மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

தவறான நேரத்தில், தவறான இடத்தில்..!

குற்றம் புரிந்தவர்

2009. நவம்பர் 9. அதிகாலை 05.30.

 ஒக்லஹோமா நகரத்தின் காவல்​துறை கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி ஒலித்தது.

'எங்கள் தெருவில் கடைசி வீட்டில் கூரை வழியாகப் புகை வருகிறது. ஜன்னல்களில் தீப்பிழம்பு​களையே பார்க்க முடிகிறது..!' என்று அலறியது தூக்கம் கலைந்த ஒரு பெண்ணின் குரல்.

அடுத்த சில நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்துக்குத் தீயணைப்​புப் படையினர் விரைந்தனர். அதிகாலை வானத்தின் சாம்பல் நிறப் பின்னணியில், அந்த ஒற்றை அடுக்கு வீட்டின் கூரையில் ஆரஞ்சு நிறத்தில் தீப்பிழம்புகள் ஒளிர்ந்​தன.

தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். வீட்டுக்குள் யாராவது மாட்டியிருக்கிறார்களா என்று அடர்ந்த புகையினூடே தேடினர். ஹாலில் ஓர் உடல் கிடைத்தது. உள்ளறையில், மேலும் மூன்று உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிப் போய்க் கிடைத்தன.

இறந்துபோன நால்வரில் மூவர் பெண்கள், ஒருவர் ஆண்.  பிணங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு காவல் துறை வீட்டை ஆராய்ந்தது. வீடு முழுவதும், பெட்ரோல் வாசம் குப்பென்று வீசியது. அது தற்செயலாக நடந்த விபத்து அல்ல, வேண்டுமென்றே யாரோ வீட்டுக்குத் தீ வைத்திருந்தார்கள் என்று புரிந்தது.

வீட்டைத் துப்புரவாக ஆராய்ந்ததில், பல​விதமான கத்திகள், ஒரு லைட்டர், எடை பார்க்கும் டிஜிட்டல் தராசு, பிளாஸ்டிக் உறைகளில் மரிஜுவானா, கரன்ஸி காகிதங்கள், டெபிட் கார்டு, செல்போன்கள், வெடிக்காத தோட்டாக்கள் என்று பல்வேறு பொருட்கள் கிடைத்தன.

அது போதை மருந்துப் பரிமாற்றம் நடக்கும் இடமாக இருந்திருக்கலாம் என்று போலீஸ் கருதியது. அக்கம்பக்கத்தில் விசாரித்ததில், தீ காணப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் ஒரு கார் புறப்பட்டுச் சென்ற ஒலி கேட்டதாகச் சொன்னார்கள். பிரேதப் பரிசோதனை முடிவுகள் காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தன.

'நால்வருமே சுட்டுக் கொல்லப்பட்டிருக்​கிறார்கள். தவிர, அங்கங்கே கத்தியால் வெட்டப்பட்டிருக்கிறார்கள்.. தடயங்களை அழிப்பதற்காக வீட்டுக்கு நெருப்பை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான், கொலை​யாளி' என்றது, அறிக்கை.

குற்றம் புரிந்தவர்

'கொடூரமாகக் கொல்லப்பட்டு, இறந்தது நான்கு பேரல்ல.. ஆறு பேர்...' என்று திருத்தியது, போலீஸ். காரணம், கொலை செய்யப்பட்ட பெண்களில் இருவர் கர்ப்பமாய் இருந்தனர்.

இறந்துபோன பெண்களில் ஒருத்தியின் உடல் கருகியிருந்தாலும், கீழ் உதட்டின் உட்புறம் பச்சை குத்திய ஒரு டாட்டூ மார்க்.

'இது என் தோழி ப்ரூக் ஃபிலிப்ஸ்.. யாரிடமாவது கோபம் கொண்டு, சாபம் கொடுக்க வேண்டுமென்றால், தன் கீழுதட்டைப் பிதுக்கி அந்த டாட்டூ மார்க்கை  காட்டுவாள்' என்று ஒருத்தி அடையாளம் சொன்னாள்.

கொலையானவர்களின் பெயர்கள் வெளியாயின.

