மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்

மருத்துவனா, மரண தேவனா..?

குற்றம் புரிந்தவர்

பேடியாட் ஜெர்மானியர்​களால் சிறையில் அடைந்து கிடந்தபோது, பாரிஸுக்கு அவனது சகோதரன் மௌரிஸ் வந்திருந்தான்.

பேடி​யாட்டின் மர்ம மாளிகைக்குச் சென்றான். அங்கு முக்​கோண அறை, தீ அடுப்பு, சுண்ணாம்புக் கரைசல் ஆகியவற்றைப் பார்த்து அதிர்ந்தான். தன் சகோதரன் செய்து வந்த பாதகச் செயல்களை அவனால் யூகிக்க முடிந்தது. முக்கியமாக, கொலையானவர்களின் பிணங்களைப் பதப்படுத்தத்தான் தன்னிடமிருந்து வாங்கப்படும் சுண்ணாம்பு பயன்படுகிறது என்று உணர்ந்ததும், அவன் நடுங்கினான்.

இனி தன் சகோதரனுக்கு சுண்ணாம்பு கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தான்.

ஜெர்மானியர்களிடமிருந்து 'தலை தப்பியது புண்ணியம்’ என்று விடுதலை பெற்ற பேடியாட்டுக்கு சில வாரங்​களிலேயே பணத்துக்கான பேராசை மீண்டும் தலைதூக்கியது. அவன் செய்து வந்த கொடுமைகளை மீண்டும் தொடரத் தொடங்கினான். ஆனால், அவன் முக்கியமானதொரு பிரச்னையைச் சந்திக்க வேண்டியிருந்தது.

அவனுடைய சகோதரன் சுண்ணாம்பு தர மறுத்துவிட்டதால், கொலை செய்தவர்களது உடல்களைப் பதப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான், பேடியாட். இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தாமலேயே தீ அடுப்பில் வைத்து எரிக்கத் தொடங்கினான்.

சில வாரங்களில், பிரான்ஸில் இருந்து ஜெர்மன் படை வீரர்கள் பின்வாங்கத் தொடங்கியிருந்தனர். பிரான்ஸ் மீண்டும் சுதந்திரமாக இயங்க ஆரம்பித்தது.

ஒரு குறிப்பிட்ட நாள், பேடியாட் பிணத்தை உலையில் இட்டு, அது எரிகையில் வேறு வேலையாக வெளியே போனான். அந்தப் பாழ்வீட்டுப் புகை போக்கியிலிருந்து தீப்பொறிகளுடன் கரும்புகை வெளியேறத் தொடங்கியது. காற்றில் கலந்து பரவிய அந்தப் புகையில், கடும் பிணநாற்றம் வீசியது. அந்த துர்நாற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் காவல் துறைக்கும், தீயணைப்புப் படைக்கும் தகவல் கொடுத்தனர்.

காவல் துறையினரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து, வாசல் கதவு உடைத்துத் திறக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர் உள்ளே புகுந்தனர்.

முக்கோண அறையிலும் துர்நாற்றப் புகை நிரம்பியிருந்தது. எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தபோது, பாதாள அறைக்கான ரகசிய வழி புலப்பட்டது. அங்கு கண்ட காட்சி, அவர்களை நிலைகுலைய வைத்தது. நெருப்பு உலையில் உடல் ஒன்று வெந்துகொண்டிருந்தது. சுற்றிலும், பாதி எரிந்த நிலையில் எலும்புகள் பல சிதறிக் கிடந்தன. மனித உடலின் பாகங்கள், தீய்ந்துபோய் அங்கங்கே விழுந்து கிடந்தன.

குற்றம் புரிந்தவர்

உடனடியாக காவலர்கள் அந்த இடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். உலை நெருப்பு நிறுத்தப்பட்டது. அங்கு அரங்கேறிய பயங்கரத்தின் தீவிரத்தை உணர, எலும்புகள், மனித உடற்பாகங்கள் என கிடைத்தவை அனைத்தையும் காவலர் திரட்டினர். அவற்றைத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பேடியாட் வருவதற்காகக் காத்திருந்தனர். வீடு திரும்பிய பேடியாட், தெருமுனையிலேயே காவல் துறையின் வாகனங்களைப் பார்த்தான். திடுக்கிட்டான். ஆனால், தப்பித்துப்போக முயற்சி செய்தால், துரத்திப் பிடிப்பார்கள் என்று புரிந்துகொண்டான்.        

நிலைமையைச் சமாளிக்க அவனது கிரிமினல் புத்தி வெகுவேகமாக வேலை செய்தது.

'என்ன நடக்கிறது இங்கே..?' என்று காவல் அதிகாரி அவனை மடக்கியதும், துணிவுடன் பதில் சொன்னான்.

