
முன்பின்விஷுவல் கார்னர்இன்டராக்ட்டிவ் ஆர்ட்சந்தோஷ் நாராயணன்
2025. ''வெல்கம் டு புரொஃபஷனல் சைஃபை மாஃபியா' என வரவேற்றான் நீல்.
''மிஸ்டர் சுனில் மத்தாய்... உங்களுடைய போட்டி தொழிலதிபரான விகேஷ்குமாரை நீங்க தீர்த்துக் கட்டணும். அதுவும், நீங்களும் அவரும் பத்து வருடங்களுக்கு முன்பு தொழிலில் நுழைந்தீர்கள் அல்லவா, அந்தக் காலத்துக்கே பின்னோக்கிப் போய் தீர்த்துக்கட்டணும். முளையிலேயே கிள்ளி எறிஞ்சிட்டா, விகேஷ்குமார் இன்னைக்கு உங்களுக்குப் போட்டியா இருக்க மாட்டார். அதுதானே உங்கள் விருப்பம்?' என்று கேட்டபடி கூலிங் கிளாஸுக்குள் கண் சிமிட்டினான் நீல். 'ஆமாம்’ என்பதாகத் தலையசைத்தார் சுனில் மத்தாய். பெருத்த கோட் அணிந்த அவர் உடல் லேசாகக் குலுங்கியதில், கழுத்தில் கிடந்த டை ஆடியது.

'அதுக்கு எங்கள் சைஃபை மாஃபியா உங்களுக்கு உதவும். இந்த அறை ஒரு வார்ம்ஹோல்போல செயல்படும். அங்கே பத்து வருடங்கள் பின்னோக்கிப் போய் நீங்கள் விகேஷ்குமாரைத் தீர்த்துக்கட்டலாம். உள்ளே வாருங்கள்' என்றபடி அந்தப் பளிச்சிடும் அறைக் கதவைத் திறந்து உள்ளே போனான் நீல். சுனில் மத்தாய் ஆச்சர்யமும் வெறியும் கலந்த முகத்துடன் கூடவே நுழைந்தார்.
அங்கே விகேஷ்குமார் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தார். ஒரு நொடி அதிர்ந்த சுனில் மத்தாய், ''என்னது இது?'' என்று கத்தினார்.
'அவர் 2015-ல் இருந்து வந்திருக்கிறார். அட்வான்ஸ்டு புக்கிங்' எனச் சிரித்தான் நீல்!
இன்டராக்ட்டிவ் ஆர்ட்
சினிமா பார்க்கப்போவதுபோல நவீன ஓவியக் கண்காட்சிக்கு நம் ஊரில் யாரும் குடும்பத்துடன் போவது இல்லை. ஆனால், பிற ஊர்களில் போகிறார்கள். குடும்பத்துடன் வேண்டாம்... தனியாகப் போகிறீர்களா? போனாலும் அமைதியாக வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பிவிடுவீர்கள்தானே? நவீன ஓவியங்கள் புரிவது இல்லை என்பது கிளிஷேவான ஒரு குற்றச்சாட்டு!
எப்படிப் புரிந்துகொள்வது? சிம்பிள். புரிந்துகொள்ள முயற்சிசெய்யாதீர்கள்; அனுபவியுங்கள் என்பதே பதில். சிறு குழந்தை சிரிக்கும் காட்சி, ஒரு சூரிய உதயத்தின் காட்சி, ஒரு கொசுவை அடித்ததால் சிதறிய ரத்தத்துடன் அது ஒட்டியிருக்கும் காட்சி... இப்படி எதைப் பார்த்தாலும், பார்க்கும் நமது அனுபவத்தை ஒட்டி ஏதோவொன்று நம் மனதில் விரியும் அல்லவா... அதேதான். 'ஓவியர் என்ன வரைந்திருக்கிறார் என்பதைவிட, பார்வையாளர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதே முக்கியம் என்கிறது நவீன ஓவியம்.

அதிலும் பார்வையாளரும் கலையின் ஒரு பகுதியாகிவிட்டால், எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என யோசித்ததின் விளைவே 'இன்டராக்ட்டிவ் ஆர்ட்’ எனச் சொல்லப்படும் ஒருவகையான நவீன டிஜிட்டல் ஆர்ட்.
இன்று நம்மைச் சுற்றி எல்லாமும் டிஜிட்டல் மயம். இன்டராக்ட்டிவ் ஆர்ட்டும் தொடுதிரை முதல் சென்சார் வரை டிஜிட்டலையே தன் மீடியமாகப் பயன்படுத்துகிறது. நீங்கள் இன்டராக்ட்டிவ் ஆர்ட் முன்பாக நின்றால், உங்கள் பிம்பமும் அந்த ஆர்ட்டின் ஒரு பகுதியாக மாறலாம். அல்லது உங்கள் அசைவே அந்த ஆர்ட்டை ஒரு அனிமேட்டட் கேன்வாஸாக மாற்றலாம். உங்கள் கண் சிமிட்டல்கூட அந்த ஆர்ட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம். அல்லது உங்கள் கைதட்டல் அந்த ஆர்ட்டில் ஒரு வண்ணத்தைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இப்படி உங்கள் பங்களிப்பே அந்த ஆர்ட்டுக்குப் புதுப்புது வடிவத்தைக் கொடுக்கலாம்.
மவ்ரிஸ் பெனாயுன் முதல் தோமஸ் சார்வெரியத் வரை நிறைய நவீன ஆர்ட்டிஸ்ட்கள் இந்த முறையில் இன்டராக்ட்டிவ் ஆர்ட்டை உருவாக்குகிறார்கள். 'Interactive Art' என கூகிளில் தேடினால், படங்களும் தகவல்களும் உங்கள் முன் விரியும். இன்னும் டிஜிட்டல் மயமாகும் கொஞ்ச காலத்தில், அட்டையில் இருக்கும் விகடன் தாத்தா, நீங்கள் ஹலோ சொன்னால், பதிலுக்கு 'ஹலோ’ எனக் கைகளை ஆட்டினாலும் ஆச்சர்யம் இல்லை!
கார்ப்பரேட் சித்தன்

''எல்லா கிருமிகளும் வீட்டுக்குள் எங்கு இருந்து வருகின்றன?' என்றார் விளம்பரத்தில் வெள்ளை கோட் டாக்டர்.
'டி.வி-யில் இருந்துதானே...' என்றபடி சேனலை மாற்றினான் கார்ப்பரேட் சித்தன்!