மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

இரவோடு இரவாக..!

குற்றம் புரிந்தவர்

2002. ஜூன் 5. மணி இரவு இரண்டு.

ஒன்பது வயதான மேரி கேதரின், ஏதோ அரவம் கேட்டு, திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தாள். அருகில் படுத்திருந்த அக்கா எலிசபெத்தைக் காணவில்லை. இமைகளைத் திறந்தாள். பார்த்த காட்சி அவளை உறைய வைத்தது.

பதினான்கு வயது எலிசபெத், மிரட்சியுடன் குனிந்து தன் ஷூக்களை எடுத்துக்கொண்டிருந்தாள். அவள் அருகில் நிற்பது யார்? அது தன் தந்தையோ, சகோதரர்களோ இல்லை என்று கேதரினுக்குப் புரிந்தது.

'யார் அக்கா அது..?’ என்று கேட்கலாம் என்று வாயைத் திறந்தபோதுதான் கவனித்தாள். எலிசபெத்தின் அருகில் இருந்தவன் கையில் ஒரு துப்பாக்கி. எதன் மீதோ இடித்துக்கொண்டு 'ஸ்ஸ்ஸ்..’ என்று எலிசபெத் வலியில் முனகினாள்.

'ஏய், சத்தம் வந்தால், உன்னை மட்டுமல்ல, உன் குடும்பத்தையே கொன்று​விடுவேன்' என்று அவன் துப்பாக்கியால் மிரட்டினான்.

எங்கேயோ கேட்ட குரல். கேதரின் அசையாமல், பாதி மூடிய இமைகளினூடே அச்சத்துடன் வேடிக்கை பார்த்தாள்.

'என்னை எங்கே அழைத்துப் போகிறாய்?' என்று எலிசபெத் சிறு அழுகையுடன் கேட்டாள்.

துப்பாக்கியை உதடுகளுக்குக் குறுக்கே வைத்து அவன் அவளை அமைதியாக வரச் சொன்னான். அறைக்கதவை ஒலியின்றித் திறந்தான்.

இருவரும் அறையைவிட்டு வெளியே றியதும், கேதரின் படுக்கையி​லிருந்து இறங்கி, பூனைப்பாதங்கள் வைத்து கதவை அடைந்து திறந்தாள்.

எலிசபெத்தும், துப்பாக்கி வைத்திருந்​தவனும், ஹாலில் தென்பட்டார்கள். அவன் கேதரின் இருந்த திசையில் திரும்பிப் பார்த்தாற்போல் இருந்தது. மிரண்டாள். கண்களை இறுக மூடி, வெகு நேரம் தலை வரை இழுத்துப் போர்த்தி, கம்பளிக்குள்ளேயே இருந்தாள். தைரியம் வந்து, அவள் படுக்கையிலிருந்து இறங்கியபோது, இரண்டு மணி நேரங்கள் கடந்துவிட்டிருந்தன.

அந்த இரண்டு மணி நேரங்களில்..

குற்றம் புரிந்தவர்

எலிசபெத்தைக் கடத்தியவன் கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் தொலைவுக்கு அவளை நடத்தியே அழைத்துப் போனான். ஒரு பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தார்கள். அங்கே அவர்களை ஒரு குண்டான பெண்மணி எதிர்கொண்டாள்.

'இவள் வாண்டா பார்ஸி. என் முதல் மனைவி. நீ என் புதிய மனைவி..' என்று அவன் அறிமுகம் செய்தான்.

எலிசபெத் களைத்திருந்தாள். இன்னொரு பெண்ணைப் பார்த்ததும், அவள் தன்னை எப்படியும் காப்பாற்றிவிடுவாள் என்று எலிசபெத்துக்கு நம்பிக்கை வந்தது.

எலிசபெத்தின் உடைகளைக் கழற்றச் சொல்லி, அவற்றை அவன் எரித்தான். அவளுக்கு வெள்ளை அங்கிகள் கொடுத்து அணியச் சொன்னான்.