'நம் தேசத்தை அத்துமீறி ஆக்கிரமித்துள்ள ஜெர்மானியர்களைக் கடுமையாக வெறுப்​பவன், நான். தீவிர தேசபக்தன். விடுதலைப் போராளி. நாஸி படையினர் நம் மக்களை எப்படிப் பிடித்துக் கொலை செய்தனர் என்று நினைக்கிறீர்கள்? நம் மக்களில் சிலரே அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, காட்டிக் கொடுத்தார்கள். அதுபோன்ற தேசத்​துரோகிகளைக் குறிவைத்து தீர்த்துக் கட்டினேன். தேச பக்தியின் காரணமாக நான் செய்த ஒரே தவறு, சட்டத்தை என் கையில் எடுத்துக்கொண்டதுதான்...' என்று ஒரே போடாகப் போட்டான்.

போலீஸ்காரர்கள் திகைத்தார்கள். பேடியாட்டின் கூற்று அவர்களைக் குழப்பியது. சந்தேகத்தின் பலனை அவனுக்கு அளித்து அவர்கள் திரும்பிப் போனார்கள்.

ஜெர்மானியர்களின் கை ஓங்கி இருந்தபோது, 'நான் ஜெர்மனியின் ஆதரவாளன்’ என்றும், பிரான்ஸின் கை ஓங்கியதும், 'நான் பிரான்ஸ் தேச பக்தன்’ என்றும் சாமர்த்தியமாகப் பேசி, போர்க்காலத்தின் குழப்பமான நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்

கொண்​டான் பேடியாட்.

ஆனால், அவன் நிம்மதி விரைவில் பறிபோனது.

தடயவியல் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட எலும்புகள், மனித உடற்பாகங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள், அவை 27 நபர்களுடையவை என்றார்கள்.

அந்தக் காலகட்டத்தில் காணாமல் போனவர்​களின் அங்க அடையாளங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கொல்லப்பட்டவர்கள் 'யார், யார்?’ என்பதை காவல் துறை கண்டுபிடித்தது. அவர்களைப் பற்றி முழுமை​யாக விசாரித்தபோது, அவர்கள் அனைவரும் அப்பாவிக் குடிமக்களேயன்றி, தேசத் துரோகிகள் அல்ல என்பது தெரிய வந்தது. உயிர் தப்பிப்பதற்காக ஏராளமான பணத்தை அவர்கள் பேடியாட்டிடம் கொடுத்த விவரமும் கிடைத்தது.

போலீஸ் துறை தனக்கெதிராகத் தகவல்களைச் சேகரிப்பது தெரிந்ததும், பேடியாட் ஆபத்து நெருங்குவதை உணர்ந்தான்.

கொள்ளையடித்த பணம் மற்றும் பொருட்​களை முடிந்த அளவு அள்ளிச் சுருட்டி எடுத்துக்கொண்டான். பாரீஸைவிட்டு வெளி​யேறினான். தொலைதூர கிராமம் ஒன்றில் போய் ஒளிந்து​கொண்டான்.

காவல் துறையினர் ஆதாரங்களைத் திரட்டி முடித்தபோது, கையிடுக்கு நீர்போல் பேடியாட் தப்பிச் சென்றுவிட்டதை அறிந்தனர். அந்தப் பாழ்வீட்டை அங்குலம், அங்குலமாக ஆராய்ந்தனர்.

பேடியாட் அங்கங்கே பதுக்கி வைத்திருந்த கட்டுக்கட்டான பணம், தங்கம், வெள்ளி நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவை அவர்கள் கையில் சிக்கின. அத்துடன் அனைத்து விவரங்களையும் அவன் குறித்து வைத்த டைரியும் வெளிப்பட்டது. அந்த இரக்கமற்ற மருத்துவனால் கொள்ளையடிக்கப்பட்டு, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 என்று அந்த டைரியின் புள்ளி விவரங்கள் சொல்லின.

பயங்கரமான இந்த விவரங்கள் வெளியானதும், நாடே திடுக்கிட்டது. புனிதமான மருத்துவ சேவை செய்வதாக உறுதி மேற்கொண்டு தொழில் தொடங்கிய ஒரு டாக்டர், கொடூரமான கொலைகாரன் என்று அறிந்து மக்கள் கொதித்தனர். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன. காவல் துறையினர் நாடெங்கும் வலைவிரித்து பேடியாட்டைத் தீவிரமாகத் தேடினர்.

பேடியாட், தாடி வைத்துக்கொண்டு, தன் உருவத்தை பலவகையிலும் மாற்றிக்கொண்டு, கிராமப்புறங்களில் சுற்றித் திரிந்தான்.

'இவை எல்லாம் நாஸிகள் செய்த சதி. பேடியாட் குற்றமற்றவன்’ என்று சில நண்பர்கள் மூலம் பத்திரிகைகளுக்குக் கடிதங்களும் எழுத வைத்தான். ஆனால், காவல் துறை தீவிரமாக இருந்தது.      

குற்றம் புரிந்தவர்

1944, அக்டோபர் 31.  

பிரான்ஸ் நாட்டின் எல்லையோரத்தில் இருந்த ஒரு கிராமத்து ரயில் நிலையம். பாஸஞ்சர் ரயில் ஒன்று, நிலையத்துள் நுழைந்து நின்று பெருமூச்சுவிட்டது.

