மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்

முக்கோண அறையில் முற்றுப் பெற்றவர்கள்..!

குற்றம் புரிந்தவர்

1897. ஜனவரி 17.

ஆக்ஸ்ஸரி (Auxerre) என்னும் பிரான்ஸ் தேசத்துச் சிற்றூரில் மார்ஸல் பேடியாட் (Marcel Petiot) பிறந்தபோது கெட்ட சகுனங்கள் எதுவும் தோன்றியதாகப் பதிவாகவில்லை. ஆனால் நிச்சயம் தோன்றியிருக்கும். 

சிறு வயதிலிருந்தே பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் சாடிஸ்டாக வளர்ந்தான் அவன். 17-வது வயதில் அவனைப் பரிசோதித்த மருத்துவர் ஒருவரால் ‘மனநலம் குன்றியவன்’ என்று அறிவிக்கப்பட்டான். மனநலம் குன்றியவர்களுக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டு, பள்ளிப் படிப்பை முடித்தான்.

1914-ம் ஆண்டு, முதலாம் உலகப் போர் தொடங்கியது. பேடியாட் பிரெஞ்ச் படையில் சேர்ந்தான். போதைப் பொருட்களைத் திருடி விற்றான். சக வீரர்களிடம் பணம், பொருட்கள் முதலியவற்றைக் களவாடினான்.
போர் முடிந்ததும், முன்னாள் வீரர்களுக்கான காப்பகத்தில் சேர்ந்து மருத்துவக் கல்வி பயின்றான்.
1921-ல் மருத்துவப் பட்டம் பெற்றான். வில்லினியூவ் (Villeneuve) என்ற இடத்தில் மருத்துவத் தொழிலைத் தொடங்கினான்.

 மற்றெல்லாரையும்விட அதிகமாகப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்னும் வெறி அவன் மனதை ஆக்கிரமித்தது. சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்யத் தொடங்கினான். போதை மருந்துகளை விற்கத் தொடங்கினான்.

அவனது ‘சேவைகள்’ மக்களுக்கு அதிக அளவில் தேவைப்பட்டன. கூட்டம் மொய்த்தது. இவனிடம் வந்தவர்களில் ஓரிருவர் சந்தேகமான முறையில் இறந்துபோனார்கள். தன் மீது பழி விழாதபடி சாமர்த்தியமாக நடந்து கொண்டான்.

பேடியாட் பிரபலமடைந்தான். பெரும்புள்ளி​யானான்.  1926-ல் அந்த ஊரின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டான். 1927-ல் திருமணம் செய்துகொண்ட பேடியாட், ஓர் ஆண் குழந்தைக்குத் தந்தையும் ஆனான்.

பணத்தாசை விடவில்லை. பதவியைப் பயன்படுத்திப் பணம் கையாடினான். பதவி நீக்கம் செய்யப்பட்டான்.
வில்லினியூவில் தொடர்ந்து இருக்க முடியாத நிலையில், 1931-ல் பிரான்ஸின் தலைநகர் பாரீஸுக்குக் குடிபெயர்ந்தான்.

ரூ கௌமார்டின் (Rue Caumartin) என்ற இடத்தில் தனது மருத்துவக் கடையை விரித்தான். போதை மருந்து வியாபாரமும், கருக்கலைப்புத் தொழிலும் அங்கும் அமோகமாக நடந்தன.

குற்றம் புரிந்தவர்

அத்துடன், பொருள் கொள்ளை, பணம் கையாடல், வரி ஏய்ப்பு போன்ற பல திரைமறைவு வேலைகளிலும் செல்வம் குவியத் தொடங்கியது.

இரண்டாம் உலகப்போர் (1939-1945) உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த காலம். ஜெர்மனியிலிருந்து பிரான்ஸின் மீது படையெடுத்து வந்த ஹிட்லரின் நாஸிப்படை, பாரீஸுக்குள் ஊடுருவியது.

