மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

கனவுக் கன்னியின் எழுச்சி...!

குற்றம் புரிந்தவர்

1962. ஆகஸ்ட், 5.

ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை 04.25. அமெரிக்காவின் மேற்கு லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸ் தலைமையகத்தில் தொலைபேசி ஒலித்தது. அதிகாரி ஜாக் கிளமென்ஸ் எடுத்தார்.

மறுமுனையில் பேசியவர், டாக்டர் ஹைமன் எங்கெல் பர்கின்.

'மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். வீட்டில் பிணமாகக் கிடக்கிறாள்...' என்று பதற்றத்துடன் டாக்டர் கூறினார்.

செய்தி கேட்டு அதிர்ந்தவராக, ஜாக் கிளமென்ஸ், போலீஸ் படையுடன் மர்லின் மன்றோவின் வீட்டுக்கு விரைந்தார்.

மர்லின் மன்றோ ஹாலிவுட்டின் கவர்ச்சிப் புயல். அமெரிக்க மக்களின் கனவுக்கன்னி. பிரபலத்துக்கும், பிரச்னைகளுக்கும் ஒருங்கே புகழ் பெற்ற நடிகை. டாக்டர் ஹைமன், மர்லின் மன்றோவின் பிரத்யேகமான மருத்துவர்.

போலீஸ் சென்று சேர்ந்தபோது, வீட்டு முகப்பில் டாக்டர் ஹைமன் காத்தி​ருந்தார். அவருடன் மர்லின் மன்றோவின் மனநல மருத்துவரான டாக்டர் ரால்ஃப் கிரீன்சனும், மர்லினின் தாதி யூனிஸ் மர்ரேவும் காத்திருந்தார்கள்.

எத்தனையோ பேரின் தூக்கத்தைக் கலைத்த வசீகரமான வளைவுகள் நிறைந்த மர்லினின் உடல், படுக்கையறையில், உயிரற்று, துணியால் மூடப்பட்டு, குப்புறக் கவிழ்ந்த நிலையில், நிர்வாணமாகக் கிடந்தது.அருகிலிருந்த மேஜையில் தூக்கமாத்திரை பாட்டில்கள் அணிவகுத்திருந்தன.      

மர்லினின் தலை தலையணை மீது பதிந்திருந்தது. கைகள் பக்கவாட்டில் விரிந்திருந்தன. கால்கள் நேராக இருந்தன. உடல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தாலும், மிக ஒழுங்காக நீண்டு இருந்தது.

தன் சர்வீஸில் தற்கொலை செய்துகொண்​டவர்​களின் உடல்களைப் பார்த்துப் பழகியிருந்த ஜாக் கிளமென்ஸ், மர்லினின் உடலைப் பார்த்தவுடன் குழம்பினார்.

'விஷமோ, தூக்க மாத்திரைகளோ உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்பவர்களின் உடல், வலிப்பு வந்தவர்களைப் போல வெட்டி இழுக்கும். வாந்தி வரும். தாளமுடியாத வேதனையின் காரணமாக, உடல் கண்டபடி முறுக்கிக்கொண்டு உயிர் பிரியும். மர்லினோ ஒரு தேவதையைப் போல கிடக்கிறாள். இப்படி நிகழ வாய்ப்பே இல்லை. இறந்து போனபிறகு, அவளது உடல்தான் இவ்வாறு கிடத்தப்பட்டுள்ளது...’ என்று அவர் எண்ணம் ஓடியது.

மேலும், மர்லின் தூக்க மாத்திரைகளை உட்கொண்டிருந்தால், நிச்சயம் தண்ணீர் குடித்திருக்க வேண்டும். அறையில் தண்ணீர்க் குவளையோ, டம்ளர்களோ இல்லை.

தவிர, மர்லினின் மரணம் பற்றி அங்கே இருந்தவர்களுக்கு நான்கு மணி நேரம் முன்னதாகவே தெரிந்திருந்தது.