பிச்சைக்காரனைப்போல் தோற்றம் அளித்த ஒருவன் தட்டுத்தடுமாறி நடந்துசென்று ரயில் பெட்டியில் ஏற முயன்றான்.

ரயிலின் படிக்கட்டில் அவன் காலை வைத்த விநாடியில் நான்கு காவலர்கள் அவனைப் பற்றிப் பிடித்தார்கள். அவனால் திமிறக்கூட முடியவில்லை. ரயிலில் இருந்து அவனைக் கீழே இறக்கினார்கள்.

'உலகில் உள்ள அத்தனை வேஷங்களையும் உன் முகத்துக்குப் போட்டுப் பார்த்து விட்டோம். நீ எந்த வேஷத்தில் எங்கே திரிந்தாலும் உன்னை அடையாளம் காண்பதற்குத் தயாராக இருந்தோம். உன்னைக் கைது செய்கிறோம் பேடியாட்..' என்று கூறியபடி ஓர் அதிகாரி அவனது கைகளில் விலங்கை மாட்டினார். அடுத்த 18 மாதங்கள். காவலர்கள் அவனைச் சிறையில் வைத்துத் தோண்டித் துருவி விசாரித்தனர்.

விசாரணையின்போது அவன், 'நான் ஜெர்மானிய ஆதரவாளர்களைத்தான் கொலை செய்தேன்...' என்று திரும்பத்திரும்பக் கூறிக் கொண்டிருந்தான்.

காவல்துறை இந்த முறை அவன் பேச்சைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. மாறாக, கொலை கொள்ளை ஆகியவற்றைக் காரணம் காட்டி, 1946 மார்ச் 19-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

கொள்ளையடித்த பணம், நகைகள், கொலை​யானவர்களது உடைகள், உடைமைகள் போன்ற திரட்டப்பட்ட தடயங்களை நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பித்தது.

கொல்லப்பட்டவர்கள் யாரும் தேசத் துரோகிகளோ, ஜெர்மானியர்களோ இல்லை என ஆணித்தரமாக வாதிட்டது. அசைக்க முடியாத இந்த ஆதாரங்களின் முன்னால், பேடியாட்டின் கூற்றுகள் கட்டுக் கதைகள் என்று தெரிய அதிக நேரமாகவில்லை.

கொலைக் குற்றவாளி என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீர்மானிக்கப்பட்ட பேடியாட்டுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

1946, மே 26.

பயங்கரமான திட்டங்கள் பல தீட்டிய கிரிமினல் மூளையை தன்னகத்தே கொண்​டிருந்த அவனது தலை கில்லடினுக்குக் கீழே பொருத்தப்பட்டு, கொய்யப்பட்டபோது டாக்டர் பேடியாட்டுக்காக அவனது மனைவி, மகன் உட்பட யாருமே அனுதாபப்படவில்லை.

அவனால் இரக்கமற்று கொல்லப்பட்ட​வர்களின் குடும்பத்தினருக்கு, அவனது மரணம் ஒரு சிறு ஆறுதலை மட்டுமே அளித்தது.

- குற்றம் தொடரும்

துடைக்க முடியாத துக்கம்!

கடிதங்கள்

'லிங்கா’ பட நஷ்டத்துக்காக மூன்று கோடி தர வேண்டும் என்ற விவகாரத்தில் நடிகர் விஜய், 'வருமுன் காப்போம்’ என்ற யுக்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டாரோ என யோசிக்கத் தோன்றுகிறது. இன்று ரஜினிக்கு ஏற்பட்ட நிலை, நாளை நமக்கு வந்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்!

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

டுத்தவரின் பதவியை இன்னொருவருக்குக் கொடுப்பதில் தி.மு.க எப்போதும் தயக்கம் காட்டுவதில்லை. எனவே, ஆற்காடு வீராசாமியின் பதவி துரைமுருகனுக்குப் போனதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், அனுபவத்தில் சீனியரான ஆற்காடு வீராசாமியை 'சும்மா’ உட்கார வைத்துவிட்டதுதான் பல தொண்டர்களுக்கு மனவேதனை!

- ம.பேச்சியம்மாள், புதுச்சத்திரம்.

க்கீல் குமார், 35 மார்க் எடுத்தாலே பாஸ்தான் என்று கூற... நீதிபதி, 'நீதிமன்றத்தில் 65 மார்க் எடுத்த அவங்கதான் பாஸ்’ என்று கூறியது சிரிப்பை வரவழைத்துவிட்டது.

- மா.மாரிமுத்து, ஈரோடு-1.

குழந்தையின் வயிற்றில் இன்னொரு குழந்தையா?! உலகின் வாழ்வியல் மாறமாற இதுபோன்ற ஆச்சர்யங்களும் நம்மை எளிதில் கடந்து போய்விடும். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் துடைக்க முடியாத துக்கம்!

- வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.