 ஜெர்மானியப் படைகளின் தாக்குத​லுக்கு ஆளான மக்கள், விட்டில் பூச்சிகளைப்போல் ஆயிரக்கணக்கில் பலியானார்கள். அதிலும் யூத இன மக்கள் மிக மோசமாகக் குறி வைத்து அழிக்கப்பட்டனர்.

இந்த அவலமான தருணத்தைப் பயன்படுத்தி ஏராளமாய் சம்பாதிக்க, கொடூரமான திட்டம் ஒன்றைத் தீட்டினான் பேடியாட்.

ஒரு பாழடைந்த கட்டடத்தை  வாங்கி​னான். தன் திட்டத்துக்கு ஏற்றபடி, அதை வடிவமைத்தான்.
மையத்தில் ஒரு முக்கோண அறை. ஜன்னல்கள் கிடையாது. உள்ளே போவதற்கும், வெளியே வருவதற்கும் ஒரே ஒரு கதவு. அறைக்குள் நடப்பதை வெளியிலிருந்து பார்க்க வசதியாக கதவில் சிறு துவாரங்கள்.

கார்கள் நிறுத்தும் இடத்துக்குக் கீழே இருந்த ஒரு பாதாள அறையில் பிரமாண்டமான தீ உலை. அங்கிருந்து புகை வெளியேற புகை போக்கிகள். முக்கோண அறைக்கும் உலை அடுப்புக்கும் இடையில் ஒரு ரகசியப் பாதை.

அடுத்து, சுண்ணாம்பு வியாபாரம் செய்து வந்த சகோதரன் மௌரிஸிடம், தான் செய்யவிருக்கும் மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தேவைப்படும் என்று கூறி பெருமளவில் சுண்ணாம்பை வாங்கி, பாதாள அறையில் சேமித்து வைத்தான், பேடியாட்.

கட்டடம் தயாரானதும், ஜெர்மன் படைகளை எதிர்த்துப் போரிடும் பிரெஞ்ச் போராளிகளுடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகச் சொன்னான்.

“ஜெர்மன் படைகள், பாரீஸ் நகரத்தில் கொன்று குவிப்பதற்காகக் குறி வைத்திருக்கும் மக்களைக் காப்பாற்றி, ஸ்பெயின், கியூபா போன்ற வெளிநாடுகளுக்கு ரகசியமாகவும், பத்திரமாகவும் கூட்டிச் செல்ல முடியும். செலவு செய்யத் தயாராயிருப்பவர்கள் அணுகலாம்...” என்று செய்தி பரப்பினான்.

உயிருக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த பணக்கார யூதர்கள் பலர் இந்தச் செய்தியால் கவரப்பட்டார்கள். “எங்களையும், குடும்பத்தையும் எப்படியாவது தப்பித்துச் செல்ல உதவுங்கள்” என்று கட்டுக்கட்டாகப் பணத்தையும், நகைகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் பேடியாட்டிடம் கொண்டு வந்து கொட்டினார்கள்.

இதற்காகத்தானே இவ்வளவு ஏற்பாடு​களையும் செய்துவிட்டு ஆவலுடன் காத்திருந்தான் அவன்?
வருபவர்களிடம், “அயல்நாடுகளில் நுழைய வேண்டுமானால், முதலில் தடுப்பூசி ஒன்று போட்டுக்கொள்ள வேண்டும்” என்பான். தனது ‘மருத்துவமனைக்கு’ வரவழைப்பான்.

குற்றம் புரிந்தவர்

பணமும், விலையுயர்ந்த பொருட்களும் கைமாறியதும், அவர்களை முக்கோண அறைக்குக் கூட்டிச் செல்வான். ‘தடுப்பூசி’ மூலம் மருந்தைச் செலுத்துவான். அவன் மட்டும் வெளியே வந்து, அறைக்கதவை மூடிவிட்டு, கதவில் இருந்த துவாரங்களின் வழியாக உள்ளே நடப்பதை கவனிப்பான்.

