போதை மனைவி, துரோகக் குடிமகன்..!

வாக்கர், ஹோட்டல் போனைக் காதில் வைத்து, 'ஹலோ..' என்றார்.
'ரிசப்ஷனிலிருந்து பேசுகிறோம். நீங்கள் பார்க் செய்திருந்த உங்கள் காரின் மீது இன்னொரு வாகனம் மோதிவிட்டது. தயவுசெய்து கீழே இறங்கி வாருங்கள்..' என்று குரல் கேட்டது.
வாக்கர் மூளையில் அலாரம் ஒலித்தது. ஏமாற்றும் கணவன்மார்களை ஹோட்டல் அறையிலிருந்து வெளியில் கொண்டுவர தன் துப்பறியும் நிறுவனத்தில் இதே தந்திரத்தை வாக்கரே பல முறை பயன்படுத்தியிருந்தார்.
தன்னை வெளியே இழுக்க விரும்புவது யார்..? FBI-யா..? KGB-யா..?
வாக்கர் ஜன்னல் திரையை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தார். சந்தேகப்படும்படியான போலீஸ் வாகனங்கள் எதுவும் இல்லை. நிம்மதியானார்.
ஒருவேளை FBI- யாக இருந்தால், இந்த அறைக்குள் புயல்போல் நுழைவார்கள். உடனடியாக அவரைக் கைப்பற்றி சோதனைகள் செய்வார்கள். நல்லவேளை கப்பற்படையின் ரகசியங்கள் அந்த நிமிடத்தில் அவர் வசம் இல்லை. சந்தேகப்படும் அளவு பணமும் இல்லை. வேறென்ன தடயம் FBI- க்குக் கிடைக்கக்கூடும் என்று யோசித்தார்.
ரகசியங்களை எங்கே கடத்த வேண்டும், பணத்தை எங்கே எடுக்க வேண்டும் என்று பல வாரங்களுக்குத் திட்டமிட்டு, ரஷ்யர்கள் கொடுத்திருந்த வரைபடம் மாட்டுமே..!
வாக்கர் லைட்டரை இயக்கி அந்த நீல ஜோதியில் வரைபடத்தை எரிக்க முனைந்தார். கடைசித் தருணத்தில் லைட்டரை அணைத்துவிட்டார். உண்மையிலேயே அவர் காரை யாராவது மோதியிருந்தால்..? வீணாக மிரண்டு வரைபடத்தை அவசரப்பட்டு அழித்துவிட்டால், அடுத்த பல பரிமாற்றங்கள் தடுமாறிப் போகும்.
பேராசையும், தான் பிடிபட மாட்டோம் என்ற மெல்லிய அகங்காரமும் வாக்கரின் எச்சரிக்கை உணர்வை மழுங்கடித்தன. வரைபடத்தை ஒளித்து வைப்பதற்கு அறையில் ஏதாவது இடமிருக்கிறதா என்று பார்த்தார். இரட்டைக் கட்டில், சிறு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஆஷ் ட்ரே, அலங்காரக் கண்ணாடி, டெலிவிஷன்... பாத்ரூம். இங்கே ஒளித்தால், நிச்சயம் FBI கண்டுபிடித்துவிடும். காரிடாரில் லிஃப்ட் அருகில் ஐஸ் தயாரிக்கும் மெஷின் ஒன்றைப் பார்த்த நினைவு வந்தது. அதில் ஒளித்து வைக்க முடிவு செய்தார், வாக்கர். முன்னெச்சரிக்கையுடன் தன்னுடைய 0.38 ரிவால்வரை எடுத்துக்கொண்டு வெளியே எட்டிப்பார்த்தார்.
காரிடாரில் ஆளரவம் இல்லை. ரிவால்வரைத் தொடையோடு ஒட்டிப் பிடித்துக்கொண்டு, ஐஸ் மெஷினை நெருங்கினார்.
'அசையாதே.. நில்..! என குரல்கள் வந்தன.

லிஃப்ட்டுக்கு எதிரில் இருந்த அறைக் கதவு திறந்து, FBI ஏஜென்ட்கள் வெளியில் வந்தார்கள். அவர்களுடைய துப்பாக்கிகள் வாக்கரின் நெஞ்சைக் குறிபார்க்க, வாக்கர் தன் ரிவால்வரை நழுவவிட்டார். சுவரோடு அழுத்தப்பட்டு, அவருடைய உடைகள் முழுவதுமாகப் பரிசோதிக்கப்பட்டு, எதிரிலிருந்த அறைக்குள் வாக்கர் தள்ளப்பட்டார்.
'உன்னிடம் கேமரா, மைக், மைக்ரோ ஃபிலிம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.. உன் உடைகள் எல்லாவற்றையும் கழற்று..!' என்று ஆணை பிறந்தது.
வாக்கர், ஒவ்வோர் உடையாகக் கழற்ற, அங்கிருந்தவர்கள் உடனே அதை ஆளுக்கொன்றாக எடுத்துத் தீவிரமாக ஆராய்ந்தார்கள்.
