மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சி..!

குற்றம் புரிந்தவர்

ர்லின் மன்றோ உண்மையிலேயே இறந்துபோனது ஏன், எப்படி, எதற்காக? அவளுடன் தொடர்பு கொண்டிருந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் மரணத்துக்குப் பின்தான், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

மர்லின் மன்றோவால் அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்துப் போய்விடும் என்று அதிபர் ஜான் கென்னடிக்கு அறிவுறுத்தப்​பட்டது. தன் அன்பான குடும்பத்தையும் பகைத்துக்கொண்டு, மக்கள் மத்தியில், அசிங்கப்பட்டுப்​போவோம் என்று அவர் உணர்​ந்தார். தன் தம்பி ராபர்ட்டை அவளிடம் தூது அனுப்பினார்.

அதிபர் கென்னடி எ​ப்போதும் மைத்துனன் லாஃபோர்​டின் கடற்கரை வீட்டில்தான் மர்லின் மன்றோவை ரகசியமாகச் சந்திப்பது வழக்கம். அதே வீட்டில் ராபர்ட் கென்னடி மர்லினைச் சந்தித்தார்.

'புரிந்துகொள் மர்லின். ஜனாதிபதி தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அவர் ஜாக்குலினை விவாகரத்து செய்துவிட்டு, உன்னைக் கல்யாணம் செய்து கொள்வதெல்லாம் நடக்கிற காரியமல்ல.அவரை மறந்துவிடு.'

மர்லின் கலங்கினாள். குமுறி அழுதாள். ராபர்ட் அவளை அணைத்துக்கொண்டார். 'நான் இருக்கிறேன்' என்றார்.

துக்கம் வெட்கம் அறியாது. வசீகரமான அவளது உடல் அளவுக்கு மீறி வெளிப்பட்டது. ராபர்ட் நிலைகுலைந்தார்.

அன்றைய இரவு சொர்க்கம் இடம்பெயர்ந்து, கடற்கரை வீட்டுக்கே வந்துவிட்ட மாதிரி ராபர்ட்டுக்குத் தோன்றியது. 'ஜானை மற. நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்' என்று சத்தியம் செய்தார். மர்லின் பணிந்தாள்.

அதே வீட்டில் ராபர்ட்  மர்லின் சந்திப்புகள் தொடர்ந்தன. ஆனால், மோகம் 30 நாள்​தானே? ராபர்ட்டுக்கும் அவள் சலித்துப் போனாள். அவரும் விலகத் தொடங்கினார். மர்லின் கோபத்தில் கொந்தளித்தாள்.

'அண்ணனும் தம்பியுமாகச் சேர்ந்து பந்தாடு​கிறீர்களா? நான் விடப்போவதில்லை. பத்திரிகைக்காரர்​களை அழைத்து, எல்லாவற்றையும் வெளிப்படுத்தப் போகிறேன்..' என்று ஹிஸ்டீரியா வந்தவளைப்போலக் கத்தினாள்.

ராபர்ட் திகைத்தார். அவசரமாக விலகினார்.

...

ஆகஸ்ட் 4. 1962. பிற்பகல். மர்லின் தனது விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.

ராபர்ட்டும், லாஃபோர்டும் அங்கே வந்தார்கள். நீச்சல் குளத்துக்கு அருகில் கையில் ஷாம்பேய்ன் கோப்பையுடன் லாஃபோர்ட் காத்திருக்க, ராபர்ட் வீட்டுக்குள் நுழைந்தார்.

'நமக்குள் எந்த உறவும் கிடையாது. போனில் தொடர்புகொள்ளக் கூடாது. கடிதமும் எழுதக்​கூடாது' என்றார், ராபர்ட்.

டென்ஷன் தாங்காமல், மர்லின் கத்தினாள்.

குற்றம் புரிந்தவர்

'உங்கள் எல்லோரைப் பற்றியும் பயங்கரமான உண்மைகளை ஒரு சிவப்பு டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.. அத்தனையும் வெளியே வரப்போகிறது' என்று வீறிட்டாள். ஒரு கட்டத்தில், சிறு கத்தி  ஒன்றைப் பற்றிக்கொண்டு ராபர்ட் மீது பாய்ந்தாள்.