சில வினாடிகளிலேயே ஊசி போடப்பட்டவர்களுக்குத் தலை சுற்றும். கதறுவார்கள். அழுது புரள்வார்கள். சித்ரவதைக்கு உள்ளாவார்கள். சற்று நேரத்தில் அவர்கள் சுவாசம் அடங்கும். பிணமாவார்கள்.
ஏனெனில், செலுத்தப்பட்டது தடுப்பு மருந்து அல்ல. கொடிய விஷமான சயனைடு. உள்ளே நிகழ்வதையெல்லாம் பார்த்து, அவன் அணு அணுவாக ரசித்து மகிழ்வான்.

உயிர் பிரிந்தவர்களின் பிணங்களை ரகசியப் பாதை வழியாக பாதாள அறைக்கு இழுத்துச் செல்வான். அங்கு, கொதிக்கும் சுண்ணாம்புக் கரைசலில் அவற்றை ஊற வைப்பான். பிணங்கள் பதப்பட்டதும், அவற்றை அடுப்பில் போட்டு எரிப்பான்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பெரும் செல்வத்துடன் அவனிடம் வந்தவர்களிடம் பணத்தைக் கவர்ந்துகொண்டு உலகத்தைவிட்டே அனுப்பி வைத்தான், அந்த மருத்துவன்.
யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வரவில்லை.  அவனிடம் சென்றவர்கள் அனைவரும் பிரான்ஸிலிருந்து தப்பித்து, பாதுகாப்பாக வேறு நாடுகளுக்குப் போய் சேர்ந்துவிட்டனர் என்றே மக்கள் நம்பினார்கள். 

சொந்த மக்களுக்குப் பெரும் சேவை செய்யும் ‘கருணைமிக்க டாக்டர்’ என்றே அவனைப் புகழ்ந்தனர். டாக்டர் பேடியாட் காட்டில் பண மழை கொட்டத் தொடங்கியது.

பணம், பொருள் ஆகியவை குவியக் குவிய, அவை பற்றிய விவரங்கள், அவற்றைத் தன்னிடம் பறிகொடுத்து பலியானவர்களது பெயர்கள் போன்றவற்றை எல்லாம் தனது டைரியில் குறித்து வைக்கத் தொடங்கினான் அவன்.

டாக்டர் பேடியாட் பெரும்பாலான நேரத்தை வெளியே கழிப்பதையும், வீட்டுக்குத் திரும்பும்போது மிகவும் சோர்வாக இருப்பதையும் கண்டு அவன் மனைவி ஆச்சர்யப்பட்டாள். ஆனால், இதுபோன்ற கொடூரமான கொலைத் தொழிலில் அவன் ஈடுபட்டிருப்பான் என அவள் கற்பனைகூடச் செய்து பார்க்கவில்லை.

ரூ கௌமார்டின் என்ற இடத்தில் இருந்த மருத்துவமனையில் கரு கலைக்கும் டாக்டராகவும், ரூ லேஸ்யூர் என்ற இடத்தில் இருந்த முக்கோண மாளிகையில் மனிதர்களைக் கொல்லும் கொடூர மருத்துவராகவும் இரட்டை வேடங்களில், ஒன்றரை ஆண்டுகள் மக்களை ஏமாற்றி ஏராளமான பணத்தைக் கொள்ளையடித்தான் பேடியாட்.

1943-ம் ஆண்டு. ஜெர்மானிய நாஸி வீரர்கள், பிரான்ஸில் வாழ்ந்த யூதர் இன எதிரிகளைத் தீர்த்துக் கட்டுவதில் தீவிரமாக இருந்தனர். அவர்கள் குறி வைத்திருந்த யூதர்கள் பலர் திடீர் திடீரென மாயமாய் மறைந்துபோனது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதுபற்றித் தோண்டித் துருவி, டாக்டர் பேடியாட்டைப் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக, ஜெர்மானியர்கள் ஒரு போலியான ஆளைத் தயார் செய்து, அவனிடம் அனுப்பினார்கள். பொய்யான பெயரும், போலியான முகவரியும் தந்து, “என்னை எப்படியாவது பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி விடுங்கள்” என்று அவன் பேடியாட்டிடம் கெஞ்சினான்.

“பணம் செலவாகுமே..!”