மர்லின் நடித்துக்கொண்டிருந்த படங்களைத் தயாரித்து வந்த ட்வென்டியத் சென்ச்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் அனுமதி​அளிக்காததால்தான், அவளது மரணத்தைப் பற்றி உடனடியாகத் தகவல் தரவில்லை என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

'அப்படியா?' என்று வறண்ட குரலில் கேட்டார், ஜாக் கிளமென்ஸ். மர்லினின் மரணத்தில் பல ரகசியங்கள் மறைந்திருப்பதாக அவருடைய உள்மனம் சொன்னது.

அவருடைய சந்தேகத்துக்குக் காரணம் இருந்தது. மர்லின் மன்றோ கடந்துவந்த வாழ்க்கையை அவர் அறிவார். அவளைச் சுற்றி நடந்த பல மோசமான சம்பவங்கள் அவருக்குத் தெரியும். மேலும் மர்லின் மன்றோ வி.வி.ஐ.பிகள் பலரோடு மிக 'நெருக்கமாக’ப் பழகிக்கொண்டிருந்ததையும் அவர் அறிவார்.

மர்லின் மன்றோ பிறந்தபோது அவளுக்குச் சூட்டப்பட்ட பெயர் நோர்மா ஜீன் மார்டின்ஸன்.

லாஸ் ஏஞ்சலெஸின் பொது மருத்துவ​மனையில், 1926-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு, அவளுடைய தாய்  கிளாடிஸ் அவளைப் பெற்றெடுத்தபோது, அமெரிக்கச் சரித்திரத்தில் தன் மகள் பின்னாளில் முக்கிய இடமொன்றைப் பிடிப்பாள் என்று எண்ணியிருக்க முடியாது.

மருத்துவமனைப் பதிவேடுகளில் குழந்தை​யின் தந்தை பெயர் எட்வர்ட் மார்டின்ஸன் என்று பதிவாகி இருந்தது. எட்வர்ட் தந்தை இல்லை. அது ஒரு பிரச்னையும் இல்லை. ஏனெனில் கிளாடிஸ் தனித்து வாழ்ந்துகொண்டிருந்தாள்.

வறுமையில் வாடிய கிளாடிஸ் வயிற்றுப் பசியைத் தணிக்க முழு நேரமும் வேலை செய்ய வேண்டியிருந்தது. இந்தநிலையில், குழந்தை நோர்மாவை ஒரு பணக்கார தம்பதியருக்குத் தத்து கொடுத்தாள்.  

தத்து எடுத்துக்கொண்ட பெற்றோர், நோர்மாவின் மீது நிறைய கட்டுப்பாடுகள் விதித்தனர். அவர்​களுடன் நோர்மா ஏழு ஆண்டுகள் வசித்தாள்.

1934-ல் நோர்மாவின் தாய் கிளாடிஸ், ஸ்கிஸோ​பெர்னியா என்னும் பரம்பரை மனநோயால் பாதிக்கப்பட்டாள். எனவே இல்லம் ஒன்றில் அவள் சேர்க்கப்பட்டாள்.

குற்றம் புரிந்தவர்

நோர்மா வளர்ப்புப் பெற்றோரைப் பிரிந்து, தனது தாயின் தோழியான கிரேஸ் என்பவளிடம் வளரத் தொடங்கினாள்.

1942ல் கிரேஸும் அவளது கணவனும் வேறு ஓர் ஊருக்குப் புலம் பெயர நேரிட்டது. அவர்கள் நோர்மாவைத் தங்களுடன் அழைத்துச் செல்ல விரும்பவில்லை.

எனவே அவளைப் பக்கத்து வீட்டுக்காரரின் மகன்களில் ஒருவனைத் திருமணம் செய்து​கொள்ளுமாறு கூறினர். நோர்மாவுக்கு 16 வயது. பக்கத்து வீட்டுப் பையன் ஜிம் டஃபர்ட்டிக்கு 21 வயது.

வேறு வழியின்றி நோர்மா, ஜிம்மை மணந்து கொன்டாள். 1943-ல் ஜிம் ஒரு கப்பல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். நாடு, நாடாகப் போகத் தொடங்கினான்.