'நான் இயேசுவின் தூதன். இந்த நிமிடத்திலிருந்து, நீயும் நானும் கணவன், மனைவி.. நிறைய மனைவிகளும், அவர்கள் மூலம் நிறைய குழந்தைகளும் பெற்று மதத்தை வளர்க்கச் சொல்லி கடவுள் எனக்கு ஆணையிட்டிருக்கிறார்..'

அதிர்ந்துபோனாள் எலிசபெத்.

அவள் தப்பிக்க முடியாதபடி, ஒரு மரத்துடன் அவளுடைய காலைச் சங்கிலியால் கட்டிப்போட்டான்.

'நமக்கான இருப்பிடம் ஒன்று தயாராயிருக்​கிறது..' என்றான் அவன்.

உண்மையில் அந்த மறைவிடம் 20 அடி நீளமுள்ள கால்வாய்போல் அமைந்திருந்தது. இங்கிருந்து என்றைக்குத் தனக்கு விடுதலை கிடைக்கும் என்பது புரியாமல் எலிசபெத் ஓய்ந்துபோனாள்.

அதே இரவு, அவள் வீட்டில்..

கேதரின் பெற்றோருடைய படுக்கையறைக்கு ஓடினாள். 'எலிசபெத்தை யாரோ தூக்கிப் போய்விட்டார்கள்' என்று பதற்றத்துடன் கூறினாள்.

ஒவ்வோர் அறையாகத் தேடத் தேட, எட்ஸ்மார்ட்டின் தூக்கம் முற்றிலும் கலைந்தது. எட்ஸ்மார்ட் போ​லீஸை அழைத்தார். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் போன் செய்தார். எட்ஸ்மார்ட்டின் வீட்டில் நிறைந்திருந்த நண்பர்களையும், உறவினர்களையும் விலகச் சொன்னது, போலீஸ். தடயங்களைத் தேடத் தொடங்கியது.

சமையலறை ஜன்னல் திறந்திருந்தது. ஜன்னலுக்கு வெளியே தோட்டத்து நாற்காலி. வந்தவன், நாற்காலியில் ஏறி ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான் என்பது புலனானது.

போலீஸ் நாய்கள் மோப்பம் பிடித்தபடி வெகு தூரம் ஓடி, ஒரு கட்டத்தில் குழம்பி நின்றன. அக்கம் பக்கத்தில் சந்தேகப்படும்படியான கார் ஒலி கேட்டிருக்கவில்லை.

'அவன் எப்படி இருந்தான்?'

'சற்றுக் குள்ளமாக, குண்டாக' என்றாள், கேதரின்.

தொலைக்காட்சி, வானொலிகள் மூலம் எலிசபெத் காணாமல் போனது பற்றி அறிவிப்புகள் கொடுக்கப்பட்டன. எலிசபெத்தின் புகைப்படங்கள் விநியோகிக்கப்​பட்டன. காவல் துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சர்ச்சிலும் செய்தி சொல்​லப்பட்டு, பிரார்த்தனைக்கு வந்தவர்கள் பலரும் உதவி செய்ய முன்வந்தனர்.

'இந்த வீட்டின் அமைப்பு பற்றி தெரிந்தவர்தான் இதைச் செய்​திருக்க வேண்டும்' என்றார் போலீஸ் அதிகாரி.

'எங்கள் வீட்டை விற்பதற்கு முடிவு செய்து, மராமத்து வேலைகள் செய்துகொண்டிருந்தோம்..' என்றார், எட்ஸ்மார்ட்.

'சாப்பாட்டுக்கு வழியில்லை என்று கேட்டு வந்த எவ்வளவோ பேருக்கு இங்கு சிறு சிறு வேலைகள் கொடுத்து, பணம் கொடுத்து அனுப்பினேனே' என்றாள், எலிசபெத்தின் தாய்.

'இங்கு வேலைகள் செய்தவர்களின் பட்டியல் வேண்டும்..'

பட்டியல் ஒருபக்கம் தயாரானது.