வாக்குவாதம் நிகழ்வதைக் கேட்டு உள்ளே வந்த லாஃபோர்ட், மர்லினின் தோள்களை வலுவாகப் பற்றி கத்தியைப் பிடுங்கி எறிந்தார். ராபர்ட்டை அழைத்துக்கொண்டு விருந்தினர் மாளிகையைவிட்டு வெளியேறினார்.

'ரகசியங்கள் அடங்கிய சிவப்பு டைரி’ என்ற வார்த்தைகள் ராபர்ட்டைப் பதற வைத்தன.

அன்றைக்கு மாலை. ராபர்ட், லாஃபோர்ட் மீண்டும் வந்தனர். கூடவே இரண்டு மெய்க்காப்பாளர்கள். அவர்கள் ஈவிரக்கமின்றி கெட்ட காரியங்களைச் செய்பவர்கள். ராபர்ட், மர்லினை அணுகி அவளைக் கீழே தள்ளினார். மர்லினின் தலை தட் என்று தரையில் மோதியது.

'அந்த சிவப்பு டைரி எங்கே?' என்று ராபர்ட் அவளைத் தாக்கினார்.

மர்லின் சொல்ல மறுத்தாள். மெய்க்காப்​பாளர்களில் ஒருவன் மர்லினின் திமிறலையும், கூச்சலையும் அடக்குவதற்காக அவளது கட்கத்தில், 'நெம்புடால்’ என்னும் மருந்தை ஊசி மூலம் அவளது உடலில் செலுத்தினான்.

மர்லின் திகைத்து உறைந்தாள்.

லாஃபோர்​டும், ராபர்ட்டும் மர்லின் குறிப்​பிட்ட சிவப்பு டைரியைத் தேடி வீட்டைத் தலைகீழாகப் புரட்டினர்.  

மருந்துக்கு வீரியம் பற்றவில்லை. மர்லின் கூச்சலிடத் தொடங்கினாள். மெய்க்காப்​பாளர்கள் அவளது ஆடைகளை உருவி நிர்வாணமாக்கினர். 36 மோசமான தூக்கமாத்திரைகள் கலந்த கரைசலை, அவளை அழுத்திப் பிடித்துக்​கொண்டு,  அவளது ஆசனவாயில் செலுத்தினர். அந்தக் கரைசல் வேலை செய்தது. மர்லின் அடங்கினாள்.

மர்லினின் மனநல மருத்துவர் டாக்டர் கிரீன்சனை போனில் அழைத்தார் ராபர்ட்.

'மர்லினின் காதலர்களில் நீங்களும் ஒருவர். அவளோடு நீங்கள் உறவு வைத்திருப்பது வெளியே வந்தால் என்னாகும்..?' என்று அச்சுறுத்தினார்.

டாக்டருக்கு உதறல்! 'ஐயையோ.. பைகமி வழக்கில் நான் ஜெயிலுக்குப் போக வேண்டிவரும்.'

'அப்படியானால் மர்லினை நீங்கள்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்'  ராபர்ட்.

ராபர்ட்டும், லாஃபோர்டும் சிவப்பு டைரி கிடைக்காமலேயே, இரவு 10.30-க்கு வீட்டைவிட்டு வெளியேறினர்.

மர்லினின் செல்ல நாய் இடைவிடாமல் குரைத்தது. குரைப்பொலி மர்லினின் தாதி யூனிஸ் மர்ரேவுக்குக் கேட்டது. அவள் தனது ஓய்விடத்திலிருந்து எழுந்து வந்து விருந்தினர் மாளிகைக்குள் எட்டிப்பார்த்தாள். அதிர்ந்தாள்.

மர்லின் கட்டிலின் குறுக்கே விழுந்து கிடந்தாள். தலை கட்டிலின் விளிம்பில் தொங்கிக் கொண்​டிருந்தது. மர்லின் அளவுக்கதிகமாகத் தூக்கமாத்திரைகளை உட்கொண்டுவிட்டதாகக் கருதி தாதி ஆம்புலன்ஸை அழைத்தாள்.

