நட்சத்திரத்தின் வீழ்ச்சி..!

மர்லின் கலங்கிப் போகக் காரணம், அவள் வீட்டுக்கு எதிரில், ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
முன்னர் அவள் நடித்த ஆபாசப்படத்திலிருந்து மிக மோசமான போஸ் ஒன்று அங்கே காட்சியளித்தது.
'இந்த நீலப்பட நடிகையா உங்களது கனவுக்கன்னி?’ என்று அதன் கீழிருந்த கிண்டல் வாக்கியம் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது. யாரோ பொறாமைக் காரர்களின் கைவண்ணத்தில், ஊரெங்கும் அந்த போஸ்டர்கள்.
மர்லின் புகழ்பெற்ற ஒரு நிருபரை வீட்டுக்கு வரச் சொன்னாள். அவரிடம் கண்ணீருடன் அவள் அளித்த பேட்டி பத்திரிகையில் வெளியானது.
'அன்புள்ளவர்களே, சுவரொட்டிகளில் ஆபாசமாகக் காட்சியளித்தது நான்தான். மறுக்கவில்லை. ஆனால் எந்த மாதிரியான சூழ்நிலையில் அப்படிப் பட்ட படங்களில் நடித்தேன் தெரியுமா?
கொடிய வறுமை. வயிற்றுப்பசி. எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் உங்களது சகோதரியோ, மகளோ, மனைவியோ என்னை மாதிரி நடந்திருந்தால் அவளை நிராகரித்து விடுவீர்களா?'
பேட்டியைப் படித்தவர்களின் இதயங்கள் உருகின. மர்லினின் ஒப்புதல் வாக்குமூலம் அவள் மீது எக்கச்சக்கமான பச்சாதாபத்தை உருவாக்கியது.

'மர்லின்! உன் நேர்மையும், உனது கேள்வியில் இருந்த நியாயமும் எங்களைச் சுட்டன. இனி நாங்கள் உன் பக்கம்’ என ரசிகர் கடிதங்கள் வந்து கொட்டின.
மர்லினின் திரை வாழ்க்கை சூடுபிடித்தது. மர்லின், கவர்ச்சிக் கன்னியாகத் திரையுலகைக் கலக்கத் தொடங்கினாள்.
‘The Seven Year Itch’, ‘Bus Stop’, ‘The Prince and the Show-girl’, ‘Some Like It Hot’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தவிர, நடிப்புக்காகப் பல பரிசுகளையும் இந்தப் படங்கள் பெற்றுத் தந்து, மர்லினைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றன.
பணமும் புகழும் இலவச இணைப்பாக, சோகங்களையும் சுமந்து வரும் என்பது தானே இயற்கையின் நியதி?
மூன்று திருமணங்கள், மூன்று விவாகரத்துகள், கலைக்கப்பட்ட கருக்கள், கலைந்துபோன கர்ப்பங்கள் என்று பல கசப்பான நிகழ்வுகள் மர்லின் வாழ்க்கையில் அரங்கேறின.
பேஸ்பால் விளையாட்டு வீரனான ஜோ டிமேகியோவை மணந்தபின் மர்லின் பட்ட அவதி கொஞ்சநஞ்சமல்ல. மர்லின் மீது பைத்தியமாக இருந்த ஜோ திருமணத்துக்குப் பின் அரக்கனானான். மர்லின் நடிக்கக் கூடாது என்றான். மற்ற ஆண்களுடனும் பெண்களுடனும் பழகக் கூடாது என்றான்.
அப்போது, கொரியாவில் முகாமிட்டு இருந்த 13,000 அமெரிக்கப் போர் வீரர்களைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துமாறு அமெரிக்க அரசு மர்லினுக்கு அழைப்பு விடுத்தது.
மர்லின் கொரியாவுக்குப் போகக் கூடாது என்று ஜோ கத்தினான். பயணத்தைத் தடுப்பதற்காக, ஜோ அவளுடைய கட்டைவிரல் எலும்பை முறித்தான்.
மர்லின் முறிந்த கட்டை விரலுடனேயே கொரியா சென்று அமெரிக்க வீரர்களிடையே நடனமாடி அவர்களை மகிழ்வித்தாள்.
உள்ளாடையை வெளிக்காட்டும் வகையில் ஒரு காட்சியில் தோன்றினாள் என்பதற்காக அவளை ஜோ ரத்தம் வரும் வரை அடித்தான். பொறுக்க முடியாமல் மர்லின் அவனிடமிருந்து விவாகரத்து பெற்றாள்.
மகிழ்ச்சியும், நிம்மதியும் அற்ற வாழ்க்கை அவளது உடல் நலத்தையும், மன நலத்தையும் சீரழித்தது. மர்லின் மதுவிடமும், தூக்க மாத்திரைகளிடமும் தஞ்சம் அடைந்தாள்.
அப்போதுதான் அவளது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட, அவளது முடிவுக்கே கூட ஒருவிதத்தில் காரணமாக அமைந்த அந்தத் தொடர்பு ஏற்பட்டது!
ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி என்றால் நினைவுக்கு வருகிறதா? அமெரிக்காவின் அதிபரும், மக்களின் நிகரில்லாத தலைவருமாக விளங்கிய ஜான் கென்னடியேதான்.
1960. கென்னடியின் சகோதரி பெட்ரீசியா மற்றும் அவள் கணவனும் நடிகனுமான பீட்டர் லாஃபோர்ட் ஆகியோரிடம் நட்பு கொண்டிருந்தாள் மர்லின்.
அவர்கள் மூலம், கென்னடி சகோதரர்களான ராபர்ட் கென்னடி மற்றும் அதிபர் ஜான் கென்னடி ஆகியோருக்கு மர்லின் அறிமுகமானாள். மர்லின் மீது விழுந்த பார்வையை எடுக்க முடியாமல், சகோதரர்கள் திணறினர். ராபர்ட் அவள் மீது மோகம் கொண்டிருந்தார். ஆனால், மர்லினின் மனதை ஜான் கென்னடியே முழுக்க முழுக்க ஆக்கிரமித்தார்.
கென்னடியின் மைத்துனர் லாஃபோர்ட்டின் வீட்டில், இருவரும் சந்தித்து, பல மணி நேரங்களை தனிமையில் அந்தரங்கமாகச் செலவிட்டார்கள். தன் வாழ்க்கைக்கு, திடீரென ஓர் அழகிய அர்த்தம் ஏற்பட்டு விட்டதாக மர்லினுக்குத் தோன்றியது.
ஆனால் கென்னடி அமெரிக்காவின் அதிபர். தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த வி.வி.ஐ.பி. அப்பேர்ப்பட்டவர் ஒரு கவர்ச்சி நடிகையுடன் ரகசிய உறவுகொண்டிருந்த செய்தி உயர் வட்டங்களில் கசியத் தொடங்கியது.
1962. மே மாதத்தில், அதிபர் கென்னடியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்துகொண்ட மர்லின், தான் எழுதிய பாடல் ஒன்றை, மேடையில், காதலுடன், நா தழுதழுக்க உருக்கமான குரலில் பாடி கென்னடிக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறினாள்.
கென்னடி நெகிழ்ந்தார். 'தேன்மதுரக் குரலில் நீ பாடிய அற்புதமான இந்தப் பிறந்தநாள் வாழ்த்தைக் கேட்டபின், நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெறவும் தயார்’ என்று உருகிப்போய்ச் சொற்களை உதிர்த்தார்.
அரங்கமே அதிர்ந்தது. அந்த நிகழ்ச்சியால் அவர்களது ரகசியக் காதல் அம்பலத்துக்கு வந்தது.
மற்ற வல்லரசுகள், பகை நாடுகள், தீவிரவாதிகள், அரசியல் எதிரிகள் என்ற பலரது கவனமும் அமெரிக்க அதிபரின் ஆசை நாயகியான மர்லினின் பக்கம் திரும்பியது.
மர்லினோ அப்பாவியாக, 'கென்னடி தன் மனைவி ஜாக்குலினை விவாகரத்து செய்துவிட்டு என்னை மணந்துகொள்வதாகச் சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் முதல் பெண்மணி, ஜனாதிபதியின் மனைவி என்ற பெருமையுடன், வெள்ளை மாளிகையில் நான் வாழப்போவது சத்தியம்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினாள்.
அமெரிக்க உளவுத்துறையான FBI விழித்துக் கொண்டது. 'அதிபருக்கு நெருக்கமான இந்த நடிகையின் மூலம், அரசாங்க ரகசியங்கள் பல வெளியாகலாம். அது அமெரிக்காவின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கலாம்’ என்று FBI கருதியது. அதிபர் கென்னடியை விட்டு உடனடியாக விலகுமாறு அவள் எச்சரிக்கப்பட்டாள். 'இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்’ எனவும் பயமுறுத்தப்பட்டாள்.
1962-ம் ஆண்டு ஜூலை இறுதியில் டஹோ ஏரிக்கரையில் இருந்த ஓர் அலங்கார விடுதியில் நடக்கவிருந்த ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ளச் சொல்லி மர்லினுக்கு அழைப்பு வந்தது.
வழக்கமாக நடைபெறும் சினிமா பார்ட்டிதானே என்ற எண்ணத்துடன் மர்லின் பார்ட்டியில் கலந்துகொள்ளச் சென்றாள். அங்கே அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், ஒரு சதி நடந்தது.
ஃபிரான்சி சினத்ரா என்ற நடிகரும், குண்டர் கூட்டத்தலைவன் என்று பெயர் எடுத்திருந்த சாம் கியான்கனா என்னும் முரட்டுத் தயாரிப்பாளர் ஒருவரும் அதே பார்ட்டிக்கு வந்திருந்தார்கள்.
தயாரிப்பாளர் மர்லினிடம், தான் அடுத்து எடுக்க இருக்கும் திரைப்படத்தைப் பற்றி பேசவேண்டும் என்று கூறி அவளைத் தனியறைக்கு அழைத்துச் சென்றார். மதுக் கோப்பையை அளித்தார். அதில் போதை மருந்து கலந்திருந்ததை அறியாத மர்லின் மதுவை அருந்தினாள்.