எலிசபெத் டீன் ஏஜ் பெண். ஆன்லைன் உரையாடல்களில் யாரு​டனாவது நெருக்கமாகி, ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டிருக்​கிறாளா என்றும் போலீஸ் விசாரித்தது. எலிசபெத் பற்றி உருப்படியான துப்புக் கொடுப்​பவர்களுக்குப் பரிசு தர, காவல் துறையினரும் மற்றவர்களும் முன்வந்தார்கள்.

குற்றம் புரிந்தவர்

சார்லி மில்லர் என்கிற பால் விற்பனையாளர் போலீஸைத் தேடி வந்தார். 'இரண்டு நாட்களுக்கு முன்பு, ஸ்மார்ட்டின் வீட்டருகில் ஒரு பச்சை நிற கார் வட்டமிட்டதை கவனித்தேன். காரில் இருந்தவனைப் பார்க்கவில்லை. ஆனால், அதன் நம்பர் பிளேட்டைப் பார்த்தேன்.'

அவர் சொன்ன பதிவு எண்ணில் எந்த காரும் இல்லை. பூங்காவின் அருகில் காணப்பட்ட ஒரு பச்சை நிற காரில், பதிவு எண் வேறாக இருந்தது. போலீஸ் குழம்பியது. மில்லர் குறிப்பிட்ட அந்த நம்பர் பிளேட், பிற்பாடு புதர்களில் சில சிறுவர்களால் கண்டெடுக்கப்பட்டது.

எலிசபெத்தைக் கடத்தியவன், பொய்யான நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி அதைத் தூக்கியெறிந்து​விட்டுப் போயிருக்கிறான் என்று போலீஸ் முடிவுக்கு வந்தது. அதில் இருந்த விரல் ரேகைகளை தடயவியல் துறைக்கு அனுப்பியது.

'26 வயது மைக்கேல் எட்மண்ட்ஸ் என்பவன் ஒரு போலீஸ்காரரைத் தாக்கிய குற்றத்துக்​காகக் கைது செய்யப்பட்டபோது எடுத்த கைரேகையுடன் இது பொருந்துகிறது..' என்றது, தடயவியல் துறை.

'மைக்கேல் எட்மண்ட்ஸ் ஆறடி இரண்டங்குலம் உயரம். வந்தவன் குள்ளமானவன். எதற்கும், அவனைக் கண்டுபிடியுங்கள்' என்றார், அதிகாரி.

அவனுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லை என்று தெரியாமல், அவனுக்கான வேட்டை ஒருபுறம் தொடங்கியது.

இன்னொரு பக்கம், ஸ்மார்ட் வீட்டில் பணியாற்றியவர்கள் பட்டியலில் இருந்தவர்களை விசாரித்தது, போலீஸ்.

ரிச்சர்டு ஆல்பர்ட் ரிக்கி அவர்களில் ஒருவன். ஸ்மார்ட்டின் வீட்டில் தோட்டத்தை சுத்தம் செய்து, வெளிச்சுவர்களுக்கு பெயின்ட் அடித்து, அந்தக் குடும்பத்துடன் ஓரளவு நெருக்கமாகி இருந்தான். ரிக்கியின் பின்னணி போலீஸின் கவனத்தை ஈர்த்தது.

48 வயது. கேதரின் குறிப்பிட்டதுபோல் குள்ளமானவன். மது மற்றும் போதை மருந்து பழக்கமுள்ளவன். வேலை செய்யும் வீடுகளிலிருந்து பொருட்களைத் திருடுபவன். பரோலில் வந்தபோதெல்லாம் தப்பிக்க முயற்சி செய்தவன்.

ஒரு பூந்தோட்டத்தில் வேலை செய்து​கொண்டிருந்த அவனை போலீஸ் கைதுசெய்தது. எலிசபெத் கடத்தப்பட்ட தினத்தில் அவன் அங்கு வேலைக்கு வரவில்லை என்று போலீஸ் அறிந்தது.

ரிக்கியின் வீட்டை போலீஸ் முழுமையாக சோதனை செய்தது. எட்ஸ்மார்ட்டின் வீட்டில் காணாமல் போன பர்ஃப்யூம் பாட்டில்கள், நகைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. அவனுடைய உடைகளில் ஒன்று கேதரின் குறிப்பிட்டதுபோல இருந்தது.