மங்கிய பார்வையுடன் நிர்வாணமாக வாக்கர் மண்டியிட்டார். அவருடைய தைரியம் சிதறிப்போயிருந்தது. இருந்தாலும், அவர் மனதில் வேறொரு பேராசை.
'18 வருடங்களாக உளவு வேலை பார்த்த உன் அபாரத் திறமை வீணாக வேண்டாம். இன்றிலிருந்து டபுள் ஏஜென்ட்டாக பணிபுரி..!’ என்று FBI சொன்னால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
ஆனால், FBI ஏஜென்ட் ஹன்ட்டர் கடுமையானவராயிருந்தார். வாக்கரின் கண்களில் படும்படியாக டைப் செய்யப்பட்ட ஒரு கடிதத்தை வைத்தார். பார்த்ததும், வாக்கரின் தொண்டையில் பந்து அடைத்தது.
அது, வாக்கர் தன் டைப்ரைட்டரில் டைப் அடித்த கடிதம். ரஷ்ய உளவுத் துறைக்குக் கடத்தப்பட்ட ரகசியங்களுடன் அதையும் வைத்து காகிதப் பையில் போட்டிருந்தார். அப்படியானால், அந்தப் பையைக் கைப்பற்றியது FBI-தானா? இரண்டு லட்சம் டாலர்..? அதுவும், அவர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதா..?
பரிமாற்றங்களில் யாருடைய பெயரையும் குறிப்பிட வேண்டாம் என்று ரிநிஙி பலமுறை செய்த எச்சரிக்கையை வாக்கர் அலட்சியத்தால் மீறியிருந்தார். தனக்கு உதவியவர்கள் என்று தன் மகன் மைக்கேல் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். விவரங்கள் சங்கேத மொழியில்தான் இருந்தன. ஆனால், அதை உடைத்துப் புரிந்துகொள்ள FBI-க்கு அதிக நேரம் எடுக்காது. தன் குடும்பமே FBI-யில் சிக்கிக்கொண்டதை வாக்கர் உணர்ந்தார்.
வாக்கர் பிடிபட்ட நேரம், அவருடைய 22 வயது மகன் மைக்கேல், நியூக்ளியர் விமானங்களைச் சுமக்கும் கப்பற்படையின் கப்பல் ஒன்றில் பணியில் இருந்தான். நடுக்கடலில் அவனும் கைது செய்யப்பட்டான். பல ராணுவ ரகசியங்கள் அவனால் பிரதியெடுக்கப்பட்டு, ஒரு பாதாள லாக்கரில் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை FBI கண்டுபிடித்தது. உண்மையை அறிந்ததும், சக மாலுமிகள் அங்கேயே மைக்கேலை அடித்துக் கொல்ல முயன்றனர். FBI அவனைக் காப்பாற்றி, சிறைச்சாலைக்குத் தூக்கிச் சென்றது.
பால்ட்டிமோர் சிறைச்சாலை. தனிமை அறையில் வாக்கர் அடைக்கப்பட்டார். 'எங்கே தவறு நடந்தது..? 18 வருடங்களாக இல்லாமல் எப்படி FBI மோப்பம் பிடித்தது..?’ என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் அலசிப் பார்த்தார்.
'வாக்கர், உன்னிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்துபோனாளே, பார்பரா, அவள் கட்டுக்கடங்காமல் குடிக்கிறாள். உன் ரகசியங்கள் எல்லாவற்றையும் அவள் அறிவாள். அவள் உயிரோடு இருப்பது நமக்கு ஆபத்து..!' என்று அவருடைய அண்ணன் ஆர்தர், பல முறை எச்சரித்தது நினைவுக்கு வந்தது.
'இல்லை, ஆர்தர்... பொதுவாக ராணுவப் பிரிவில் குடிகாரர்களின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை..' என்று வாக்கர் அலட்சியப்படுத்தியிருந்தார்.
இப்போது யோசித்துப் பார்த்தால், அண்ணனின் எச்சரிக்கையை ஏற்று, பார்பராவைத் தீர்த்துக்கட்டியிருக்க வேண்டுமோ என்று தோன்றியது. வாக்கரின் நிழலான நடவடிக்கைகளை மனைவி பார்பரா முதலில் கண்டும் காணாமல் இருந்தாள். குடும்பத்தினரையும் தனக்கு உதவுவதற்காக வாக்கர் இழுக்க முயன்றதும், பார்பரா கோபமுற்றாள்.
ஆனால், அவள் பேச்சு எடுபடவில்லை. கோபத்தில் அவ்வப்போது, FBI அலுவலகத்துக்கு அவள் போன் செய்தாள். எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டதும், தைரியமில்லாமல் பல முறை போன் தொடர்பைத் துண்டித்தாள்.
வாக்கரின் இளைய மகள் லாரா அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்திருந்தாள். திருமணமாகி, கர்ப்பமானதும், ராணுவத்திலிருந்து விலகினாள்.