நோர்மா ஒரு விமான நிறுவனத்தில் பெயின்ட் அடிக்கும் வேலையில் சேர்ந்தாள். ஓய்வு நேரத்தில் தனிமை வாட்டியது. குடிக்கத் தொடங்கினாள்.

1944-ல் டேவிட் என்னும் ஒரு போட்டோகிராபர் நோர்மாவைத் தற்செயலாகப் பார்த்தான். அவளது அசாதாரணமான அழகு அவனை அடித்துப்போட்டது.

'நோர்மா, ஒரு மணி நேரத்துக்கு ஐந்து டாலர் தருகிறேன். மாடலாகப் போஸ் தருகிறாயா?' என்று கேட்டான்.

நோர்மா மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள். இருவரும் வாரக்கணக்கில் கலிஃபோர்னியா முழுக்கச் சுற்றினார்கள்.  

அந்தப் பயணத்தின்போது டேவிட் எடுத்த நோர்மாவின் பல வித்தியாசமான, அழகான புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாயின.

அவை ஒரு மாடல் நிறுவனத்தின் பார்வையில் பட்டன. அந்த நிறுவனம் நோர்மாவுடன் ஒப்பந்தம் போட்டுக்    கொண்​டது.

கவர்ச்சியான முகவெட்டும், வாளிப்பான உடற்கட்டும் கொண்ட அந்த அழகு தேவதையின் விதவிதமான புகைப்படங்கள், அடுத்த ஒரே ஆண்டில் புகழ் பெற்ற 33 பத்திரிகைகளின் அட்டைகளிலும்,         உள்​ளேயும் வெளியாகின.  

நோர்மாவிடம் பணம் சேரத் தொடங்கியது. ஆனால் இரவுகளில் தனிமை கொன்றது. ஆண்​கள் அவளைக் கவர்ந்தார்கள். அதனால் நோர்மா பல காதலர்களுடன் வாழ்க்கை நடத்தினாள். 1946ல் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றாள்.

அவளுக்கு 20 வயதான போது, ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்பு நிறுவனம்​ஆன ட்வென்டியத் சென்ச்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பென் லியான் என்பவரால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்​பட்டாள். தேர்வானாள்.

1946 ஆகஸ்ட்.

வாரத்துக்கு 75 டாலர் பெற்றுக் கொண்டு ட்வென்டியத் சென்ச்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு நடித்துக்கொடுப்பதாக, ஓர் ஒப்பந்தத்தில் நோர்மா ஜீன் மார்ட்டின்ஸன் கையெழுத்திட்டாள்.

'நோர்மா என்ற உன் பெயரை வசீகரமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.. மர்லின் மில்லர் என்னும் நடிகை ஒருத்தி இருந்தாளே. அந்தப் பெயரில் இருக்கும் மர்லின் எங்களுக்குப் பிடித்திருக்கிறது..' என்றது, நிறுவனம்.

நோர்மா அதிகம் யோசிக்கவில்லை. அவளையும் அந்தப் பெயர் கவர்ந்தது.

'என்ன சொல்கிறாய்?' என்று பென் லியான் ஆர்வத்துடன் கேட்டார்.

'என் தாயின் முதல் பெயரான மன்றோவையும் அதில் இணைத்துக்      கொள்​ளுங்கள்' என்று நோர்மா கோரினாள்.

'மர்லின் மன்றோ... மர்லின் மன்றோ... சூப்பர்... இன்று முதல் நீ மர்லின் மன்றோ...' என்று ட்வென்டியத் சென்ச்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பென் லியான் குதூகலமாகக் கூறினார்.

இப்படித்தான், மர்லின் மன்றோ என்னும் வசீகரப் பெயருடன், கிரங்க அடிக்கும் அழகுடன் ஒரு புதிய நடிகை, ஹாலிவுட்டில் 1947ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாள்.

அழகு வேறு, திறமை வேறு. மர்லினுக்கு நடிப்பு வரவில்லை. ஒன்றிரண்டு படங்களில் வாய்ப்பு அளித்துவிட்டு, ட்வென்டியத் சென்ச்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் அவளை நிராகரித்தது.