அவன் கேட்ட தொகையைக் கொடுத்தனுப்பியது நாஸிப் படை. அவன் கொண்டு வந்த பணத்தைப் பறித்துக்கொண்டு வழக்கம்போல் பரலோகத்துக்கு அனுப்பிவைத்தான், பேடியாட்.

தாங்கள் அனுப்பிய ஆள் திரும்பி வராததை அறிந்ததும், ஜெர்மானியர்கள் கொதித்தார்கள். பேடியாட்டை இழுத்து வந்து சிறையில் அடைத்தார்கள். தொடர்ந்து போரில் ஈடுபட வேண்டியிருந்ததால், அவனை விசாரிக்கக்கூட ஜெர்மானியர்களுக்கு நேரம் இல்லை.

ஏறக்குறைய எட்டு மாதங்கள் பேடியாட், விசாரணை​யை எதிர்பார்த்து, சிறையில் அடைபட்டிருந்தான்.
அவர்களிடமிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்துக்கொண்டிருந்த பேடியாட்டின் மூளையில் புது யுக்தி தோன்றியது.

“நான் பிரான்ஸ் குடிமகனாக இருந்தாலும், ஜெர்மன் ஆதரவாளன். நாஸி கொள்கையில் தீவிரப் பற்றுள்ளவன். நீங்கள் கொல்லவேண்டும் என்று நிச்சயித்திருந்த யூதர்கள் தப்பிக்க நினைத்தபோது, அவர்களைத்தான் நான் கொன்றேன். உங்களுக்கு நண்பனாக, உதவுவதற்காகத்தான் இவ்வாறு செயல்பட்டேனே தவிர எதிரியாக அல்ல.. நான் குற்றமற்றவன். என்னை விடுதலை செய்யுங்கள்...” என்று ஜெர்மானியர்களிடம் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வேண்டினான் அவன்.

போரில் பல பிரச்னைகளைச் சந்தித்து வந்த ஜெர்மன் ராணுவம் பேடியாட்டின் சொற்களை ஏற்றுக்கொண்டு அவனை விடுதலை செய்தது!

அதற்கப்புறமாவது, தான் செய்து வந்த கொடுமைகள் யாவற்றையும் மூட்டை கட்டித் தூக்கிப் போட்டுவிட்டு, மனைவி மற்றும் மகனுடன் ஒரு சாதாரண குடிமகனாய் அவன் வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால் பேடியாட்டின் நிழல் முகத்தை இந்த உலகம் அறிந்துகொள்ளாமலேயே போயிருக்கும். 

ருசி கண்ட பூனையாயிற்றே.. அவன் அடுத்து என்ன செய்தான், தெரியுமா?

- குற்றம் தொடரும்

வெட்கித் தலைகுனிய வேண்டும்!

கடிதங்கள்

டெல்லி நாடாளுமன்றத்தில் காங்கி​ரஸுக்கும் டெல்லி சட்டசபையில் பி.ஜே.பி-க்கும் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைக்காமல் போனது என்ன பொருத்தமோ... தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்​தான் தெரியுமோ!
- எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

ட்சியாளர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் தமிழக மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்பட்டுள்ளது... வீணடிக்கப்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டி இருந்தீர்கள். இப்படிப்பட்ட ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
- இரா.தனபால், சென்னை-88.

‘‘பெண்களே நீங்கள் மது அருந்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள்’’ என்று மருத்துவர் கு.சிவராமனின் எச்சரிக்கை சரிதான். ஆனால், மதுக்கடைகளை நடத்தும் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதைத்தான் முதலில் முடிவு செய்ய வேண்டும்.
- மேட்டுப்பாளையம் மனோகர், தேனாம்பேட்டை.

ந்தப் பக்கம் வந்தால் புரமோஷன். அந்தப் பக்கம் போனால் டிரான்ஸ்ஃபர். அரசியல்வாதிகள், படித்த அதிகாரிகளை பகடைக்காயாக்குவது வேதனை அளிக்கிறது.
- க.கலா, காகிதப்பட்டறை.