22 வயது ப்ரூக் ஃபிலிப்ஸ். அதே வயதில் பரியா என்ற இளம் பெண். 25 வயது ஜெனிஃபர். 32 வயது பரியன்தோஸ்.

ப்ரூக்கின் தலையைக் குண்டு துளைத்​திருந்தது. கழுத்திலும், வயிற்றிலும் கூரான கத்தியால் குத்தப்பட்டிருந்தாள். இடது கை, வலது கால், மணிக்கட்டு போன்ற இடங்களிலும் தோட்டாக்கள் துளைத்திருந்தன. பரியாவின் மண்டையையும், முதுகையும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருந்தன.

இரு வெவ்வேறு துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததால், குறைந்தபட்சம் இரண்டு பேராவது அந்தக் கொடூரக் கொலைகளில் ஈடுபட்டிருக்க​வேண்டும் என்று போலீஸ் கருதியது.

ப்ரூக்கின் பின்னணியை போலீஸ் ஆராய்ந்தது. ப்ரூக், 22 வயதுப் பேரழகி. ப்ரூக்கின் வளைவுகள் பலரைக் கிறங்கடித்தன. அந்தப் பகுதியில் அனுமதி பெற்று நடத்தப்பட்ட விபசார விடுதி ஒன்றில் அவள் 'தொழில்’ செய்துகொண்டிருந்தாள். 'மூன்லைட்’ என்ற அந்த இரவு விடுதிக்கு அவளுடைய நடனத்தைப் பார்ப்பதற்காகவே பல வாடிக்கையாளர்கள் வருவ​துண்டு.

விலைமாதரைப் பற்றிய ஒரு தொடர் நிகழ்ச்சியைத் தயாரித்த தனியார் தொலைக்​காட்சியில், தன்னுடைய பெயரை ஹேடன் ப்ரூக்ஸ் என்று மாற்றிக்கொண்டு, ப்ரூக் தைரியமாக பேட்டி கொடுத்​திருந்தாள். அதற்கப்புறம், விடுதியில் அவள் மேலும் பிரபலமாகியிருந்தாள்.

விபசார விடுதியை நடத்திய டெனிஸ் ஹாஃப், ப்ரூக் பற்றி விவரங்கள் கொடுத்தார்.

'ப்ரூக் நல்ல பெண்... இரண்டு வருடங்களாக எங்களுடன் இருக்கிறாள். சென்ற மாதம் என்னிடம் வந்தாள். 'கர்ப்பமாயிருக்கிறேன். ஓய்வு தேவை. குழந்தையைப் பெற்ற பிறகு, பணி மாற விரும்புகிறேன்’ என்று சொன்னாள். வாழ்த்து சொல்லி அவளுக்கு ஒரு வழியனுப்பு விழா நடத்தத் திட்டமிட்டிருந்தோம்..'

'அந்தக் குழந்தையின் தகப்பன் யார்..?'

'தனக்குத் தெரியாது என்று ப்ரூக் சொன்னாள். அதைப் பற்றி அவளுக்குக் கவலையும் இல்லை. 'இது என் குழந்தை..’ என்றுதான் சொன்னாள்.. அவளை இழந்தது எங்கள் எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி..'  

ப்ரூக் கொல்லப்பட்டபோது, அவள் வயிற்றுக் கருவுக்கு 12 வாரங்கள் ஆகியிருந்தன.

'ப்ரூக் போதை மருந்துகள் உட்கொள்பவள் அல்ல என்று தோழிகள் கூறினர். ப்ரூக் மீது யாரும் பகைமை கொண்டு அவளைக் கொலை செய்திருக்க முடியாது. தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்ததால் அவள் உயிரை விட்டிருக்கலாம்' என்றார், போலீஸ் அதிகாரி.

போலீஸ் இறந்துபோன மற்றவர்கள் பற்றி ஆராய்ந்தது. பரியா, ஒரு செல்போன் கடையில் வேலை செய்தவள். ஜெனிஃபர் வேலை தேடிக்கொண்டிருந்த அழகான இளம்பெண். இருவருடைய பின்னணியும் தப்பாக இல்லை.

