தலைமையிடமாகக் கருதப்பட்ட பென்டகனுக்குள் நம் நாட்டவர் ஒருவரை அமர்த்தியதுபோல, நமக்கு அத்தனைத் தகவல்களும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன..’ என்று  கே.ஜி.பியின் தலைமை அதிகாரி விட்டாலி பெருமை பீற்றிக்கொண்டார்.

டாப் சீக்ரெட் என்று குறிப்பிடப்பட்ட ரகசியங்களைத் தன்னிடமிருந்த மினி கேமராவில் வாக்கர் படமெடுப்பார். அவற்றை குப்பைகளைப் போடும் காகிதப் பையில் போட்டு, குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிடுவார். லட்சக்கணக்கான ராணுவ ரகசியங்கள் சங்கேத மொழியில் இருக்கும். அவற்றை உடைப்பதற்கான சங்கேத அகராதிகளை வாக்கர் அவ்வப்போது ரஷ்யர்களுக்குப் பெரும் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார்.

பனிப் போராகவே தொடர்ந்தது. ஒருவேளை ஆயுதப் போராக வெடித்திருந்தால், அமெரிக்காவைத் தரைமட்டமாக்கும் அளவுக்கு ரஷ்யர்களிடம் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அனைத்தும் இருந்தன.

9 வருடங்களுக்குப் பிறகு, வாக்கர் வேறொரு துறைக்கு மாற்றலாகும் சூழல். கப்பற்படையின் ரகசியங்களைக் கடத்த வாய்ப்பில்லாமல் போய்விடும் என்று உணர்ந்ததும், வாக்கர் இன்னொரு முடிவை எடுத்தார்.

அவரிடம் வேலை கற்றுக்கொண்ட ஜெர்ரி விட்வொர்த் என்ற இளைஞனை, பேசிப்பேசி மூளைச் சலவை செய்தார். அவர் பணியில் இல்லாவிட்டாலும், ரகசியங்களைக் கொண்டுபோய் தர விட்வொர்த் ஒப்புக்கொண்டான்.

வாக்கர் கப்பற்படையிலிருந்து ஓய்வு பெற்றபின், ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நிறுவினார். விவாகரத்து பெற விரும்பும் தம்பதியினருக்குத் தேவையான வேலைகளைச் செய்துவந்தது, இந்த நிறுவனம்.

வாக்கர் தன் உளவு வளையத்தை விரிவாக்கத் திட்டமிட்டார். அவருடைய மூத்த சகோதரன் ஆர்தரும் கப்பற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாதுகாப்புத் துறை கான்ட்ராக்டராக பணிபுரிந்து கொண்டிருந்தார். வாக்கரின் கூட்டாளியாகச் செயல்பட அவர் சம்மதித்தார்.

வாக்கரின் மகன் மைக்கேல் படிப்பு ஏறாமல் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டவன். வாக்கர் அவனைத் தன் துப்பறியும் நிறுவனத்தில் உதவியாளனாக அமர்த்திக்கொண்டார். பள்ளிப் படிப்பை முடிக்கவைத்தார். தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி மைக்கேலைக் கப்பற்படையில் சேர்த்துவிட்டார். அவனும் வாக்கருக்குத் தேவையான ரகசியங்களைக் கொண்டுவந்து கொட்டினான். அன்றைக்கு மரத்தடியில் அவர் போட்டுவிட்டு வந்த முக்கிய ரகசியங்கள், மைக்கேல் கொண்டு தந்தவை.

கடந்துவந்த பாதையை அசைபோட்டபடி படுக்கையில் புரண்டுகொண்டிருந்தார் வாக்கர். திடீரென்று தொலைபேசி ஒலித்தது.

விளக்கைப் போட்டு மணியைப் பார்த்தார், வாக்கர்.

இரவு மணி 3.30. இந்நேரத்துக்கு யாரிடமிருந்து போன்?

FBI-யா? அவர்களுக்குச் சந்தேகம் வந்திருந்தால், மரத்தடியில் ரகசியங்களை அவர் வைத்தபோதே சுற்றி வளைத்திருப்பார்களே.  ஒருவேளை KGB-யா?

வாக்கர் குழப்பத்துடன் போன் ரிஸீவரை எடுத்தார்.

அது அடுத்த இதழில்...

- குற்றம் தொடரும்

கடிதங்கள்

அரசியல் நிர்ப்பந்தம்!

'பெருமாள் முருகன் எழுதிய நூல், மதத்தையும் சாதியையும் இழிவுபடுத்துகிறது’ என்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆவேசம் காட்டுவதும் போராட்டங்கள் நடத்துவதும் நிச்சயமாக மதப்பற்றோ, சாதிப்பற்றோ சார்ந்தது அல்ல. இது அரசியல் நிர்ப்பந்தம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது!

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

திறமை அடிப்படையில் டிரைவர்களைத் தேர்ந்தெடுக்காமல் பணத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தால் பஸ்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகம் உண்டு. இந்த உண்மை நிலையை உணர்ந்து அரசும் அதிகாரிகளும் டிரைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

உமரி பொ.கணேசன், மும்பை.

தி.மு.கவின் உட்கட்சி தேர்தலில் பதவி கிடைக்காதவர்கள் மற்றும் அதிருப்தி கோஷ்டிகள் ஒன்றுபட்டு உழைத்தால்தான் கணிசமான வாக்குகளை தி.மு.க வேட்பாளர் ஆனந்த் பெறுவார். சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றமே குற்றவாளி என்று ஜெயலலிதாவை அறிவித்தாலும் மக்கள் மன்றம் முழுமையாக ஏற்காதது வளர்மதியின் வெற்றிக்கு வாய்ப்பாக அமையலாம்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.