'உன் கர்ப்பத்தைவிட ராணுவப் பணி முக்கியமானது'' என்றார், வாக்கர். 'உனக்குப் பணமழை பொழிய வாய்ப்பு தருகிறேன். கருவைக் கலைத்துவிடு'' என்று லாராவை வாக்கர் வற்புறுத்தினார். லாரா குழந்தையைக் கலைக்கவும், வாக்கர் சொன்ன உளவு வேலைகளில் ஈடுபடவும் திட்டவட்டமாக மறுத்தாள்.
பார்பரா பொறுமை இழந்தாள். கணவனிடம் சண்டை போட்டாள். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றாள். ஆனால், மகன் மைக்கேல் தன் தந்தையுடன் வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. இது பார்பராவை நிலைகுலைத்தது. தன் வேதனையை மறக்க மதுவை நாடினாள். மைக்கேலை வாக்கரிடமிருந்து மீட்க வேண்டும் என்று தவித்தாள்.
1984. நவம்பர்.
பார்பரா மீண்டும் FBI- க்கு போன் செய்தாள். எதிர்முனையில் இருந்த அதிகாரியிடம், அழுகையும் கோபமுமாகப் பேசினாள்:
'என்னுடைய மாஜி கணவர் வாக்கர், அமெரிக்க ரகசியங்களை ரஷ்யாவுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்...' என்று போதையில் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டினாள்.
வாக்கர் மீது சந்தேகம் இல்லாதபோதும், அவருடைய நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணிக்க, கப்பற்படையின் புலனாய்வுத் துறை முடிவு செய்தது. ஆராய, ஆராய பல திடுக்கிடும் தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தன. சொகுசு வாகனங்களையும், மூன்று பெரிய குடியிருப்புகளையும் சொந்தமாக்கிக்கொள்ளும் அளவுக்கு வாக்கருக்கு பென்ஷன் கிடைப்பதில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
வலை விரித்துக் காத்திருந்து, வாக்கர் ரகசியங்களை விற்க முயன்ற தினத்தில், அவரை ஹோட்டலில் கைதுசெய்தார்கள். அமெரிக்காவின் பாதுகாப்புக்குப் பெரும் குந்தகம் விளைவித்ததாக வாக்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தப்பிப்பதற்கு வழியில்லை என்று தெரிந்ததும், வாக்கர் மேலதிகாரியை அழைத்தார்.
'என்னைப் பற்றியும் என் உளவு வளையத்தில் உள்ள அனைவர் பற்றியும் எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ளத் தயார். ஆனால், பதிலுக்கு, அதிக தண்டனை இல்லாமல், என் மகனை விடுவிக்க வேண்டும்..' என்று கோரினார்.
அவர் கோரிக்கை ஏற்கப்பட்டது.
அத்தனை உண்மைகளும் வெளிவந்தன. அமெரிக்கர்களை கதிகலங்கச் செய்தது வாக்கரின் தேசத் துரோகம்.
மைக்கேலுக்கு 25 வருட சிறைவாசம். தன் குடும்பத்தையே உளவு வளையமாக்கிய வாக்கருக்கு ஆயுள் தண்டனை. அவர் அண்ணன் ஆர்தருக்கு 40 வருட கடுங்காவல். வாக்கரிடம் பயிற்சிபெற்று உளவு வேலைகள் செய்த ஜெர்ரி விட்வொர்த்துக்கோ 365 வருட சிறைவாசம்.
2014. சிறைச்சாலையிலேயே அண்ணன் ஆர்தர் இறந்தார். சில மாதங்களில், வாக்கரும் கேன்ஸர் காரணமாகச் சிறைச்சாலையில் மரணமெய்தினார்.
அச்சத்தைத் தூண்டுகிறது!
கடிதங்கள்
கூட்டணிக் கட்சித் தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க பி.ஜே.பி தலைவர் அமித்ஷா மறுக்கிறார். ஆனால், பி.ஜே.பி அமைச்சர் அருண் ஜெட்லி, நீதிமன்றத் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். நாட்டில் என்ன சார் நடக்கிறது?
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.
இந்து மதத்தை... ஆன்மிகத்தை... மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், பிரிவினை உணர்வை வளர்க்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை. கோபால்ஜி போன்றவர்கள், 'கோட்சேவுக்கு சிலை வைப்பதில் தவறில்லை’ என்று கூறுவது தேசத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைத் தூண்டுகிறது.
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது ஒரு தன்மானப் பிரச்னையாக தென்மாவட்ட மக்களின் மனங்களில் பற்றி எரிகிறது. இதற்கு ஆதரவாக எல்லா கட்சிகளும் ஓர் அணியில் நிற்பது ஆரோக்கியமே. உண்மை நிலையை உணர்ந்து உச்ச நீதிமன்றம் தனது பிடிவாதத்தைத் தளர்த்தி, ஜல்லிக்கட்டை பாதுகாப்புடன் நடத்த உத்தரவிட்டால் நன்றாக இருக்கும்.
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.