கொலையானவர்களில் ஒரே ஆணாக இருந்த பரியன்தோஸ், போதை மருந்து பரிமாற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டவன். அதற்காக, அடிக்கடி சிறைவாசம் அனுபவித்தவன் என்பது புலனானது. ஒரு முறை, யாரையோ சுட்டுவிட்டு காரில் தப்பித்து ஓடியதாகவும் அவன் மீது வழக்கு இருந்தது.

நிழலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தனக்கு ஒரு மெய்க்காப்​பாளன் தேவை என்று கருதி, பரியன்தோஸ், டேவிட் ஆலன் டைனர் என்ற  கொலைகாரனைத் தன்னுடனேயே வைத்திருந்தான் என்று போலீஸ் அறிந்தது.

குற்றம் புரிந்தவர்

கொலைகள் நடந்தபோது, ஆலன் டைனர் சம்பவ இடத்தில் இருந்திருக்கலாம் என்று காவல்​துறையின் சந்தேகம் வலுத்தது. அவனைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக முயற்சி செய்தது. ஆறு கொலைகளுக்காக தான் வேட்டையாடப்​படுவது தெரிந்ததும், டேவிட் ஆலன் டைனர் போலீஸில் சரணடைந்தான்.

'நீ பரியன்தோஸைக் கொலை செய்வதற்காகத்​தான் கூலி வாங்கியிருப்பாய். ஆனால், தற்செயலாக அங்கே சாட்சியாக அமைந்துவிட்ட மற்ற மூவரையும் கொலை செய்துவிட்டாய். இதையெல்லாம் நீ தனியாகச் செய்திருக்க முடியாது. உன்னுடன் இருந்தது யார்?' என்று போலீஸ் அவனைக் குடைந்தது.

'நான் அந்தக் கொலைகளைச் செய்யவில்லை..' என்று கிளிப்பிள்ளைபோல் டைனர் மறுபடி, மறுபடி சொன்னான்.

2010. ஏப்ரல் மாதம் வழக்கில் ஓர் எதிர்பாராத திருப்பம் வந்தது.

டென்னி எட்வர்ட் என்ற 35 வயது ஆசாமியை  திருட்டுக் குற்றத்துக்காகக் கைதுசெய்ய முயற்சி செய்தபோது, அவன் போலீஸை நோக்கிச் சுட்டான். போலீஸ் பதிலுக்கு அவனைச் சுட்டது. நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்து அவன் சரிந்தான். மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டான்.

அவன் தங்கியிருந்த ஹோட்டல் ரூமை ஆராய்ந்த​போது, காவல் துறையிலிருந்து திருடப்பட்ட சீருடைகள், துப்பாக்கிகள் போன்றவை கிடைத்தன.

அவனுடைய பின்னணியை ஆராய்ந்தது போலீஸ். ஆயுதம் காட்டி மிரட்டுவது, ஆயுதத்தால் தாக்கிக் கொள்ளையடிப்பது என்று பல குற்றங்கள் அவன் மீது இருந்தன.

டென்னி எட்வர்ட் 18 வயதிலேயே 11 வருடங்கள் சிறைச்சாலையில் கழித்தவன். விடுதலையான பிறகு, சட்டத்துக்குப் புறம்பான குஸ்தி விளையாட்டில் ஈடுபடுவது, போதை மருந்து தயாரிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவன்.

டென்னி எட்வர்ட் கைது செய்யப்பட்ட பிறகு, அவனுடைய காதலி, காவல் துறையைத் தொடர்புகொண்டாள்.  

'அவனைத் திருத்தப் பார்த்து, தோற்றுவிட்டேன். அவன் போதை மருந்து விற்பவன் மட்டும் அல்ல. நான்கு பேரைக் கொலை செய்து, அந்த வீட்டுக்கே நெருப்பை வைக்கக் காரணமானவன்...' என்று அழுதபடியே சொன்னாள்.

போலீஸ் டென்னியைக் காவலில் வைத்து 'விசாரித்தது.’