ஆம்புலன்ஸில் வந்த இரு ஊழியர்களும், மயங்கிக் கிடந்த மர்லினின் நிலையைப் பார்த்தனர். அவள் நிர்வாணமாகக் கிடந்தாள். சிலந்தி வலை இழைபோல மூச்சு மெலிந்திருந்தது. நாடித்துடிப்பு பலவீனமாக இருந்தது. படுக்கைக்கு அருகில், மேஜையில் ஒழுங்காக மூடப்பட்ட மாத்திரை பாட்டில்கள் வரிசையாக அணிவகுத்திருந்தன. தண்ணீர், மது எதுவுமே இல்லை.

மர்லினின் வாயில் மருந்து வாசம் இல்லை. வாந்தி எதுவும் எடுத்த அடையாளம் இல்லை. ஊழியர்களில் ஒருவனான ஜேம்ஸ் அவளது நெஞ்சில் மசாஜ் செய்யத்தொடங்கினான். மர்லினின் மூச்சு வலுப்பெறத் தொடங்கியது. அடுத்தவன் ஆம்புலன்ஸில் இருந்து உயிர்மீட்கும் கருவியை எடுத்து வந்து அவளது உடலில் பொருத்தினான். ஸ்ட்ரெச்சரை எடுத்து வர ஆம்புலன்ஸை நோக்கி அவன் ஓடியபோது, கென்னடியின் மைத்துனன் லாஃபோர்ட் அங்கே வந்து சேர்ந்தார்.

டாக்டர் கிரீன்சனும் வந்து சேர்ந்தார். 'நான் மர்லினின் மனநல மருத்துவர்' என்று தன்னை ஊழியர்களிடம் அறிமுகம் செய்துகொண்டார். அவர்களை நகரச் சொன்னார். மர்லினின் தாதியையும் விலகச் சொன்னார்.

ஆம்புலன்ஸ் ஊழியரிடம், 'இயந்திரத்தை எடுத்துவிடு. வாயால் ஊது' என்றார் கிரீன்சன்.

'மெஷின் அதன் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறதே.. ஏன் எடுக்க வேண்டும்?'

'அவர் மர்லினின் மருத்துவர். அவர் சொன்னதைச் செய்..' என்று அதட்டினார், லாஃபோர்ட்.

ஜேம்ஸ் அவளது உடலில் பொருத்தியிருந்த உயிர்காக்கும் கருவியை எடுத்தான். கிரீன்சன் அவளது அடிவயிற்றை அழுத்தி மேலே தள்ளினார். மருத்துவப் பையைத் திறந்து ஓர் அடி நீளமிருந்த சிரிஞ்சை எடுத்தார். ஒரு பாட்டிலில் இருந்து பென்டோபார்பிடாலை உறிஞ்சி எடுத்தார். சிரிஞ்சுக்கு ஏற்ற தடிமனான ஊசி.

மர்லினின் விலா எலும்புகளைத் தொட்டு உணர்ந்து ஓரிடத்தில் ஊசியை அவளது மார்பில் செருகினார். ஊசி எலும்பில் மோதியது. உள்ளே போக மறுத்தது. டாக்டர் தன் வலிமை அனைத்தையும் திரட்டி ஊசியை அழுத்தினார். அவரது கன்னக் கதுப்புகள் உதறின. கட்டக் என்று விலா எலும்பு முறியும் சத்தம் கேட்டது. ஊசி நுழைந்தது. மருந்தை அவளது உடலில் செலுத்திவிட்டு டாக்டர் ஊசியை உருவினார்.

அவர் மருந்து செலுத்தியபோது, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதை விரிந்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். லாஃபோர்டும் டாக்டர் கிரீன்சனின் செயலை எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் பார்த்துக்கொண்டிருந்தார். மர்லினின் பாதுகாப்புக்காக அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த காவல் துறை சார்ஜன்ட் ஒருவரும் அந்த அவலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

நோர்மா ஜீன் மார்டின்ஸனாகப் பிறந்து, மர்லின் மன்றோவாக உருவெடுத்து, அமெரிக்க மக்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்து,  ஆண்களை அலைக்கழித்து, ஆண்களால் அலைக்கழிக்கப்பட்டு, வி.வி.ஐ.பிக்களின் அந்தரங்கத் தோழியாக உலா வந்தவளின் மூச்சு, நிரந்தரமாகப் பிரிந்தது.