எட்ஸ்மார்ட் ரிக்கியிடம், 'என் மகள் எங்கே?' என்று கண்ணீருடன் மன்றாடினார்.

'சத்தியமாக எனக்குத் தெரியாது' என்று ரிக்கி பிடிவாதம் பிடித்தான்.

திருட்டுக் குற்றத்தின் அடிப்படையில் ரிக்கியை விசாரணைக் கைதியாக சிறைச்​சாலையில் அடைத்தது போலீஸ்.  

45 நாட்கள் கடந்தன. கோர்ட்டில் ஆஜர்​படுத்தப்பட்டு, ரிக்கி சிறைக்குத் திரும்பி இருந்தான். போலீஸின் தீவிர விசாரணை அவனை நிலைகுலைத்திருந்தது. திடீரென்று தலையைப் பிடித்துக்கொண்டான்.

'தாங்க முடியாமல் தலை வலிக்கிறது. மூச்சுத் திணறுகிறது'  என்றான். மயக்கமாகி விழுந்தான். அருகிலிருந்த மருத்துவமனைக்கு அள்ளிச் சென்றார்கள்.

'மூளையில் ரத்தக் குழாய் வெடித்துவிட்டது. கோமா நிலைக்குப் போய்விட்டான். மீண்டும் கண்விழிப்பதற்கு வாய்ப்பில்லை' என்றார்கள், மருத்துவர்கள்.

'அப்படியானால், ரிக்கியை நிம்மதியாக இறக்க விடுங்கள்' என்று அவன் மனைவி அழுதாள்.

'ஐயோ, எலிசபெத்தைக் கடத்தியவன் ரிக்கியாக இருந்தால்..? இனி அவள் இருக்கும் இடத்தை யார் சொல்வார்?’

ஸ்மார்ட் தம்பதியினர் கலங்கிப்போயினர்.

ஆனால், எலிசபெத் கடத்தல் விவகாரம் புதுத் திருப்பம் எடுத்தது.

அடுத்த இதழில்...

குற்றம் தொடரும்

அழகு... ஆபத்து!

கடிதங்கள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றிக்காக அனைத்துக் கட்சிகளும் அடித்துக்கொள்கின்றன. ஆனால், எந்தக் கட்சிக்கும் எதிர்காலம் நிரந்தரமல்ல. பணத்தாலும் பரிசுப் பொருட்களாலும் வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்பது, வாக்காளர் தரம் தாழ்ந்ததையே காட்டுகிறது. அரசியல்வாதிகளின் ஊழல்களைத் தட்டிக்கேட்க மக்களும் தகுதி இழப்பதால், நல்லாட்சி என்பது கனவே!

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

அழகு ஆபத்துன்னு சொல்வாங்க. அது மர்லின் மன்றோ விஷயத்தில் ரொம்ப சரியாகவே நடந்திருக்கிறது.

- எம்.செல்லையா, சாத்தூர்.

திருச்சி விமானத்தைத் தவற விட்டுவிடுவோமோ என்று கனிமொழிக்கு பதற்றமாக இருந்திருக்கும். கனிமொழி பயணம் செய்யும் விமானத்தில் நாமும் பயணிக்க வேண்டியிருக்குமோ என்று நிம்மதியற்ற பயம் இருந்திருக்கும் பன்னீர்செல்வத்துக்கு. கடைசியில் நிலைமை மாறிப்போனதில் முதல்வருக்கு நிம்மதி!

- மு.பேச்சியம்மாள், புதுச்சத்திரம்.

விலையில்லாத இலவசங்கள் தரும் அவல நிலை என்று மாறுகிறதோ, அப்போதுதான் தமிழகத்துக்கு விடிவுகாலம். இலவசக் கல்வி, சுகாதாரம், குடிநீர் இவற்றை ஓர் அரசு தடையின்றி வழங்கினாலே போதும்.

- ரேவதிப்ரியன், ஈரோடு-1.