போதை மருந்து வியாபாரத்தில் பரியன்தோஸுக்கு கிட்டத்தட்ட 30 ஆயிரம் டாலருக்கு மேல் டென்னி கொடுக்க வேண்டியிருந்தது. பரியன்தோஸ் அதுகுறித்து அதட்டிக்கொண்டே இருந்தான். பரியன்தோஸுக்கு கடனாளியாக இருப்பதைவிட, அவனையே தீர்த்துக் கட்டிவிட்டால், பணமும் மிச்சம், தன்வசம் இருக்கும் போதை மருந்தையும் திருப்பித் தர வேண்டாம் என்று டென்னி முடிவு செய்தான். பரியன்தோஸுக்குப் பாதுகாவலனாக இருந்த டைனரை விலைக்கு வாங்கினான்.  

'பரியன்தோஸைக் கொன்றபோது, அங்கே இருந்த ப்ரூக், பரியா, ஜெனிஃபர், எல்லோரையும் கொலை செய்தேன் என்று டென்னி எட்வர்ட் என்னிடம் தம்பட்டம் அடித்துக்கொண்டான்..' என்று அவனுடைய காதலி சாட்சி சொன்னாள்.  

'நான் கொல்லவில்லை. ஆணையிட்டேன். கொலைகளைச் செய்தது, டைனர்தான்..' என்றான், டென்னி.

'மெய்க்காப்பாளனாக’ இருந்த டைனர் ஒருவழியாக, எல்லாக் கொலைகளுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டான். பரோலில் வெளிவர முடியாத தொடர் ஆயுள் தண்டனை அவனுக்கு விதிக்கப்பட்டது.

வேறு குற்றங்களுக்காகத் தற்போது சிறையில் இருக்கும் டென்னி, தான் கொலைகாரன் அல்ல என்று வாதிட்டாலும், அவனுக்கும் உரிய தண்டனை வாங்கித்தர காவல் துறை போராடிக்கொண்டிருக்கிறது.  

ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு, தன் வாழ்க்கையையே திசைமாற்றிக்கொள்ளத் தீர்மானித்திருந்த ப்ரூக், போதை மருந்து வாங்கப் போன தோழியுடன் இருந்ததுதான் அவள் செய்த ஒரே குற்றம். மூன்று குற்றவாளிகளுக்கிடையிலான துரோகத்தில் சிக்கி, அநியாயமாக வயிற்றுக் கருவுடன் உயிரை இழந்தாள், அவள்.

- குற்றம் தொடரும்

பணத்தைத்தான் நம்புகிறார்கள்!

கடிதங்கள்

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவங்கதான் அரசு தரப்பு வக்கீல் என்பது மராடி பேட்டியின் மூலம் புரிகிறது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வாதாடகூட குற்றம்சாட்டப்பட்டவரின் கருணை வேண்டும் போலிருக்கு. அம்மாவுக்கே... சாரி, ஆண்டவனுக்கே வெளிச்சம்!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

'பவ்யமான’ முதல்வரின் வாரிசுகள், 'அப்ரென்டிஸ்களாக’க் களமிறங்கியிருக்கின்றனர் போலும். டோட்டல் கேபினெட்டே டிரெயினிங் கொடுப்பதால், '2016’ பரீட்சையில் முதலிடம் பெறுவதற் கான வாய்ப்பு உண்டு... அதிர்ஷ்டக்கார புள்ளைங்க!

 கே.எஸ்.குமார், விழுப்புரம்.

குறைந்த அளவு வாக்காளர்களைக்கொண்ட கட்சிகளும் இயக்கங்களும் தி.மு.க., அ.தி.மு.கவுக்கு தண்ணி காட்டத் தொடங்கியிருக்கும் இந்த அருமையான தருணத்தில், தி.மு.க., அ.தி.மு.கவுடன் திருமாவளவன் டோட்டல் சரண்டர் ஆகியிருப்பது அவரது அரசியல் அனுபவத்துக்கே மிகப்பெரிய அவமானம்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு பகிரங்கமாக பணப் பட்டுவாடா நடப்பதைப் பார்த்தால், ஆட்சியையோ அம்மாவையோ நம்பாமல் அ.தி.மு.கவினர் பணத்தைத்தான் நம்புகிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்).