போதையேறி மர்லின் தடுமாறினாள். அதற்காகவே காத்திருந்ததுபோல் அறைக்குள் குண்டர்கள் சிலர் நுழைந்தனர். அவளது உடைகள் சரசரவென்று களையப்பட்டன. ஒரு போட்டோகிராபர் அவளைக் கண்ட மேனிக்கு ஃப்ளாஷ், ஃப்ளாஷ் எனப் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினார். ஃப்ளாஷ் வெளிச்சம் மர்லினை எச்சரித்தது. சட்டென்று அவளது போதை இறங்கியது.
தயாரிப்பாளர் நிர்வாணமாய் நின்ற அவளிடம் 'கென்னடியைப் பற்றி இனிமேல் ஏதாவது ஒரு வார்த்தை பேசினாலோ, அவருக்கு எதிராக நடந்து கொள்ள முயற்சி செய்தாலோ அவ்வளவுதான். உனது நிர்வாணம் சந்தைக்கு வந்துவிடும்...’ என்று எச்சரித்தார். மர்லின் விக்கித்துப் போனாள்.
அதிபர் கென்னடியிடமும் பலர், 'மர்லின் மன்றோவுடன் உறவு தொடர்ந்தால், உங்கள் அரசியல் எதிர்காலமே இருண்டுவிடும்’ என்று எச்சரித்தார்கள். ஜான் எஃப்.கென்னடி அவளிடமிருந்து விலகத் தொடங்கினார். இந்த திடீர்த் திருப்பங்கள் மர்லின் மீது பேரிடியாக இறங்கின.
இத்தனைக்குப் பிறகும், FBI அதிகாரிகளுக்கு மர்லின் ஒரு பெரும் அபாயமாகவே தோன்றினாள். கென்னடியுடனான உறவைப் பற்றிய ரகசியங்களை அம்பலப்படுத்தி, அதிபருக்கு தர்மசங்கடத்தையும் அவரது அரசியல் வீழ்ச்சியையும் அவள் உண்டாக்கலாம் என்று அவர்கள் அச்சம்கொண்டனர். எனவே மர்லினைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்கள்.
மர்லினின் நண்பர்கள், 'மர்லினை நிரந்தரமாக அமைதிப்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கலாம்’ என அஞ்சினர்.
ஏரிக்கரை அலங்கார மாளிகை நிகழ்ச்சி நடந்து ஒரே வாரத்துக்குள் மர்லினின் மரணம் சந்தேகத்துக்கு இடமான சூழ்நிலையில் நடந்தேறியது.
பிணப் பரிசோதனையில், 'அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரைகளை உட்கொண் டதால் மரணம் சம்பவித்துள்ளது’ என்று கூறப்பட்டதைக் காரணம் காட்டி, 'இது ஒரு தற்கொலை’ என்று வழக்கை வேகமாக மூடியது காவல் துறை.
மர்லின் உண்மையிலேயே தூக்கமாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டாளா அல்லது FBI அவளது வாயை நிரந்தரமாக மூடியதா அல்லது குண்டர் கூட்டத்தலைவரான தயாரிப்பாளர் சாம் கியான்கனா அவளைக் கொலை செய்தாரா?
உண்மையில் நடந்ததுதான் என்ன?
(அடுத்த இதழில்)
- குற்றம் தொடரும்
கழுகு பார்வை தப்பாது!
கடிதங்கள்
நீராவி முருகனின் கால்கள் முறிந்து போனதா அல்லது முறிக்கப்பட்டதா... எதுவாக இருந்தாலும் கொலை, கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு இதுதானே ஆண்டவன் அளிக்கும் தண்டனை!
- இரா.நெல்லை அறிவரசு, ஆவடி.
எத்தனையோ செய்தி சேகரிப்பாளர்கள் நிறைந்த குடியரசு தின விழாவில், அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேசியக்கொடியைத் தலைகீழாகக் குத்தியிருப்பது கழுகார் கண்ணில் சிக்கிக்கொண்டது! தவறுகள் கழுகார் பார்வைக்கு தப்புமா என்ன?
- டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.
டாஸ்மாக் இருக்கிறபோதே தமிழக அரசு இரண்டு லட்சம் கோடி கடனில் ஆட்டம் போடுகின்றதே... டாஸ்மாக் மட்டும் இல்லை என்றால், தமிழ்நாட்டின் நிலை பரிதாபம்தான் போங்கள்! ஆக, பன்னீரின் ஆட்சியில் வரி விதிப்புகள் அதிகம் அரங்கேற வாய்ப்பு உள்ளது!
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்).
'எனது ஒவ்வோர் அடியையும் இயேசுதான் தீர்மானித்திருக்கிறார்’ என்கிறாரே உமாசங்கர்... அப்படியிருக்க, அவர் ஆட்சியாளர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்.
- ரேவதிப்ரியன், ஈரோடு.