அதிகாரிகளின் உத்தரவுப்படி, மர்லின் மன்றோவின் உடல் ஆம்புலன்ஸ் ஊழியர்களால் விருந்தினர் விடுதியில் இருந்து எடுக்கப்பட்டு, அவளது வீட்டின் படுக்கை​யறையில் கொண்டுவந்து கிடத்தப்பட்டது. தூக்க மாத்திரை பாட்டில்களும் இடம்​பெயர்ந்தன.

மர்லின் மன்றோவின் பிரத்யேக டாக்டரான ஹைமன் எங்கெல் பர்கினை, கிரீன்சன் தொலைபேசியில் அழைத்தார். அவர் பதறிக்கொண்டு விரைந்து வந்தார். மர்லினின் அடங்கிப்போன உடலைப் பார்த்து அதிர்ந்தார்.

1962. ஆகஸ்ட், 5.

ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை 04.25. அமெரிக்காவின் மேற்கு லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸ் தலைமையகத்தில் தொலைபேசி ஒலித்தது. மர்லினின் உயிர் பிரிந்த செய்தி சொல்லப்பட்டது.

பின் குறிப்பு: மர்லின் மன்றோ எவ்வாறு கொல்லப்பட்டாள் என்பது கென்னடியின் மைத்துனர் லாஃபோர்ட் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர் ஜேம்ஸ் ஆகியோர் மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்தபோது, அதிபர் ஜான் கென்னடியும் அவரது தம்பி ராபர்ட் கென்னடியும் சுடப்பட்டு இறந்து போயிருந்தார்கள். மர்லின் மன்றோவின் வீட்டில் நிகழ்ந்த உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த திஙிமி மற்றும் சிமிகி உளவுத் துறை அதிகாரிகளுக்கும் மர்லின் கொலை பற்றித் தெரிந்தே இருந்தது. அரசியல் அவர்கள் வாயையும் அடைத்தது. அவர்கள் காவல் துறையை அழைத்து 'மர்லின் மன்றோ தற்கொலை செய்துகொண்டாள்’ என்று கோப்பில் எழுதி வழக்கை மூடச் சொன்னார்கள். அவ்வாறே நடந்தது.

- குற்றம் தொடரும்

நிதர்சனமான உண்மை!

கடிதங்கள்

முதல்வருக்கு அவமானமா... அப்படி என்று ஒன்று பன்னீர்செல்வத்துக்கு இருக்குமேயானால், முதல்வர் பதவியில் நீடிக்க மாட்டாரே. அடபோங்க சார் நீங்க... நம்ப முதல்வரை ரொம்பதான் கேலி செய்றீங்க..!

- ப.மூர்த்தி, பெங்களூரு-97.

'கொலைகள் சொல்லும் பாடம்’ என்ற கட்டுரையில் டாக்டர் அபிலாஷாவின் அறிவுரை ஏற்புடையதுதான். ஆனால், பெண்களின் பிடிவாதம்தான் இந்த மாதிரியான கமலக்கண்ணன்கள் உருவாகக் காரணம் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

- டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

நேதாஜி பற்றிய ஆவணங்கள் இந்திய அரசிடம் உள்ளதால், அதுபற்றி மோடியிடம் கேட்பதில் அர்த்தம் உண்டு. வவுனியா காட்டில் பிரபாகரனுடன் நட்புகாட்டி, உறவாடி கோடிகளைக் கறந்து வந்தவர்கள்தானே பிரபாகரன் பற்றிய மர்மங்களை அறிவர். அதை கருணாநிதியிடம் கேட்பதில் அர்த்தமில்லை.

- தி.சோமசுந்தரம், பிள்ளையார்பட்டி.

முற்றும் துறந்தவர்களைத்தான் துறவிகள் என்கிறோம். உதாரணம் ரமண மகரிஷி, காஞ்சி சுவாமிகள். ஆனால், தற்போது கோட்டு சூட்டுடன் குளிரூட்டப்பட்ட அறையில் உலாவரும் சுவாமிகளும் தங்களைத் துறவிகள் எனக் காட்டிக்கொள்கிறார்கள். இவர்களைப் பின்பற்றுகிறவர்களும் இருப்பதுதான் இன்னும் அதிசயம்!

- எஸ்.புருஷோத்தம் ராஜன், பரமக்குடி.