மர்லின் மனம் தளரவில்லை. புகழ் பெற்ற கொலம்பியா, எம்.ஜி.எம் போன்ற நிறுவனங்களை அணுகினாள். ஒன்றிரண்டு படங்களில் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் அவளது நடிப்பு எடுபடவில்லை. எம்.ஜி.எம்மும் அவளை நிராகரித்தது.

மர்லின் நிலைகுலைந்தாள். அந்தச் சமயத்தில் ஆபாசமான நீலப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவளைத் தேடி வந்தது.

பசி..! மர்லின் அந்தப் படங்களில் நடித்தாள்.

ஆனால் தனது வாழ்க்கை அப்படியே கழிந்து​விடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தாள். கண்ணாடி முன் நின்று, நடிக்கப் பழகினாள். உடல் மொழியை மாற்றினாள். நடனம் கற்றாள்.

மறுபடியும் ட்வென்டியத் சென்ச்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் கதவைத் தட்டினாள். இந்த முறை அதிர்ஷ்ட தேவதை அவளை அணைத்தாள்.  

அவளை நிராகரித்த அதே நிறுவனம் மீண்டும் அவளுக்கு வாய்ப்பு கொடுத்தது. தனது             வாழ்க்​கையின் கடைசி தினம் இதுதான் என்ற உணர்​வுடன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் மர்லின் நடித்தாள்.

திரைப்படம் வெளிவந்தது. திரையில் மர்லின் ஒரு நட்சத்திரமாகவே ஜொலித்தாள். ஒரே இரவில் மர்லின் மன்றோ ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினாள். புகழேணியில் ஏறத்தொடங்கினாள்.

ஒரு நாள் காலை படப்பிடிப்புக்காக வீட்டில்​இருந்து புறப்பட்டு வாசலுக்கு வந்த மர்லின், அதிர்ந்தாள்.

வீட்டுக்கு எதிரில், சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது. அவள் கட்டத் தொடங்கியிருந்த கனவுக் கோட்டை அவள் கண்ணெதிரிலேயே இடிந்து சரிவதுபோல் இருந்தது.

மர்லினின் இதயம் நொறுங்கியது. கண்கள் இருண்டன. தலை சுற்றியது.

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)

- குற்றம் தொடரும்

உலகறிந்த உண்மை!

கடிதங்கள்

 ரபுகள் காலில் போட்டு மிதிக்கப்பட்ட குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் அரங்கேறிய அணிவகுப்பு வைபவங்களில் அவமானப்பட்டது ஓ.பன்னீர்செல்வம் என்ற தனிமனிதரல்ல; சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட 'தமிழகத்தின் முதல்வர்’ என்ற பெருமைக்குரிய பதவி. சமூக ஆர்வலர்களின் கண்களில் இவையெல்லாம் படவில்லையா..?

- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

மெரிக்காவுடன் இந்தியா தன் உறவை பலவிதங்களில் செய்துவரும் இந்த வேளையில், மோடி  அமெரிக்க கூட்டணி இந்தியாவை சீண்டும் சில அண்டை நாடுகளை எச்சரிக்கை செய்வதற்காகத்தான் என்பதே இரு நாடுகளும் காக்கும் ரகசியம். இதற்கான சின்ன உதாரணம்தான் சீனா நம்மீது திடீரென அக்கறைகொள்வது!

- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

'சிதம்பரம் பெயரை எடுத்துவிட்டால் கார்த்தியை யாரும் சீண்டமாட்டார்கள்’ என்ற உலகறிந்த உண்மையை, சமயம் பார்த்து போட்டுடைத்திருந்த செல்லகுமாரின் வாய்க்கு சர்க்கரை அள்ளிப்போட வேண்டும். காரணம், தொடக்கத்தில் இருந்தே 'தலை இருக்க வால் ஆடிய கதையாக’ கார்த்தி சிதம்பரம் போட்டுவரும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல... பெருந்தலைவர் காமராஜரை விமர்சித்த ஒரு சம்பவம் போதுமே!

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.