நெல்லையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பத்திரிகையாளர்களை போலீஸார் தாக்கியதில் மூன்றுபேர் காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் காவல்கிணறுப் பகுதியில் உள்ள மகேந்திரகிரி மலையில் இஸ்ரோ மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரவ இயக்க உந்து மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தின் அருகில் உள்ள மலைப் பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் மலையின் உச்சியிலிருந்து புகை மண்டலம் எழுந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சத்தத்தை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கேட்டதாகவும் தகவல் வந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தவறான செய்தி வெளியிட்டதாகப் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர்கள் நாகராஜன், ரெஜூ கிருஷ்ணா, தினகரன் நாளிதழ் செய்தியாளர் ஜெகன் ஆகியோர்மீது நெல்லை மாவட்டம் பணகுடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மூவரின் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் 469, 505, 507, ஐ.டி சட்டப்பிரிவு 67 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சார்பாக இன்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. காவல்துறைக் கண்காணிப்பாளரைச் சந்திக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டதால் பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாகக் காவல்துறை வாகனத்தில் ஏற்றியதில் மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்திரிகையாளர்களின் செல்போன் உடைக்கப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.